டாக்டர் ஜே.சி.குமரப்பா காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துக்களுக்கு உருவம் கொடுத்து விளக்கிக் கூறிய பொருளாதார மேதை ஆவார்.
|
இளம் வயதில் Dr. J.C. குமரப்பா |
சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளைக் காணும்போது மேற்கத்திய நாகரிகத்தின் சின்னமாகக் காட்சியளித்த குமரப்பா பிற்காலத்தில் காந்தியடிகளின் பொருளாதாரக் கருத்துக்களைப் பகுத்தறிவு பூர்வமாக அலசி ஆராய்ந்து அவற்றுக்கு உருக்கொடுத்தார்.
சத்தியம்,
இயற்கையின் அனைத்துப் படைப்புகளையும் நேசிக்கும் அன்பு இந்த இரண்டு ஆன்மிக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே சமுதாய வளர்ச்சிக்கான எல்லா அம்சங்களையும் காண்பதாக இருந்தது காந்தியடிகளின் பார்வை. இதை உணர்ந்து கொண்டார் குமரப்பா. ஆகவே தான் இறுதி நாள்கள் வரை காந்திய பொருளாதாரக் கருத்துகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறியும் எழுதியும் வந்ததோடு அக் கருத்துகளை நடைமுறைப்படுத்தும் பணியிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
கிராம அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான பயிற்சி நிலையமாகவும், பல்வேறு வகைப்பட்ட கிராமக் கைத்தொழில் பொருள்களின் உற்பத்திக் கேந்திரமாகவும் ஆதாரக் கல்வியை நடைமுறைப்படுத்தியும் வந்த மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தம் இறுதி நாள்களைக் கழித்தார். நாம் வாழும் இந்த பூமிப் பந்து வெப்பமடைந்து தட்பவெப்ப நிலைகளில் மாறுதல்கள் ஏற்பட்டு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலை, எந்த அளவுக்கு அவர் கூறிய நிலையான பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்த முடியும் என்று சிந்தித்து நாம் செயல்பட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்றவற்றைச் சுரண்டி அழித்து வாழும் அட்டை போன்ற உயிரினங்களைப் போல் வாழும் வாழ்க்கை, திருடி கொள்ளையடித்து வாழும் வாழ்க்கை, தொழில்முனைவோராக இருந்து கடினமாக உழைத்து வாழும் வாழ்க்கை, குழுவுடன் இணைந்து கூட்டுறவு முறையில் வாழும் வாழ்க்கை, பிறர் நலனுக்காக பெற்ற தாயைப் போல் சேவை செய்து வாழும் வாழ்க்கை என சமுதாய அமைப்பில் காணப்படும் ஐந்து வகையான பொருளாதார அமைப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார் குமரப்பா.
ஒரு வேலையும் செய்யாமல் மற்றவர்களைச் சுரண்டி இயற்கையையும் அழித்து வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டம், கொலை,கொள்ளை இவற்றில் ஈடுபட்டு சமுதாயத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் கூட்டம் இந்த இரண்டும் பெருகக் காரணம் லாப நோக்கம் மட்டுமே. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிலர் மட்டுமே கோடி கோடியாகச் சம்பாதிக்கக் காரணம், இன்றைய பொருளாதார அமைப்பேயாகும் என்பது அவரது தேர்ந்த முடிவு.
இன்றைய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கையால் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் மக்கள் தொகையில் கணிசமான பிரிவினர் வறுமையிலும், நோய் நொடிகளிலும் சிக்குண்டு அல்லல்படுகிறார்கள்.
இந்த நிலையை மாற்றியமைக்க குமரப்பா கூறும் தாய்மைப் பொருளாதார அமைப்பால் முடியும். இன்றைய சூழலில் இது நடக்கக் கூடிய ஒன்றா? என்று நாம் கேட்கலாம். ஆனால் இன்று அந்த லட்சியப் பொருளாதார இலக்கை நோக்கி விரைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
தாய்மைப் பொருளாதாரத்தை சிறுசிறு கிராமங்களின் கூட்டமைப்பின் மூலமாகவும், நகராட்சி}மாநகராட்சிகளின் மூலமாகவும் கட்டமைக்க வேண்டும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் எல்லோரும் நியாயமான வழிகளில் உழைத்து தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். கிராமங்களின் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும்,
நகராட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளும் கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு நிபுணர்கள் துணையுடன் திட்டமிட்டு உள்ளூராட்சி அமைப்புகள் மூலமாகச் செயல்படுத்துவார்களேயானால் தாய்மைப் பொருளாதார அமைப்பு நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்றாகவே இருக்கும்.
மத்திய, மாநில அரசுகள் உரிய வகையில் உதவிகள் செய்து உள்ளூராட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிடாதிருக்க வேண்டும். அரசியல் அதிகாரம் மாநிலங்களிலும், மத்தியிலும் சிலர் கையில் சிக்குண்டுவிடக்கூடாது.
விவசாயத்துடன் இணைந்து புதிய தொழில் நுணுக்கத்தைப் புகுத்தி சிறுதொழில்கள் கிராமப்புறங்களில் வளரவும், சிறிய நீர்ப்பாசன வசதிகள் பெருகவும், அரசுகள் உதவ வேண்டும்.பள்ளிக் கல்வியும்,
உயர்கல்வியும் தொழில் அறிவோடும், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றோடும் இணைந்தும் அனைத்துப் பிரிவு சிறுவர், சிறுமியர், இளம் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்குக் கிடைக்க வேண்டும். அந்தந்த துறையைச் சார்ந்த நிபுணர்களும் மத்திய, மாநில அரசுகளும் இவற்றுக்கு உதவ வேண்டும்.
எல்லோருக்கும் உணவும், உடையும், இருப்பிடமும், கல்வி சுகாதார, மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும். வன்முறைக் கலாசாரத்தையும்,
நச்சுப் பொருள்களின் உற்பத்தியையும்,
நுகர்வையும் விலக்கி வாழும் வாழ்க்கைக்கு வகை செய்யும் பொருளாதார அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இம் முயற்சியில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே இன்றைய சவால்களான வறுமை, வேலையின்மை, வன்முறை, பயங்கரவாதம், இயற்கையின் பேரழிவு, கலாசார சீர்குலைவு, கொள்கையற்ற அரசியல், குறுகிய சாதி, மத, இன வேறுபாடுகளால் ஏற்படும் மோதல்கள் ஆகியவற்றைச் சமாளிக்க முடியும்.
தாய்மைப் பொருளாதார அமைப்பில் ராணுவ தளவாடங்களின் உற்பத்திக்கும் பெருக்கத்திற்கும் இடம் இருக்க முடியாது. செல்வந்தர்களும்,
செல்வ வளம் மிக்க நாடுகளும் தங்களைத் தர்மகர்த்தாக்களாகக் கருதி ஏழை எளியவர்களும், பின்தங்கிய நாடுகளும் உயர உதவ வேண்டும். இல்லையெனில் வன்முறையும், கொலையும் கொள்ளையும் பெருகுவதுடன் இந்த பூமி விரைந்து வெப்பமடைந்து, தட்பவெப்ப மாறுதல்களும் நிகழ்ந்து மனித சமுதாயம் மிக பயங்கரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.
வெறுப்பும் சோர்வும் கொண்டு அவற்றிலிருந்து விடுபடாமல் இருக்கும் உலகுக்கு இந்தியா வழிகாட்ட வேண்டும் என்றார் காந்தியடிகள் அன்று.
இன்றைய காலகட்டத்தில் இப் பணியைச் செய்யாவிட்டால் எதிர்காலச் சந்ததியினர் நம்மை நிந்திப்பார்கள்.
நாம் நம் கடமையிலிருந்து தவறியவர்களாவோம்.
திரு.ந.மார்க்கண்டன்.
காந்திகிராமம்
கிராமியப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர்)
தினமணி 31-01-2010 அன்று 50 வது நினைவு நாள் தொடர்பாக வெளிவந்த சிறப்பு வெளியீட்டில் வந்த கட்டுரை