Friday, February 26, 2010

உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.


உலகெங்கும் தொல்லை தரும் களைச் செடிகளில் இந்த உண்ணிச் செடி (Lantana camara ) மிக முக்கியமானது. தென் அமெரிக்காவிலிருந்து பரவிய இது இன்று ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது. இதனால் வன மிருகங்களின் மேய்ச்சல், வாழ்விடங்கள் பாதிக்கபட்டுள்ளதோடு அரிய வகை தாவரங்களும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விகுறியாகும் அளவிற்கு இதன் வளர்ச்சியுள்ளது.

ஆனால் பெங்களுரு நகரிலுள்ள அசோகா டிரஸ்ட் பார் ரிசர்ச் இன் எக்காலாஜி அண்டு தி என்விரான்மெண்ட் ( Atree ) என்ற அமைப்பு இந்த உண்ணிச் செடியை எளிதாக பிரம்பிற்கு மாற்று மூலப்பொருளாக பயன்படுத்தி மிக நேர்த்தியாக கைவினைப் பொருட்கள் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர். அனைத்துப் பொருட்களும் விற்றுத் தீர்ந்தது வேறு விஷயம். புகைபடங்கள் மரவிழா கோவை -2010 கண்காட்சியில் எடுக்கப்பட்டவை.

இந்த மாற்று மூலப்பொருளால் வனவளம் காப்பாற்றப்படுவதோடு மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு, மூங்கில், பிரம்பு போன்றவற்றின் தேவை குறைவதால் அதன் வளம் காப்பாற்றபடுகிறது. உண்ணிச்செடியை மூலப்பொருளாக உபயோகிப்பதால் (அப்பகுதியிலிருந்து அகற்றப்படுவதால் )மண்வளம் மேம்பட்டு அரிய வகை தாவரங்கள் காப்பாற்றபடுகின்றன. இதுபோன்ற மாற்று பொருட்களுக்கு ஆதரவு தருவதன் மூலம் நாம் மறைமுகமாக சுற்றுச்சுழலை பாதுகாக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

மேலும் விபரங்கள் பெற :-

ASHOKA TRUST FOR RESEARCH IN ECOLOGY AND ENVIRONMENT,
Royal enclave
Sriramapura
Jaggur post
Bangaluru 560 064
Phone :- 91-80-23635555
Email : kannan@atree.org

Thursday, February 25, 2010

மரவிழா கோவை -2010 கண்காட்சி

மரவிழா கண்காட்சி விழிப்புணர்வு காட்சியாக இருந்தது. நாம் கழிவாக எண்ணி உபயோகிக்காமல் தூக்கி எறியும் அல்லது எரிக்கும் கழிவுப் பொருட்களிலிருந்து உயர் அழுத்த பலகைகள் செய்து மாதிரிக்காக வைத்திருந்தார்கள். குறு விவசாயிகளும் மிக சிறிய ( 5 கிலோ ) அளவில் எண்ணை பிரித்தெடுக்க உதவும் வகையில் எண்ணைவடிப்பான் ( Distillation Unit ) மின்சாரத்தில் இயங்கக்கூடியது, மரத்தில் சிற்ப வேலைப்பாடுகள், மூங்கில் கூழுடன் பாலிமர் கலந்து செய்த பூந்தொட்டிகள் என உபயோகமாக கண்காட்சியில் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. உண்ணிச் செடியிலிருந்து செய்த பொருட்கள் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. இதற்கான தனிப்பதிவு அடுத்து வருகிறது.

உயர் அழுத்த பலகை பற்றி அறிய :-
Director
IPIRTI
P.B. NO 2273
TUMKUR ROAD, BANGALURU 560 022.
Phone : 91-80-8394231, 91-80-8394232, 91-80-8394233

