Tuesday, November 30, 2010

பார்த்தீனியம் PARTHENIUM HYSTEROPHORUS

பார்த்தீனியம்.
1950களில் P.L.480 ( Public Law 480 food aid programme) கோதுமை இறக்குமதியில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆரம்பித்த இதன் வளர்ச்சி ஒருசில மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. பொதுவாக குடியிருப்பு பகுதிகளிலும் விளைநிலங்களிலும் இதன் தாக்கம் அதிகம். இதனால் ஆஸ்துமா, தோல் நோய் நமக்கு வர வாய்ப்பு உண்டு. மிக அதிக அளவில் விதை உற்பத்தி செய்வதால் வெகு வேகமாக பரவி செழித்து வளர்கிறது. இந்தியாவில் 50 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பரவியுள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.
ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா 
இயற்கை முறையில் பல்வேறு முயற்சிகள் நடந்தாலும் ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா ( Zygogramma bicolorata ) என்ற மெக்ஸிகோ நாட்டு வண்டு சிறப்பாக இதனை அழிப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் கையுறை அணிந்து இவற்றை அழித்ததை பார்த்திருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன் கூடையின் கீழ் அடிபடாமல் இருக்க பார்த்தீனியத்தை வைத்து அதற்கு மேல் தக்காளிபழங்களை வைத்து சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். இன்று கையுறையின்றி இவற்றை அகற்றுவது நடைமுறை பழக்கமாகிவிட்டது. மண்புழு உரமாக மாற்றலாம் என்கிறார்கள் நான் இதுவரை பார்க்கவில்லை.

எனது அனுபவத்தில் உழவு செய்யாமல் இருந்தாலும் (??? ), அதிக நிழல் தரும் மரமிருக்கும் பகுதிகளிலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தமுடிகிறது. உழவு செய்தாலும் மூடாக்கு இட்டு நமது பயிர்களை வளர்த்தால் இதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். விதைகள் மூட்டாக்கின் மேல் விழுவதால் முளைப்பதில்லை.
மூட்டாக்கு இட்ட நிலத்தில் பார்த்தீனீயம் இல்லை.
மண்ணில் விழுந்தாலும் மூட்டாக்கினுள் சூரிய ஒளி கிடைக்காமல் வளர்வதில்லை. ஒன்று இரண்டு வளர்ந்தாலும் கை களையெடுப்பின் மூலம் எளிதாக முற்றிலுமாக கட்டுப்படுத்தமுடியும்.
 மாவுப் பூச்சி தாக்கிய பார்த்தீனியம் செடி.
நான் தற்செயலாக பார்த்த காட்சி மாவுப் பூச்சி இதனையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பார்த்தீனியத்தை கட்டு ப்படுத்தி விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய தருணம் இது.

2 வது படம் உதவி :nrcws.org

No comments: