Saturday, April 30, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (3)

செர்னோபில் அணு உலை  வெடிப்பில் (1986 ) பாதிக்கப்பட்ட குழந்தைகள்
அணு உலைகள் தான் வளர்ச்சி தரும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணங்கள் பல இருப்பினும் என்னை அதிகம் பாதிப்பது குழந்தைகளின் ஊனம். சில பணமுதலைகளுக்காக வளர்ச்சி என்று பொய் முகம் காட்டி நமது இயற்கைச் சுழலை மிக மிக அதிக பொருட்செலவில் சிதைத்து, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாழாக்கி, வெகுஜனங்களின் உடல் ஆரோக்கியத்தையும் கேள்விக் குறியாக்குவதை  எவ்வாறு வளர்ச்சி என்பது.

தொழில்மய நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகளே மறுபரிசீலனை செய்ய, நமது அணு விஞ்ஞானிகள் அறிவுறுத்தியும் அரசியல்வாதிகள் பிடிவாதமாக இருப்பது அவரிகளின் இறையாண்மையை கேள்விக்குறியாக்குகிறது.

ஒருவேளை ஞானம் பெற்று பசுமை புரட்சி போன்று  தவறு நடந்து விட்டது மாறிவிடலாம் என்றால், அமைக்க செலவிட்ட அளவிற்கு மூடுவதற்கும் செலவிடவேண்டும்.

போபால்  விஷவாயு விபத்து போன்று  ஏற்பட்டால் கம்பெனிகளின் பொறுப்பு சொற்ப அளவில் மட்டுறுத்தபட்டு அவைகளின் சொத்துகளுக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டு, இங்கே இருக்கும் பொதுஜனங்கள் 20  அல்லது 30 மைல் சுற்றளவில் வெளியேற்றப்பட்டால் என்ன? செத்துமடிந்தால் என்ன? ஆள்பவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. கம்பெனிகளின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு அவை மேலும்  பெருக வேண்டும். அவ்வளவே.


முடிவெடுக்கும் அதிகாரத்திலிருப்போர் மிக சுக வாழ்கை வாழ்ந்து 50+ வயது தாண்டியவர்கள். அவர்களுது ஆயுட்காலம்  இன்னும் சொற்ப ஆண்டுகளே !! இன்றைய குழந்தைகளின் எதிர்காலம் ????

நமது ஆடம்பர வாழ்வா???  குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வா?? புரிந்து கொள்ளவேண்டியது நாம்தான்.

பசுமை எரிசக்தி (Green Energy ) பற்றிய எனது பழைய பதிவு.
மாற்று எரிசக்தி
 
 அச்சம் தரும் அணு உலைகள் - (1)
அச்சம் தரும்  அணு உலைகள் - (2)

Photo Source : Internet

Wednesday, April 27, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (2)




சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி  6 அணு உலைகளின் மூலம் பெறப்பட்ட மின்சக்தியை (10 GW ) காட்டிலும் ஜெர்மனி நாட்டில் சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சக்தியின் அளவு (12.1 GW ) அதிகம்.

மேலும் படிக்க :-

நம் நாட்டைக் காட்டிலும் ஜெர்மனி நாட்டில்  இயற்கை தரும் சூரிய ஒளி குறைவு. ஆனால் அவர்கள் பழைய 7 அணு உலைகளை மூடிவிட்டு சூரிய சக்தியின் மூலம் பெறப்படும் மின்சக்தியில் கவனம் செலுத்துகின்றனர். நாம் அதனை விடுத்து அணு மின்சாரத்தில் கவனம் செலுத்துகிறோம். அணு மின்சாரத்தை நமது அரசுகள் நம் மீது திணிக்கின்றனர். பாராளுமன்றத்தில் ஆதரவு பெற பணம் கொடுக்கப்பட்டதாக அமளி ஏற்ட்டது நினைவிருக்கலாம். ஃபுகுஷிமா கதிர் வீச்சிலிருந்து இன்னும் முழுமையாக  உலகம் விடுபடாத நிலையில், செர்னோபில் பாதிப்பு தின 25 ஆண்டு அன்று ஜைதாப்பூர் அணு உற்பத்திக்கு அரசு பச்சைக் கொடி காட்டுகிறது என்றால் மக்கள் அரசு என கூற தயக்கமாக உள்ளது.

