Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.

திருமதி.வாஞ்சி பாட்டியின் கையிலிருப்பது நம் நாட்டின் எதிர்காலம் (நீர்) என்று சொல்லலாம். காரணம் பாரம்பரிய மானாவாரி நெல் ரகத்தை மற்றவர்கள் கைவிட்ட நிலையில் இன்னும் பாதுகாத்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பயிர் செய்து இன்றளவும் காப்பாற்றி வருகிறார். இயற்கை தந்த இந்த ரகத்தை நமக்கு தருவதற்கு இவர் தயார் ஆனால் நாம் அதனை பெற்று நீர் நிர்வாகத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க போகிறோமா ?? அல்லது ‘உல்டா’ செய்து நெல் ரகத்தை உருவாக்கப் போகிறோமா ?? எதுவாயினும் இவரது புகைபடத்தை வாழ்த்து அட்டையாக மாற்றி அவரை கௌரவப்படுத்துவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் இந்நெல் ரகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.html
http://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html

Monday, December 28, 2009

யோக முறையில் ஜல நேத்தி என்னும் மூக்கு கழுவும் கிரியை.

சில எளிய உபகரணங்களைக் கொண்டு சில கிரியைகளை செய்வதால் நேரம், மருத்துவ செலவு, போன்றவைகளை வெகுவாகக் குறைத்து உடல் உபாதையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம். நவம்பர் - ஜனவரி மாதங்கள் வரை பனிகாலமாக இருப்பதால் சளி, கபம், சைனஸ், ஆஸ்தமா போன்ற தொல்லைகளால் அநேகர் அவதிபடுவதை பார்த்திருக்கிறேன். இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமாய் தூக்கத்தை இழக்கும் நபர்களும் உண்டு. குறிப்பாக இந்த பருவத்திலும் குளிர்பதன அறையில் இருந்து வேலை செய்பவர்களுக்கு தொடர் ‘தும்மல்’ தவிர்க்க முடியாதது. வாழ்கை முறை, உணவு முறை மாறியதும் காரணம். நமது பாரம்பரிய முறையில் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு இந்த “ஜல நேத்தி” என்னும் மூக்கு கழுவும் கிரியைதான். சுமார் 1 அல்லது 2 மேசை கரண்டி உப்பை மிதமான வெப்பநிலையிலுள்ள சுத்தமான நீரில் நன்கு கலக்கி மேற்கண்ட குவளையில் ஊற்றி உடம்பை சற்று வளைத்து முன்நோக்கி வைத்து தலையை சற்று சாய்த்து மூக்கு துவாரத்தில் குவளையின் துவாரத்தை பொருத்திவிட்டால் நீர் அடைப்பில்லாமல் இருந்தால் எளிதாக அடுத்த துவாரத்தில் வந்துவிடும்.

சளி இருந்தால் அதனையும் சவ்வூடு பரவல் (Osmosis) முறையில் அடர்த்தியின் காரணமாய் இழுத்துகொண்டு வந்துவிடும். நீர் மூக்கினுள் செல்லும்போது வாய் வழியாக சுவாசிக்கவும்.

பிறகு மாற்றி அடுத்த துவாரத்தில் வைத்து செய்ய வேண்டும். உறிஞ்சக்கூடாது. குளிர்ந்த நீரை ஆரம்பத்தில் தவிர்க்கவும். சிலருக்கு உடனடியாக நீர் வெளிவராது பழக பழக சரியாகிவிடும். இல்லையெனில் அனுபவசாலிகளின் மேற்பார்வையில் செய்து பழகவும். இது பாரம்பரிய முறை இருப்பினும் கவனம் தேவை.ரூ.15/= விலையில் சர்வோதய சங்கக் கடைகளில் இக்குவளை கிடைக்கும்.

Sunday, December 20, 2009

முடிவிற்கு வந்த கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு.

தங்களின் வாழ்வாதாரம் அழிவதை எண்ணி அழுத தீவுநாடுகள், கியுட்டோ தீர்மானங்களை அழிக்க துணிந்த வளர்ந்த நாடுகள், இவற்றுக்கிடையே வளரும் நாடுகள் என திகில் படம் போன்று கடைசியில் ‘சுபம்’ என்று கோபன்ஹேகன் மாநாடு முடிந்தது. கிராம சந்தையின் கடைசி நேர வியாபாரம் போன்று திரு.ஒபாமாவின் கடைசி ‘நேர பேரம்’ பிரேசில், தென்ஆப்ரிக்கா, இந்தியா, சீன தலைவர்களுடன் அமர்ந்து 30 பில்லியன் டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வளரும் நாடுகளுக்கு தருவதாக கூறி மாநாட்டை முடிவிற்கு கொண்டு வந்தார். எளிதாக வளர்ந்த நாடுகள் தப்பிவிட்டன. தீவு நாடுகளின் கதி !!!! காலம் தான் பதில் சொல்லும்.


படங்கள் உதவி : வலைதளம்

Thursday, December 17, 2009

கோபன்ஹேகன் மாநாடு - மாற்றமும் ஏமாற்றமும்.

கோபன்ஹேகன் மாநாட்டை கலக்கிய பேச்சு உலகின் 4 வது மிக சிறிய தீவுகள் நாடான “துவாலு” நாட்டின் பிரதிநிதி திரு.இயன் ப்ரை அவர்களுடையது. பேச்சை முடிக்கும் முன் அழுதபடி எங்கள் நாட்டின் தலைவிதி உங்கள் கையில் என்ற யதார்த்தமான உண்மையை கூறி முடித்தவுடன் கைதட்டல் அடங்க சற்று நேரம் ஆனது. கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரமான இடம் சுமார் 4.5 மீட்டர் கொண்ட நாடு துவாலு. பெரிய அலைகள் வந்தால் நிலைமை மிக மோசமாகிவிடுகிறது. மக்கள் தொகை சுமார் 11,000. பரப்பளவு சுமார் 26ச.கி.மீ. மக்கள் வெளியேறி நியுசிலாந்து போன்ற நாடுகளில் குடியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

திரு.இயன் ப்ரை அவர்களின் பேச்சு.


இதுபோன்ற உலக மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் நிதியுதவி, ஆயுத உதவி, மிரட்டல் போன்றவற்றால் ஏழை மற்றும் வளரும் நாடுகளை தங்கள் விருப்பத்திற்கு இணங்க வைத்து தங்கள் உல்லாச வாழ்விற்கு பங்கம் வராமல் காத்துக் கொண்டனர். ஆனால் ‘தோகா’ மாநாட்டிலிருந்து நிலைமை மாறி வருவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த மாநாட்டில் ஒரு மிகச்சிறிய நாடுகூட அதன் உண்மைநிலையை கூறி நியாயம் கேட்டதும் அதன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாடத்தை நடத்தி பணக்கார நாடுகளை சிந்திக்க வைத்ததும் நல்ல மாற்றம்.

தொழிற்புரட்சி என்று 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. மேலும் அணுகுண்டு, 2 உலகப் போர்கள், மற்ற நாடுகளை சுரண்ட பொய்யைக் கூறி போரில் ஆரம்பித்து உலகை மாசுபடுத்தியதும் இந்த பணக்கார நாடுகளே. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார நாடுகளே. ஆனால் கியுட்டோ ஒப்பந்தத்தை ஒதுக்குவதில் அவைகள் முனைந்திருப்பது பெரிய ஏமாற்றம்.

இருக்கின்ற இருநாட்களில் இந்த புவியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முடிவுகளை எடுக்க மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தலைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை துஷ்பிரயோகம் செய்யாமல் நல்லமுடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ விரும்புகிறது.

Friday, December 11, 2009

மரத்தை அசுரத்தனமாக அறுக்கும் டிராக்டர்.

அரை நிமிடத்தில் மரத்தை அறுத்து பட்டையையும் உரித்து அளவிற்கு துண்டும் செய்துவிடுகிறது இந்த டிராக்டர் போன்ற வண்டி. ஆஸ்திரேலியாவில் இதனை பயன்படுத்துவதாக அறிந்தேன். இவைகள் நம் நாட்டிற்கும் நிச்சயம் வரும். பாதிப்புக்கள்/ நன்மைகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் ஆள் பற்றாகுறையை நீக்கினாலும் மறுபுறும் இதன் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நீங்களும் அதன் அசுர வேகத்தை பாருங்களேன்.

Tuesday, December 8, 2009

45 நாடுகள் , 56 செய்தி ஏடுகள் ஒரு பொது தலையங்கம்.

உலகில் இதுவரையில் நடந்திராத ஒரு முயற்சியாக, 45 நாடுகளில் வெளி வரும் 56 செய்தி ஏடுகளில் இன்றைய தினம் (டிசம்பர் 7) ஒரே குரலில் பொது தலையங்கம் எழுதப்படுகின்றன. இதை ஏன் செய்கிறோம் என்றால், மனிதக் குலம் ஒரு பயங்கர நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீர்மானகரமாக செயலில் இறங்கவில்லை என்றால், பருவநிலை மாற்றம் நமது புவிப் பந்தை முற்றிலும் சிதைத்துவிடும்; நமது பாதுகாப்பும், வளமும் நாசமாகும்.

கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள், வெப்பம் மிகுந்த ஆண்டுகளாகவே கழிந்துள்ளன; ஆர்க்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் உருகுகின்றன; கடந்த ஆண்டு மிகக் கடுமையாக அதிகரித்த எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்கால நாசத்தை முன்னறிவிக்கும் அபாய எச்சரிக்கையே. மனிதர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட, மிகப் பெரும் நாசத்தை கட்டுப்படுத்த நமது கையில் இருப்பது மிகக் குறுகிய காலமே என்று உணர வேண்டும் என்று அறிவியல் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த உலகம் இன்னும் இதில் முக்கிய கவனம் செலுத்த மறுக்கிறது.

நூற்றாண்டுகாலங்களாக மாற்றமடைந்து வரும் பருவநிலையின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிக்கிற மாநாடு அடுத்த 14 நாட்களுக்கு நடைபெறுகிறது. கோபன்ஹேகனில் நடக்கும் இந்த மாநாட்டில் கூடுகிற 192 நாடுகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்: தயக்கம் கொள்ளாதீர்கள்: சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்; ஒரு வரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள்; நவீன அரசியல் வரலாறு மனித குலத்திடம் விட்டுச் செல்கிற மிகப் பெரும் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாய்ப்பை கைப்பற்றிக் கொள்ளுங்கள். இது பணக்கார உலகத்திற்கும், ஏழை உலகத்திற்கும் இடையிலான மோதலாக இருக்க வேண்டாம்; அல்லது கிழக்கு உலகத்திற்கும் மேற்கு உலகத் திற்கும் இடையிலான சண்டையாக இருக்க வேண்டாம். பருவநிலை மாற்றம் ஒவ்வொரு மனிதரையும் பாதிக்கிறது. எனவே அதற்கு தீர்வு காண ஒவ்வொரு வரும் உறுதி ஏற்க வேண்டும். இது தொடர்பான அறிவியல் சிக்கல் நிறைந்ததுதான், ஆனால், புள்ளி விபரங்கள் மிகத் தெளிவாகவே நமது கையில் இருக்கின்றன.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதை 2 சென்டிகிரேடு அளவிற்கு குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு அடுத்த 5 முதல் 10 ஆண்டு களில் இந்த உலகம் வெளியிடும் கரிய மிலவாயு கழிவுகளின் அளவை மிகப் பெரும் அளவில் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. கழிவுகள் வெளியேற்று வதில் ஏற்படும் சிறிதளவு உயர்வு கூட புவியின் வெப்பநிலையில், 3 முதல் 4 சென்டிகிரேடு அளவிற்கு மிகப்பெரும் அதிகரிப்பை செய்யும். இது மனிதர்கள் வாழும் கண்டங்களை நாசமாக்கும்; நமது விவசாய நிலங்களையெல்லாம் பாலை வனமாக்கும்; உலகின் தாவர வகைகளில் பாதி அளவு அழிந்து போகும்; கோடிக் கணக்கான மக்கள் வாழ்வை தேடி இடம்பெயர வேண்டிய அவலம் ஏற்படும்; பல நாடுகள் கடலுக்குள் மூழ்கிப்போகும்.

கோபன்ஹேகன் மாநாட்டில் நடக்கப் போகும் பேச்சுவார்த்தைகளின் சாராம்சம், பருவநிலை மாற்றம் என்ற மிகப்பெரும் சுமையை பணக்கார உலகமும், வளர்முக உலகமும் எப்படி தீர்ப்பது என்பதும், வாழ்வாதாரங்களை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதுமே ஆகும். இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருவதும், அவரது வெள்ளை மாளிகையிலிருந்து வரப்போகும் கருத்துக்களுமே முக்கியத்துவம் பெறும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், கோபன்ஹேகனில் கூடப்போகும் உலக அரசியல்வாதிகள் ஓர் உலக உடன்படிக் கையை, நியாயமான, சீரிய அம்சங்களுடன் கூடிய பிரகடனத்தை உருவாக்கி வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பான் நகரில் நடைபெற போகும் ஐ,நா. சபையின் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு, அவர்களது இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

சீனா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகள் தங்களது கரியமில வாயு கழிவுகளை குறைப்பதற்கு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்று பணக்கார நாடுகள் கூறுகின்றன. ஆனால், உலகில் இதுவரை யிலும் குவிக்கப்பட்டுள்ள கரியமில வாயுக் கழிவுகளுக்கு பணக்கார உலகமே பொறுப்பு. 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார உலகமே. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றும் கழிவுகளை, 1990ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவிலிருந்து மிகப் பெரும் அளவிற்கு குறைத்தாக வேண்டும். வளர்முக நாடுகள் தங்களது பங்கினை அர்த்தமுள்ளதாக ஆக்கிட வேண்டும். இந்த திசை வழியில், உலகின் மிகப் பெரும் கழிவு வெளியேற்ற நாடான அமெரிக்காவும், வளர்முக நாடுகளில் முக்கிய சக்தியான சீனாவும் அதிமுக்கியத்துவம்வாய்ந்த நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தூய்மை தொழில் நுட்பங்கள், ஏழை நாடுகளுக்கு கிடைப்பதை பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங் களை பரிமாறுவது செலவு நிறைந்தது என்பது உண்மையே; ஆனால், உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய மிகப் பெரும் நிறுவனங்களை மீட்க அளிக்கப்பட்ட மீட்பு நிதியை விட குறைவானதே.

இதுதவிர, வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமானங்களில் பறப்பதற்கு ஆகும் செலவைவிட, இருப்பிடங்களில் இருந்து விமான நிலையத்திற்கு டாக்சியில் செல்லும் செலவும், அதன் விளைவும் கடுமையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். உணவு முறை, பொருட்களை வாங்கிக் குவித்தல், பயணம் போன்றவற்றில் அறிவுப்பூர்வமாக திட்டமிட வேண்டியுள்ளது. எரிசக்தியையும், மின்சாரத்தையும் சிக்கனப்படுத்த வேண்டியுள்ளது.

மொத்தத்தில் பருவநிலை மாற்றம் எனும் சவாலில் இந்த உலகம் வெற்றி பெற வேண்டும் என்பதே, ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே தலையங்கத்தை வெளியிட்டுள்ள 56 செய்தி ஏடுகளின் உணர்வு ஆகும். கோபன்ஹேகனில் கூடும் நாடுகளின் தலைவர்கள் மனிதக் குலத்தின் இந்த தலைமுறையின் மீது எதிர்கால வரலாறு எழுத உள்ள தீர்ப்பினை வடித்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அந்த கடமையை அவர்கள் உணர்ந்து செயல்படட்டும்.

தமிழாக்கம் நன்றி : தீக்கதிர்
==========================================================
ஆசியா 13 நாடுகள் 16 செய்தித் தாள்கள்
ஐரோப்பா 17 நாடுகள் 20 செய்தித் தாள்கள்
ஆப்ரிக்கா 08 நாடுகள் 11 செய்தித் தாள்கள்
வட, மத்திய அமெரிக்கா 05 நாடுகள் 06 செய்தித் தாள்கள்
தென் அமெரிக்கா 02 நாடுகள் 03 செய்தித் தாள்கள்

இந்தியாவில் “இந்து” நாளிதழ் (The Hindu ) இந்த பொது தலையங்கத்தை பிரசுரித்தது.

Monday, December 7, 2009

கோப்பன்ஹேகன் பருவநிலை மாநாடு - 2009

இன்று 07-12-09 முதல் 18-12-09 முடிய பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய உலகளாவிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் உலகப் பருவ நிலை மாநாடு துவங்கவுள்ளது. ஏழை மற்றும் வளரும் நாடுகளின் மக்கள் பசியின்றி, பணியின்றி வாழ வளர்ந்த நாடுகள் உதவி புரியவும் வரும் ஆண்டுகள் பிரச்சனைகள் குறைந்த ஆண்டுகளாக மாறத் தக்க வகையில் மாநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

பொருத்தமான இடத்தில் (டென்மார்க் நாட்டில்) நடைபெறுவதால் இம்மாநாடு சிறப்பு பெறுகிறது. எனது பழைய பதிவு சற்று விளக்கம் தரும்.

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்வோமா ?????

மழை இன்மையால் வறட்சி, புயல் மழையால் வெள்ளம் நிலசரிவு, சுனாமி, பூகம்பம், நிலத்தடி நீர்வற்றுதல், பனி உருகுதல், கடல் மட்டம் உயர்தல் என இயற்கை தன் செயல்பாடுகளில் ஈடுபட மனிதன் உருவாக்கும் இயற்கைக்கு எதிரான செயல்களே காரணம். அவன் மனநிலையும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதனைப் பற்றி காண :-

புவி வெப்பம் குறித்து இன்றைய மனிதனின் அலட்சிய மனநிலை

நமது ஆஸ்தியை நாம் சட்டப்படி பெற்றுக் கொள்வதாக நினைக்கிறாம் உண்மையில் நாம் அதனை நம் குழந்தைகளிடமிருந்து கடனாக பெற்றிருக்கிறோம். என்பதை நினைவில் கொண்டு இப்பூவுலகை பசுமையாக்கி வளமுள்ளதாக மாற்றி நம் குழந்தைகளுக்கு அளிப்போம்.

