Wednesday, October 26, 2011

சரிவுகளில் மழைநீர் சேமிப்பு- இரு நிமிட படம்.


வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி சில தினங்கள் ஆன நிலையில் திரும்பவும் நாம் சில எளிய முறைகளை கடைபிடித்து மழைநீரை  சேமிக்கவேண்டும். எனது பழைய பதிவு உங்கள் பார்வைக்கு. http://maravalam.blogspot.com/2007/09/blog-post_25.html

வருகின்ற 28 -30 தேதிகளில் லக்னோ நகரில் 5 வது உலக வெட்டிவேர் மாநாடு நடைபெறுகிறது. அதன் பொருட்டு வெட்டிவேர் உதவியுடன் சரிவுகளில் நீரை எளிதாக சேமிக்கலாம் என்ற 2 நிமிட படம் ஒன்றை உருவாக்கி உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மாநாடு மிக சிறப்பாக நடைபெற்று உயர்ந்த தொழில்நுட்பங்கள் கிடைக்கப் பெற உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

Sunday, October 23, 2011

உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள்.


உலக உணவு தின கட்டுரைக்கு மறுமொழியில் திரு.T.சிவராமன் அவர்கள்  ஒரு தொடுப்பு தந்திருந்தார். உணவு பொருட்களை வீணாக்கும் உலகின் முதல் 17 நாடுகள் பற்றி எழுதியிருந்தார்கள். காலனி ஆதிக்க நாடுகள் அதிகமாக இருந்தாலும் ஆசியா கண்டத்தில் ஜப்பான் மட்டுமே இருந்தது சற்று வியப்பை அளித்தது. இருப்பினம் அது 17 வது நாடாக இருந்தது. ஒருபுறம் வீணாகும் உணவு பொருட்கள் மறுபுறம் பஞ்சத்தால் பல லட்சம் மக்கள் இறக்கும் அவலம். நீலிக்கண்ணீர் வடிக்கும் மேற்கு உலகம். தவறை திருத்திக் கொள்ளுமா? இல்லை தொடருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதனை அந்தந்த நாட்டின் மக்கள் தொகையோடு  ஒப்பிட்டு பார்க்கையில் மனம் கனத்தது உண்மை. பல மைல்கள் சென்று குடிநீர் எடுத்துவரும் ஆப்பிரிக்க பெண்மணிகள். வீணாக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களின் மறைந்திருக்கும் நீர்” (Virtual Water) பற்றியும் கணக்கிட்டால் நெஞ்சம் பதறுகிறது. இயற்கை நமக்கு தேவையான அனைத்தையும் தருகிறது ஆனால் நாம் அதனை துஷ்பிரயோகம் செய்து நமது வருங்கால குழந்தைகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதோடு அமைதியின்மையையும் ஏற்படுத்துகிறோம்.

Wednesday, October 19, 2011

வெண்புள்ளி குறைபாட்டிற்கு வெற்றிகரமான வீட்டு வைத்தியம்.


"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள்தான் எங்கள் மருமகள் ஹேமா.

 
முகம் சுழிக்கும் முன்னே முத்தொன்றுப் பெற்றுக் கொடுத்தாள் எங்கள் கையில். புதிய உயிர் ஒன்றின் வரவால் புத்துயிர் பெற்றது எங்கள் வாழ்க்கை. எல்லாம் இன்பமயம். யாருக்குமே எந்தக் குறையுமில்லை மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம், பின்னர் சிரிப்பை மறந்தாள் சில காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத் தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு.

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை  அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும் கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று. முடிவு????  வழக்கம்போல் தான் ---கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... பிறகு ஒரு நாள் ஹேமாவுக்கு வந்தது கோமா. அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள்.  அவள் முகத்தில் சிரிப்பு  இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.


சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா? என்று கேட்டார்.

சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் என்றாள். 

காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவா என்றார்.

