Wednesday, June 18, 2014

கற்றாழை என்றழைக்கப்படும் “குமரி”

குமரி அல்லது சோற்றுக் கற்றாழை
வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இயற்கை நிறைய அற்புதமான தாவரங்களை தந்துள்ளது. அவற்றில் ஒன்று கற்றாழை எனபடும் “குமரி” அல்லது “சோற்றுக் கற்றாழை”. ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட காற்றாழையில் நிறைய வகைகள் உண்டு. நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காற்றாழையின் மடலை சீவி அதனுள் இருக்கும் “ஜெல்” பகுதியை உண்டு உயிர் வாழ்ந்ததாக பழைய நூல்கள் கூறுவதால் அதற்கு “சோற்றுக் கற்றாழை” என்ற பெயர் வந்திருக்கலாம். வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க கற்றாழையை எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.


ஜெல்

வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.

கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை

நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.

ஊடுபயிராக இதனை வளர்க்கலாம்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.

Sunday, June 8, 2014

“தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy )



தோட்டக்கலை என்பது வெறும் காய்கறிகள் | பழங்கள் | மலர்கள் | அழகுச்செடிகள் உற்பத்தி, பொழுதுபோக்கு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, அந்தஸ்து என்ற வழக்கமான நிலைகளைத் தாண்டி வயதானவர்கள், குழந்தைகள், மனநோயாளிகள், மன இறுக்கம், தனிமை, திக்கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், குறிப்பிட்ட பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், இழப்பை சந்தித்தவர்கள், வாழ்கை மாற்றத்தை அடைந்தவர்கள், விபத்தில் ஊனமானவர்களுக்கு மிக மிகச்சிறப்பானது இந்த “தோட்டக்கலை சிகிச்சை” (Horticultural Therapy ) முறையாகும்.

இன்றைய அதிவேக வாழ்கை முறை, தவறான உணவுப்பழக்கம், வேலைப்பழு, இரவு வேலை நேரம், நெரிசல் மிக்க நீண்ட பயணம், கடுமையான அலுவலக உழைப்பு போன்றவை  சாதாரணமானவர்களை  அதிக மன உளச்சல் /உடல் சோர்வு | மனஅழுத்ததிற்கு இட்டுச் செல்கிறது. அதற்கு எளிய ஆனால் சிறப்பான தீர்வு “தோட்டக்கலை சிகிச்சை” முறை என்றால் அநேகருக்கு ஆச்சரியம் தரலாம். இன்றைய வாழ்வியல் முறையில் . “நமக்கு நாமே” தீர்வு என்று இரசாயன உற்பத்தியை தவிர்த்து இயற்கை முறையில் தோட்டக்கலையை சிகிச்சையாக செய்ய ஆரம்பித்தால் குடும்ப ஆரோக்கியத்தை காப்பதோடு நோயற்ற மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை வாழலாம்.

அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையொப்பம் இட்டவரும், “அமெரிக்காவின் மனநல மருத்துவதின் தந்தை” என்று புகழ் பெற்றவரும், பல்துறை வல்லுனருமான Dr. பெஞ்சமின் ரஷ் என்பவர் 1798 ஆண்டுகளில் மனநலம் குன்றியவர்களுக்கு “தோட்டக்கலை” மூலம் சிகிச்சை தருவதால் அவர்களின் மன நிலையை மேம்படுத்தலாம் என பதிவு செய்தார். பின்பு 1800 களில் ஸ்பெய்ன் நாட்டில் மனநல மருத்துவமனைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகப் போருக்குப் பின் வயதான, ஊனமுற்ற போர்வீரர்களுக்கு தோட்டக்கலை சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முறையாக “தோட்டக்கலை சிகிச்சை” உருவெடுத்துள்ளது. தொழில் முறையில் தோட்டக்கலை மூலம் சிகிச்சை மருத்துவ மனைகள், காப்பகங்கள், வயதானவர்கள் தங்கும் விடுதிகளில் நடைபெறுகிறது.

இதனால் பெறப்படும் நன்மைகள்.

வயதானவர்களுக்கு உடல் ரீதியாக  வலிமை, ஆற்றல், சுறுசுறுப்பான நடமாட்டம்,  நல்ல கண்-கை தொடர்பு (hand-eye coordination) ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம். மன அழுத்தத்தை குறைத்து மன வலிமையையும், நம்பிக்கையையும் தரும்.

பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் குழந்தைகள் | மனநலம் குன்றியவர்களின் இயற்கை புரிதலை மேம்படுத்தும். கவனம், மனதை ஒரு முகப்படுத்துதல், முன்னேற்றம், புதிய நுட்பத்தை மனம் நாடுதல், நல்ல திட்டமிடுதல், பிரச்சனைகளுக்கு தீர்வு, ஞாபக சக்தியை அதிகரித்து நல்ல மனப்பான்மையையும் குழந்தைகளிடம் ஏற்படுத்தித் தரும்.
சமூக ரீதியாக மக்களிடையே நல்ல தொடர்பு கிட்டும், நமது கூட்டுக் குடும்ப முறையில் சுமுகமான உறவு பலப்படும்.
புதிய நுட்பம்

தோட்டக்கலை என்பது தாவரங்கள் மட்டுமின்றி நீரின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை, பறவைகள், மிருகங்கள், பூச்சியினம், பட்டாம் பூச்சி, நோய் மற்றும் அதன் நிர்வாகம், உர மேலாண்மை என பல உட்பிரிவுகளைக் கொண்டது. எனவே பல்வேறு துறைகளில் நமது கவனம் திருப்பப் படுவதால் நிறைய துறைகளில் அனுபவம் கிடைக்கிறது.


பல ஆயிரம் வருடங்களாக இருந்த வந்த “பாட்டி வைத்தியம்” கூட இந்த “தோட்டக்கலை சிகிச்சையின் ஒரு அங்கம் எனலாம். சென்ற 30 வருடங்களில் ஏற்பட்ட மருத்துவ மாற்றம் இந்த பரம்பரை ஞானத்தை இளம் தலைமுறையினரிடம் குறைத்துவிட்டது, பல மருத்துவ தாவரங்கள் அழிந்து வருகின்றன அவைகளை மீட்டெடுத்து பின்விளைவுகளற்ற வைத்தியமும், ஞானமும், மருத்துவ தாவரங்களும் காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு வேண்டுமானால் தோட்டக்கலை அவசியம் தேவை.