தனி மனிதனாக, குடும்பமாக நம்மால் முடியும் சில எளிய காரியங்கள் புவிவெப்பம் குறைய உதவும்.

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்

Saturday, December 5, 2009

பிரேசில் நாட்டில் தோண்டப்பட்ட வெட்டிவேர். படக் காட்சி.

பிரேசில் நாட்டில் வெட்டிவேரை யந்திரம் கொண்டு தோண்டியெடுத்துள்ளனர். வேரின் அளவு 10 அடிக்கு சற்று குறைவாக இருந்துள்ளது. இதில் முக்கிய அம்சம் வேர்கள் செடியின் அகலத்திற்கு ஏற்ப நேராக சென்றுள்ளது. ஆனால் நானறிந்த சில விவசாய நண்பர்கள் இதன் வேர்கள் நிலத்தில் பரவி சத்து அனைத்தையும் உறிஞ்சிவிடும் என்பார்கள். நீளமாக நட்டினால் வருடங்கள் செல்ல அவை உறுதியான 10 அடி உயிர் சுவர் என்பதில் ஐயமில்லை. நீலகிரி மக்கள் வெட்டிவேரை பயன்படுத்தி நீலகிரியின் எழிலை காப்பாற்ற வேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் விருப்பம்.

படக் காட்சி.

Thursday, December 3, 2009

போபால் விஷவாயு விபத்து - 25 ஆண்டுகள்.

25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் மறக்க முடியாத மிக மோசமான விபத்து போபால் விஷவாயு விபத்து. இன்றைய இளைஞர்கள் அனைவரும் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு. 1984 டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி நள்ளிரவில் போபால் நகரில் ஏற்பட்ட விபத்து மிக மோசமான ஒன்று. போபால் நகரத்திலிருந்த பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலை விவசாயத்திற்கு தேவையான பூச்சிகொல்லி மருந்துகளை தயார் செய்து வந்தது. அங்கிருந்த ஒரு வாயுக் கிடங்கில் இருந்த மிதைல் ஐசோசயனேட் வாயு வெளியேற்றத்தால் ஆயிரக் கணக்கான மக்கள் உறக்கத்திலேயே இறந்தனர் மேலும் நிறைய மக்கள் நுரையீரல், கண் சம்பந்தமான நோய்க்கு ஆளாயினர். மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுச் சுழல் மாசுபாட்டால் ஏற்பட்ட இந்த விபத்துக்கு 25 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் உரிய இழப்பீடு, அடிப்படை வசதிகள் இல்லாமை, தொடரும் சுகாதார- உடல் நலக் கேடுகள் என அவதியுறும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த குழந்தையின் இறப்பிற்கு யார் காரணம்.
பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தங்கள் லாபவெறிக்கு சுகாதாரகேடுகள் உண்டாக்கும் தொழிற்சாலைகளை நிறுவி பல சுகாதார பிரச்சனைகளை நம்மீது தள்ளுகின்றன. நமது ஆட்சியாளர்களும் தொழிலதிபர்களும் அந்நிய முதலீடு, ஆயிரக்கணக்கில் வேலைவாய்ப்பு என செய்திகளை தருகின்றனர். ஆனால் பிரச்சனை வரும் போதுதான் விளைவுகளை நாம் ஆராய்கிறோம். அதனைவிடுத்து ஆரம்பத்திலேயே இவைகளை கண்டறிந்தால் இழப்புக்களைத் தவிர்த்து வளமான இந்தியாவை காணமுடியும்.

Saturday, November 28, 2009

வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள், மின்னஞ்சல்கள் 99% வெட்டி வேரை தனி பயிராக வளர்த்தால் (வேருக்காக) லாபம் கிடைக்குமா? எவ்வளவு வருமானம் ? எத்தனை நாட்களில் ? யாரிடம் விற்பது ? என்பது பற்றித்தான் இருக்கும். பொதுவாக வளர்ச்சி நன்றாக இருப்பினும் மண்ணின் தன்மை, நீர் ஆகியவற்றைப் பொறுத்து வேரின் நீளமும் அதன் அடர்த்தியும் இருக்கும். எனவே தோண்டி எடுப்பதற்கு நிறைய ஆட்கூலியாகும். தவிர மண்ணின் தன்மையைப் பொறுத்து வேர்கள் அறுந்துவிடாமல் எடுக்க வேண்டும். சோதனைக்காக பெரிய பையில் வளர்த்த வெட்டி வேர்.
மிக எளிமையான முறையில் வேருக்காக வளர்க்க பெரிய பைகளில் வளர்த்த பின்பு பையை அகற்றி வேரை மிக எளிதாக அறுவடை செய்யலாம். தற்சமயம் மிக குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி மற்றும் சிமென்ட் சாக்குப் பைகளில் வளர்த்தலாம். நல்ல வாசனையுடன் தரமாக இருக்க 1 முதல் 11/2 வருடங்கள் ஆகும். எங்கு வேண்டுமானலும் வளர்க்கலாம் குறிப்பாக மொட்டை மாடிக்களில் அதிக சூரிய ஒளியும், சமயலறை நீர் மறு உபயோகத்திற்கு கிடைப்பதாலும், அதிகமாக கரிம நிலைபாட்டில் ( Carbon sequestration ) உதவுவதால் நகரங்களில் வளர்க்க மிகவும் ஏற்றது. மிக கொஞ்சமாக மண், தேங்காய்மஞ்சு (மிக குறைந்த Ec < 1 அளவில்), சம அளவு மண் புழு உரம், வேம் இவற்றை கலந்து பைகளில் நிரப்பி 3 அல்லது 4 சிம்புகளை அல்லது நெட்பாட் நாற்றுக்களை வைக்க நமது வேருக்காக வெட்டிவேர் வளர்ப்பு ஆரம்பமாகிவிட்டது எனலாம். தேங்காய்மஞ்சு இருப்பதால் அதிகநாட்கள் நீரை தக்க வைத்துக்கொள்ளும். அதிக நீர் இருந்தாலும் பிரச்சனை இல்லை. வேம் வேரின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். மண் புழு உரம் செடிகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும். முதல் தரமான வேரினை அறுவடை செய்யலாம்.முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும்.

Saturday, November 14, 2009

மலைகளும் மழைக்காடுகளும்.

இயற்கையை எவ்வளவு கொடூரமாக அழிக்கமுடியுமோ அந்த அளவிற்கு அழித்து விட்டோம். மலைகள் மரங்களுடன் இருந்தால்தான் மனிதன் அமைதியாக வாழமுடியும் இதில் குறைவு ஏற்படும் போது மனிதனுக்கும் மிருகங்களுக்குமிடையே (குறிப்பாக மனிதன் யானை) பிரச்சனைகள் உண்டாகின்றன. இதில் அதிகமாக யானைகளும், அரியவகை தாவரங்களும் அழிந்து போவதுதான் வருத்ததிற்குரியது. மலைகள் மரங்களுடன் இருந்தால் மழை நிச்சயம் உண்டு. உணவும் நீரும் இருந்தால் மனித மிருக பிரச்சனைகள் குறையும். மரங்கள் இயற்கையாக தன்னைத் தானே எவ்வளவு எளிதாக புதிப்பித்து கொள்ளுகிறது என்பதை தனக்கே உரிய அனிமேஷன் படம் மூலம் நமக்கு தெளிவுபடுத்துகிறார் திரு. ப்ராசிட்பொன்.


நமது ஆயிரக்கணக்கான ஏக்கர் மழைக்காடுகளை தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களாக மாற்றிவிட்டோம். குறைந்த பட்சம் இருக்கின்ற மலைப் பகுதிகளிலாவது மரங்களை வளர்ப்போம்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். குறள் : 742.

Wednesday, November 11, 2009

இயற்கையின் சீற்றம் - நீலகிரி மாவட்டம்.

இயற்கை கண் இமைத்தால் கூட போதும் மனித இனம் துவண்டுவிடுகிறது. சுனாமிகளும், புயல்களும், நில நடுக்கங்களும், சென்ற 10 ஆண்டுகளில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் உலகமயமாகிவிட்டது என்பதை மறந்து இன்னமும் பொருளாதாரத்தின் உச்சியில் இருக்கும் நாடுகள் இந்த சுழல் மாறுபாட்டை உணர மறுத்து செயல்படாமல் லாப நஷ்ட கணக்கையும், போட்டி மனப்பான்மையுடன் மற்ற நாடுகளை குறை கூறுவதும், நிர்பந்தம் செய்வதும் வருகின்ற சமுதாயதிற்கு நாம் செய்யும் துரோகம் என்பதில் ஐயமில்லை.

பார்க்கும் பொழுதெல்லாம் மனதை கவரும் “கேத்தி பள்ளதாக்கு” இந்த வருட வடகிழக்கு பருவ மழையில் மண் சரிவினால் மக்களுக்கு பெரும் துன்பத்தை தந்துள்ளது. நீலகிரி மாவட்டமே சோகத்திலுள்ளது. தமிழகத்தில் குறிபிட்ட இடத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை கேத்தியில் பதிவான 820mm என பத்திரிகைகள் கூறுகின்றன. 10 கி.மீ தள்ளியுள்ள உதகை 190mm, குன்னூர் 310mm கோத்தகிரி 270mm, என்ற அளவில் மழை பெய்துள்ளது. தமிழகத்தின் சராசரி வருட மழையளவு சுமார் 950+ mm என்பதை மனதில் கொள்ளவும்.

இயற்கை தென்இந்தியாவிற்கு தந்த பரிசான வெட்டிவேர் இந்த பாதிப்பை கணிசமான அளவிற்கு நிச்சயம் குறைத்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உலகிலுள்ள அனைத்து மக்களும் இதனை “வெட்டிவேர்” என்ற தமிழ் பெயரில்தான் அழைக்கிறார்கள் என்பது வியப்பளிக்கலாம். உலகில் 100 நாடுகளுக்கு மேல் பல்வேறு காரணங்களுக்கு வெட்டிவேரை பயன்படுத்தினாலும் மண் அரிப்புக்கு நம் தென்இந்திய வெட்டிவேரைத்தான் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்கு பெருமைதான். இந்த புல்லிற்காக வலையமைப்பை ( http://www.vetiver.org/ )உருவாக்க பொருளுதவி தந்து ஊக்கம் அளிப்பது தாய்லாந்து நாட்டின் மன்னர் குடும்பம். ஆனால் அதனைப் பற்றி நாமே தெரிந்து கொள்ளாமல், பயன்படுத்தாமல், பேரிடர் வரும் போது கஷ்டப்படுவது யார் குற்றம்? அலசி ஆராய்வதை விடுத்து ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தினால் வருங்காலத்திலாவது இழப்புக்கள் தவிர்க்கப்படும்.

எனது 2007 ஆண்டு பதிவினைக் காண :
மண் அரிப்பும் வெட்டி வேரும்
தா(வரம்) ஒன்று பயன்கள் பல.

ஓர் வேண்டுகோள்.
இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் உங்கள் நண்பர் ஓருவருக்காவது இக்குறிப்பிட்ட பதிவை அறிமுகம் செய்யுங்கள் (எனது சுயநலனுக்காக அல்ல) வெட்டிவேருக்காக அறிமுகப்படுத்துங்கள். இடர்களற்ற தமிழகத்தை காண்போம்.

Sunday, November 8, 2009

சரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் வெட்டிவேர் - அனிமேஷன் படம்

மழை காலங்களில் சரிவுகளில் மண் அரிப்பை மிக எளிதாக வெட்டி வேர் தடுப்பதை அழகாக அனிமேஷனில் நாடுகள், மொழிகளைக் கடந்து பாமர மக்களுக்கும் புரியும் படி அதே சமயம் 2 நிமிடங்களுக்குள் எடுத்துள்ள தாய்லாந்து நாட்டின் திரு. ப்ராசிட்பொன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்கள் பார்வைக்காக அப்படம்.

