Friday, July 25, 2014

கோவையில் வீட்டுத் தோட்டப் பயிற்சி ஆரோக்கியமான இயற்கை உணவின் மேலுள்ள நம்பிக்கை, காய்கறிகளின் விலை கடுமையான உயர்வுக்குப் பின் மக்களின் கவனம் மெதுவாக வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கோவையில் நடைபெற்ற “அக்ரி இன்டெக்ஸ்” வந்த திரளான மக்கள்  வீட்டுத் தோட்ட அரங்குகளை வெகுவாக இரசித்துப் பார்வையிட்டது சான்றாகும்.

தமிழக அரசு கோவைக்கும், சென்னைக்கும் சலுகை விலையில் வீட்டுத் தோட்ட உபகரணங்களை கொடுத்துள்ளது. இது மற்ற நகரங்களுக்கும் நிச்சயம்  விரிவாக்கப்படும் என எண்ணுகிறேன். வாங்கியவர்களுக்கும் / வாங்கப் போகிறவர்களுக்கும்  இந்த ஒரு நாள் பயிற்சி உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

1. வீட்டுத் தோட்டம்
2. நீர் மேலாண்மை
3. உர மேலாண்மை
4. பூச்சி / நோய்  மேலாண்மை

இவற்றோடு மூலிகைகள் மற்றும் சிறுதானியங்கள் பற்றிய தகவல் தொகுப்பு.


தொடர்புக்கு :-

அலைபேசி  75985 16303
            94420 19007  
   

Saturday, July 5, 2014

“கொம்புசா” என்னும் ஆரோக்கிய பானம்

சப்பாத்திக் காளான் (SCOBY )
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், இடபற்றாக் குறையுள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு காய்கறி வளர்ப்பு  ஒரு கனவு போல் தோன்றும், மனமிருந்தாலும் முடியாத ஒரு நிலை. மாறாக ஒரு சிறிய கோப்பைக்குள் ஒருவகை சப்பாத்தி காளானை SCOBY (Symbiotic Colony Of Bacteria and Yeast) வளர்த்து அதிலிருந்து பெறப்படும் நொதித்த நீரை அனுதினம் பருகி உடல் ஆரோக்கியம் பெறலாம். ஈஸ்ட் மற்றும் பாக்டீரீயா கலந்து நொதித்த பானத்தை “கொம்புசா” என்றழைக்கின்றனர். இந்த கொம்புசா பானத்தை தினமும்  சிறிதளவு அருந்த நீ..ண்..ட… நாட்கள் நோயின்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம். பலவிதமான நோய்கள் தாக்காமலிருக்கும் என்று ரஷ்யாவில் சைபீரியா பகுதி, மங்கோலியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நூறு ஆண்டுகளாக்கும் மேலாக  இதனை உபயோகித்து நீண்ட, நோயற்ற மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்ததை பதிவு செய்துள்ளனர். கொம்புசா என்று அழைக்கப்பட்டாலும் “ஈஸ்ட் டீ“, க்ரீன் டீ என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
கண்ணாடிக் கிண்ணம்

டீத்தூள் மற்றம் சர்க்கரை

உணவு காளான் வளர்ப்பில் தனி குடில் அமைப்புக்கள், ஈரப்பதம், பராமரிப்பு, விதைகாளான், வைக்கோல், பிளாஸ்டிக் பைகள், அதிக முதலீடு, வணிகத் தொடர்பு போன்றவற்றால் எல்லோராலும் எளிமையாக வீட்டிற்குள் வளர்க்க முடியாது. இந்த கொம்புசா காளான் வளர்ப்பில் இடம், குடில்,  அதிக கவனம் போன்றவை தேவையில்லை. உற்பத்தி செய்ய தேவையானவை ஒரு பாத்திரம் (கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பை சிறந்தது) , “டீ” தூள், சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சப்பாத்தி காளான்.
ஆரம்ப நிலையில் ...

சற்று வளர்ந்த நிலையில்

முதலில் நீரை நன்கு கொதிக்க வைத்து டீ தூள் போட்டு வடிநீர் (Decoction) நன்கு இறங்கிய பின்பு சர்க்கரையை கலந்து கொள்ளவேண்டும். நன்கு ஆறவைத்த பின்பு வட்ட வடிவில் இருக்கும் இந்த சப்பாத்தி காளானை) தாய் காளானிலிருந்து பிரித்து கோப்பைக்குள் இடவேண்டும். ஒரு வாரம் சென்ற பின்பு புதிய காளான் அடுக்கு கீழ் பகுதியில் தோன்றியிருக்கும். தினமும் அந்த காளானால் நொதித்த வடிநீரை பருகிவரலாம். சற்று புளிப்பு சுவையுடையது இந்த பானம் வணிக நோக்கிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஒரு வாரம் சென்ற பின்பு மீண்டும் முன்பு செய்ததைப் போன்று வடிநீர் தயாரித்து  மேல் அடுக்கு  காளானை அகற்றி விட்டு கீழ் பகுதியில் தோன்றிருக்கும் புதிய காளானை உபயோகிக்க வேண்டும். புதிதாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆரோக்கியமான முறையில் நாம் செய்கிறோமா என தெரிந்து கொள்ள காளானின் வளர்ச்சி, நிறம் மற்றும் வடிநீரின் மணம் ஆகியவை உணர்த்தும். பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த காளான் நிறம் மாறி கருப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் காணப்படும் போது அது கெட்டுவிட்டதாக கொண்டு அதனை அருந்துவதை தவிர்த்து புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.
புதிய காளான் ஒரு வாரத்தில் கீழ்பகுதியில் தோன்றும்

இரத்த அழுத்தம், மலசிக்கல் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி கிடைகிறது. சில தோல் நோய்கள் குணமாகின்றன, சருமத்தின் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கிறது, புற்று நோயின் தாக்கம் குறைகிறது என்று இதனை அருந்துபவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டாலும், கொம்புசா பற்றிய அறிவியல் ஆய்வுகள் மிகக் குறைவாக இருப்பதால் அதுபோன்று இல்லை பின் விளைவுகள் உண்டு என கூறுபவர்களும் உண்டு. எனவே இதனை பயன்படுத்துபவர்கள் ஒவ்வாமை தமக்கு ஏற்படுகிறதா? பின் விளைவுகள் தங்களுக்கு ஏற்படுமா ? என ஆய்வு செய்து பின்பு உங்கள் கொம்புசா வளர்ப்பை ஆரம்பியுங்கள். உலகின் பல  நாடுகளில் அனுபவ ரீதியாக இதன் பயனாளிகள் இலட்சக்கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு  மேலாக  இருந்து வருகிறார்கள்.

Wednesday, June 18, 2014

கற்றாழை என்றழைக்கப்படும் “குமரி”

குமரி அல்லது சோற்றுக் கற்றாழை
வெப்ப மண்டலப் பகுதிகளுக்கு இயற்கை நிறைய அற்புதமான தாவரங்களை தந்துள்ளது. அவற்றில் ஒன்று கற்றாழை எனபடும் “குமரி” அல்லது “சோற்றுக் கற்றாழை”. ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட காற்றாழையில் நிறைய வகைகள் உண்டு. நம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது காற்றாழையின் மடலை சீவி அதனுள் இருக்கும் “ஜெல்” பகுதியை உண்டு உயிர் வாழ்ந்ததாக பழைய நூல்கள் கூறுவதால் அதற்கு “சோற்றுக் கற்றாழை” என்ற பெயர் வந்திருக்கலாம். வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய மருத்துவ குணங்கள் மிக்க கற்றாழையை எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.


ஜெல்

வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.

கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை

நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.

ஊடுபயிராக இதனை வளர்க்கலாம்

பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.