Tuesday, July 3, 2012

விதை காப்பாளர்கள் – (2)

வீணாகும் அரிசியை பசித்தவனுக்கு தராதவர்கள்,
பசித்தவன் சேமித்த அரிசியை அடுத்தவனுக்கு தாரைவார்த்த கதை.


இக்கட்டுரை http://www.tamilpaper.net/?p=499. என்ற வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின்  எழுத்துநடை தெளிந்த நீரோடை போன்று இருந்ததால் அந்த பெரிய கட்டுரையில் விதை சம்பந்தப்பட்ட நிகழ்வை மாத்திரம் முழுவதுமாக இங்கே பதிவிடுகிறேன். அவர்களின் அனுமதியுடன். 

1960களின் தொடக்கம். ஒரிஸாவின் கட்டாக் நகரில் இருக்கிறது மத்திய நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (CRRI). அதன் இயக்குநர் ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா. உலகின் சிறந்த தாவரவியலாளர்களில் ஒருவர்.
அவருக்கு வந்திருந்த கட்டளை அவரை நோகடித்தது. CRRI சேகரித்த தானிய வகைகளை மணிலாவில் நிறுவப்பட்டிருக்கும் சர்வதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு (IRRI) அளித்துவிடவேண்டும். ஜெர்ம்ப்ளாஸம் (germplasm) என உயிரியல் மொழியில் அறியப்படும் இவை ஒரு நாட்டின் பொக்கிஷம். ரிச்சார்யா தானிய வகைகளின் பரிணாம வரலாற்றை நன்கு அறிந்தவர். தானிய வகைகளின் பன்மை பேணுதலுக்கும் பண்பாட்டுக்கும் இருக்கும் தொடர்பைக் குறித்து அவர் செய்த ஆராய்ச்சி முக்கியமானது. வேத காலத்தில் இந்தியாவில் 4,00,000 அரிசி வகைகள் இருந்திருக்க வேண்டும் என்பது அவரது ஆராய்ச்சிக் கணிப்பு. இதோ இந்த 1960-களில்கூட 20,000 அரிசி வகைகள் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு தானிய வகையும் ஒரு வாழ்க்கை முறையினால் தலைமுறை தலைமுறையாக வளர்த்தெடுக்கப்படுகிறது.
பூரி ஜகந்நாதர் ஆலயம்
நமது கட்டாக் இருக்கும் ஒரிஸாவின் தெய்வம் பூரி ஜகன்னாதர். அவருக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக அறுவடை செய்த நெல்லில் நைவேத்தியம் செய்யவேண்டும் என்பது ஐதீகம். அந்த ஐதீகமே பல நெல்வகைகளைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த நெல்வகைகள் பல சூழல்களில் பஞ்சங்களிலிருந்து பல மானுடக்குழுக்களைக் காப்பாற்றியிருக்கின்றன. அப்படி எத்தனையோ தளங்களில் வேர் பதித்து வளர்ந்த தானியவகைப் பொக்கிஷம். அதன் ஆராய்ச்சி உரிமையை, ஒரு சர்வதேச நிறுவனத்துக்கு விட்டுக்கொடுப்பது, தானே முன்வந்து அடிமை சாசனம் எழுதிக்கொடுப்பதுபோல. சர்வதேச அளவில், அதிக விளைச்சல் தரும் விதைகளை உருவாக்கி வருகிறார்கள். தெரியும். அவற்றைப் பெற இவற்றைக் கொடுத்தாகவேண்டும் என்பது எழுதப்படாத, வெளிப்படையாகச் சொல்லப்படாத மிரட்டல். ஆனால் நாளைக்கு அவர்கள் தரும் விதை வகைகளில் பிரச்னைகள் ஏற்படும். அப்போது அதற்கான தீர்வுகள்கூட இதோ இந்த தானிய வகைச் சேகரிப்புகளில் இருக்கக்கூடும். மேலும் அவர்கள் கொண்டுவரும் விதைகளில் வைரஸ் தாக்குதல்கள் உண்டு. அதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியாது. அதற்கான அரசியல் மன வைராக்கியம் நமக்குக் கிடையாது.

