Tuesday, November 30, 2010

பார்த்தீனியம் PARTHENIUM HYSTEROPHORUS

பார்த்தீனியம்.
1950களில் P.L.480 ( Public Law 480 food aid programme) கோதுமை இறக்குமதியில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். மகாராஷ்ட்ர மாநிலத்தில் ஆரம்பித்த இதன் வளர்ச்சி ஒருசில மாநிலங்களைத் தவிர எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. பொதுவாக குடியிருப்பு பகுதிகளிலும் விளைநிலங்களிலும் இதன் தாக்கம் அதிகம். இதனால் ஆஸ்துமா, தோல் நோய் நமக்கு வர வாய்ப்பு உண்டு. மிக அதிக அளவில் விதை உற்பத்தி செய்வதால் வெகு வேகமாக பரவி செழித்து வளர்கிறது. இந்தியாவில் 50 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் பரவியுள்ளதாக கணக்கிட்டுள்ளனர்.
ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா 
இயற்கை முறையில் பல்வேறு முயற்சிகள் நடந்தாலும் ஸைகோகிரம்மா பைக்காலேரட்டா ( Zygogramma bicolorata ) என்ற மெக்ஸிகோ நாட்டு வண்டு சிறப்பாக இதனை அழிப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் கையுறை அணிந்து இவற்றை அழித்ததை பார்த்திருந்த எனக்கு சில வருடங்களுக்கு முன் கூடையின் கீழ் அடிபடாமல் இருக்க பார்த்தீனியத்தை வைத்து அதற்கு மேல் தக்காளிபழங்களை வைத்து சந்தைக்கு கொண்டு வரும் விவசாயிகளையும் பார்த்திருக்கிறேன். இன்று கையுறையின்றி இவற்றை அகற்றுவது நடைமுறை பழக்கமாகிவிட்டது. மண்புழு உரமாக மாற்றலாம் என்கிறார்கள் நான் இதுவரை பார்க்கவில்லை.

எனது அனுபவத்தில் உழவு செய்யாமல் இருந்தாலும் (??? ), அதிக நிழல் தரும் மரமிருக்கும் பகுதிகளிலும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தமுடிகிறது. உழவு செய்தாலும் மூடாக்கு இட்டு நமது பயிர்களை வளர்த்தால் இதன் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும். விதைகள் மூட்டாக்கின் மேல் விழுவதால் முளைப்பதில்லை.
மூட்டாக்கு இட்ட நிலத்தில் பார்த்தீனீயம் இல்லை.
மண்ணில் விழுந்தாலும் மூட்டாக்கினுள் சூரிய ஒளி கிடைக்காமல் வளர்வதில்லை. ஒன்று இரண்டு வளர்ந்தாலும் கை களையெடுப்பின் மூலம் எளிதாக முற்றிலுமாக கட்டுப்படுத்தமுடியும்.
 மாவுப் பூச்சி தாக்கிய பார்த்தீனியம் செடி.
நான் தற்செயலாக பார்த்த காட்சி மாவுப் பூச்சி இதனையும் விட்டு வைக்கவில்லை என்பதுதான். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து பார்த்தீனியத்தை கட்டு ப்படுத்தி விவசாயத்தை காப்பாற்ற வேண்டிய தருணம் இது.

2 வது படம் உதவி :nrcws.org

Saturday, November 27, 2010

வீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

Thursday, November 25, 2010

நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சில தாவரங்கள் காரணங்களுக்காகவும், சில தாவரங்கள் இறக்குமதி மூலமும் நம் நாட்டில் பரவி இன்று அழிக்கமுடியாத அளவில் நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிப்பதோடு ஒவ்வாமையையும், நோய்களையும் உண்டாக்கி மனிதர்களையும், மிருகங்களையும், தாவரங்களையும் கூட பாதிக்கிறது. நாமும் பார்த்து பழகிவிட்டதால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நூற்றுக்கு மேல் இத்தாவரங்கள் இருந்தாலும் 5 முக்கிய தாவரங்கள் மிக பெரிய அளவில் நாடு முழுவதும் பரவி வரப் போகின்ற தலைமுறையின் வாழ்வாதாரங்களையும், இயற்கைச் சுழலையும் வெகுவாக பாதிக்கப் போகின்றது.
சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்.