Wednesday, February 24, 2010

மரவிழா கோவை -2010

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையத்தின் தலைவர் மதிப்பிற்குரிய முனைவர். கிருஷ்ணகுமார் அவர்களின் உரை.
மரவிழா - 2010 வரவேற்பு, வாழ்த்துரைகளுக்குப் பின் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மைய விஞ்ஞானிகள் தமிழகத்தில் நன்கு வளரும் சுமார் பத்து மரங்களின் ஆராய்ச்சி முடிவுகளை விளக்கமாகவும் படங்களின் மூலம் மிக தெளிவாகவும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக வருங்காலத்தில் மரங்களின் உற்பத்தி மற்றும் தேவை அடிப்படையில் தமிழகத்தில் சாதகமான சூழ்நிலைகள் வருங்காலத்தில் மரம் சார்ந்த மின்உற்பத்தி போன்ற மிக முக்கியமான தகவல்களை திட்டகுழு உறுப்பினர் மதிப்பிற்குரிய முனைவர். குமாரவேல் அவர்கள் தமது நீண்டகால ஆராய்ச்சியின் அனுபவங்களையும், நடைமுறைபடுத்தக் கூடிய திட்டங்களையும் எடுத்துக்கூறியது விழாவின் சிறப்பு. திட்டகுழு உறுப்பினர் மதிப்பிற்குரிய முனைவர். குமாரவேல் அவர்களின் உரை.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் முதல் முறையாக இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மைய விஞ்ஞானிகள் உருவாக்கிய தென்னகத்தில் நன்கு வளரக்கூடிய 4 சவுக்கு மரவகைகளையும் 4 தைல மரவகைகளையும் வெளியிட்டார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் உரை.
சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை மேடையில் கௌரவபடுத்தினார்கள். வரும் ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காக ரூ.25 கோடி அளிப்பதாக அமைச்சர் கூறினார்.
இரண்டாம் நாள் அதிகமாக விவசாயிகளின் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பல விவசாயிகளின் அனுபவங்கள் ஏற்புடையதாகவும் எளிமையாகவும் இருந்தது. குறிப்பாக நாகை மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு கிராமம் திரு. சி. இராஜசேகரன் B.A. அவர்கள் புன்னை மரத்திலிருந்து எண்ணை எடுத்து தனது ஆயில் எஞ்சினுக்கு எரிபொருளாக உபயோகிப்பதாக கூறி புன்னை மரத்தின் சிறப்பு பற்றி கூறினார். பின்பற்றப்பட வேண்டிய கருத்து.
சுற்றுச் சுழலை காப்பாற்ற மரங்களை நடும் மதிப்பிற்குரிய நண்பர்கள் திரு. கருணாநிதி , திரு. யோகநாதன் கௌரவிக்கப்பட்டனர்.
எல்லோரும் எப்படி மரத்தின் மூலம் பணம் உண்டாக்கலாம் என்று சிந்திக்க , தங்களின் பணத்தையும், நேரத்தையும் மரம் வளர்ப்பதில் செலவிட்டு சுற்றுச் சுழலை காப்பாற்றும் நண்பர்கள் திரு. யோகநாதன், திரு. கருணாநிதி இருவரையும் மேடையேற்றி கௌரவப்படுத்தியது மனத்திற்கு மகிழ்ச்சியை தந்தது. இருவரையும் கவனத்தில் கொண்டு கௌரவப்படுத்திய அதிகாரிகள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையத்துடன் தொடர்பை உண்டாக்கும் பாலமாக அமைந்த இந்த மரவிழா விவசாயிகளுக்கு மரவளர்ப்பைப் பற்றிய நல்ல தகவல்களை தந்து உற்சாகப்படுத்தியது. விழாவினை தொய்வின்றி நடத்திய அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த விவசாயிகளுக்கும் இந்த வலைப்பூ நன்றி தெரிவிப்பதுடன் மேலும் இத்துடன் விட்டுவிடாமல் முழுமூச்சில் மரவளர்ப்பில் ஈடுபட்டு சுற்றுச் சுழலை காப்பாற்ற வாழ்த்துகிறது.

திரு. யோகநாதன் பற்றிய எனது பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2008/06/my.html
***கணனி செயலிழந்ததால் காலம் தாழ்த்தி பதிவிடுவதற்கு வருந்துகிறேன்.

Sunday, February 14, 2010

தொழிற்சாலை சார்ந்த வேளாண்மை காடு வளர்ப்பிற்காக புதிய இணையதளம்.


