Sunday, May 31, 2009

சுற்றுச்சுழலும் பருவமழையும்

ஐலா புயலில் ஒரு கிராமத்து காட்சி
தென்மேற்கு பருவமழை 1 வாரத்திற்கு முன்பே ஆரம்பிக்கின்றது. இந்த வருடம் மழை சராசரியாக இருக்கும் என்று வானிலை அறிக்கையும் இருந்தது. ஆனால் “ஐலா” புயல் மேற்கு தொடர்ச்சிமலையில் பெய்யவேண்டிய மழையை இழுத்து சென்றுவிட்டது என கூறுகிறார்கள். ஜுன் 3 ம் தேதி ஆரம்பிக்கும் என புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. சென்ற வருடம் மழை மிக தாமதமாக வந்து தென்மேற்கு பருவ மழையை நம்பி விவசாயம் செய்பவர்களை வறட்சியால் நிலைகுலைய வைத்தது. இந்த வருடம் மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பால் விவசாயம் செய்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட திசையிலிருந்து குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்று பெய்வதே பருவமழை. இவ்வாறு பருவம் தவறக் காரணம் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாறுபாடுகளே. இதே நிலை நீடித்தால் நம் நாட்டின் விவசாயமே கேள்விக் குறியாகிவிடும். வளர்ந்த நாடுகள் “பொருளாதாரத்தை உலக மயமாக்கி ”தங்களை வளப்படுத்த நினைத்தார்கள். ஆனால் இயற்கை “சுற்றுச்சுழலை உலக மயமாக்கி” புயலாகவும், வெள்ளமாகவும், வறட்சியாகவும், நிலநடுக்கமாகவும், காட்டுத் தீயாகவும் பாடம் தந்து அவர்களை நெறிமுறைப்படுத்தியுள்ளது. எல்லா நாடுகளும் இயற்கையின்படி இருந்தால்தான் தாங்கள் நன்றாக வாழமுடியும் என்று வளர்ந்த நாடுகள் உணர்ந்துள்ளனர். எனவே பல வளர்ந்த நாடுகள் இன்று ஆப்ரிக்காவின் வளர்ச்சியில் பங்கு பெறுகின்றன. ஒவ்வொரு இந்திய குடிமகனும் சுற்றுச்சுழலில் ஏற்படும் மாறுபாடுகளை கவனிக்கவேண்டும் இது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்ற மனப்போக்கு இருப்பதையே நாம் பார்க்கிறோம். இதன் பலனை நம் குழந்தைகள்தான் எதிர் கொள்ளவேண்டும் இதனை தவிர்த்து அவர்கள் நல்வாழ்வு வாழ நிறைய மரங்களை வளர்ப்போம். கிடைக்கின்ற மழைநீரை சேமிப்போம். வளமான இந்தியாவை உருவாக்குவோம். மழைநீர் சேமிப்பு பற்றிய எனது முந்தைய பதிவுகளைக் காண கீழ்கண்ட தொடர்ப்புகளை பயன்படுத்துங்கள்.


http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html

http://maravalam.blogspot.com/2009/02/blog-post_19.html
படம் உதவி : வலைதளம்