இதை ரிச்சார்யாவே நேரில் பார்த்திருக்கிறார். அரசு வகுத்திருக்கும் நோய்க் கட்டுப்பாட்டு விதிகளை மீறி, IRRI-ஐச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி, தமது அரிசி வகைகளை இந்தியாவுக்குள் நுழைக்க முயன்றபோது, அதை ரிச்சார்யா கையும் களவுமாகப் பிடித்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் நெருக்கடிகள் ஆரம்பமாகின்றன. போதுமான நோய்க் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு இல்லாமல் அந்த நெல்வகையை இந்தியாவில் நுழையவிடச் சொல்லி அமைச்சர் வற்புறுத்தியும் ரிச்சார்யா மறுத்துவிட்டார். கண்களை விற்றுச் சித்திரம் வாங்க முடியாது.

அறிவியல் அமைப்புகளிடையே சர்வதேச அளவில் அறிவுப் பரிமாற்றம் தேவைதான். ஆனால் அது பரிமாற்றமாக இருக்கவேண்டும். கப்பமாக அல்ல. சீனியாரிட்டி என்று பார்த்தால்கூட 1959-ல் IRRI ஏற்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் CRRI உருவாக்கப்பட்டது. IRRI-ன் புரவலர்கள் அட்லாண்டிஸுக்கு அப்பால் இருந்தனர். ராக்கஃபெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகிய அதிகார பலம் வாய்ந்த அமைப்புகளே IRRI-க்கு நிதியுதவி அளித்த அமைப்புகள். முடியாது என்ற சொல், திரைமறைவுச் சக்திகளுக்கு உவப்பானது அல்ல. அரசாங்கமே மண்டியிடும்போது ஒரு தனி ஆளாவது, எதிர்ப்பு தெரிவிப்பதாவது! மேலும் IRRI கூறியது, “நாங்கள் உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தைச் சும்மாவா கேட்கிறோம். உங்கள் உபயோகமில்லாத ஜெர்ம்ப்ளாஸத்துக்கு பதிலாக எங்கள் ஆராய்ச்சிச் சாலைகளில் உருவாக்கிய அதிக விளைச்சல் ஜெர்ம்ப்ளாஸத்தைக் கொடுத்துத்தானே வாங்குகிறோம்.ரிச்சார்யாவிடம் அதே கேள்வியை இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக ஆசாமிகள் கேட்டார்கள். உணவு மந்திரி கேட்டார். ரிச்சார்யா மீண்டும் மீண்டும் கூறினார்: நமது அரிசி வகைகள் வைரஸ் தாக்காதவை. அவர்களின் அரிசி வகைகளோ வைரஸ் தாக்குதலுக்கு இரையாகும் தன்மை கொண்டவை. நீங்கள் அந்த ஜெர்ம்ப்ளாஸத்தை வாங்கி அதனை இங்கே விருத்தி செய்து பரப்பினால், கூடவே வைரஸ் தாக்குதலைச் சமாளிப்பதற்கான வேதிப்பொருட்களையும் வாங்கவேண்டியிருக்கும். ஒருபெரிய வலையில் விழுகிறீர்கள்.அமைச்சரிடம் அவர் கூறினார்: வைரஸ் தாக்கும் நெற்பயிர் ஜெர்ம்ப்ளாஸத்தை இந்தியாவில் நுழைத்தவன் என எனது பெயர் வரலாற்றில் பதிவு செய்யப்பட நான் அனுமதிக்க மாட்டேன். நான் இயக்குனராக இருக்கும்வரை இந்த ஜெர்ம்ப்ளாஸம் கப்பத்தைக் கட்டமாட்டேன்.அவர்களும் இதைத்தானே எதிர்பார்த்தார்கள்.
ரிச்சார்யா அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். கட்டாக் CRRI யின் தானியவகைகள் சேகரிப்பு, ஜெர்ம்ப்ளாஸம், IRRI-யிடம் கையளிக்கப்பட்டது. ரிச்சார்யாவைத் தூக்கி வீசினார்கள். ரிச்சார்யா அவமானப்படுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் கூறியது: நாங்கள் ரிச்சார்யாவை ஒரு அறிவியலாளராகவே மதிக்கவில்லை.