Friday, November 6, 2009

"பூட் ஜொலோகியா" - உலகின் மிக காரமான மிளகாய்


கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகக் காரமான மிளகாய் என்று 2006 இல் இடம் பெற்ற "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia) என்ற மிளகாயை சில வருட தேடலுக்குப் பின் வடகிழக்கு மாநிலங்களுக்கு சொந்தமானதால் இங்கு வருமா? வராதா? என்ற சந்தேகத்தால் விட்டு விட்டேன். ஆனால் TNAU வில் நடைபெறும் வேளாண்மை அறிவியல் மைய கண்காட்சியில் வடகிழக்கு பிராந்திய அரங்கில் பார்த்த போது ஆவல் மிகுதியில் இது பூட் ஜொலோகியாவா? என்று கேட்டதும் அந்த விஞ்ஞானி மகிழ்ச்சியுடன் அடுத்த 20 நிமிடங்கள் எனக்காக விளக்கம் தந்தார். அருகில் முகர்ந்து பார்த்தாலே காரத்தின் நெடி..

எனது பழைய பதிவை காண "பூட் ஜொலோகியா" (Bhut Jolokia)

விதைகள் வேண்டுவோர் கீழ்கண்ட விலாசத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.
The Director,
ICAR (RC) for NEH Region,
Umiam - 793 103
Meghalaya.
Phone : 0364 - 2570257

Wednesday, November 4, 2009

வேளாண்மை அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாடு - கோவை

தேசிய அளவில் 569 வேளாண்மை அறிவியல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30, தமிழகத்தில் உள்ளது. இதில் 14 அறிவியல் நிலையங்கள் கோவை வேளாண்மை பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இம்மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களும், மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சரத்பவார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண்மை விஞ்ஞானிகள் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளின் அனுபவங்கள், வெற்றிக் கதைகள், சிறப்பு தொழில் நுட்ப பரிமாற்றம் ஆகியவை இடம் பெறும்.

இடம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
நாள் : நவம்ர் 6,7,8 தேதிகள்.

Tuesday, November 3, 2009

உருகும் திபெத் பனிப் படிவங்களும் வட இந்திய நதிகளின் எதிர்காலமும்.


திபெத் பீடபூமி பகுதிகளில் பனிப் படிவங்கள் உள்வாங்கி வருவதை சீன ஆராய்ச்சியாளர்கள் ஆவணப் படுத்தி உள்ளார்கள். இதனால் அதில் உற்பத்தியாகும் நதிகளின் நீரோட்டம் உள்ள இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும்.


சீனப் பசுமை அமைதி பசுமைப் பூமி தொண்டர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பனிப்படிவங்கள் குறைவதையும், இமாலய நதிகளின் தொடக்க இடங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தையும் ஆவணப்படுத்தி உள்ளார்கள். திபெத் பீடபூமியில் சில இடங் களில் 2001க்குப் பின் பனிப் படிவங்கள் மூன்று கி.மீ. தொலைவுக்கு பின் வாங்கியுள்ளன.


வெப்ப அதிகரிப்பு மற்றும் பூமி வெப்பமடைதல் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் பனிப்படி வங்கள் அதிவேகமாகக் குறைகின்றன. இந்த அபாய அறிவிப்பை, சீனா, இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ஆனால், தற்போது அன்று அலட்சியப் படுத்திய சீன அதிகாரிகளும், அரசு அமைப்புகளும் தீவிரமாகக் கவலைப்படத் தொடங்கியுள்ளன.


உலகின் மற்ற பகுதிகளைவிட திபெத் பனிப் படிவங்கள் வேகமாக உருகுகின்றன என்று சீன வானிலை நிர்வாக முன்னாள் இயக்கு நர் கின் டாஹே கூறுகிறார். இதன் விளைவாக ஏரிகள் பெரிதாகும். பெரும் வெள்ளமும் கடும் மண்சரிவும் உண்டாகும். இப்படிவங்கள்தான் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா ஆகியவற்றின் தாயகமாகும். பனிப் படிவங்கள் அழிந்துவிட்டால் இவற்றின் நீரோட்டமும் வற்றிவிடும்.


தற்போதைய வெப்பம் அடைதல் விகிதத்தில் இமாலயப் பனிப்படிவங்கள் முப்பதாண்டுகளில் அழிந்து விடும். ஆண்டுதோறும் 131.4 ச.கி.மீ. பரப்பளவுள்ள பனிப் படிவங்கள் குறைகின்றன. பனி எல்லைகள் ஆண்டு தோறும் 350 மீ சுருங்குகின்றன.


2005ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பனிப்படிவ ஏரி 2009 தொடக்கத்தில் உடைந்தது. பூமி வெப்பம் அடைதலால் உருகிய பனிப்படிவங்கள் கொட்டிய நீரால் இந்த ஏரி உடைந்தது. இதனால் கின் காய் மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. திபெத் பீட பூமியின் பனிப்படிவங்கள் சீனாவின் மஞ்சள் ஆறு மற்றும் யாங்ட்ஸி நதிகளுக்குரிய நீரூற்றாகும்.
Source : தீக்கதிர் கோவை 03-11-09


ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை
பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ

இவ்வளவு பெரிய நதிகள் கூட வறட்சியை காட்ட ஆரம்பித்துள்ளது. இது பற்றிய எனது பதிவினைக் காண ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை.

Tuesday, October 27, 2009

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள்

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கட்டண விபரங்கள் பின்வருமாறு.

Source : தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத்துறையின் கையேடு.

Monday, October 26, 2009

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு “அபிடா” அங்கீகாரம்

தமிழ்நாடு அரசால் மே 2007 ம் வருடத்தில் நிறுவப்பட்ட அங்ககச் சான்றளிப்புத்துறைக்கு மத்திய அரசு “அபிடா” நிறுவனத்தால் மதிப்பேற்றல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பேற்றல் தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி வழங்கப்பட்டு, மதிப்பேற்றல் எண் NPOP/NAB/0019 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..இதன்படி தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையின் கீழ் பதிவு செய்யப்படும் அங்ககப்பண்ணைகளை (Organic Farms )தேசிய அங்கக உற்பத்தித் திட்டத்தின்படி ஆய்வு செய்து உரிய சான்றுகள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இத்துறைக்கு வழங்கப்பட்ட மதிப்பேற்றல் ஐரோப்பா கமிஷன், சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறையின் மதிப்பேற்றல் வழங்கும் நடைமுறைக்கு இணையாகும்.

