Tuesday, November 3, 2009

உருகும் திபெத் பனிப் படிவங்களும் வட இந்திய நதிகளின் எதிர்காலமும்.


திபெத் பீடபூமி பகுதிகளில் பனிப் படிவங்கள் உள்வாங்கி வருவதை சீன ஆராய்ச்சியாளர்கள் ஆவணப் படுத்தி உள்ளார்கள். இதனால் அதில் உற்பத்தியாகும் நதிகளின் நீரோட்டம் உள்ள இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும்.


சீனப் பசுமை அமைதி பசுமைப் பூமி தொண்டர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பனிப்படிவங்கள் குறைவதையும், இமாலய நதிகளின் தொடக்க இடங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தையும் ஆவணப்படுத்தி உள்ளார்கள். திபெத் பீடபூமியில் சில இடங் களில் 2001க்குப் பின் பனிப் படிவங்கள் மூன்று கி.மீ. தொலைவுக்கு பின் வாங்கியுள்ளன.


வெப்ப அதிகரிப்பு மற்றும் பூமி வெப்பமடைதல் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால் பனிப்படி வங்கள் அதிவேகமாகக் குறைகின்றன. இந்த அபாய அறிவிப்பை, சீனா, இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ஆனால், தற்போது அன்று அலட்சியப் படுத்திய சீன அதிகாரிகளும், அரசு அமைப்புகளும் தீவிரமாகக் கவலைப்படத் தொடங்கியுள்ளன.


உலகின் மற்ற பகுதிகளைவிட திபெத் பனிப் படிவங்கள் வேகமாக உருகுகின்றன என்று சீன வானிலை நிர்வாக முன்னாள் இயக்கு நர் கின் டாஹே கூறுகிறார். இதன் விளைவாக ஏரிகள் பெரிதாகும். பெரும் வெள்ளமும் கடும் மண்சரிவும் உண்டாகும். இப்படிவங்கள்தான் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்ரா ஆகியவற்றின் தாயகமாகும். பனிப் படிவங்கள் அழிந்துவிட்டால் இவற்றின் நீரோட்டமும் வற்றிவிடும்.


தற்போதைய வெப்பம் அடைதல் விகிதத்தில் இமாலயப் பனிப்படிவங்கள் முப்பதாண்டுகளில் அழிந்து விடும். ஆண்டுதோறும் 131.4 ச.கி.மீ. பரப்பளவுள்ள பனிப் படிவங்கள் குறைகின்றன. பனி எல்லைகள் ஆண்டு தோறும் 350 மீ சுருங்குகின்றன.


2005ம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பனிப்படிவ ஏரி 2009 தொடக்கத்தில் உடைந்தது. பூமி வெப்பம் அடைதலால் உருகிய பனிப்படிவங்கள் கொட்டிய நீரால் இந்த ஏரி உடைந்தது. இதனால் கின் காய் மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. திபெத் பீட பூமியின் பனிப்படிவங்கள் சீனாவின் மஞ்சள் ஆறு மற்றும் யாங்ட்ஸி நதிகளுக்குரிய நீரூற்றாகும்.
Source : தீக்கதிர் கோவை 03-11-09


ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை
பரப்பளவு : சுமார் 1059,000 ச.கீ.மீ
ஆஸ்திரேலியாவின் பரப்பளவில் : 14%
மர்ரே நதியின் நீளம் : 2530 கீ.மீ
டார்லிங் நதியின் நீளம்: 2740 கீ.மீ

இவ்வளவு பெரிய நதிகள் கூட வறட்சியை காட்ட ஆரம்பித்துள்ளது. இது பற்றிய எனது பதிவினைக் காண ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை.

4 comments:

வவ்வால் said...

விழிப்புணர்வூட்டும் இடுகை, ஆனால் திபெத்தில் வெப்பம் அதிகரிக்க ஒரு காரணம் சீனாவே தான் லாசாவுக்கு மி நீண்ட ரயில் வழித்தடம்,சாலை என அமைத்து திபெத் பீட பூமியில் வாகன ,மனித போக்குவரத்தினை அதிகரித்ததே அவர்கள் தானே(சீனாவின் ஆதிக்கம் தீபெத்தில் நன்கு செழிக்கவே அந்த ஏற்பாடுகள்) மேலும் எவெரெஸ்ட் வரைக்கும் சாலை அமைக்க கூட திட்டமிட்டதாக முன்னர் படித்தேன்,சூழியலார்கள் எதிர்ப்பால் கை விடப்பட்டதாக கேள்வி.

மனிதனின் பேராசை உலகை பாலை ஆக்காமல் ஓயாது போல, எதிர்காலம் அச்சுறுத்துகிறது!

பல்லவநாடன் said...

இந்தியாவில் இதைப்பற்றி கவலைப்பட யாருக்கும் நேரம் இல்லை.

மக்கள் பாதிப்படைந்தபின் நிவாரணம் வழங்க மத்திய அரசு இருக்கவே இருக்கிறது.

வின்சென்ட். said...

திரு.வவ்வால்

"இந்த அபாய அறிவிப்பை, சீனா, இந்திய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. ஆனால், தற்போது அன்று அலட்சியப் படுத்திய சீன அதிகாரிகளும், அரசு அமைப்புகளும் தீவிரமாகக் கவலைப்படத் தொடங்கியுள்ளன".

நாம் அதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தங்கம் வாங்குவதிலும், கிரிகெட்டை வளர்ப்பதிலும் கவனம் கொள்ளுகிறோம். இறைவன் தான் காப்பாற்ற வேண்டும்.

வின்சென்ட். said...

திரு.பல்லவநாடன்

உங்கள் வருகைக்கு நன்றி.

"இந்தியாவில் இதைப்பற்றி கவலைப்பட யாருக்கும் நேரம் இல்லை".

முற்றிலும் உண்மை.