Tuesday, December 8, 2009

45 நாடுகள் , 56 செய்தி ஏடுகள் ஒரு பொது தலையங்கம்.

உலகில் இதுவரையில் நடந்திராத ஒரு முயற்சியாக, 45 நாடுகளில் வெளி வரும் 56 செய்தி ஏடுகளில் இன்றைய தினம் (டிசம்பர் 7) ஒரே குரலில் பொது தலையங்கம் எழுதப்படுகின்றன. இதை ஏன் செய்கிறோம் என்றால், மனிதக் குலம் ஒரு பயங்கர நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு தீர்மானகரமாக செயலில் இறங்கவில்லை என்றால், பருவநிலை மாற்றம் நமது புவிப் பந்தை முற்றிலும் சிதைத்துவிடும்; நமது பாதுகாப்பும், வளமும் நாசமாகும்.

கடந்த 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள், வெப்பம் மிகுந்த ஆண்டுகளாகவே கழிந்துள்ளன; ஆர்க்டிக் பெருங்கடலின் பனிப்பாறைகள் உருகுகின்றன; கடந்த ஆண்டு மிகக் கடுமையாக அதிகரித்த எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள், எதிர்கால நாசத்தை முன்னறிவிக்கும் அபாய எச்சரிக்கையே. மனிதர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதை விட, மிகப் பெரும் நாசத்தை கட்டுப்படுத்த நமது கையில் இருப்பது மிகக் குறுகிய காலமே என்று உணர வேண்டும் என்று அறிவியல் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. ஆனால், இந்த உலகம் இன்னும் இதில் முக்கிய கவனம் செலுத்த மறுக்கிறது.

நூற்றாண்டுகாலங்களாக மாற்றமடைந்து வரும் பருவநிலையின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிக்கிற மாநாடு அடுத்த 14 நாட்களுக்கு நடைபெறுகிறது. கோபன்ஹேகனில் நடக்கும் இந்த மாநாட்டில் கூடுகிற 192 நாடுகளின் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்: தயக்கம் கொள்ளாதீர்கள்: சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்; ஒரு வரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்ளாதீர்கள்; நவீன அரசியல் வரலாறு மனித குலத்திடம் விட்டுச் செல்கிற மிகப் பெரும் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வாய்ப்பை கைப்பற்றிக் கொள்ளுங்கள். இது பணக்கார உலகத்திற்கும், ஏழை உலகத்திற்கும் இடையிலான மோதலாக இருக்க வேண்டாம்; அல்லது கிழக்கு உலகத்திற்கும் மேற்கு உலகத் திற்கும் இடையிலான சண்டையாக இருக்க வேண்டாம். பருவநிலை மாற்றம் ஒவ்வொரு மனிதரையும் பாதிக்கிறது. எனவே அதற்கு தீர்வு காண ஒவ்வொரு வரும் உறுதி ஏற்க வேண்டும். இது தொடர்பான அறிவியல் சிக்கல் நிறைந்ததுதான், ஆனால், புள்ளி விபரங்கள் மிகத் தெளிவாகவே நமது கையில் இருக்கின்றன.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதை 2 சென்டிகிரேடு அளவிற்கு குறைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்கு அடுத்த 5 முதல் 10 ஆண்டு களில் இந்த உலகம் வெளியிடும் கரிய மிலவாயு கழிவுகளின் அளவை மிகப் பெரும் அளவில் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. கழிவுகள் வெளியேற்று வதில் ஏற்படும் சிறிதளவு உயர்வு கூட புவியின் வெப்பநிலையில், 3 முதல் 4 சென்டிகிரேடு அளவிற்கு மிகப்பெரும் அதிகரிப்பை செய்யும். இது மனிதர்கள் வாழும் கண்டங்களை நாசமாக்கும்; நமது விவசாய நிலங்களையெல்லாம் பாலை வனமாக்கும்; உலகின் தாவர வகைகளில் பாதி அளவு அழிந்து போகும்; கோடிக் கணக்கான மக்கள் வாழ்வை தேடி இடம்பெயர வேண்டிய அவலம் ஏற்படும்; பல நாடுகள் கடலுக்குள் மூழ்கிப்போகும்.

கோபன்ஹேகன் மாநாட்டில் நடக்கப் போகும் பேச்சுவார்த்தைகளின் சாராம்சம், பருவநிலை மாற்றம் என்ற மிகப்பெரும் சுமையை பணக்கார உலகமும், வளர்முக உலகமும் எப்படி தீர்ப்பது என்பதும், வாழ்வாதாரங்களை எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பதுமே ஆகும். இந்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருவதும், அவரது வெள்ளை மாளிகையிலிருந்து வரப்போகும் கருத்துக்களுமே முக்கியத்துவம் பெறும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், கோபன்ஹேகனில் கூடப்போகும் உலக அரசியல்வாதிகள் ஓர் உலக உடன்படிக் கையை, நியாயமான, சீரிய அம்சங்களுடன் கூடிய பிரகடனத்தை உருவாக்கி வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பான் நகரில் நடைபெற போகும் ஐ,நா. சபையின் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு, அவர்களது இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

சீனா போன்ற அதிக மக்கள் தொகை உள்ள நாடுகள் தங்களது கரியமில வாயு கழிவுகளை குறைப்பதற்கு இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவரை இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்று பணக்கார நாடுகள் கூறுகின்றன. ஆனால், உலகில் இதுவரை யிலும் குவிக்கப்பட்டுள்ள கரியமில வாயுக் கழிவுகளுக்கு பணக்கார உலகமே பொறுப்பு. 1850ம் ஆண்டு முதல் வாயு மண்டலத்தில் குவிக்கப்பட்டுள்ள கார் பன் டை ஆக்ஸைடு (கரியமிலவாயு) கழிவுகளில் 4 ல் 3 பங்கை பணக்கார நாடுகளே வெளியேற்றியுள்ளன. எனவே, பிரச்சனைக்குத் தீர்வு காண முன்கை எடுக்க வேண்டியது பணக்கார உலகமே. வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியேற்றும் கழிவுகளை, 1990ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவிலிருந்து மிகப் பெரும் அளவிற்கு குறைத்தாக வேண்டும். வளர்முக நாடுகள் தங்களது பங்கினை அர்த்தமுள்ளதாக ஆக்கிட வேண்டும். இந்த திசை வழியில், உலகின் மிகப் பெரும் கழிவு வெளியேற்ற நாடான அமெரிக்காவும், வளர்முக நாடுகளில் முக்கிய சக்தியான சீனாவும் அதிமுக்கியத்துவம்வாய்ந்த நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, தூய்மை தொழில் நுட்பங்கள், ஏழை நாடுகளுக்கு கிடைப்பதை பணக்கார நாடுகள் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தொழில்நுட்பங் களை பரிமாறுவது செலவு நிறைந்தது என்பது உண்மையே; ஆனால், உலகப் பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய மிகப் பெரும் நிறுவனங்களை மீட்க அளிக்கப்பட்ட மீட்பு நிதியை விட குறைவானதே.

இதுதவிர, வளர்ச்சியடைந்த நாடுகளின் மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மாற்றியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விமானங்களில் பறப்பதற்கு ஆகும் செலவைவிட, இருப்பிடங்களில் இருந்து விமான நிலையத்திற்கு டாக்சியில் செல்லும் செலவும், அதன் விளைவும் கடுமையாக இருக்கிறது என்பதை உணர வேண்டும். உணவு முறை, பொருட்களை வாங்கிக் குவித்தல், பயணம் போன்றவற்றில் அறிவுப்பூர்வமாக திட்டமிட வேண்டியுள்ளது. எரிசக்தியையும், மின்சாரத்தையும் சிக்கனப்படுத்த வேண்டியுள்ளது.

மொத்தத்தில் பருவநிலை மாற்றம் எனும் சவாலில் இந்த உலகம் வெற்றி பெற வேண்டும் என்பதே, ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே தலையங்கத்தை வெளியிட்டுள்ள 56 செய்தி ஏடுகளின் உணர்வு ஆகும். கோபன்ஹேகனில் கூடும் நாடுகளின் தலைவர்கள் மனிதக் குலத்தின் இந்த தலைமுறையின் மீது எதிர்கால வரலாறு எழுத உள்ள தீர்ப்பினை வடித்தெடுக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். அந்த கடமையை அவர்கள் உணர்ந்து செயல்படட்டும்.

தமிழாக்கம் நன்றி : தீக்கதிர்
==========================================================
ஆசியா 13 நாடுகள் 16 செய்தித் தாள்கள்
ஐரோப்பா 17 நாடுகள் 20 செய்தித் தாள்கள்
ஆப்ரிக்கா 08 நாடுகள் 11 செய்தித் தாள்கள்
வட, மத்திய அமெரிக்கா 05 நாடுகள் 06 செய்தித் தாள்கள்
தென் அமெரிக்கா 02 நாடுகள் 03 செய்தித் தாள்கள்

இந்தியாவில் “இந்து” நாளிதழ் (The Hindu ) இந்த பொது தலையங்கத்தை பிரசுரித்தது.

2 comments:

raja said...

it,s very nice to see in tamil fonts.thanks for velaanmai promoters,

வின்சென்ட். said...

திரு. ராஜ்

உங்கள் வருகைக்கும் வேளாண்மைடாட்காமிற்கும் நன்றி.