Wednesday, December 15, 2010

அமேசான் காடுகளின் “காந்தி” திரு.சிகோ மென்டிஸின் பிறந்த நாள் (15-12-1944)..


முதன் முதலில் நான் இரப்பர் மரங்களை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், பின்பு அமேசானின் மழை காடுகளை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், இப்போது நான் மனிதாபிமானத்திற்காக போராடுகிறேன் என்று உணர்கிறேன்.
-சிகோ மென்டிஸ்

அமேசான் காடுகளின் “காந்தி” என்று அறியப்படும் சிகோ மென்டிஸ், பிரேசில் நாட்டில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி ரப்பர் பால் எடுக்கும் குடும்பத்தில் பிறந்து அதேயே தொழிலாக மேற்கொண்டார். 150 வருட பாரம்பரிய மிக்க தொழிலாக அப்போது அது இருந்தது. ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், முதலாளித்துவம் இருந்தாலே இயற்கையை அழித்தல், சுரண்டல், ஏமாற்றுதல், வஞ்சகம் போன்றவை இருக்கும். இருப்பினும் தொழில் புரட்சி, வாகன உற்பத்தி, உலக போர்கள் காரணமாக இரப்பர் தொழில் இயற்கையை அழிக்காமல் அமேசான் காடுகளில் மிகச் சிறப்பாக இருந்தது. உரிமையாளர்கள் சொகுசு வாழ்கையில் இருந்தார்கள். செயற்கை இரப்பர் கண்டுபிடிப்பு, கீழைநாடுகளில் இரப்பர் வளர்ப்பு இவற்றால் அமேசான் காடுகளில் இரப்பர் தொழில் நலிவடைந்தது. வழக்கம் போல் உரிமையாளர்கள் அதனை விட்டு வேறு தொழில்களுக்கு மாறினர். தொழிலாளர்கள் கதி ??? இதற்கிடையை இயற்கை காடுகளை அழித்து கால்நடை வளர்ப்பை சிலர் மேற்கொண்டனர். விளைவு இரப்பர் பால் எடுப்பவர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. சிகோ மென்டிஸ் இரப்பர் பால் எடுப்பவர்களுக்கு தொழில் சங்கம் அமைத்து போராடினார். விளைவை 1988 ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி எதிர்கொண்டார் அன்று மாலை வீட்டின் பின்புறம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்புதான் காடுகள் பற்றிய விழிப்புணர்வு வெகு வேகமாக பரவியது. இன்றும் ஓரளவிற்கு அமேசான் காடுகள் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

அவரைப் பற்றி வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமாநிறுவனம் படம் எடுப்பதாக பல மில்லியன் டாலர்களை செலவழித்தது. ஆனால் என்ன காரணத்தாலோ செலவழித்தும் படம் எடுக்காமலேயே கைவிட்டது. இதனை ஆவணப்படுத்தி இருவர் இதைபற்றி படம் எடுத்தனர். Youtube இல் இப்படம் 10 பகுதிகளாக உள்ளது. பல அரிய புகைபடங்களும், அந்த கால இரப்பர் தொழில் பற்றிய ஆவணப் படங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கண்டிப்பாக இயற்கை ஆர்வலர்கள் பார்க்கவேண்டிய படத்கொகுப்பு.  இணைப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.

Rubber Jungles

திரு. சிகோ மென்டிஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ பெருமிதம் கொள்கிறது.

Tuesday, December 14, 2010

பதிவர்களுக்கு ஒரு அன்பான முக்கிய வேண்டுகோள்.

மனித இனத்தின் பேராசையால் ஒவ்வொரு நாளும் பல உயிரினங்கள் இந்த பூவுலகைவிட்டு மறைய ஆரம்பித்துள்ளன. நாமும் அதனைப் பற்றி எந்தவொரு உணர்வும் இல்லாமல் பொன்னும் பொருளும் மாத்திரமே வாழ்கை என்று வாழ்ந்து வருகிறாம். அடுத்த தலைமுறையிடம் பொன்னும் பொருளும் இருக்கும், குடிப்பதற்கு நீரும் ஆரோக்கியமான காற்றும் இருக்குமா? என்றால் கேள்விக் குறிதான்.

இதனை கருத்தில் கொண்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் ( International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) சிறப்பான முறையில் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். 1948 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் தற்போது சுவிட்ஜர்லாந்து நாட்டிலுள்ள கிளாண்ட் (Gland) என்ற நகரை தலைமை செயலாகமாக கொண்டு இயங்கி வருகிறது. சுமார் 140 நாடுகளிலிருந்து 1000+ அரசு, அரசு சாரா நிறுவனங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் ஒரு மிகமுக்கிய செயல்பாடு நீங்கள் மேலே பார்க்கும் படம்தான். ஒவ்வொரு நாளும் ஒரு உயிரினம் அல்லது தாவரத்தின் புகைப்படத்துடன் அவை எங்கு உள்ளன? அதன் தற்போதய நிலைமை (Status ) குறித்து வெளியிடுகிறார்கள். படத்தை “கிளிக்” செய்து விபரம் பெற்றுக் கொள்ளலாம். பதிவர்களுக்கு எனது அன்பான முக்கிய வேண்டுகோள். நாம் ஒவ்வொருவரும் இப்படத்தை நமது வலைப் பூக்களில் இட்டால் இந்த அழிந்து வரும் இனங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எளிதில் நம் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கீழேயுள்ள Html Code ஐ காப்பி செய்து Add and Arrange Page Elements சென்று HTML/JavaScript ஐ தெரிவு செய்து அதில் பேஸ்ட் செய்தால் போதும் அந்த படம் வந்துவிடும்.


<iframe src="http://feeds.iucnredlist.org/species-of-the-day" frameborder="0" width="180" height="200" scrolling="no"></iframe>
 இந்த தொடர்பை எனக்கு அறிமுகப்படுத்திய திரு. இரத்தினசபாபதி அவர்களுக்கு எனது நன்றிகள்

Saturday, December 11, 2010

காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

காளான் வளர்ப்பு வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Friday, December 3, 2010

இன்று ( டிசம்ர் 3 ) உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

"ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் மாணவர்கள்
 சென்ற அக்டோபர் மாதம் 30 தேதி கோவையை அடுத்த மாங்கரையில் அமைந்துள்ள "ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் நடந்த மாணவ மாற்றுத் திறனாளிகள் கூட்டதில் எனக்கு பேசும் வாய்ப்பை கொடுத்திருந்தார்கள். நானும் கேரளாவில் நடந்த என்டோசல்பான் ( பார்க்க : The Slow poison of India ) உபயோகத்தில் குழந்தைகள் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளாக ஆகிறார்கள் என்று கூறி “இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம்” பற்றி கூறிவிட்டு அமர்ந்தேன். ஒருவர் அறிமுக அட்டையை தந்து அழைத்தார் சென்றால் ஏற்கனவே அறிமுகமான நண்பர் திரு. சூரியா நாகப்பன் அமர்ந்திருந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்பவர். தொலைபேசி மூலம் ( Help line ) மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகமான தகவல்களை UDIS அமைப்பின் மூலம் தந்து உதவி வருகிறார்.
திரு. சூரியா நாகப்பன்
பேச்சு வீட்டுத் தோட்டம் பற்றியிருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நல்ல சுயவேலை வாய்ப்பு என கூறினார். உடனே அவர்களது அமைப்பிலும் இதுபற்றி பேச வாய்ப்பளித்தார். வீட்டுத் தோட்டதிற்கு இப்படியொரு வாய்ப்பும் உண்டு என்று அவர்களுடன் பேசும் போது அறிந்துகொண்டேன். உண்மையில் குறைந்த கல்வி தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு. எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஆரோக்கியமான மனநிறைவைத் தரும்..

முக்கியமாக தொலைபேசி உதவியை ( Help line    Click) தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் அழைத்து கல்வி, உதவிகள்,  வாய்ப்புக்கள், பயிற்சிகள் பற்றி அறிந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு துணை நிற்கும் அவரையும் ,தொலைபேசி உதவி பற்றியும் பதிவிடுதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. இதைபடிக்கும் அன்பர்கள் உங்கள் மாற்றுத் திறனாளி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவரது விலாசம்

திரு. சூரியா நாகப்பன்
13.திருவள்ளுவர் தெரு
ஜி.என். மில்ஸ் அஞ்சல்
கோவை 641 029

அலைபேசி : 99445 56168
தொலைபேசி: 0422-2644603
மின்னஞ்சல் : caliber.coimbatore@gmail.com
வலைப் பூ : http://www.calibertrust.blogspot.com/

Helpline Numbers:
+ 91- 422 - 2405551
+ 91- 422 - 2648006
+ 91- 99 44 55 61 68
Emails.
rights4pwd@gmail.com
udis@vsnl.net
Website
http://www.davo.in/

Thursday, December 2, 2010

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட் MIKANIA MICRANTHA

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மரத்தில் முழுவதும் படர்ந்துள்ள ஒரு காட்சி
பெயருக்கு ஏற்ப இதன் வளர்ச்சி அபரிமிதமானது. நல்ல சூழ்நிலை இருந்தால் ஒரு நாளைக்கு 8 செ.மீ வரை வளரக்கூடியது. உலகப் போரின் போது வீரர்கள் மற்றும் தளவாடங்களை எதிரிகளிடமிருந்து மறைக்க (camouflage) இங்கு கொண்டு வரப்பட்ட தாவரம். உலகின் மிக முக்கிய உயிரினவள செழுமையிடம் (BIODIVERSITY HOTSPOT) இந்தியாவில் இரண்டு, அவை மேற்கு தொடர்ச்சி மலையும், வடகிழக்கு  பகுதிகளாகும். இந்த இரண்டு பகுதிகளிலும் இதன் தாக்கம் உள்ளது. உயிரினவளம் அதிகம் நிறைந்த இப்பகுதிகளில் இத்தாவரம் வேகமாக பரவுவதால் நீண்ட கால அடிப்படியில் இந்த பகுதிகளுக்கான பல்லுயிர் பெருக்கம் பெருமளவில் பாதிக்கப்படும்.
 நீயா? நானா? போட்டியில் சீமைக் கருவேலும் மைல் எ மினிட் கொடியும்

95% மூழ்கிவிட்ட வேப்பமரம்
மரங்களின் மேல் படர்ந்து அவை ஓளிசேர்க்கை செய்வதை தடுத்து அதன் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. உயிரற்ற தொலைபேசி கம்பங்கள் முதல் வாழை,பனை என இது படராத இடமே இல்லை என்னுமளவிற்கு பரவியுள்ளது. மரவளர்ப்பிற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் தற்போதைய எதிரி.

நமது வாழ்வாதாரத்தை அழிக்க எதிரி மனித, ஆயுத, வர்த்தக ரூபத்தில் வர வேண்டிய அவசியமில்லை தாவர ரூபத்திலும் வரலாம். பார்த்து பழகிவிட்டதால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோம். ஓட்டைப் பாத்திரத்தில் நீர் பிடிப்பதை போன்றதுதான் நாம் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது. காகிதத்தில் கணக்கிட்டு வளர்ந்த நாடு எனவும், உலகின் 100 கோடீஸ்வர்களில் நிறையபேர் இந்தியர்கள் எனவும் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் நாட்டின் 8 மாநிலங்கள், 26 ஏழை ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது என்ற செய்தியை நாம் மனதில் கொண்டு இந்த தாவரங்களை அழித்து நாட்டின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த முயல்வோம்.

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLORA

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்
வறண்ட பகுதிகளை பசுமைப்படுத்தவும் அப்பகுதி மக்களின் விறகு தேவையை பூர்த்தி செய்யவும் நம் நாட்டிற்கு மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தபட்ட தாவரம். சீமையிலிருந்து வந்ததால் “சீமைக்கருவேல்” எனவும், வேலிக்குப்பயன்பட்டதால் “வேலிக்காத்தான்” எனவும், கரிஉற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பட்டதால் “டெல்லி முள்” எனவும், முள் குத்தினால் எளிதில் குணமாகாமல் போனதால் “விஷமுள் செடி” என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலைகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளாவிட்டாலும் மஞ்சள் நிற அதன் காய்களை உணவாக உட்கொண்டன. விளைவு அதன் கழிவுகள் மூலம் விளை நிலங்களிலும் நீர்பகுதிகளிலும் பரவியது. மழைகாலங்களில் இதன் விதைகள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடும் பள்ளங்களிலும், கண்மாய்களிலும் செழித்து வளர்கின்றது. ஒரு காலத்தில் இராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் கண்மாய்களிலுள்ள மீன்களுக்காக ஏலம் விட்டாரகள். நிலைமை மாறி, சீமைக் கருவேல் ஏலம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவிற்கு வாழ்வியலை மாற்றியுள்ளது. மறுதாம்பும் சிறப்பாக வருவதால் மக்கள் இதனை அழிக்க விரும்புவது இல்லை. நீர்த் தேவைக்காக 30 அடிக்கு மேல் வேர்கள் சென்று நீரை பெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு நீண்ட வேர்களற்ற அரிய வகை மூலிகைகள் அழிந்து வருகின்றன. பறவைகளுக்கான உணவும் நல்ல நிழலும் இல்லாமையால் இப்பகுதிகளில் அவை விரும்பி வசிப்பதில்லை.
 "கரிமூட்டம் " வேலை வாய்ப்பை தருகிறது.
இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் கரிமூட்டம் செய்து தரமான கரியை வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இது ஒரு வாழ்வாதாரமாக இருந்தாலும் இது எடுத்துக் கொள்ளக்கூடிய நீரைக் கொண்டு விவசாயம் நன்கு செய்ய இயலும். இதன் எரியும் சக்தி சிறப்பாக இருப்பதால் மரத்துண்டுகள் மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதனை விரும்பி அடியோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளுகின்றனர். சுற்றுச்சுழலையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகம் என்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.

Wednesday, December 1, 2010

உண்ணிச் செடி (LANTANA CAMARA )

எங்கள் குடியிருப்பிற்கு அருகில் மண்டியிருக்கும் செடி
உண்ணிச் செடியும் அழகிற்காக கொண்டுவரபட்ட தாவரமாகும். உலகின் முக்கிய உயிரினவள செழுமையிடமான (BIODIVERSITY HOTSPOT) மேற்கு தொடர்ச்சி மலையின் மழை குறைவான பகுதிகளில் இன்று புதர் போல் மண்டி இயற்கை வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறது.
நகரங்களில் அழகிற்காக வளர்ப்பு
ஆனால் நகர்புறங்களில் பராமரிப்பு செலவு, பூச்சி தாக்குதல் குறைவு என்பதாலும், பல வண்ணங்களில் அழகிற்காக இதனை வளர்க்கிறார்கள். நேர்த்தியான கைவினை பொருட்களும் தயாரிக்க முடியும்.  இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க இதன் இலைகளை பயன்படுத்தலாம்.
கைவினைப் பொருட்கள்
எனது பழைய பதிவு

உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.
2nd Photo from Internet

ஆகாயத் தாமரை( EICCHORNIA CRASSIPES)

ஆகாயத் தாமரை
பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஆகாயத் தாமரை இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அழகிற்காக மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாடெங்கிலும் குளம், குட்டைகளில் பரவி அழிக்கமுடியாத தாவரமாக மாறி விட்டது. கோடைகாலங்களில் நீர் நிலைகளில் இலைவழியாக ஆவியாதலை அதிகப்படுத்துகிறது. விவசாயதிற்கான நீரை அசுத்தமாக்குவதோடு நீர் செல்லும் வழிகளில் பரவி தடை ஏற்படுத்துகிறது. இதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி குறைந்து போனதாலும் குறைந்த நீரின் அளவாலும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் விலையை பாதிக்கிறது. நீர் வழி போக்குவரத்தை பாதிப்பதோடு சுற்றுலாத் தலங்களின் அழகையும் படகு சவாரி போன்ற நல்ல பொழுதுபோக்கையும் கேள்வி குறியாக்கிவிட்டது(உ .தா. ஊட்டி, படகு சவாரி ). நகரப்புறங்களில் கொசுத் தொல்லையையும் உண்டாக்குகிறது.
ஒரு செடி சுமார் 5000 விதைகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முளைப்புத் திறன் 20 ஆண்டுகள். இதனை உயிரியல் முறையில் கட்டுபட்டுப்படுத்த வெளி நாட்டிலிருந்து ஒரு வண்டினத்தை ( Neochetina spp.) நம் நாட்டில் வெற்றிகராமாக உபயோகித்து அழிக்க ஆரம்பித்துள்ளனர் அதுபற்றிய செய்தியைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள். உங்கள் பகுதியிலும் இதனை உபயோகிக்க முயலுங்கள்.

http://www.nrcws.org/Story6.pdf


ஆகாயத் தாமரை கொண்டு செய்த சோபாசெட்டுக்கள்
 இதனால் நன்மை என்று பார்த்தால் மண்புழு உரம் தயாரிக்கலாம். அழகிய அமரும் சோபாசெட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் கீழைநாடுகளில் செய்கிறார்கள். அவைகள் நம் நாட்டிலும் கிடைக்கின்றது.

முக்கியமாக நமது தேசீய மலரான தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் வெகுவாக பாதித்து நிறைய இடங்களில் இல்லாமலும் செய்துவிட்டது. வரும் சந்ததியினர் தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் புகைபடங்களில் பார்க்குமளவிற்கு இது பரவி விட்டது. ஜீவராசிகளின் அடிப்படை ஆதாரமான நீராதாரத்தை இது வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகமிருப்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.

Tuesday, November 30, 2010

பார்த்தீனியம் PARTHENIUM HYSTEROPHORUS

பார்த்தீனியம்.
1950களில் P.L.480 ( Public Law 480 food aid programme) கோதுமை இறக்குமதியில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆரம்பித்த இதன் வளர்ச்சி ஒருசில மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. பொதுவாக குடியிருப்பு பகுதிகளிலும் விளைநிலங்களிலும் இதன் தாக்கம் அதிகம். இதனால் ஆஸ்துமா, தோல் நோய் நமக்கு வர வாய்ப்பு உண்டு. மிக அதிக அளவில் விதை உற்பத்தி செய்வதால் வெகு வேகமாக பரவி செழித்து வளர்கிறது. இந்தியாவில் 50 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பரவியுள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.
ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா 
இயற்கை முறையில் பல்வேறு முயற்சிகள் நடந்தாலும் ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா ( Zygogramma bicolorata ) என்ற மெக்ஸிகோ நாட்டு வண்டு சிறப்பாக இதனை அழிப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் கையுறை அணிந்து இவற்றை அழித்ததை பார்த்திருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன் கூடையின் கீழ் அடிபடாமல் இருக்க பார்த்தீனியத்தை வைத்து அதற்கு மேல் தக்காளிபழங்களை வைத்து சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். இன்று கையுறையின்றி இவற்றை அகற்றுவது நடைமுறை பழக்கமாகிவிட்டது. மண்புழு உரமாக மாற்றலாம் என்கிறார்கள் நான் இதுவரை பார்க்கவில்லை.

எனது அனுபவத்தில் உழவு செய்யாமல் இருந்தாலும் (??? ), அதிக நிழல் தரும் மரமிருக்கும் பகுதிகளிலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தமுடிகிறது. உழவு செய்தாலும் மூடாக்கு இட்டு நமது பயிர்களை வளர்த்தால் இதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். விதைகள் மூட்டாக்கின் மேல் விழுவதால் முளைப்பதில்லை.
மூட்டாக்கு இட்ட நிலத்தில் பார்த்தீனீயம் இல்லை.
மண்ணில் விழுந்தாலும் மூட்டாக்கினுள் சூரிய ஒளி கிடைக்காமல் வளர்வதில்லை. ஒன்று இரண்டு வளர்ந்தாலும் கை களையெடுப்பின் மூலம் எளிதாக முற்றிலுமாக கட்டுப்படுத்தமுடியும்.
 மாவுப் பூச்சி தாக்கிய பார்த்தீனியம் செடி.
நான் தற்செயலாக பார்த்த காட்சி மாவுப் பூச்சி இதனையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பார்த்தீனியத்தை கட்டு ப்படுத்தி விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய தருணம் இது.

2 வது படம் உதவி :nrcws.org

Saturday, November 27, 2010

வீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

Thursday, November 25, 2010

நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சில தாவரங்கள் காரணங்களுக்காகவும், சில தாவரங்கள் இறக்குமதி மூலமும் நம் நாட்டில் பரவி இன்று அழிக்கமுடியாத அளவில் நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு ஒவ்வாமையையும், நோய்களையும் உண்டாக்கி மனிதர்களையும், மிருகங்களையும், தாவரங்களையும் கூட பாதிக்கிறது. நாமும் பார்த்து பழகிவிட்டதால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நூற்றுக்கு மேல் இத்தாவரங்கள் இருந்தாலும் 5 முக்கிய தாவரங்கள் மிக பெரிய அளவில் நாடு முழுவதும் பரவி வரப் போகின்ற தலைமுறையின் வாழ்வாதாரங்களையும், இயற்கைச் சுழலையும் வெகுவாக பாதிக்கப் போகின்றது.
சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்.

ஆகாயத் தாமரை.

பார்த்தீனியம்.

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட்.

உண்ணிச் செடி.

பெருகிவரும் ஜனத் தொகை, சுருங்கி வரும் விளைநிலம், பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்கள், கேள்வி குறியாகும் பருவமழை, புவிவெப்பம், சுற்றுச்சுழலைப் பாதிக்கும் நுகர்வுக் கலாச்சாரம் என காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த தாவரங்கள் பல லட்சம் ஏக்கர் நிலங்ககளிலும், நீர்நிலைகளிலும் பரவி நமது விவசாயத்தையும், கால்நடைகளையும் கேள்விக்குறியாக்கி வருவது உண்மை. மரபணுமாற்றம் செய்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என்று கூறலாம் ஆனால் அவை வளர்வதிற்கும் நிலமும், நீரும் தேவைதானே. இத்தாவரங்கள் போர்க்கால அடிப்படையில் அதிக கவனம் செலுத்தி கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் இல்லையேல் இவற்றால் ஏற்படும் விளைச்சல் குறைதல், மேய்ச்சல்நிலம் குறைதல், காடுகளுக்கு பாதிப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை மீட்க செய்யும் தொகை, என கணக்கிட்டால் அவை பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். இத்தருணத்தில் தேவை இவைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை. குழந்தைகளுடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதியுங்கள். அழிப்பதில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் திரு.கேவின் கார்டரைப்போல் இருக்கப் போகிறோமா?? முடிவு உங்கள் கையில்.

பார்க்க எனது பழைய பதிவு. பரிசும், பாடமும்

ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

* ஆங்கிலப் பெயர்கள். தமிழில் இருந்தால்  தெரிவியுங்கள்.
Source : Dr K. Venkataraman’s Article in “ Forntline” Volume 26 - Issue 13 :: Jun. 20-Jul. 03, 2009

Monday, November 22, 2010

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது

குச்சிகள், இலைமக்கு மற்றும் மண்புழு

தண்ணீர் விட வேர் அருகில் குழாய்

ஆறுமாத செடி
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாக குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

Wednesday, November 10, 2010

சில ஆப்பிரிக்க நாடுகளில் (Sub-Saharan Africa ) மழைநீரை மட்டுமே நம்பி நடக்கும் இயற்கை விவசாயம். மழையளவு 200 மிமீ முதல் 300 மிமீ.

திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil.
படிப்பதிற்கு ஏதோ கதை என்று நினைக்கத் தோன்றும். செப்டம்பர் மாதம் எரிடீரியா (வடகிழக்கு ஆப்பிரிக்கா ) நாட்டின் ஹமெல்மாலோ விவசாய கல்லூரியில் பணியாற்றும் திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. அவர்களின் ஆப்பிரிக்க விவசாயம் பற்றிய உரையையும் பின்பு அதைப் பற்றி உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது விவசாய முறை எளிமையாகவும் உபோகமாகவும் இருப்பதால் முக்கியமானவைகளை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மரங்களுடன் கூடிய விவசாயம்
இயற்கை  மற்றும் வாழ்கை முறை :

சஹாரா பாலைவனத்தின் தாக்கம் (Sub-Saharan Africa )இருப்பதால் இந்த பகுதிகள் மிகுந்த வறட்சியுடன் மழையளவு மிக குறைவாக உள்ளது. ஆனால் விவசாயமும் நடைபெறுகிறது. பொதுவாக ஆண்கள் கட்டாய இராணுவ சேவைகளுக்கு செல்வதால் 95% பெண்களாலும் குழந்தைகளாலும் விவசாயம் பராமரிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி தவிர்க்கபடுகிறது. விதைகளும் பாரம்பரிய முறைபடி சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தபடுகிறது. உழவு செய்யப்படுவதில்லை. மூடாக்கு வெகுவாக உபயோகத்தில் உண்டு. பணப் பயிர் இல்லை. கிடைக்கின்ற மழை நீரை பல முறைகளில் சேமித்து பல்வேறு பயன்கள் தரும் மர வளர்ப்பை மையமாக வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
மரங்களுக்கிடையே உணவுப் பயிர்கள்
குறிப்பிட்ட அகலத்திற்கு மரங்களை நட்டு இடையே உணவு பயிர்களை ( Alley Cropping )பயிர் செய்கிறார்கள். அதுவும் தனிப்பயிராக (Mono Crop) இல்லாமல் பல வகை (Mixed Crops) பயிர்களை சுழற்சி முறையில் செய்கிறார்கள். மரத்தின் இலைகளும், குச்சிகளும் மூடாக்கு இட பயன்படுகிறது பின்பு அதுவே உரமாகின்றது.


விதைகளைக் கூட ஜேப் ப்ளான்டர் ( Jab Planter ) என்ற எளிய கருவி மூலம் உரத்துடன் விதைக்கிறார்கள்.
இது ஏறக்குறைய 17 வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்ததின் நவீன வடிவம். எண்ணிப் பார்த்தால் 925 -950 மிமீ மழை பெறும் தமிழகத்தில் விவசாயம் போராட்டமாக மாறியுள்ளது. பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
PHOTOS SOURCE : Mrs. V. Manjula M.Sc.,M.Phil

Saturday, November 6, 2010

காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

கிராம புறங்களில் மழை காலங்களில் இயற்கையாக காளான் தோன்றும் அவற்றை சேகரித்து உண்பார்கள். ஆனால் இன்று அவற்றை வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Monday, November 1, 2010

வடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..

வடகிழக்கு பருவ மழைதான் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகமாக நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவை தந்து இயல்பு வாழ்கையை பாதிக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம். ஆவணப்படுத்தபட்ட 1865 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சேதம் ஏற்படுகிறது.

நீலகிரி சேதம் 1865 ஆண்டு முதல்

வெட்டிவேர் ஒரு நிரந்தர தீர்வினை தர இயலும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இது பற்றி அங்குள்ள பிரபலமான நபர் ஒருவருடன் உரையாடிய போது வெட்டிவேர் பரவி மலையின் அழகை கெடுத்துவிடும் என்றார். தென்இந்திய வகை வெட்டிவேருக்கு முளைப்புத் திறன் இல்லை என்றாலும் அவர் வெட்டிவேரை உபயோகிக்க விரும்பவில்லை. அவர் பார்த்தீனியம், சீமைக்கருவேல் பட்டியிலில் இதனையும் வைத்திருந்தார்.



நம் நாட்டிலிருந்து அறிமுகமான வெட்டிவேர் இன்று கீழைநாடுகளில் சிறப்பாக உபயோகிப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ந்தாலும் சுற்றுச்சுழலுக்கும், விவசாயத்திற்கும் அதிகம் பயன்படும் நமது வெட்டிவேரை நாமே முழுமையாக உபயோகிக்காமல் இருப்பது மன வருத்தத்தை தருகிறது. கீழைநாடு ஒன்றில் எடுக்கப்பட்ட இரு விவசாயிகள் பற்றிய மேலேயுள்ள அனிமேஷன் படம் விளக்கம் தரும்.

Friday, October 29, 2010

அழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.

நகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
நகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை - 600 040

தொலைபேசி : 044 - 2626 3484,  044 - 42170506


இதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.
நாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.

இந்தியாவில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.

Tuesday, October 26, 2010

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் காலத்தின் தேவை.

வீட்டுத் தோட்டம் / மாடித் தோட்டம் இன்றைய காலத்தின் தேவை என்பதால், பல்வேறு காரணங்களுக்காக அனைத்து நாடுகளிலும் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக நகரப்புறங்களில் இதன் உபயோகம் அதிகம் என்பதால் சிறு அறிமுகம்.

Saturday, October 23, 2010

மாடித் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “நகர விவசாயம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். வடகிழக்கு பருவமழை துவங்கப் போகும் நேரத்தில் பயிற்சி கிடைப்பதால் உடனே செயல்பட முடியும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484

Sunday, October 17, 2010

மாடியில் முள்ளங்கி வளர்ப்பு

அறுவடைக்குப் பின்.
முள்ளங்கி
தாவரவியல் பெயர்: Raphanus sativus

மிக எளிமையாக வளரக் கூடிய தாவரம். உலகம் முழுவதும் இதற்கு வரவேற்பு உண்டு. கிழங்கு மற்றும் இலை ( கீரை ) உணவாகப் பயன்படுகிறது. நிறம், உருவ அமைப்பு போன்றவைகளால் வகைபடுத்தப்படுகிறது. சிறந்த மருத்துவ தன்மை வாய்ந்தது ஆனால் இதிலிருந்து வரும் மணம் காரணமாக மக்கள் விரும்பி உண்பதில்லை.
அறுவடைக்குத் தயார்

இந்த வெள்ளை முள்ளங்கியை மாடித் தோட்டத்தில் மிக நன்றாக வளர்க்க முடியும். நல்ல சூரிய ஒளியும் இலை மக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சியும் எடையும் சிறப்பாக உள்ளது. அறுவடை காலமும் குறைகிறது. பொதுவாக 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். எனது முதல் அறுவடையை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

Friday, October 15, 2010

இன்று உலக கை கழுவும் நாள். கை கழுவும் நிகழ்ச்சி சென்னை கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை
பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம்.

சிறந்த கை கழுவும் முறை
இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்று சுப்புராஜ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Source : www.ikmahal.com/

Monday, October 11, 2010

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேலும் இரு விருதுகள்.


