Monday, March 16, 2009

பசுமை புரட்சியும், மரபணு மாற்றமும்

1960 களில் உணவு பற்றாக் குறையை காரணம் காட்டி “பசுமை புரட்சி ” என்ற பெயரில் நுழைந்த இந்த விவசாய புரட்சி கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரம்??? பாரம்பரிய விதைகளை இழந்து, வேதி உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்து, அதிலிருந்து மீளமுடியாமல் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய தற்கொலைகளை நாம் பார்த்து விட்டோம். வலுப்பெற்ற பூச்சி இனங்கள் இன்று விவசாய்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. ஆனால் உணவு பற்றாக் குறையை “பசுமை புரட்சி ” போக்கியது உண்மை. அதற்கு என்ன விலை கொடுத்திருக்கிறோம்? என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று. இன்று உலகம் முழுவதும் இயற்கை விவசாயம், இயற்கை பூச்சி கொல்லி, பாரம்பரிய விதைகளின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தவுடன் அடுத்த கட்ட விஞ்ஞான வித்தையை “மரபணு மாற்றம்” என்ற பெயரில் இரண்டாம் “பசுமை புரட்சி ” என கூறி மக்களின் மனதில் பதியவைக்க ஆரம்பித்துள்ளனர். உண்மையில் இது பன்னாட்டு விதை கம்பெனிகள் எளிதாக சுரண்ட ஒரு வழி. அவர்கள் கூறிக்கொள்வது போல் விளைச்சல் அதிகம், பூச்சி தாக்காது என்றால் ஏன் ஆந்திராவிலும், தர்மபுரி மாவட்டதிலும் நஷ்ட ஈடு தரவேண்டும்? எதிர்வினைகள் நிறைய உண்டு என்பதனை ஆதார பூர்வமாக நிருபித்தும் காட்டியுள்ளனர். இன்னும் 50 ஆண்டுகள் கழித்து “பசுமை புரட்சி ” போன்று இதுவும் தவறுதான் என்று கூறி வேறு ஒரு தொழில் நுட்பத்தை தருவார்கள். அதுவரை நாம் பொறுக்க வேண்டுமா??? அதற்கு நாம் என்ன விலை தரபோகிறோம்??? இயற்கை விளைச்சல்களுக்கு சான்றுகள் கேட்கும் ஒருதரப்பினர் மரபணு மாற்றத்தை மட்டும் கண்டு கொள்ளாமலிருப்பது சிந்தனைக்குரியது.
கற்பனையாய் சில படங்கள்
சில மரபணு மாற்ற முரண்பாடுகளை “மக்கள் சட்டம்” பதிவிலிருந்து.........
மரபணு மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம் வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த 1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக வர்த்தக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில் சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும். இந்தியாவிலோ, நில உரிமையாளருக்கும், விவசாயிக்கும் கூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள் சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல் மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.
தலை சிறந்த ஜப்பானிய இயற்கை ஞானி

புகைபடம்: வலைதளம்.

No comments: