Monday, August 29, 2011

தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் ( Passion fruit )


அழகிய பூ
வேப்ப மரத்தில் நன்கு படர்ந்து காய்துள்ள கொடி.
பழம்
பழத்தின்  உட்பகுதி
குளிர்பானம்
 தாவரவியல் பெயர் : Passiflora edulis
தாட்பூட் என்று அழைக்கப்படும் பேஷன் ஃபுருட் ( Passion fruit ) தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. மலைப்பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும் இந்த கொடியின் பழம் பானங்கள் தயாரிக்க ஏற்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் சாறு இரத்த கொதிப்பு, புற்று நோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் என்கிறார்கள்.  இதன் சாற்றை எடுத்து வடகிழக்கு மாநிலங்களில் விற்பனை செய்கிறார்கள். வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து குளிர் பானங்கள் நாமே தயாரிக்கலாம். இரு ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஒருவர் திடீரென்று 1 லட்சம் நாற்றுகள் கேட்டார். விசாரித்ததில் இதன் இலைகளைக் கொண்டு ஐரோப்பிய  நாடுகள் சில மருந்துகள் தயாரிப்பதாக அறிந்தேன். இதில் பொதுவாக இரு வகை பழங்கள் உண்டு. கருநீலபழம், உண்பதற்கு ஏற்றது மலைபகுதிகளில் அதிகம் காணப்படும். மற்றொன்று மஞ்சள் நிறப் பழம், பானங்கள் தயாரிக்க ஏற்றது, சமவெளிப்பகுதியிலும் வளர்க்கூடியது. கோவையில் வீட்டின் முன்னுள்ள வேப்பமரத்தில் ஒரு கொடியை ஏற்றிவிட்டதில் காய்ப்பு நன்றாகவுள்ளது. பானங்கள் தயாரிக்க உபயோகிக்கிறோம். பந்தல் அமைத்துக் கூட இதனை வளர்க்கலாம். வீட்டுத் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது.

Tuesday, August 23, 2011

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.


திரு. அரவிந்தன் தனது செடிகளுக்கு முன்.
செழிப்பாக வளர்ந்துள்ள செடிகள்
 ஒரு நல்ல  காரியத்தை செய்யாமல் இருப்பதற்கு நம்மில் அநேகர் பல காரணங்களை கண்டு பிடித்து செய்யாமல் இருப்போம். வெகு சிலரே  பல்வேறு காரணங்கள் செய்யமுடியாமல் போவதற்கு இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவிட்டு காரியத்தை சாதிப்பார்கள்.  இரண்டாம் வகையைச் சார்ந்தவர் திரு. G.A. அரவிந்தன். 68 வயதாகும் அவர் வீட்டுத் தோட்டம் போட்டிருக்கிறார். கோவை 100 அடி சாலையிலிருந்து நவ இந்தியா சந்திப்பு வரை செல்லும் சாலையை விரிவு செய்ததால் இவரது வீட்டு மனையின்  பரப்பு குறைந்தது ஆனால் என்ன? தோட்டப் பிரியரான அவர் சாலையின் ஓரத்திலேயே சாக்குப் பைகளில் மண் நிரப்பி சேனைக் கிழங்கு, தக்காளி, மிளகாய் என வீட்டிற்குத் தேவையான காய்கறிகளை வளர்க்கிறார். இடம் இல்லை, சாலை ஓரம் பாதுகாப்பு இல்லை, மண் பரப்பு இல்லை ஆனாலும் மனம் இருப்பதால் அவரால் செய்யமுடிகிறது. இடம் இருக்கும் மனிதரிடம் மனம் (தோட்டம் இட) இருப்பதில்லை, மனம் இருக்கும் மனிதரிடம் இடம் இருப்பதில்லை.

Friday, August 19, 2011

உலக புகைப்பட நாளில் எனது இடுக்கி மாவட்ட பயண புகைபடங்கள்.

25 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (18-08-2011) இடுக்கி மாவட்ட பகுதியில் பயணம். மழைக்காடுகள் அழிந்துள்ளதைப் பார்க்கும் போது ஆதங்கமும், வருத்தமும் ஏற்பட்டது. நுனிக் கிளையில் அமர்ந்து அடிக் கிளையை வெட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது மாத்திரம் தெளிவாக்கப் புரிந்தது.
நண்பரின் பண்ணை வீடு. ஆற்றின் எதிர்புறமிருந்து.
மழைக் காடுகளை இனிமேலும் அழிப்பது, நாமே நம்மை அழித்துக் கொள்வது போன்றது.

மேற்கு மலை தொடர்ச்சியின் சிறப்பு, வெட்டி வைத்த கொம்புகள் அதிக ஈரத் தன்மை காரணமாய்  தளிர்விடும் அழகு.
நண்பரின் பண்ணை வீட்டிலிருந்து பெரியாறு.
நதியின் அருகே வளர்ந்துள்ள மூங்கில்.
சர்ச்சைக்குரிய பெரியாறு.
மழைக் காடுகளைத் அழித்து தேயிலைத் தோட்டங்கள்
பாறையில் பெரணி.
உபயம் சுற்றுலாப் பயணிகள்.
ஏலம் பயிர் செய்வதால் சற்று மரக்கூட்டங்கள்.
மலை முகட்டில் மேகத்துடன் ஏலப்பாறை கிராமம்.

Saturday, August 13, 2011

பெங்களூரு மலர் கண்காட்சி ஆகஸ்ட் 2011


லோட்டஸ் கோவில் , தில்லி
 




 பெங்களூரு மலர் கண்காட்சி கண்ணாடி மாளிகை அலங்காரத்தை தவிர குறிப்பிடும்படியாக இல்லை. தில்லியிலுள்ள லோட்டஸ் கோவிலை சிறப்பாக மலர் அலங்காரத்தில் வடிவமைத்திருந்தனர். "உதகை பெர்ன் ஹில் கார்டன்" மலர் அலங்காரம் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தது. புதிய வகை செடிகள், திசு வளர்ப்பு செடிகள் என களைகட்டும் கண்காட்சி அவைகளில்லாமல், பெரிய  நர்சரிகள் கூட இல்லாமல் இருந்தது ஏமாற்றத்தை தந்தது. மொத்ததில் பெங்களூரு மலர் கண்காட்சியும் அதன் தனித்தன்மையை இழந்து வியாபாரமாகி வருகிறது.

Saturday, August 6, 2011

ஹிரோஷிமாவும், ஃபுகோஷிமாவும்.

இன்று ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சின் 66 வது நினைவு தினம். முதலில் அவர்களுக்கு நம் அஞ்சலி. அழிப்பதிற்கு இல்லை ஆக்கப்பூர்வமாக அதனை செயல்படுத்த முடியும் என வல்லரசுகள் உலகை நம்ப வைத்துக் கொண்டிருந்த வேளையில் ஃபுகோஷிமா அணு உலை விபத்து நம்மை எச்சரித்தது. நிறைய நாடுகள் மறுபரிசீலனை செய்து கைவிட நம் அரசு முனைப்புடன் செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இயற்கையின் மாபெரும் ஆற்றலை மனிதன் தன்வசப்படுத்த முடியும் என நமது ஆட்சியாளர்களை வல்லரசுகள் நம்ப வைப்பதும் அதனை நம்பி ஆட்சியாளர்கள் முடிவெடுப்பதும் துரதிஷ்டமானது. வருங்காலத்தில் இதுபோன்ற அஞ்சலிகளை நமக்காக மற்றவர்கள் எடுக்கவேண்டி வரலாம்.


கீழ் கண்ட தொடர்புகளையும் படியுங்கள்

அச்சம் தரும் அணு உலைகள்     (1)
அச்சம் தரும் அணு உலைகள்     (2)
அச்சம் தரும் அணு உலைகள்     (3)