 சிறந்த பொருளாதார மேதையும், எளிமையுமுடைய நமது மதிப்பிற்குரிய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களும் அதற்காக பரிந்து பேசுவது வருத்தம் தருவதாக உள்ளது. இந்தியாவின் எதிர்கால சுற்றுச்சுழல் ??????????? 

 மேலும் படிக்க :-

Tuesday, April 26, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (1)


நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரி மலைக் குழம்புகளின் சீற்றங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஜப்பானுக்குப் புதியவை அல்ல. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழிச் சொல்தான். ஜப்பானிய மக்கள் காலம் காலமாக பேரிடர்களுக்கிடையே வாழப் பழகிக் கொண்டவர்கள். விதியே என்று அவற்றை அமைதியாக ஏற்றுக் கொள்ளாமல், அவற்றிலிருந்து தப்பிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டவர்கள். அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளானதால் மரம், பேப்பர் போன்ற எடை குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வாழ்பவர்கள். ஆனாலும் இவ்வருடம் மார்ச் 11 அன்று அந்நாட்டைத் தாக்கிய 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம், அதன் விளைவாக எழுந்த ஆழிப் பேரலைகள், இவை இரண்டின் காரணமாக புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானியர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. 


1979-ல் அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலண்ட், 1986-ல் ரஷ்யாவின் செர்னோ பில் ஆகிய இரு அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய விபத்தாக ஃபுகுஷிமா விபத்து வரலாற்றில் குறிக்கப்படும். ஜப்பானைப் பொறுத்த அளவில் 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு நடந்த கோர விபத்தாக இதை எடுத்துக் கொள்ளலாம். பல ஊர்கள் தரைமட்டமாகின. கட்டடங்களும் பாலங்களும் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீப்பிடித்துப் பரவியது. இதுவரை சுமார் 16000 பேர் பலியாகியுள்ளனர். 7,00,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.


மின்உற்பத்திக்கு அணு ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் மொத்தம் 55 அணு உலைகள் உள்ளன. தன்னுடைய மின்தேவையில் மூன்றில் ஒரு பகுதியை அணு ஆற்றல் மூலமே அந்நாடு நிறைவேற்றிக் கொள்கிறது. மார்ச் 11 அன்று சுனாமி தாக்கிய ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 14 அணு உலைகளும் (ஃபுகுஷிமாவில் உள்ள 6 உட்பட) கொதிநீர் அணு உலைகளே. இத்தகைய உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியம் ஆக்சைடிலிருந்து வெளிப்படும் வெப்பம் நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கி, அந்த நீராவியின் சக்தியைக் கொண்டு சக்கரங்களைச் சுழலவைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. சிறு கம்புகள் வடிவத்தில் மாற்றப்பட்ட எரிபொருள், கட்டுகளாக ஆக்கப்பட்டு உலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த மையப் பகுதி உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடியது. ஆனால் அந்த வெப்பநிலையை 2200 டிகிரி சென்டிகிரேடுக்குள் இருக்குமாறு கட்டுப்படுத்தவில்லையெனில், எரிபொருள் உருகி அதன் காரணமாக கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். எனவே வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க  குளிர்விப்பானாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.


சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஃபுகுஷிமா அணுஉலை குளிர்விப்பான்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இயங்கத் தொடங்கிய டீசல் ஜெனரேட்டர்கள் குளிர்விப்பான் இயந்திரங்களை செயல்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய 10 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஜெனரேட்டர்களைச் செயலிழக்க வைத்துவிட்டன. (ஃபுகுஷிமா ஜெனரேட்டர்கள் 6.5 மீட்டர் உயர அலைகளை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டவை). ஜெனரேட்டர்கள் செயலிழந்ததும் செயல்பாட்டுக்கு வந்த பாட்டரிகள் 8 மணி நேரம் தாக்குப் பிடித்தன. மொபைல் ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து மின்விநியோகத்தைத் தொடரச் செய்யப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்கான தோல்விகளின் காரணமாக அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சினைத் தடுக்க இயலாமல் போனது. அங்கிருந்து வெளிப்படும் கதிரியக்கம் ஜப்பான் நாட்டை மட்டுமல்லாது அருகில் உள்ள பல நாடுகளையும் பாதிக்கும். அங்கு விளையும் எல்லாப் பயிர்களும் விஷமாகிவிடும். ஆனாலும் ஜப்பானிய தொழில்நுட்ப வல்லுநர்களும் பிற நாடுகளிலிருந்து உதவிக்கு வந்திருக்கும் வல்லுநர்களும் சேர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொணர கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.


ஜப்பானில் நடந்த விபத்து உலகளாவிய அளவில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், அணு உலைகளுக்கு எதிரான எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனியில் 1980-க்கு முன்னர் தொடங்கப்பட்ட 7 உலைகள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவில் ஏற்கனவே உள்ள அணு உலைகளோடு, இறக்குமதி செய்யப்படும் 36 அணு உலைகளைக் கொண்டு 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நமது அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சுயேச்சையான, விரிவான, வெளிப் படையான ஆய்வுகள் இன்றி புதிய அணு உலைகள் பற்றி முடிவுகள் எடுக்க வேண்டாம் என நம் நாட்டு விஞ்ஞானிகள் எச் சரித்துள்ளனர். அரசு இந்த எச்சரிக்கையை உடனே கவனிக்க வேண்டும்.

-பேராசிரியர் கே. ராஜு  
Source : தீக்கதிர்


Friday, April 22, 2011

செங்குத்துத் தோட்டம் ( Vertical Garden )

நகரங்களில் ஏற்படும் இட நெருக்கடிக்கு  இந்த  செங்குத்துத் தோட்டம் தீர்வாக அமையும். அதே சமயம் மக்கும் கழிவுகளுக்கும் இது தீர்வாக அமையும். பல்வேறு முறைகளை பார்த்ததில் இந்த பை முறை சற்று எளிமையாக இருப்பதோடு குறைந்த செலவில் இதனை உருவாக்க முடியும். சாதாரணமாக குறைந்த உயரத்தில் செடிகளை வளர்க்கும் போது அதிக பட்சம் 4 அல்லது 5 செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். உயரம் அதிகமான இந்த பையில் பக்கங்களில் துளை செய்து குறைந்தது  20 முதல் 25 செடிகள் வளர்க்கலாம். குறிப்பாக பாலக்கீரையை சிறப்பாக வளர்க்கமுடியும். உங்கள் பார்வைக்காக சில புகைப்படங்கள்.
செங்குத்துத் தோட்டதிற்கு பை தயாராகிறது
இளம் நாற்றுக்கள்

நன்கு வளர்ந்த நிலையில் கீரைகள்
மேற்பகுதியில் 4 அல்லது 5 செடிகள் மட்டுமே வளர்க்க இயலும்.
செங்குத்து நிலையில் 20 முதல் 25 செடிகள் வளர்க்க இயலும்.
அறுவடை செய்யப்பட்ட கீரை



Saturday, April 9, 2011

“INTENSIVE AGRICULTURE” காலாண்டு விவசாய இதழ் .

இதழின் தோற்றம்

சில நல்ல விசயங்கள்  மக்களை சென்றடைவதில் தாமதம் ஏற்படுவது இயற்கை. அதிலும் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருந்தால் மேலும் தாமதமாகும். மத்திய அரசின் விவசாயத் துறையிலிருந்து வெளியாகும் “INTENSIVE AGRICULTURE” என்ற காலாண்டு இதழை கூறலாம்.

தரமான கட்டுரைகள் துறை சார்ந்த வல்லுனர்களிடமிருந்து புகைப்படங்களுடன் வருவது சிறப்பு. புள்ளி விபரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் குறைந்த சந்தா தொகையில் நம் வீடு தேடி இந்த ஆங்கில இதழ் வருகிறது. சந்தா செலுத்திப்  பயன் பெறுங்கள்.
பெரிதாக்கி படிவத்தை நகல் எடுங்கள்.

தனி இதழ்     - ரூ. 2/=
வருட சந்தா   - ரூ. 8/=
3 வருட சந்தா ரூ.24/=

அனுப்பவண்டிய முகவரி :-

THE EDITOR,
INTENSIVE AGRICULTURE,
MINSTRY OF AGRICULTURE,
DIRECTORATE OF EXTENSION,
KRISHI VISTAR SADAN,
PUSA,
NEW DELHI – 110 012