Thursday, February 3, 2011

அற்பமாக எண்ணப்படும் அற்புத தானியங்கள். ---- (2)


சத்துமிக்க தானியங்கள்.
(அட்டவணையை பெரிதாக்கிப் பார்க்கலாம்.)
  நோய்களுக்கு மூலகாரணம் மலச்சிக்கல் என்பார்கள். பொதுவாக அரிசி, கோதுமையை காட்டிலும் அதிக நார்சத்து (5 முதல் 50 மடங்கு) உள்ள இந்த தானியங்களால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. கால்சிய சத்தைப் பொறுத்த வரையில் சுமார் 30 மடங்கு அரிசியை காட்டிலும் ராகியில் உண்டு எனவே எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியான உடலமைப்பையும், ஆரோக்கியத்தையும் தரும். இந்தியக் குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. அதற்கு நிவாரணம் இந்த சத்துமிக்க சிறுதானியங்கள் தான். சத்துகள் பற்றிய அட்டவணையை பாருங்கள்.

நீர்த்தேவை.
மிக குறைந்த நீர்தேவை. (மழையளவு சுமார் 300 மி.மீ முதல் 600 மி.மீ.) பொதுவாக இவைகள் மானாவாரி பயிர்கள் எனவே பாசனவசதிகள் (கிணறு, குளங்கள்) போன்றவை அவசியமில்லை. எனவே மின்சாரம் பயன்படுத்தி பாசனவசதிகள் ஏற்படுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் மாநில அரசிற்கு மின்சார நெருக்கடி தவிர்க்கப்படுகிறது. இப்பயிர்களை அண்டை மாநிலங்களிலும் பிரபலப்படுத்தினால் நீர் பங்கீடு பிரச்னைகள் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் தவிர்க்கப்படலாம்.

மண் மற்றும் வளரியல்பு.
சத்தான மண் தேவையில்லை. மலைப்பாங்கான, மணற்பாங்கான மற்றும் உவர் நிலங்களிலும் பயிரிடலாம். இரசாயன உரங்கள் அவசியமில்லை. பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை எனவே பூச்சி கொல்லிகளுக்கு வேலையில்லை. அதிகமாகி வரும் வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது.
1966-71 -க்கு பின் குறைந்து வரும் சிறுதானிய பரப்பளவு
1981-86 இல் அதிகமாகி பின்பு குறைந்து வரும் சிறுதானிய உற்பத்தி
 பல்வேறு உபயோகம்.
உணவு தானியங்களில் தன்னிறைவு, விதைப்பிற்கான தானியங்களுக்கு கம்பெனிகளை சார்ந்திருக்க வேண்டியதில்லை. சத்துமிக்க உணவு என்பதைவிட உணவே மருந்து, கால்நடைதீவனம், பலதானிய விதைப்பால் மண்வளம் பாதுகாக்கப்படுதல், இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளை தவிர்ப்பதால் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, பல தானிய விதைப்பு, தோழமை பயிர்களாக பருப்பு வகைகள் பயிர்  செய்யப்படுவதால் சுற்றுச்சுழல் மேம்பட்டு நிலம் வளமாக்கப்படுகிறது.

ஆனால் நிறைய தானியங்கள் இங்கு கிடைப்பதில்லை. இவை அழகுப் பறவைகளுக்கு உணவாக குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது என்று கூறுகிறார்கள். அதே சமயம் ஓட்ஸ் போன்ற தானியங்கள் நமது உணவிற்காக இறக்குமதி செய்து 500 கிராம் ரூ100/= க்கு  மேல் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகிறது. பாரம்பரியமாக இயற்கை தந்த இந்த சிறுதானியங்களை விடுத்து  ஓட்ஸ் இறக்குமதிகள் தேவைதானா ? நமது நீராதாரத்தை கணக்கிட்டு சிறப்பாக விவசாயம் செய்தவர்கள் பல்வேறு காரணங்களால் அமைதி காப்பது நமது நாட்டிற்கு நல்லதா ? உயரும் மக்கள் தொகைக்கு மரபணுமாற்ற உணவு உற்பத்திதான் தீர்வா ? குறைந்து வரும் மழையளவு, அதிகரித்து வரும் வெப்பத்திற்கு அரிசி, கோதுமை சாகுபடி தீர்வாகுமா? கொள்ளையடிக்கும் விதை கம்பெனிகள் வசம் நம் விவசாயத்தை அடகு வைக்க வேண்டுமா? பயிர் செய்யும் பரப்பளவு அதிகரித்தும் சிறுதானியம் பயிர் செய்யும் பரப்பளவு குறைந்து வருவது நல்லதா?. தீர்மானம் செய்யவேண்டியது குழந்தைகள் அல்ல நாம்தான். ஒரு வேளையாவது சிறுதானியங்களை உணவாக  கொள்வோம். இதனால் சிறுதானியங்களைப் பயிர் செய்யும் சிறு,குறு விவசாயிகளுக்கு உற்சாகம் தந்து  உற்பத்தி செய்யத் தூண்டும். அது நமது உடல் நலத்தை பாதுகாப்பதோடு நமது நாட்டு நலத்தையும் பாதுகாக்கும். 
மேலும் அறிந்து கொள்ள :-


7 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட்டவணைக்கு மிக்க நன்றி ..

VELU.G said...

அற்புதமான பதிவு

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி
திரு.வேலு.
மீனக நண்பர்கள்

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

சுந்தரா said...

நம்ம ஊர்த் தானியங்களின் சத்துக்கள் பற்றி அறியத்தந்ததற்கு நன்றி!

எப்பவுமே நம்ம மக்களுக்கு அயல்நாட்டுப்பொருட்களின்மேல் மோகம் அதிகம்தான்.

வின்சென்ட். said...

திருமதி.சுந்தரா

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

Indian said...

அவ்வப்போது கம்பங்களி, ராகிக்களி, சோளக்களி, வரகரிசிச் சோறு என அம்மாவை சமைக்கச் சொல்லி உண்பதுண்டு. உற்சாகமளிக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

வின்சென்ட். said...

திரு. இந்தியன்

உங்கள் வருகைக்கும், சிறுதானியங்களுக்கு ஆதரவு தருவதற்கும் மிக்க நன்றி.