
இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே. விவசாயத்திலும் இதற்கு நல்ல பங்கு உண்டு. ஆயிரக்கணக்கான பறவைகள் இருந்தாலும் நாம் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் பறவைகளைப் அறிந்திருக்கிறோம். புதிதாக சில பறவைகளைப் பார்த்தாலும் நம்மால் இனம் காண முடிவதில்லை. அக்குறையை போக்க வந்துள்ள நூல்தான் முனைவர்.K.ரத்னம் அவர்களின் “ Birds of Tamilnadu” .

தமிழகத்தின் சுமார் 328 பறவைகளின் அங்க அடையாளங்கள், காணப்படும் இடங்கள், வாழ்வுமுறை, உணவு, குரல், இனப்பெருக்கம் என மிகத்தெளிவாக வண்ணப் படங்களுடன் விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. ஆங்கிலம், தமிழ் கூடவே அறிவியல் பெயரும் இருப்பது பின்னாட்களில் குழந்தைகளுக்கு மிக உபயோகமாக இருக்கும். முனைவர்.K.ரத்னம் அவர்கள் தமிழ்துறைத் தலைவராக மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி, தஞ்சாவூரில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள், சாதனைக்குப் பரிசு என குழந்தைகளுக்கு விலைமிக்க கம்யூட்டர் விளையாட்டுப் பொருட்கள், ஆடைகள், அணிகலன்கள் என பரிசளிக்கிறோம். ஒரு மாறுதலுக்காக இது போன்ற வாழ்கைக்குப் பயன்தரும் நூல்களை பரிசாக அளித்தால் இயற்கையை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக இருக்குமே. விவசாய்களிடமும் இருக்க வேண்டிய நூல்.
கிடைக்குமிடம்:
மாணிக்கவாசகர் நூலகம்
சிதம்பரம்................230069
சென்னை................25361039, 24357832
மதுரை....................2622853
கோவை..................2397155
திருச்சி....................2706450