தேசீய வேளாண் புதுமைத் திட்டதின் கீழ் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரவளர்ப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. அதனை மேலும் ஊக்கப்படுத்தி விரிவாக்க புதிய இணையதளம் ஒன்றை http://www.fcrinaip.org/ என்ற முகவரியில் உருவாகியுள்ளனர். இத்திட்டதின் செயல்பாடு, இணைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள், செயல்படும் இடம், மாதிரிப்பண்ணை, தொழில்நுட்பம், மரத்தை வாங்கிக்கொள்ளும் தொழிற்சாலைகள் பற்றிய விபரங்கள் என நிறைய தகவல்கள் உண்டு. மிக முக்கியமாக விலை நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியிடுவதால் விவசாய பெருங்குடி மக்களும், உபரி வருமானத்தோடு இயற்கையையும் பாதுகாக்க தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் அச்சமின்றி மரவளர்ப்பில் ஈடுபடலாம். நல்ல வாய்ப்புக்கள் நம் கதவை தட்டும் போது திறந்து பயன்பெற்று வனவளத்தைக் காப்பது நம் கடமை.

வனம் வளர்ந்தால் அது வளமையின் துவக்கம்.
வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்.

Thursday, February 11, 2010

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2010

இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் என்ற அரிய வாய்ப்பை நமக்கு வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் - கோவை இம்மாதம் 18 - 19 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். அவர்களது அழைப்பிதழில் விபரம் அதிகமிருப்பதால் அதனையே பிரசுரித்திருக்கிறேன். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். அழைப்பிதழை "கிளிக்" செய்து பெரிதாக்கி படியுங்கள் அல்லது கீழ் கண்ட தொடர்பை உபயோகியுங்கள் : http://ifgtb.icfre.gov.in/left_details/news/ifgtb.pdf
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்

Friday, February 5, 2010

கேரள மாநில அரசின் மனிதாபிமான செயல் - “எண்டோ சல்பான்” மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு.

கடவுளின் சொந்த நாடான (God’s own Country ) கேரள மாநிலத்தில் காசர்கோடு பகுதி முந்திரி சாகுபடிக்கு பெயர் போனது. நிறைய அன்னிய செலவாணியை அள்ளித் தரும் பயிர். அதனை காப்பாற்ற “எண்டோ சல்பான்” என்ற மருந்து ஹெலிகாப்டர் மூலம் தெளிக்கப்பட்டது. வருடங்கள் செல்ல செல்ல நிலம், நீர், காற்று மாசுபாடு அடைந்து அந்த பகுதி மக்களின் வாழ்கை கேள்விக்குரியானது. குறிப்பாக குழந்தைகள் நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு நடைபிணமாயினர் என்பதுதான் உண்மை. இது சம்பந்தமாக அடவாடியாக வழக்காடியது மருந்து நிறுவனம். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது அவர்களது லாப வெறியை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு நஷ்ட ஈடு தருவதாக கேரள மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரவேற்க தக்க அறிவிப்பு. இதே போன்று இன்று விவாதிக்கப்படும் பி.டி. (Bt )கத்திரியும் இந்த வகையை சார்ந்ததே. 20 அல்லது 30 ஆண்டுகள் கழித்து பாதிப்புக்களை நாம் சந்திக்காவிட்டாலும் வருங்கால குழந்தைகள் சந்திப்பார்கள் அப்போது இதேபோன்று சில ஆயிரம் நஷ்ட ஈடு தருவதாக கூறுவார்கள். ஆனால் பல கோடிகளை லாபமாக கம்பெனிகள் அள்ளிச் சென்றிருக்கும் அதில் சில ஆயிரங்களை தருவதில் அவர்களுக்கு பிரச்சனைகள் இல்லை. “போபால்” விஷ வாயு விபத்தில் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பது என்னவோ ஏழை மக்கள்தான். அன்று எண்டோ சல்பானை உபயோகிக்க சொன்ன அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், கம்பெனியும் வளமுடன்தானுள்ளார்கள். பாவம் திரு.பொதுஜனம்.

TERI நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட The Slow Poisoning of India என்ற 26 நிமிட மனதை பிழியும் ஆவணப் படத்தைக் காண கீழேயுள்ள தொடர்பை கிளிக் செய்யவும்.
அவசியம் படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்.

http://video.google.com/videoplay?docid=-6926416900837431282