தமிழ்நாடு அரசு அங்ககச் சான்றளிப்புத் துறையால் வழங்கப்படும் சான்றுகள் இந்தியாவிலிருந்து அங்ககப் பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பயன் உள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் அங்கக பயிர் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல், அங்கக இடுபொருள் உற்பத்தி, வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு சான்று வழங்க உரிய நடைமுறைகள் மற்றும் தரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கக முறையில் வேளாண்மை மேற்கொள்ளும் விவசாய்கள், விவசாயக்குழுக்கள் மற்றும்வணிக நிறுவனங்கள் தங்களுடைய அங்ககப்பண்ணைகளை கீழ்கண்ட முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம். வாழ்க வளமுடன், வாழ்க வையகம்.

இதன் முக்கிய அம்சம் சிறு/குறு விவசாயிகள் கூட பல ஆயிரங்களை செலவு செய்யாமல் சில நூறு ரூபாய்களில் அங்ககச் சான்றிதழ் மற்ற நாடுகளுக்கு இணையானதை பெறலாம் என்பதுதான். இது பற்றிய எனது பழைய பதிவினைக் காண தமிழகத்தில் அங்கக சான்றளிப்புத் துறை

இயக்குநர்,
அங்கக சான்றளிப்புத் துறை,
1424 எ, தடாகம் சாலை,
ஜி.சி.டி. போஸ்ட்கோவை- 641 013
தொலைபேசி எண் : 0422-2435080
பேக்ஸ் : 0422-2457554
மின்னஞ்சல் : tnocd@yahoo.co.in

Friday, October 23, 2009

மண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்

எதிர்பார்த்தபடி அக்ரி இன்டெக்ஸில் சில எளிய தொழில் நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அவைகளில் ஒன்று மண்புழு உரம் தயாரிக்க உதவும் மண்புழு உரப்படுகை. மண்புழு உரம் தனியாக தேவைப்படுவதால் நாமே இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது. காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.மண்புழுகுளியல் நீர் (Vermiwash) எளிதாக எடுப்பதற்கு வசதி தந்திருப்பது இதன் சிறப்பு. அமைக்கும் போது இந்தப் பகுதி தாழ்வாக இருக்கமாறு அமைத்தால் எளிதாக மண்புழுகுளியல் நீர் சேகரிக்கலாம்.கட்டிடம் ,கூரை தேவையில்லையென தோன்றுகிறது. தேவைப்படின் இதற்கு மேலாகவே HDPE Sheet கொண்டு மிக எளிதாக கூரை அமைக்கலாம். வழக்கம் போல் எறும்புத் தொல்லை உண்டு. படுகையைச் சுற்றி மஞ்சள் பொடி இட வசதியாக உள்ளது. எறும்பு மருந்து இடுபவர்களுக்கும் வசதிதான் உரப்படுகையை சுற்றி இட்டாலும் புழுக்களுக்கும் மருந்திற்கும் இடையே உரப்படுகையிருப்பதால் புழுக்களுக்கு சேதம் இல்லை. மாடித்தோட்டத்தில் கூட பயன்படுத்த உகந்தது.
தொடர்பிற்கு
ஸ்ரீ அர்ஜுன் தார்ப்பாலின் இண்டஸ்ட்ரீஸ்
47, ராஜாஜி ரோடு,
சேலம். 636 007
செல் : 94422-12345

Monday, October 19, 2009

சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்

உழவு செய்பவர்களுக்கும் உண்பவர்களுக்கும் இடையில் நடக்கும் காரியங்கள் இருவரையுமே துக்கத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இடையில் இருப்பவர் எந்தவித உழைப்பின்றி பதுக்கல், பேரம், முன்வர்த்தகம், என்று பணம் பார்த்துவிடுகிறார். இதனை சரிசெய்ய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் “சந்தை விரிவாக்கத் துறை” என்ற துறையை 14-05-09 முதல் துவக்கி செயல்படுத்திவருகின்றனர்.

நோக்கம் :

# வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர் குழுக்கள்அமைத்து தொகுப்புக்களாக செயல்பட பயிற்சி அளித்தல்.
To promote commodity based farmers groups.

# வணிக, நிதி, காப்பீடு மற்றும் வேளாண் தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தி விவசாயிகள் (குழுக்கள்)/உற்பத்தியாளரின் பொருட்களுக்கு மேம்பட்ட சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல்.
To promote Institutional linkages for commodity groups for better marketing.

# விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு கருத்தரங்குகளை நடத்துதல்.
Conduct workshops on linking markets and farmers and organize buyer- seller meets.

# சந்தை நிலவரம் பற்றிய தகவல்களை சேகரித்து, அதனை பிற 29 வேளாண் அறிவியல் நிலையங்கள் மற்றம் வேளாண் துறையுடன் பகிரந்து கொள்ளுதல்.
To scout the market information and share it with all 29 KVKs and line departments.

# சந்தையில் விலை மாற்றங்கள், சந்தை தகவல்கள் குறித்து விரிவாக்கப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்.
To offer master training to developmental workers on market forces,intelligence and informationsystems.

# தமிழ்நாடுஅரசின் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விற்பனை மேலாண்மை குறித்த பயிற்சி அளித்தல்.
To provide training on marketing management to line department Officials.

இத்துறை மாநில வேளாண் வணிக மற்றும் தொழில் துறை இயக்குநரகம், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் (APEDA) , முறைசார்ந்த மற்றும் முறை சாராத சந்தைகள், கொள்முதல் செய்வோர் மற்றும் விற்பனையாளர்களிடம் இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பிற்கு :

பேராசிரியர் மற்றும் தலைவர்
சந்தை விரிவாக்கத்துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
கோயம்புத்தூர். 641 003.
தொலைபேசி : 0422-6611315.
Source : சந்தை விரிவாக்கத்துறை- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கையேடு.