மத்திய பிரதேச மாநிலத்தில், மாநில அரசின் ஒரு சிறிய நிதி ஒதுக்கீட்டில் மத்திய பிரதேச நெற்பயிர் ஆராய்ச்சி மையம் (MPRRI) உருவானது. சத்தீஸ்கர் வனவாசி சமூகங்களிடையே பணி செய்த ரிச்சார்யா அவர்களின் பாரம்பரிய நெற்பயிர் ரகங்களைச் சேகரித்தார். அற்பமான நிதி ஒதுக்கீடு. அரசு இயந்திரத்தால் தீயெனப் பரப்பப்பட்டு அதிக விளைச்சல் தரும் சீமை நெல்விதைகள்; அவ்விதைகளின் உள்ளூர்ப் பதிப்புக்கள். இவை அனைத்துக்குமிடையே ரிச்சார்யா 20,000 வட்டார அரிசி வகைகளைச் சேகரித்துப் பாதுகாத்தார். சில அரிசிவகைகள் இந்தியாவில் நுழைக்கப்பட்ட அரிசிவகைகளைக் காட்டிலும் அதிக விளைச்சல் தருவன.
விடாது துரத்தும் மேற்கு, இதையும் மோப்பம் பிடித்துவிட்டது. இந்தத் தானிய வகைகளை உடனே பகிர்ந்துகொள்ளக் கோரியது. வழக்கமான ரிச்சார்யாவின்முடியாதுபதிலுக்குப் பதிலடியாக மூடல் உத்தரவு வந்தது. இப்போது ஒரு அதிகப்படி அசுர எதிரியாக உலக வங்கி. அது கொடுத்த அழுத்தத்துக்குப் பணிந்து MPRRI இழுத்து மூடப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் சடங்கு சம்பிரதாயமும் இன்றி ரிச்சார்யா வெளியேற்றப்பட்டார். அவரது ஆராய்ச்சிக்குழு கலைக்கப்பட்டு ஒவ்வொருவரும் நாட்டின் ஒவ்வொரு மூலைக்கு அனுப்பப்பட்டனர். ரிச்சார்யா பாடுபட்டுச் சேகரித்த தானியவகைகள் அனைத்தும் இந்திரா காந்தி கிரிஷி விக்யான் வித்யாலயாவிடம் சென்றது.

அதன் பின்னர் 2003-ல் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடனைச் சார்ந்த விவசாயப் பன்னாட்டு நிறுவனம் ஸின்ஜெண்டா (Syngenta) இந்த விவசாயப் பல்கலைக்கழகத்துடன் ஓர் ஒப்பந்தம் போட்டது: உங்கள் ஜெர்ம்ப்ளாஸத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்கிறோம்.சத்தமில்லாமல் ஒப்பந்தங்கள் பதிவாகின. 22,972 அரிசி வகைகள் முக்கல் முனகல் இல்லாமல் அப்படியே மேற்குக்குப் பயணிக்கும். ரிச்சார்யாவின் வாழ்க்கைப் போராட்டமே அர்த்தமிழந்து குப்பைக் கூடைக்குப் போனது. ஆனால் எப்படியோ செய்திகள் கசிந்தன. எதிர்க்கட்சி வெகுண்டெழுந்தது. பத்திரிகைகள் இந்த அப்பட்டமான தானியவகைக் கொள்ளையை விமர்சித்தன. பல்கலைக்கழகம் பணிந்தது. தங்களுக்குக் கெட்டபெயர் வருவதைக் கண்ட அந்தப் பன்னாட்டு நிறுவனம் இந்த ஆராய்ச்சியே எங்களுக்கு வேண்டாம். உங்களுக்கு உதவலாம் என்று வந்தால் எங்களை சந்தேகிப்பதா?” எனத் தோள் குலுக்கி வெளியேறியது.

பாரம்பரிய விதைகளை நம்மிடமிருந்து அகற்றி நம் விதை சுதந்திரத்தை அழிக்க  பன்னாட்டு நிறுவனங்கள் சட்டங்கள் மூலம் போராடிவரும் வேளையில் அதனை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

4 comments:

Anonymous said...

Thank you very much for sharing this, Vincent Sir. Would be great, if you can share any articles on how we can contribute in preserving those traditional seeds.

Thanks,
Ram

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி. இன்னும் இரு கட்டுரைகள் எழுத இருக்கிறேன். அதில் இரு விதை காப்பாளர்கள் எப்படி விதைகளை கண்டுபிடித்து காப்பாற்றி விவசாயிகளிடம் கொண்டு சென்றுள்ளனர் என்பது பற்றியது. ஒரளவிற்கு நமக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் விசாரிப்பிற்கு மிக்க நன்றி.

sakthi said...

பாரம்பரிய விதைகளை நம்மிடமிருந்து அகற்றி நம் விதை சுதந்திரத்தை அழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் சட்டங்கள் மூலம் போராடிவரும் வேளையில் அதனை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

உண்மை சார் ,நம் பல காப்பிடுகள் நம்மை விட்டு போய்விட்டன .

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கு நன்றி.நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். 'டோடோ' பறவை போன்று இருக்கிறோம்.