Monday, November 24, 2008

மாடித் தோட்டம், நகர விவசாயம் ஒரு பார்வை. (1)

மாடித் தோட்டம், என்பது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே மிக சிறப்பாக இருந்திருக்கிறது. பாபிலோனின் தொங்கு தோட்டம் பண்டைய (Ancient World Wonders) உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இன்றைய பாக்தாத் (இராக்) நகரிலிருந்து சுமார் 50 கீ.மீ தொலைவில் அதன் சிதிலங்கள் உள்ளன.
சிதிலமடைந்த இன்றைய நிலை.
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னராக இருந்த போது சிறந்த கட்டிடக் கலையுடன் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தாவரங்களை கொண்டுவந்து தனது மனைவியின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டதுதான் இந்த பாபிலோனின் தொங்கு தோட்டம். அன்று ஒருவரின் மகிழ்ச்சிக்காக உண்டாக்கப்பட்டது ஆனால் இன்று ஒவ்வொரு உயிர்களும் வருங்காலத்தில் வாழ இந்த மாடி தோட்டம், நகர விவசாயம் தேவைப்படுகிறது. காரணம் நகரங்களில் மரங்கள் வெட்டப்படுவதும் அதேசமயம் வாகனங்களின் எண்ணிக்கை கூடுவதும் கரிமில வாயுவின் அளவை மேலும் கூட்டுகிறது. தொழிற்புரட்சிக்கு முன் வளி மண்டலத்தில் 280 ppm ஆக இருந்த கரிமில வாயுவின் அளவு 1990 களில் 351.36 ppm உயர்ந்து 2008 இல் 384.75 ppm ஆக மேலும் உயர்ந்துள்ளது. கிராமப் புறங்களில் விவசாயம் பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகும் போது மக்கள் நகரத்தை நோக்கி வருகின்றனர் இதனால் நிலம் மற்றும் நீரின் (Pressure on land and water increases)தேவை அதிகரிப்பதுடன் குப்பைகூளங்களும் அதிகரிக்கிறது. விளைவு சுற்றுச்சுழல் மாசுபாடு. வீட்டுத் தோட்டம் என்ற இந்த பயனுள்ள பொழுதுபோக்கு அடுக்கு மாடி குடியிருப்புகள், தொலைக்காட்சி, நகரில் நீண்ட நேரப் பயணம், வேலைப்பளு போன்றவைகளால் மக்களிடமிருந்து மறைய ஆரம்பித்துள்ளது.

மாடித் தோட்டம், நகர விவசாயத்தால் ஏற்படும் சில நன்மைகள்.

# நமக்குத் தேவையான புதிய காய்கறிகள், பழ வகைகளை நாமே உற்பத்தி செய்யலாம்.
# சமயலறைக் கழிவுநீரை மறுஉபயோகம் (Reuse) செய்தும் சமயலறைக் கழிவுகளை மறுசுழற்சி செய்து (Recycle) மண்புழு உரமாக மாற்றி அங்கக விவசாயம் செய்வதால் சத்துமிக்க காய்கறிகளை பெறுவதுடன் நகரின் சுற்றுச்சுழலும் பாதுகாக்கப்படுகிறது.
# நாமே உற்பத்தி செய்வதால் வெளியூர்களிலிருந்து காய்கறிகளை கொண்டுவர ஆகும் எரிபொருள் செலவு மற்றும் அதனால் ஏற்படும் மாசுபாடு குறைகிறது.
# மருத்துவ தாவரங்களை வளர்ப்பதின் மூலம் நோய்களைத் தவிர்க்கலாம்.
# மிகச் சிறந்த உடற்பயிற்சி..
# குழந்தைகளுக்கு இயற்கையை புரியவைக்க ஓரு வாய்ப்பு.
# பெரியவர்களுக்கு மன இறுக்கத்திலிருந்து மன அமைதி தரும் ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு.
# வேலைவாய்ப்புகள் உருவாகிறது.

தொடரும்.................
படங்கள் உதவி: வலைதளம்.

6 comments:

மோகன் காந்தி said...

மாடித் தோட்டம், நகர விவசாயத்தால் ஏற்படும் நன்மைகளை விபரமாத தந்தமைக்கு நன்றி

வின்சென்ட். said...

திரு.மோகன் காந்தி

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அட என் பால்கனி தோட்டத்தால இத்தனை நன்மை இருக்கா.. ஓகே ஒகே..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் வருகைக்கு நன்றி. என்னென்ன வகை செடிகள் பால்கனி தோட்டத்தில் வைத்துள்ளீர்கள்?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கருவேப்பிலை, ரோஜா, நந்தியாவட்டை, செம்பருத்தி, டேலியா, கத்தாழை, மனத்தக்காளி,மணிப்ளாண்ட்..ம் அப்பறம்..துளசி..எப்பவாச்ச்ம் தக்காளி மிளகாய் போடுவதுண்டு.. அடிக்கடி ஊருக்கு போகும் போது ரொம்ப கஷ்டமாகிடும்..

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி-கயல்விழி

நல்ல உபயோகமான செடிகளை வளர்க்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி.அடிக்கடி ஊருக்கு போகும் போது Micro tube with small tap or Gel உபயோகியுங்கள். 5 -10 நாட்கள் சீசனை பொறுத்து நீர் விடவேண்டியதில்லை.