Wednesday, March 17, 2010

ஜீவனிழந்து கிடக்கும் யமுனை நதி.....

மீத்தேன் வாயு மெதுவாக வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் குட்டை போலக் காட்சியளிக்கும் இடங்களில் முட்டை விடுவது போல குமிழியை உருவாக்கி பிறகு உடைந்து அதன் மூலம் மீத்தேன் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அருகில் சென்றாலே குடலைப் பிடுங்கும் அளவுக்கு நாறிப் போய்க்கிடக்கிறது. புனித நதி என்றும், இந்துக்களால் கடவுள் என்றும் அழைக்கப்படும் யமுனை நதிதான் இவ்வாறு சீரழிந்து போய்க்கிடக்கிறது. ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓடிக் கொண்டிருந்தது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்த யமுனை நதி, ஜீவனின்றிக் கிடப்பதுபோல தற்போது காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தை உலகமே அனுசரிக்கப்போகிறது. ஆனாலும் இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றான யமுனை தனது உண்மைத் தன்மையை இழந்து நிற்கிறது. புதுதில்லியின் உயிர்நாடியான யமுனை நதி பெரும் அளவுக்கு மாசுபட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் போய்ச் சேராததற்கு காரணம், நதி தெரியாத அளவிற்கு பெரிய, பெரிய சுவர்களும், மேம்பாலங்களும், சாலைகளும், ஆலைகளும் கட்டப்பட்டுள்ளதாகும். ஒரு சில இடங்களில் மட்டும்தான் ஆற்றிற்கு மக்கள் செல்லும் வாய்ப்பு உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியைச் சேர்ந்த மக்களில்கூட 60 விழுக்காட்டினர்தான் யமுனை நதி ஓடுவதைப் பார்த்திருக்கிறார்கள் என்று கணக்கு சொல்கிறது ஸ்வேச்சா என்ற தொண்டு நிறுவனம். புதுதில்லியின் மக்கள் தொகை 1 கோடியே 40 லட்சமாகும்.

யாருமே யமுனையைப் பார்க்கவில்லை என்றால் அதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்வேச்சா அமைப்பின் செயல் இயக்குநரான விமலேந்து கே. ஜா. தில்லியை வந்தடையும்வரை யமுனை மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. தலைநகருக்கு வெளியே நீர் மிகவும் தெளிவாக உள்ளது. பறவைகள் நீருக்கு மேல் பறந்து கொண்டிருப்பது கொள்ளை அழகாகக் காட்சியளிக்கிறது. வலையைப் போட்டு மீன்களை அள்ளும் மீனவர்கள் மகிழ்ச்சியோடு திரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து தான் ஆலைக்கழிவுகள் மற்றும் ஒட்டுமொத்த தில்லியின் சாக்கடைகள் யமுனையில் கலக்கத் துவங்குகின்றன. இந்தக் கலக்கலுக்கு முன்பே விவசாய நோக்கத்திற்காக அரியானா கட்டியுள்ள அணை மூலம் தங்களுக்குத் தேவையான நீரை அந்த மாநிலம் திருப்பிக் கொள்கிறது.

இமயமலையில் உருவாகி கங்கையில் சங்கமமாகும் யமுனையின் மொத்த நீளம் 1,370 கிலோ மீட்டராகும். இதில் வெறும் 22 கி.மீ. தூரம் தான் புதுதில்லியில் உள்ளது. ஆனால் யமுனை நதியை மாசுபடுத்துதலில் 80 விழுக்காடு பணிகள், இந்த 22 கி.மீ. தூரத்தில்தான் நடைபெறுகின்றன. தலைநகரின் பல பகுதிகளிலுமிருந்து 18 பெரிய சாக்கடைக் கால்வாய்கள் யமுனை நதியில் வந்து சேருகின்றன. யமுனையில் உள்ள ஆக்சிஜனில் பெரும்பகுதியை இந்தக் கழிவுகள் காலி செய்து விடுகின்றன. இந்த தண்ணீரால் விலங்குகளைக் கூட கழுவி விடக்கூடாது என்று தில்லி நிர்வாகம் சொல்லும் அளவுக்கு நதியின் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது. மேலும் ஒன்பது விழுக்காடு மாசு என்பது தில்லியைத் தாண்டியவுடன் ஆக்ராவில் நடக்கிறது. இந்த யமுனைக் கரையில்தான் உலகப் புகழ்பெற்ற தாஜ் மகால் அமைக்கப்பட்டுள்ளது. யமுனையின் தாக்கம் அதோடு நின்று விடுவதில்லை. மற்றொரு புனித நதி என்று அழைக்கப்படும் கங்கையில் கலந்து அதை மேலும் மாசுபடுத்தி விடுகிறது. தில்லியின் குடிநீர்த் தேவையை யமுனைதான் பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தேவைப்படும் நீரை தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பே எடுத்துக் கொள்கிறார்கள். தலைநகருக்குள் இருக்கும் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக வேலை செய்யவில்லை. இது மாசுபடுதலை அதிகரித்துவிடும் என்பதுதான் சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கருத்தாகும்.

தலைநகரில் வீடில்லாமல் தவிப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குளிர் தாங்காமல் வீடில்லாத ஏழை மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதால்தான் அந்த உத்தரவு இடப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த யமுனை நதிக்கரையில் தான் தங்குகிறார்கள். மாசுபடிந்து கிடக்கும் யமுனைதான் அவர்களுக்கு குளியலறை மற்றும் குடிநீர்த்தொட்டி. அவர்களைப் பொறுத்தவரை தண்ணீரே இல்லாமல் இருப்பதைவிட றிப்போயிருக்கும் தண்ணீரே பரவாயில்லை என்பது தான் நிலை. தில்லியைத் தாண்டிய பிறகு யமுனை பாய்ந்து ஓடும் அனைத்து மாநிலங்களுக்கும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நதியைச் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட பணம் எல்லாம் எங்கு சென்றது என்பதே தெரியவில்லை. நம் முன் அதிகமாக மாசுபட்டு நிற்கும் யமுனையே அதற்கு சாட்சி என்கிறார் விமலேந்து ஜா.

Source : தீக்கதீர்/கோவை/17-03-2010 புகைபடம் : வலைதளம்.

3 comments:

Anonymous said...

gangai... yamunai..... inguthaan sangamam......


paatu mattum paadinal pooduma-- kannai vilithu paarpathu yeapoothu minjuvathu yeannavo ????????????


moushavathi
kovai

மாதேவி said...

மிகவும் நல்ல பதிவு.

யமுனை நதியின் அவலம் :((
தீர்க்க முயல்வார்களா.

வின்சென்ட். said...

திரு.மௌஷவதி
திருமதி.மாதேவி

உங்கள் இருவரின் வருகைக்கும் மிக்க நன்றி. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் யமுனை நதியை சுத்தம் செய்ய திட்டம் ஆரம்பித்துள்ளார். வாழ்க அவரது திட்டம்.