Wednesday, February 29, 2012

தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தின் மேம்படுத்தப்பட்ட அடுப்பு

மீண்டும் ஒரு டேங்கர் (சமையல் எரிவாயு) லாரிகளின் வேலை நிறுத்தம் துவங்கப்பட உள்ள நிலையில் சாமானியர்களின் இரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் நேரம். கிராமங்களில் கூட சமையல் எரிவாயு பிரபலமான நிலையில் பாதிப்பு நிச்சயம் இருக்கும். மின்பற்றாக் குறையுள்ள தமிழகத்தில் மின்அடுப்பு வகைகள் பலனளிக்கப் போவதில்லை. தீர்வு ??? சோதித்துப் பார்த்ததில் தமிழ்நாடு விவசாய பல்கலைகழகத்தின்  மேம்படுத்தப்பட்ட அடுப்பு சற்று ஆறுதல் தருவதாக உள்ளது

இருசுவர்கள் கொண்ட மண் அடுப்பு. வெளிச்சுவர் துவாரமின்றியும் உள்சுவர் மற்றும் கீழ்பகுதி துவாரங்களுடன் இருப்பதால் சுவர்களின் இடைவெளியில் காற்று உட்புகுந்து எரியும் பகுதிக்கு வருவதால் எரியும் தன்மை பாதிப்படைவதில்லை. விறகு முழுமையாக எரிபடுவதால் அதிக வெப்பமும், குறைந்த அளவு விறகும் இருந்தால் போதும் சமையலை முடித்துவிடலாம். சாம்பலை செடிகளுக்கு தூவி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். எளிய வாழ்விற்கு இது உதவும் என்று எண்ணுகிறேன்.






மேலும் விபரங்களுக்கு

தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம்,
கோவை.
---------------------------------
திரு.மதனகோபால்
அலைபேசி எண் : 93453 57803, 98940 95499

Monday, February 27, 2012

மரம் வளர்ப்போர் விழா 2012

 மரம் வளர்ப்போர் விழா 2012 - மாண்புமிகு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் திருமதி. ஜெயந்தி நடராஜன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. தானேபுயலால் பாதிக்கப்பட்ட மர விவசாயிகளுக்கு உதவ சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார். மேலும்  வனமரபியல் மற்றும் இந்திய மரப்பெருக்கு நிறுவன விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி நூல்கள் மற்றும்  இரு உயிர் உரங்களை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விஞ்ஞானிகள் தங்களின் உழைப்பை  படவிளக்கங்களுடன் கூறினார்கள். இன்னும் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டால் விவசாயிகள் எளிதாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சவுக்கு மர சாகுபடி மூலம் மின்உற்பத்தி படவிளக்கம் இன்றைய தமிழகத்தின் அத்தியாவசிய தேவையை உணர்த்தியது. மரவிவசாயிகளும், தொழில் முனைவோரும் அமர்ந்து தங்களுக்குள் முடிவெடுத்து செயல்படுத்தவேண்டிய தருணம் இது

விவசாயிகளின் அமர்வில் மரம், மூங்கில் இவற்றின் வளர்ப்பு மற்றும் சந்தைபடுத்துவதிலுள்ள பிரச்சனைகள் உணர்ச்சிவயப்பட்டு அழுகையின் விளிம்பிற்கு சென்றது மனத்தை உருக்குவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் அதற்கான தீர்வுகளை உடனே கூறியது ஆறுதலாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தை புயல் தாக்குவது வாடிக்கையான நிலையில் அலையாத்திக் காடுகளின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடத்தில் சென்றடைய வேண்டியது அவசியமாகிறது. வரும் வருடங்களில் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.



தூரத்திலிருந்தே மரத்தை அளக்கும் கருவி பச்சை புள்ளிகளை கவனிக்கவும்.

வழக்கம் போல் கண்காட்சி பயனுள்ளதாக இருந்தது. இம்முறை மூங்கிலில் மதிப்புக் கூட்டிய வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள் மனதைக் கவர்ந்தது. மரத்தின் தரம் மற்றும் பருமனை அளக்க உதவும் கருவிகள் பயனுள்ளதாக இருந்தது.
காகிதம், ஒட்டுப்பலகை, தீக்குச்சி, பென்சில், எரிசக்தி மூலம் மின்சாரம், பயோ-டீசல் என்று தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப்பொருள் மரம்தான்  என்று கூறினால் அது மிகையில்லை.

Tuesday, February 21, 2012

மரம் வளர்ப்போர் விழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் - 2012

வனம் அழிந்தால்? மனித இனம் அழியும்.
இன்றைய காலத்திற்கு தேவையான மரம் சம்பந்தபட்ட விழா. கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை வனமரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் கோவை, ,தமிழக அரசின் வனத்துறை இணைந்து இம்மாதம் 23 - 24 தேதிகளில் அளிக்கவுள்ளனர். அவசியம் அனைவரும் கலந்து கொண்டு பசுமை பாரதமாக மாற்ற நம்மால் இயன்றதை செய்வோம். குறிப்பாக பெரிய அளவில் தரிசுநிலம் வைத்திருப்போர், பெரிய கல்விநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நிச்சயமாக கூறலாம். திரளாக வந்து கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
மரம் நடுவோம், மழை பெறுவோம், வளம் பெறுவோம்