ஆகாயத் தாமரை.

பார்த்தீனியம்.

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட்.

உண்ணிச் செடி.

பெருகிவரும் ஜனத் தொகை, சுருங்கி வரும் விளைநிலம், பயிர்களைத் தாக்கும் பூச்சியினங்கள், கேள்வி குறியாகும் பருவமழை, புவிவெப்பம், சுற்றுச்சுழலைப் பாதிக்கும் நுகர்வுக் கலாச்சாரம் என காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். ஆனால் இந்த தாவரங்கள் பல லட்சம் ஏக்கர் நிலங்ககளிலும், நீர்நிலைகளிலும் பரவி நமது விவசாயத்தையும், கால்நடைகளையும் கேள்விக்குறியாக்கி வருவது உண்மை. மரபணுமாற்றம் செய்தால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையலாம் என்று கூறலாம் ஆனால் அவை வளர்வதிற்கும் நிலமும், நீரும் தேவைதானே. இத்தாவரங்கள் போர்க்கால அடிப்படையில் அதிக கவனம் செலுத்தி கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் இல்லையேல் இவற்றால் ஏற்படும் விளைச்சல் குறைதல், மேய்ச்சல்நிலம் குறைதல், காடுகளுக்கு பாதிப்பு, சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை மீட்க செய்யும் தொகை, என கணக்கிட்டால் அவை பல ஆயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டும். இத்தருணத்தில் தேவை இவைகளைப் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்வது நமது கடமை. குழந்தைகளுடன், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விவாதியுங்கள். அழிப்பதில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் திரு.கேவின் கார்டரைப்போல் இருக்கப் போகிறோமா?? முடிவு உங்கள் கையில்.

பார்க்க எனது பழைய பதிவு. பரிசும், பாடமும்

ஒவ்வொன்றைப் பற்றியும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

* ஆங்கிலப் பெயர்கள். தமிழில் இருந்தால்  தெரிவியுங்கள்.
Source : Dr K. Venkataraman’s Article in “ Forntline” Volume 26 - Issue 13 :: Jun. 20-Jul. 03, 2009

Monday, November 22, 2010

கீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு.

நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாய்மார்களுக்கும் குழத்தைகளுக்கும் தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு.

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது

குச்சிகள், இலைமக்கு மற்றும் மண்புழு

தண்ணீர் விட வேர் அருகில் குழாய்

ஆறுமாத செடி
இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாக குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.

Wednesday, November 10, 2010

சில ஆப்பிரிக்க நாடுகளில் (Sub-Saharan Africa ) மழைநீரை மட்டுமே நம்பி நடக்கும் இயற்கை விவசாயம். மழையளவு 200 மிமீ முதல் 300 மிமீ.

திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil.
படிப்பதிற்கு ஏதோ கதை என்று நினைக்கத் தோன்றும். செப்டம்பர் மாதம் எரிடீரியா (வடகிழக்கு ஆப்பிரிக்கா ) நாட்டின் ஹமெல்மாலோ விவசாய கல்லூரியில் பணியாற்றும் திருமதி. V. மஞ்சுளா M.Sc., M.Phil. அவர்களின் ஆப்பிரிக்க விவசாயம் பற்றிய உரையையும் பின்பு அதைப் பற்றி உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது விவசாய முறை எளிமையாகவும் உபோகமாகவும் இருப்பதால் முக்கியமானவைகளை மாத்திரம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மரங்களுடன் கூடிய விவசாயம்
இயற்கை  மற்றும் வாழ்கை முறை :

சஹாரா பாலைவனத்தின் தாக்கம் (Sub-Saharan Africa )இருப்பதால் இந்த பகுதிகள் மிகுந்த வறட்சியுடன் மழையளவு மிக குறைவாக உள்ளது. ஆனால் விவசாயமும் நடைபெறுகிறது. பொதுவாக ஆண்கள் கட்டாய இராணுவ சேவைகளுக்கு செல்வதால் 95% பெண்களாலும் குழந்தைகளாலும் விவசாயம் பராமரிக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்கள் இருப்பதால் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி தவிர்க்கபடுகிறது. விதைகளும் பாரம்பரிய முறைபடி சேமிக்கப்பட்டு உபயோகப்படுத்தபடுகிறது. உழவு செய்யப்படுவதில்லை. மூடாக்கு வெகுவாக உபயோகத்தில் உண்டு. பணப் பயிர் இல்லை. கிடைக்கின்ற மழை நீரை பல முறைகளில் சேமித்து பல்வேறு பயன்கள் தரும் மர வளர்ப்பை மையமாக வைத்து விவசாயம் செய்கிறார்கள்.
மரங்களுக்கிடையே உணவுப் பயிர்கள்
குறிப்பிட்ட அகலத்திற்கு மரங்களை நட்டு இடையே உணவு பயிர்களை ( Alley Cropping )பயிர் செய்கிறார்கள். அதுவும் தனிப்பயிராக (Mono Crop) இல்லாமல் பல வகை (Mixed Crops) பயிர்களை சுழற்சி முறையில் செய்கிறார்கள். மரத்தின் இலைகளும், குச்சிகளும் மூடாக்கு இட பயன்படுகிறது பின்பு அதுவே உரமாகின்றது.


விதைகளைக் கூட ஜேப் ப்ளான்டர் ( Jab Planter ) என்ற எளிய கருவி மூலம் உரத்துடன் விதைக்கிறார்கள்.
இது ஏறக்குறைய 17 வது நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் புழக்கத்தில் இருந்ததின் நவீன வடிவம். எண்ணிப் பார்த்தால் 925 -950 மிமீ மழை பெறும் தமிழகத்தில் விவசாயம் போராட்டமாக மாறியுள்ளது. பலருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.
PHOTOS SOURCE : Mrs. V. Manjula M.Sc.,M.Phil

Saturday, November 6, 2010

காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

கிராம புறங்களில் மழை காலங்களில் இயற்கையாக காளான் தோன்றும் அவற்றை சேகரித்து உண்பார்கள். ஆனால் இன்று அவற்றை வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Monday, November 1, 2010

வடகிழக்கு பருவ மழையும், வெட்டிவேரும்..

வடகிழக்கு பருவ மழைதான் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகமாக நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. குறைந்த நாட்களில் அதிக மழை பொழிவை தந்து இயல்பு வாழ்கையை பாதிக்கிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம். ஆவணப்படுத்தபட்ட 1865 ஆம் ஆண்டு முதல் வடகிழக்கு பருவ மழையின் போதுதான் சேதம் ஏற்படுகிறது.

நீலகிரி சேதம் 1865 ஆண்டு முதல்

வெட்டிவேர் ஒரு நிரந்தர தீர்வினை தர இயலும் ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. இது பற்றி அங்குள்ள பிரபலமான நபர் ஒருவருடன் உரையாடிய போது வெட்டிவேர் பரவி மலையின் அழகை கெடுத்துவிடும் என்றார். தென்இந்திய வகை வெட்டிவேருக்கு முளைப்புத் திறன் இல்லை என்றாலும் அவர் வெட்டிவேரை உபயோகிக்க விரும்பவில்லை. அவர் பார்த்தீனியம், சீமைக்கருவேல் பட்டியிலில் இதனையும் வைத்திருந்தார்.



நம் நாட்டிலிருந்து அறிமுகமான வெட்டிவேர் இன்று கீழைநாடுகளில் சிறப்பாக உபயோகிப்பதை பார்க்கும் போது மனம் மகிழ்ந்தாலும் சுற்றுச்சுழலுக்கும், விவசாயத்திற்கும் அதிகம் பயன்படும் நமது வெட்டிவேரை நாமே முழுமையாக உபயோகிக்காமல் இருப்பது மன வருத்தத்தை தருகிறது. கீழைநாடு ஒன்றில் எடுக்கப்பட்ட இரு விவசாயிகள் பற்றிய மேலேயுள்ள அனிமேஷன் படம் விளக்கம் தரும்.