Monday, September 28, 2009

மண் அரிப்பை நிறுத்தும் “வெட்டி வேர்”

சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு.

Saturday, September 19, 2009

“புழுதி நெல்” வருங்காலத்தின் தேவை.

“புழுதி நெல்” பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் பரிசோதித்து பார்க்கலாம் என்று விதைத்ததில் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதன் வளர்ச்சியை உங்கள் பார்வைக்காக பதிவு செய்கிறேன். இந்த வகை பயிர்கள் வருங்காலத்தின் தேவை என்பதில் ஐயமில்லை. மேலும் “புழுதி நெல்” பற்றி' எனது பழைய பதிவைக்காண Click

சேற்று உழவு, நாற்று நடுதல், அதிகம் நீர் பாய்ச்சி நிறுத்துதல் இங்கே இல்லை.

கீழேயுள்ள படங்கள் 26-08-09 எடுக்கப்பட்டவை

Thursday, September 17, 2009

பசுமை புரட்சியின் தந்தை திரு. நார்மன் போர்லாக்

பசுமை புரட்சியின் தந்தை என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட திரு. நார்மன் போர்லாக் தனது 95 வயதில் 12-09-09 அன்று காலமானர். அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலியை இவ்வலைப் பூ செலுத்துகிறது.

வறட்சியை தாங்கி அதிக மகசூல் தரும் கோதுமை வகையை உருவாக்கி கோடிக் கணக்கான மக்களின் பசியை போக்கியதால் இவருக்கு 1970 ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. மற்ற அறிவியல் துறைகளுக்கு நோபல் பரிசு கொடுக்கப்படுவது வழக்கம் அதில் ஒரு வேளாண்மை விஞ்ஞானிக்கு கிடைத்தது ஆபூர்வம்.

பசியும் அமைதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. பசி ,பட்டினி, பஞ்சம் என்று வரும்போது திருட்டு,வன்முறை,கொள்ளை போன்றவற்றை தவிர்க்க முடியாததால் அமைதியின்மை தோன்றுகிறது. எனவே அமைதிக்கான நோபல் பரிசு தந்தது தகும்.

ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும் போது ஓரினப்பயிர், இரசாயன விவசாயத்தை அறிமுகப்படுத்தி பாரம்பரிய விவசாயத்தை பின்னடைய செய்து சுற்றுச்சூழல் மாசுபாட்டை கேள்விக்குறியாக்கியது உண்மைதான் என்பதை நமது நாட்டிலேயே தொடர்ந்து அங்கக பொருள் கடைகள் தோன்றுவதும், அங்கக வேளாண்மை குறித்து விவசாய அன்பர்கள் ஆர்வம் காட்டுவதும் உறுதி செய்யும்.

தனது கண்டுபிடிப்பால் கோடிக் கணக்கான மக்களை பசியிலிருந்து காப்பாற்றினர் என்பதும், இறுதி வரை பஞ்சத்தை எதிர்த்துப் போராடினர் என்பதும் உண்மை. மெக்சிகோ, இந்தியா. பாகிஸ்தான் போன்ற நாடுகள் இவரது உதவியால் கோதுமையில் அதிக மகசூல் பெற்றன என்பதற்கு கீழேயுள்ள வரைபடம் சான்று. இதனால் சமூக/பொருளாதாரம் நெருக்கடி தவிர்க்கப்பட்டது. நாணயத்தின் இரு பக்கத்தில் நாம் எந்த பக்கத்தை பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து கருத்துக்கள் இருக்கும் எனவே கருத்துக்களை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

Tuesday, September 8, 2009

கேள்விக் குறியாகும் தென்மேற்குப் பருவமழை ???

மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் அண்மையில் எடுக்கப்பட்ட படம். கருமைநிறமாக இருக்கவேண்டிய மேகம் வெண்மையாகவும் மிகமிக குறைவாகவும் காணப்படுகிறது.
புதுடில்லி, செப். 7-
புவியின் வெப்பம் அதிகரிப்பதால் அடுத்த 150 ஆண்டுகளில் இந்தியாவில் இல்லாமல் போய்விடும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. விவசாயத் துறையின் ஆதாரமான பருவமழை பொய்க்கும் பட்சத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படப் போகிறது என்று இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட இந்தியப் பருவ நிலை குறித்த ஆய்வு மையம் கூறுகிறது. புவியின் வெப்பம் அதிகரிப்பதால் அரபிக்கடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதுதான் கடுமையான பிரச்சனை. இது கரையிலும் கடலிலும் நிலவும் வெப்ப வேறுபாட்டைக் குறைக்கிறது. இந்த வெப்ப வேறு பாடுதான் மழைக்குக் காரணமான காற்றை கடலிருந்து கரைக்கு ஈர்க்கிறது. வெப்ப நிலையில் உள்ள வேறுபாடு குறைவது, பருவ மழைக்காற்று வீசாமல் செய்துவிடும். கடந்த 30 ஆண்டு கால பருவமழையைப் பரிசீலித்தோமானால் கரைக்கும் கடலுக்கும் இடையேயான வெப்பநிலை வேறுபாடு குறைவது தெரியும். இன்னும் 150 ஆண்டுகளில் இந்த வேறுபாடு பூஜ்யம் ஆகி விடும் என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கிய விஞ்ஞானி எஸ்.எம்.பாவிஸ்கர் கூறினார். வேறுபாடு பூஜ்யமானால் பருவமழைக் காற்றுக்குப் பதில் வறண்ட காற்றுதான் வீசும். இது தென்மேற்குப் பருவமழையைக் கடுமையாகப் பாதிக்கும். அரபிக் கடலின் மேற் பரப்பின் வெப்பநிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1948 - 77 காலத்தில் இது 18.77 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால், 1979 - 2008ல் வெப்பம் 19.64 ஆக உயர்ந்ததாக எர்த் சிஸ்டம் சயின்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள மழைக் குறைவு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகும். இந்த ஆண்டு நாட்டில் 23 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துவிட்டது என்றும் ஆய்வு கூறுகிறது.
நன்றி : தீக்கதிர் 08-09-09

Friday, September 4, 2009

திரு.Y.S. ராஜசேகர ரெட்டி - ஆந்திர மாநில விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம்

தனது முதல் பதவிக்காலத்தில் செய்த பல நல்ல காரியங்களுக்காக இரண்டாம் முறையாக முதன் மந்திரியாக பதவியேற்ற திரு.Y.S. ராஜசேகர ரெட்டி அவர்களின் விவசாய மாற்றங்கள் ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றுள்ளது என்பதற்கு அவர் மறைவுச் செய்தி கேட்டவுடன் சில விவசாயிகள் துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது சாட்சியாகும். ஆந்திர மாநிலம் இப்போதுள்ள விவசாய நெருக்கடி காலத்தில் அதனைப் புரிந்து கொண்டு பரிகாரம் தேடும் முதலமைச்சரை இழந்தது என்பதே உண்மை. அன்னாரின் ஆத்மாவும், அவருடன் சென்ற அதிகாரிகள் மற்றும் விமானிகளின் ஆத்மாக்களும் சாந்தியடைய இறைவனிடம் இவ்வலைப் பூ வேண்டுகிறது.

2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவசாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினைகளை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என்னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்திரையின் போது அவர் மனதில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக்கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண்டார். தனது முதல் பட்ஜெட்டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக்கீடு செய்தார்.

ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.
விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப்படுத்தினார். கிராம விவசாயிகள் வாழ்வில் வளம் பெருக வேண்டுமானால் நீர்ப்பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.

அதோடு “ஜலயக்ஞம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட்சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர்களையும் பிரமிக்க வைத்தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத்துக்கு கொண்டு வந்தார். பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய். இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.

இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திராவில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்திராவின் ஒட்டு மொத்த விவசாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீசியது.

நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.

இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந்தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக “இந்திரம்மா திட்டம்” என்றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.

ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.
நன்றி : மாலை மலர் //சென்னை 04-09-2009 (வெள்ளிக்கிழமை)