ப் பூ .... இவ்வளவுதானா? என்றாள்.

நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு என்றார்.

பத்தியம் ஏதேனும் உண்டா? என்றாள்

சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் எங்கள் குலமகள்.
 “உலகத்திற்கு இதைச் சொல்லவேண்டும் மாமா என்றாள்.
இணைய தளத்தில் பரிமாரக் காத்திருக்கிறார்கள் இனிய நண்பர்கள், உன்னுடைய போன் நம்பர் கொடுக்கத் தயாரா? என்றேன்.
அதற்கு போட்டோக்களும் தருகிறேன் மாமா என்றாள்.

எத்தனை வேதனைப்பட்டிருந்தால் அடுத்தவர்க்கு இது பயன்படட்டும் என்ற துணிவோடு போட்டோக்களைக் கொடுக்க முன் வருவாள் என்று எண்ணி நாங்கள் பாராட்டினோம் அவளை. நீங்களும் வாழ்த்துங்கள். வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு சுமங்கலியாக.

மது. இராமகிருஷ்ணன்
இயற்கை விவசாயி
சந்தோஷ் பார்ம்ஸ்
பொள்ளாச்சி -642 114.

திருமதி. ஹேமா உமாசங்கர்
கைபேசி எண்.85262 32442 ( தயவு செய்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை)

இணைப்பு
பலருக்கும் பயன்பட இணைய தளத்தில் இதனை இணைக்க பாடுபட்ட அண்ணன் திரு வின்சென்ட் மற்றும் அண்ணன். திரு ஓசை செல்லா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றிகள்.
மது. இராமகிருஷ்ணன். ஹேமா உமாசங்கர்.

மக்கள் பயனுற வேண்டும் என்ற உன்னத எண்ணத்துடன் வாழ்வில் நடந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டு நமது பாட்டி வைத்தியம் எளிமையானது, சிறப்பானது, அதிக செலவில்லாதது மற்றும் பின்விளைவு இல்லாதது  என்ற நம்பிக்கையை விதைத்த அண்ணன் திரு. மது. இராமகிருஷ்ணன், திருமதி. ஹேமா உமாசங்கர் இருவரின் குடும்பங்களுக்கும் உங்கள் சார்பாகவும் இவ்வலைப் பூவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். வைத்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

Sunday, October 16, 2011

உலக உணவு தினம் .


"The President in Washington sends word that he wishes to buy our land. But how can you buy or sell the sky? the land? The idea is strange to us. If we do not own the freshness of the air and the sparkle of the water, how can you buy them?
சியாட்டில்   தலைவரின் 1855 ஆண்டு எழுதிய கடிதத்தின் முதல் வரிகள். நிலத்தை வாங்க விரும்புவதாக கூறிய அமெரிக்க ஜனாதிபதிக்கு  எவ்வாறு ஆகாயத்தையும் , நிலத்தையும் வாங்க, விற்க முடியும் ??? என்று ஆரம்பிக்கும் கடிதம் இன்றைய உணவு பிரச்னைகளின் துவக்கம் என்று கூறலாம். நன்கு படித்த ஐரோப்பியர்கள் நாடுபிடிக்கும் ஆசையில் கடல் கடந்து மற்ற கண்டங்களில் குடியேறி அவர்களின் வாழ்வாதாரங்களை கொள்ளையடித்தனர். விஞ்ஞானம் வளர வளர மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை செம்மைபடுத்த தென் அமெரிக்காவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு இரப்பர் தோட்டங்கள் தோன்றின. பின்னர் எரிபொருளுக்காக ஒவ்வொரு நாட்டின் இயற்கை வாழ்வாதாரங்களை  பாழ்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் கச்சா எண்ணெய் விற்று சொகுசு வாழ்கை வாழ்கின்றனர். தங்களின் பலத்தைக் காட்ட இன்றுவரை சண்டைகள் ஆனால் கீழ்கண்ட காரணங்களும் உணவு பற்றாக் குறைக்கு முக்கியமானவையே.