Tuesday, October 6, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள் -2

சிரோஹி இன ஆடு
பீட்டல் இன ஆடு
வடஇந்திய ஆடுகளான சிரோஹி மற்றும் பீட்டல் இனங்களை காட்சிக்காக “கண்மணி மார்டன் பார்மஸ்” (98940-45389) வைத்திருந்தார்கள். ஏழைகளின் பசு என்றால் அது மிகையில்லை. பீட்டல் இன ஆடுகள் சுமார் 4 லிட்டர் பால் (குட்டிகளுக்கு போக) தருவதாக கூறினார்கள். விற்பனையும் உண்டு.
டெல்லியிருந்து அழகுசெடிகள்,ஆர்கிட் வகைகள் வைத்திருந்தார்கள். ஜின்செங் வேரில் பைகஸ் வகை செடியை ஒட்டுச் செடியாக்கி வைத்திருந்தார்கள் விலை ரூ.500/= தான். வெளிநாட்டு பூக்களின் கிழங்குகளை வைத்திருந்தார்கள் விலை சற்று அதிகமென தோன்றியது.
லின்ட்சே கார்போரேஷனின் (Lindsay Corporation) தண்ணீரை சிக்கனமாக தெளிக்கும் அமைப்பை காட்சிக்காக வைத்திருந்தார்கள். நிறுவுவதற்கு கணிசமான தொகை தேவைப்படும் என தோன்றுகிறது. கம்பெனி விவசாயத்திற்கு ஏற்றது. அனைவரையும் கவர்ந்தவர்கள் இந்த மிக உயரமான கலைஞர்கள்தான். கூட்டதிற்கிடையே மிக எளிதாக வலம் வந்து அசத்தினார்கள்.
ஓய்வு

Friday, October 2, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009 - சில தகவல்கள், சில காட்சிகள்.

எதிர்பார்த்ததை போலவே கோவை அக்ரி இன்டெக்ஸ் 2009 இல் சில விலை குறைந்த எளிய தொழில் நுட்பங்கள் இடம் பெற்றிருந்தது மகிழ்ச்சியை தந்தது. விரிவாக பின்பு எழுதுகிறேன்.ரூ.1,000/=+ இல் மண்புழுஉரப்படுகை. நகர விவசாயத்திற்கு ஏற்றது. குறிப்பாக மாடித் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது. (மாதிரி)
ரூ. 5,000/= செலவில் சாண எரிவாயு அமைப்பு. கட்டிட வேலை தேவையில்லை. (மாதிரி)
ரூ. 30,000/= க்கு 300 வாட் சக்தி கொண்ட காற்றாலை (Wind mill)
ரூ. 58,000/= க்கு விலை குறைந்த பவர் டில்லர். உழுவதற்கு, களை எடுப்பதற்கு,பாத்தி பிடிக்க, கால்வாய் எடுக்க, உரமிட என அனைத்து வேலைகளையும் செய்யும்.
பூக்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட பூஜாடி.
விவசாயி ஒருவரின் வெட்டிவேர் பொருட்கள்.

வாழை விவசாயமும், 10 நிமிடக் காற்றும்


குலையுடன் சாய்ந்துள்ள மரங்கள்
இந்த காற்றைக் கவனத்தில் கொண்டு பாதுகாப்பிற்காக அவைகளை சுற்றி கயிறுகள் கட்டியதால் சற்று தப்பிய மரங்கள்.
சென்ற வாரம் அடித்த காற்றில் அன்னூர், அவினாசி பகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சாய்ந்து கிடந்ததைப் பார்த்து மனம் அதிக வேதனையடைந்தது. இன்றைய விவசாய இக்கட்டுகளைத் தாண்டி முதலீடு, கடுமையான உழைப்பு என 1 வருடமாக செய்து 10 நிமிடக் காற்று அவர்களின் முதலீட்டை, உழைப்பை வீணாக்கியது. இதில் பயிர் காப்பீட்டில் வேறு சிக்கல் இருப்பதாக நண்பர்கள் கூறியது மேலும் கவலையளித்தது. பயிர் காப்பீடு விவசாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகவிட்டது. மத்திய அரசு தள்ளுபடிகளையும், இலவசங்களையும் தவிர்த்து பயிர் காப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது.

Thursday, October 1, 2009

அக்ரி இன்டெக்ஸ் 2009

இந்த வருடமும் கொடீசியா வளாகத்தில் 9 வது முறையாக அக்டோபர் 2 தேதி முதல் 5 தேதி வரை இந்த விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. சென்ற சில ஆண்டுகளாக சுமாராக இருந்தது. இந்த வருடம் வேளாண்மை பல்கலைகழகமும் இணைந்து நடத்துகிறார்கள். விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வரும் வேளையில் தொழில் நுட்பங்கள் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பொதுவாக இது போன்ற கண்காட்சிகள் நமது சிந்தனைகளை, செயல்பாடுகளை ஏதோ ஓரு விதத்தில் மாற்றும். இன்றைய நிலைமையில் மாற்றம் தேவை. எனவே உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறேன்.

இடம் : கொடீசியா வளாகம், அவினாசி சாலை, கோவை.
நாள் : அக்டோபர் 2 முதல் 5 தேதி வரை

Monday, September 28, 2009

மண் அரிப்பை நிறுத்தும் “வெட்டி வேர்”

சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு.

Saturday, September 19, 2009

“புழுதி நெல்” வருங்காலத்தின் தேவை.

“புழுதி நெல்” பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் பரிசோதித்து பார்க்கலாம் என்று விதைத்ததில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதன் வளர்ச்சியை உங்கள் பார்வைக்காக பதிவு செய்கிறேன். இந்த வகை பயிர்கள் வருங்காலத்தின் தேவை என்பதில் ஐயமில்லை. மேலும் “புழுதி நெல்” பற்றி' எனது பழைய பதிவைக்காண Click

சேற்று உழவு, நாற்று நடுதல், அதிகம் நீர் பாய்ச்சி நிறுத்துதல் இங்கே இல்லை.

கீழேயுள்ள படங்கள் 26-08-09 எடுக்கப்பட்டவை