Tuesday, July 21, 2009

கொல்லபடும் யானைகள்.

இயற்கையாக ஆசியா, ஆப்ரிக்க கண்டங்களில் மாத்திரமே காணப்படுபவை யானைகள். தெய்வமாக வழிபடும் நம் இந்தியப் பாரம்பரியத்தில் அண்மைக் காலங்களில் அவைகளுடன் உண்டான மனிதனின் உறவு சரியாக இல்லை என்பதை கோவை பகுதியிலிருந்து வரும் பத்திரிக்கைச் செய்திகள் நித்தம் தருகின்றன. தந்தத்திற்காக கொல்லப்பட்ட காலங்கள் போய் விபத்தில் இறப்பது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலக்காடு - கோவை இடையேயுள்ள சுமார் 25 கீ.மீ வனப்பகுதியிலுள்ள இரயில் பாதையில் நடப்பது. நவீன மின்சார இரயிலின் இரைச்சலில்லாத வேகம் ???? ஒரு வருட காலத்தில் 6 யானைகள் பலி என்பதே உண்மை. இது தவிர வால்பாறை அருகே பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த இரசாயன மருந்தை உண்டு 2 யானைகள் பலி. மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று இருவாரங்களுக்கு முன் இறந்தது. பின்னால் தெரியும் பசுமை மாறாக் காடுகளை அழித்து வணிக பயிர்கள் (இங்கு தேயிலை) பயிரிடப்படுகிறது

அணைகட்டுதல், சுரங்கம் , சாலை அமைத்தல், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வனங்களை அழித்து வணிகப்பயிர்கள் பயிரிடுவது போன்ற நம் தேவைக்காக அதன் வாழ்வாதாரமான காடுகளை சுருக்குவது, அதற்கு மேலும் மரங்களை வெட்டி அதன் உணவு மற்றும் நீராதாரத்தை குறைப்பது, அவைகளின் வழக்கமான ,பழக்கமான பாதையை (Elephant Corridor) மறித்து பெரிய கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் நீண்ட தூரத்திற்கு கட்டுவது, வனங்களுக்கு அருகிலேயே அதன் விருப்ப உணவுகளான தென்னை, வாழை, கரும்பு, பலா, மா, மூங்கில் என பயிரிட்டு உள்ளே வரக்கூடாது என மின்வேலி அமைத்து அதனை தடுப்பது, நம்மால் உண்டாக்கப்பட்ட தட்பவெப்ப மாற்றம் என்று அனைத்தையும் மனிதர்களாகிய நாம் செய்துவிட்டு யானைகள் அட்டகாசம், பயிர்களை நாசம் செய்தன என்று செய்திகளில் பழியை அதன் மேல் போடுவது சரி என்று மனதிற்கு படவில்லை ?? படிக்கும் குழந்தைகளிடம் தவறான ஒரு புரிதலை தருகிறோமா ? என்ற சந்தேகம் எனக்கு வரும். காரணம் வேலைகளுக்கு பழக்கி அதனிடம் நாம் வேலை வாங்குகிறோம். இன்றும் பழங்குடி மக்கள் அதனை அனுசரித்து வாழும் போது குறை யாரிடம் ????
பழங்குடி மக்கள் பெரிய மரங்களில் உயரமான இடத்தில் பரண் அமைத்து தங்களையும், ஓரளவிற்கு தங்கள் பயிர்களையும் பாதுகாக்கின்றனர்.
தீர்வு என்பது தெய்வ சிந்தையுடன் கூடிய அணுகமுறையும், அவைகளுக்கு உண்டான வாழ்வாதாரத்தை திரும்ப உண்டாக்குவதும், அதன் வழித்தடத்தை மறிக்காமலும், நமது அதிவேக வாழ்க்கையை குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட 25 கீமீ தூரமாவது குறைப்பதும், மலையோர பகுதிகளில் மாற்றுப் பயிர் செய்வதும், மிகத் தெளிவான புரிதலை குழந்தைகளுக்கு அளிப்பதும் தொடர்ந்தால் இந்த இனம் காப்பாற்றப்படும். இல்லையேல் குறிப்பாக நடுத்தர வயதுள்ள ஆண் யானைகள் இறப்பது தொடர்ந்தால் இனபெருக்கத்தில் பிரச்னையை நாம் எதிர் கொள்ள நேரிடும். சரியான துணையில்லா பெண் யானைகளின் போக்கிற்கு காலம் தான் பதில் கூறும்.
கோவையிலுள்ள “ஓசை” அமைப்பு செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் இது குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை 18-07-09 அன்று மாலை நடத்தினர்.
இன்றைய தினசரிகளில்* இரயில்களின் வேகம் குறைக்கப்படும் என்றும் மின்வேலி அல்லது குழி ( trenches ) எடுக்கும் செலவில் பாதியை ஏற்றுக்கொள்வதாகவும் இரயில்வே நிர்வாக (பாலக்காடு) அதிகாரி திரு.Y.P. சிங் கூறியிருக்கிறார். நல்ல செயல்பாடுகளை வரவேற்போம்.

படங்கள் 1 & 3உதவி : வலைதளம் 1 B Ramakrishnan/Wildlife Trust of India. 2 & 5 "Osai " Cbe * The Hindu /cbe dt 21-07-09 page No 7

4 comments:

Thekkikattan|தெகா said...

அய்யா, நியாயமான கேள்விகளுடன் சிந்திக்க வைக்கும் கட்டுரை!

அவைகளின் இடத்தை நமதாக்கிக் கொண்டு பின்பு அவைகளின் மீது பழியைப் போடுவது, மனிதன் எவ்வளவு சுயநல-பேராசைக்காரன் என்பதனைத் தான் காட்டுகிறது.

இப்பொழுது கூட சில நாட்களுக்கு முன்பு இரண்டு காட்டெருமைகள்(பைசன்) அருகிலுள்ள ஊருக்குள் வந்துவிட்டது என கேள்விப் பட்டேன். நிலமையை கண்ணுரும் பொழுது, இன்னும் போகப் போக சிக்கலாகத்தான் இருக்கும் போல நமக்கும் அவைகளுக்குமிடையேயான இருத்தல் போராட்டம்.

வின்சென்ட். said...

திரு.தெகா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. மக்கள் தொகை அதிகமாவதும் அவனது பேராசை அதற்கு மேலும் அதிகமாவதால் மனித/மிருக புரிதல் மேலும் சிக்கலைத்தான் தரும். இதில் இழப்பு எல்லோருக்கும்தான்.

துபாய் ராஜா said...

நல்லதொரு பதிவு.விபத்து படங்களை பார்க்க அதிச்சியாக உள்ளது.

'ஓசை' போன்று பல அமைப்புகளும் இதுபோன்ற இயற்கை பாதுகாப்பு போராட்டங்களில் ஈடுபட்டு உலகம் உய்வுற உதவவேண்டும்.

வின்சென்ட். said...

திரு.துபாய் ராஜா

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இந்த பூமி ஒவ்வொரு உயிர்களுக்கும் சொந்தம் என்று மனிதன் எப்பொழுது நினைக்கின்றனோ அன்றுதான் இவ்விபத்துக்கள் தவிர்க்கப்படும்.