Tuesday, June 1, 2010

BP நிறுவனத்தின் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய்க் கசிவை அடைக்கும் முயற்சி தோல்வி


அமெரிக்காவில் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுவருகின்ற எண்ணெய்க் கசிவை அடைப்பதற்காக BP நிறுவனத்தார் தற்போது செய்துள்ள முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது."ஆழ்கடல் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளிவருவதைத் தடுப்பதற்காக மேலிருந்து கடினமான சேற்றையும் சிமெண்டு-ஜல்லிக் கலவையையும் செலுத்தி நாங்கள் மூன்று நாட்களாக முயற்சி செய்தும் எண்ணெய் வெளிவருவதைத் தடுக்க முடியவில்லை", என BP நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி டூக் சட்டில்ஸ் அறிவித்துள்ளார். பல முறை முயன்ற பின்னும் இந்த முயற்சி பல தரவில்லை என்பதால் மாற்று வழியில் முயலலாம் என அந்நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.

அடுத்த கட்ட முயற்சி
பூமிக்கு அடியிலிருந்து எண்ணெய் மேலே வருவதற்கான அந்த குழாயை ஒரு இடத்தில் வெட்டி, மேலே வருகின்ற எண்ணெயை கடலில் கலக்க விடாமல் அப்படியே உறிஞ்சி கப்பலில் சேமித்து விடுவது என்பது அவர்களுடைய அடுத்த உத்தியாக இருக்கும் எனத் தெரிகிறது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்தாலும் கூட, கடலில் எண்ணெய் கலப்பதை மொத்தமாகத் தடுத்து விட முடியாத் என்பதை பிபி நிறுவனத்தார் ஒப்புக்கொள்கின்றனர்.


அரசியல் தாக்கங்கள்
கசிந்த எண்ணெய் அமெரிக்கக் கரை வரை பரவியுள்ளது என்றால், இதன் அரசியல் தாக்கங்களோ அதனையும் தாண்டி வாஷிங்டன் வரை பரவியுள்ளது. எண்ணெய்க் கசிவைத் தடுக்க முடியாது போயுள்ள இந்த சூழ்நிலை குறித்து தான் கவலையும் கோபமும் அடைந்திருப்பதை அதிபர் ஒபாமா ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் அவரது தலைமைத்துவத்தின் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.


வானிலை சவால்கள்
களத்தில் ஏற்கனவே நிலவுகின்ற சிரமான சூழலை வானிலை மாற்றங்கள் மேலும் கடினமாக்கி விடலாம் என கடலோரக் காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ரியர் அட்மிரல் மேரி லாண்ட்ரி கூறுகிறார். "வானிலை என்பது எங்களுடைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு சவாலாக அமைந்துள்ளது. மெக்ஸிகோ வளைகுடாவில் சூறாவளிகள் ஏற்படுகின்ற ஒரு கால கட்டத்துக்குள் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே லூசியானா மாகாண கடலோரப் பகுதிகளில் தங்களுடைய நிலமும் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவது கண்டு மக்களிடம் ஆத்திரமும் ஆற்றாமையும் அதிகரித்து வருகிறது. எண்ணெய்க் கசிவை தடுத்து நிறுத்துவதற்கான நிஜமான தீர்வு என்பது அந்த இடத்துக்கு அருகிலேயே இன்னொரு கிணற்றைத் தோண்டுவது என்பதுதான் என நிபுணர்கள் பலர் நம்புகின்றனர். ஆனால் அப்படி இன்னொரு கிணற்றைத் தோண்ட ஆகஸ்ட் மாதம் வரை ஆகிவிடலாம். அதற்கு முன்னதாக மாற்று வழி கண்டறியப்படவில்லை என்றால், எண்ணெய்த் திட்டுக்களால் ஏற்படுத்தகக்கூடிய சுற்றுச் சூழல், பொருளாதார மற்றும் அரசியல் சேதங்கள் மிகவும் மோசமாக இருக்கும் என்றே தெரிகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/05/100530_oilleakstemfailure.shtml
நன்றி : பி.பி.சி. தமிழ் படங்கள் உதவி :நாசா

நியு ஆர்லியன்ஸ் நகரம் ஏற்கனவே 2005 ஆண்டு காத்ரீனா மற்றும் ரீட்டா புயல்களால் பாதிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.

4 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ . தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

வின்சென்ட். said...

திரு.சங்கர்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. கட்டுப்பாடற்ற நுகர்வு கலாச்சாரம் இருக்கும் வரை எது வேண்டுமானாலும் நடக்கும்.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நானும் தொட்ர்ந்து வாசித்து வருகிறேன் இந்த முயற்சிகளை; ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் எதுவும் செய்ய முடியவில்லை என்பது வருத்தமாகவுள்ளது. நன்றி விவரங்களுக்கு.

வின்சென்ட். said...

திருமதி.ஹுஸைனம்மா

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. அகதா ஆரம்பித்துள்ளது. இந்த வெப்ப புயல்கள் ஆரம்பித்தால் ஆகஸ்ட மாதம் வரை தொடரும்.அப்போது இந்த எண்ணையும் சேர்ந்து கொண்டால் பிரச்னை மிக மோசமாக இருக்கும். இயற்கை நம் மீது கருணை கொள்ள வேண்டும்.