மக்கள் தொகைப் பெருக்கம் 1960இல் 3 பில்லியன் 2011இல் 7 பில்லியன்.

சராசரி வயது 1960இல் 53 வயது 2010இல் 69 வயது.

தொழிற்சாலைகள், வீட்டுமனைகள்  வளர்ச்சியால் சுருங்கி வரும் விளைநிலம்.
கேளவிக் குறியாகும் வனப்பரப்பு
காடுகள் அழிப்பு மிகப் பெரிய அளவில் நடைபெறுவதால் மழையளவு குறைந்து விளைச்சல் பாதிப்பு.
2006-2008 தேவையற்ற விலையேற்றம்.
கச்சா எண்ணெய் விலையேற்றம்உணவு பொருட்களின் விலையை வெகுவாக பாதிக்கிறது. இந்த விலையேற்றம் செயற்கையாக நிர்ணயக்கப்படுகிறது.

சொகுசு வாழ்கையில் மோட்டார் வாகன உற்பத்தி, தொழில் புரட்சியால்  நிலம், நீர் மாசுபாடு இதனால் சுற்றுச்சுழல் மாசடைந்து பருவநிலை மாற்றம் ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை.
கச்சா எண்ணையால் சுற்றுச் சுழல் பாதிப்பு.

உற்பத்தி, பகிர்வு, நுகர்வு இவைகள் ஏகாதிபத்தியத்திடம் உள்ளதால் தேவையான  அளவு உணவு உற்பத்தி இருந்தும் பட்டினியாக மக்கள். (உ.த.) உச்ச நீதிமன்றம் வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்லியும் நமது பிரதமர் திரு மன்மோகன் சிங் தரமறுத்ததை நாம் அறிவோம்.

ஆப்பிரிக்க நாடுகளில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் ஏகாதிபத்திய நாடுகளுக்கு குத்தகை/விற்பனை செய்யப்பட்டு பயோ-டீசல் உற்பத்தி. தென் அமெரிக்காவில் உணவு பண்டங்களிலிருந்து எத்தினால் உற்பத்தி.

முக்கியமான விதை, உரம், பூச்சிகொல்லி போன்றவைகள் கொள்ளையடிக்கும் பன்னாட்டு கம்பெனிகளிடம்.

உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் கேள்விகுறியாகும் நம்பகத் தன்மை.

வளர்ந்த நாடுகள் விவசாயிகளுக்கு 70% மேல் மானியம் தந்து அவர்களைக் காப்பாற்றி கொண்டு வளரும் நாடுகளை மானியம் தர  கூடாது என வற்புறுத்தி தங்கள் நாட்டு உணவு பொருட்களை குறைந்த விலையில் வளரும் நாடுகளில் விற்று உள்ளூர் விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது. (உ.த) ஹெய்தி HAITI நாட்டின் நெல் விவசாயம் அமெரிக்க அரிசி இறக்குமதியில் சிக்கி நெல் விவசாயம் பாழடிக்கப்பட்டது. இன்று அரிசிக்காக அமெரிக்காவை நோக்கி இருக்கும் நிலைமை.

விவசாயம் என்ற வாழ்வாதாரத்தை வணிகமாக்கி யூக வணிகம், பங்குசந்தைளில் செயற்கையாக விலையேற்றி  கொள்ளையடிக்கும் ஸ்திரமற்ற பன்னாட்டு வங்கிகள் மற்றும் ஹெட்ச் பண்டுகள்.

உலகமயம், தாராளமயம்  விவசாயத்தை வெகுவாக பாதித்துள்ளது.


இவற்றையெல்லாம் பற்றி நன்கு அறிந்தும் நம்மை ஆளும் அரசியல் கட்சிகள் நம்மை ஏமாற்றாமல் நம் வருங்கால குழந்தைகளை பட்டினியின்றி காப்பது அவர்களின் கடமை. காரணம் மேலே கூறிய அனைத்தும் தனிமனிதனால் சாதிக்க முடியாது. ஆனால் கூட்டுறவால் முடியும்.  கூட்டுறவே நாட்டுயர்வு.

Sunday, October 9, 2011

நைஜீரிய கவிஞர் கென் சரோ விவா- சுற்றுச் சுழல் போராளி.


 நமது நிலத்தைக் காக்கும் இந்தப் போராட்டத்தில் ஒன்று நாம் வென்றாக வேண்டும். அல்லது நாம் கொல்லப்படுவோம். ஏனென்றால் தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை."
-நைஜீரிய கவிஞர் கென் சரோ விவா.

 நைஜீரியா நாட்டின் நைஜர் பாசனப் பகுதி வளம் மிக்கது. குறிப்பாக எண்ணை வளம். மற்றவர்களை சுரண்டி வாழும் மேற்கத்திய உலகம் அமைதியாக இருந்துவிடுமா? 1958 ஆண்டு முதல் ராயல் டச் ஷெல் என்ற நிறுவனம் தனது எண்ணைக் கிணறுகளை தோண்ட ஆரம்பித்து இயற்கை வளங்களை மாசுபடுத்தி அங்கு வாழ்ந்த ஓகோனி இன மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து கொள்ளையடித்தது. அவர்களின் விடிவெள்ளியாக கவிஞர் கென் சரோ விவா இருந்தார். தனது படைப்புக்களால் மக்களைக் கவர்ந்தார். "ஓகோனி பழங்குடிகள் வாழ்வுரிமை இயக்கத்தை" (The Movement for the Survival of the Ogoni People (MOSOP) ) கென் சரோ விவா 1990 ஆம் ஆண்டு நிறுவினார். கம்பெனிக்கெதிராகவும், அரசியல் சுயநிர்ணய உரிமை கோரியும் ஓகோனி மக்களுடன் 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கென் அமைதி நடைபயணம் மேற்கொண்டார்.
  
மண் வளத்தையும், நீர் வளத்தையும் மாசுபடுத்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது.

 விளைவு வஞ்சக நாடகமாடி கென் சிறையிலடைக்கபட்டார். ஓகோனிகள் வாழ்ந்த பகுதிகள் ராணுவத்தின் கீழ் வந்து வன்முறையும், அராஜகமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஷெல் நிறுவனம் தனக்கெதிராக செயல்படும் திரு.கென் சரோ விவா அவர்களை கொல்ல அரசுடன் சேர்ந்து திட்டமிட்டு ராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, 1995 நவம்பர் 10 தேதி அன்று திரு.கென் அவர்களும் அவரது நண்பர்கள் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். அதற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல்களுக்காக வழக்குப் பதிவு செய்து 13 ஆண்டுகளுக்குப்பின் 27 மார்ச் 2009 அன்று வழக்காடுவதற்கு நாள் நிர்ணயிக்கப்பட்டது ஆனால் அதற்கு முன்பு 15.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை தருவதாக ஒத்துக் கொண்டு ஷெல் நிறுவனம் வழக்காடுவதைத் தவிர்த்தது.

இன்றும் அங்கு எண்ணெய் குழாய்கள் பாதுகாப்புக்கு உள்ளூர் மக்களை மோதவிட்டு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. சுற்றுச்சுழலுக்காக தன் நண்பர்களுடன் உயிரையும்  தியாகம் செய்த அந்த மாவீரனின்  பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ளுவதில் இவ்வலைப் பூ பெருமிதம் அடைகிறது. அதே சமயம் உங்கள் எரிபொருள் தேவையை குறைத்துக் கொள்ளவும் வேண்டிக் கொள்கிறது, ஏனெனில் எரிபொருள் இதுபோன்ற படிப்பறிவு குறைந்த ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளை லாபத்திற்கு இங்கே விற்கப்படுகிறது.