தமிழக அரசின் விருது பெறும் திரு. யோகநாதன்
   ஈகோ வாரியார் (Eco Warrior ) விருதினைத் தொடர்ந்து மேலும் இரு விருதுகள் திரு. யோகநாதன் அவர்களுக்கு சென்ற மாதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் “சுற்றுச்சுழல் செயல் வீரர் ” விருதும் டிம்பர்லேன்ட் ஷூ கம்பெனி இந்தியாவில் தங்களது கடையை ஆரம்பித்த போது சுற்றுச்சுழலுக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ஐவரை தெரிந்தெடுத்து UNSUNG HEROES என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.
"Unsung Heros" விருது பெறும் திரு. யோகநாதன்

திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் விருந்தினர்களுடன் 

விருது பெற்றவர்களுடன் திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் திரு. மைக் பாண்டே
அந்த ஐவரில் ஒருவர் திரு. M.Y. யோகநாதன் என்பது நமக்குப் பெருமை. கிடைக்கின்ற ஓய்வு நேரத்தைக் கூட சுற்றுச்சுழலுக்கு அர்ப்பணிக்கும் இவரை மேலும் பல உயர்ந்த விருதுகள் வந்தடையவும் விருதினைப் பெற்ற அனைவரையும் இவ்வலைப் பூ உங்கள் சார்பாக வாழ்த்துகிறது.

இவரைப் பற்றிய எனது  பழைய பதிவு

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்

திரு.M.Y.யோகநாதன் அலைபேசி எண்
94430 91398

Sunday, October 3, 2010

அக்ரி இன்டெக்ஸ் 2010

டால்பின் வடிவில் மலர் அலங்காரம்
இந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அரங்குகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதிக தகவல்களோடு இருந்தது. கருத்தரங்கம் நடைபெற்ற இடமும் அரங்குகளுக்கு மத்தியில் இருந்தது சிறப்பு. இந்திய வேளாண்மை வேலையாட்கள் சார்ந்து இல்லாமல் இயந்திரம் சார்ந்து மாறிக் கொண்டிருப்பதை தனியார் அரங்குகளில் காண முடிந்தது. இது நாட்டின் வளர்ந்து வரும் விவசாய வேலையாட்கள் பற்றாக் குறைக்கு தீர்வா ? அல்லது பிரதமர் கருத்துப் போல    நாம் வறுமையிலிருந்து தலைநிமிர்ந்து இருக்க ஓரே வழி அதிக ஆட்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதுதான் (The only way we can raise our heads above poverty is for more people to be taken out of Agriculture )  என்று எண்ணுமளவிற்கு இராட்சத வேளாண்மை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இயந்திரம்
இவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த இயந்திரங்கள் நாட்டில் நடக்கும் நிலபேரங்களைப் பார்க்கும் இது மிகப் பெரிய நிலபிரபுக்களுக்கும், கம்பெனி விவசாயத்திற்கும் வித்திடுகிறது அதே சமயம் குறைந்து வரும் மழையளவு சிறு, குறு விவசாயிகளை வரும் ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்ற உதவும் என்று தோன்றுகிறது. ஆனால் சில நல்ல விஷயங்களும் இருந்தன.
ஹைட்ரோபோனிக்ஸ் - காய்கறி வளர்ப்பு
எளிய நகர விவசாயத்திற்கு உதவும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயத்திற்கு அதன் மாதிரி அமைப்புக்களை வைத்திருந்தனர்.
ஹைட்ரோபோனிக்ஸ் - தீவன வளர்ப்பு

இதே முறையில் தீவன வளர்ப்பும் உண்டு என்று கூறி விரைவில் நம் நாட்டிலும் கிடைக்கும் என்றார்கள்.
சோலார் விளக்குப் பொறி
சோலார் விளக்கின் மூலம் பூச்சிகளுக்கு பொறி அமைப்பு நேர்த்தியாக இருந்துது. விலையும் சுற்று அதிகம் தான். இதனால் அவற்றை ‘திருட்டு’ காரணமாக நடைமுறையில் உபயோகபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. கொட்டில் வளர்ப்பு முறையில் ஆடு, பன்றி, கோழிவளர்ப்பிற்கு தேவையான தரைஅமைப்பு (Floor) நடைமுறையில் சிறப்பாக உபயோகப்படுத்த முடியும் என்று தோன்றியது.
உயரமான தரைஅமைப்பு (Floor)
எளிதாக கழிவுகள் கீழே விழவும் கழுவி விடுவதற்கு எளிமையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அமைப்பதும் பராமரிப்பதும் சுலபம்.இயற்கையிடு பொருட்கள் நிறைய இருந்தது. வண்ணமலர், காய்கனி அலங்காரங்கள் நேர்த்தியாக இருந்துது.
காய்கறியில் அலங்காரம்
பெருகி வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் மழையளவு, நகரத்தை நோக்கிச் செல்லும் கிராம மக்கள், சுருங்கி வரும் விளைநிலங்கள், மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக பலன் தரும் புதிய யுக்திகள், இயந்திரமயம் என இந்திய விவசாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.