Friday, July 10, 2009

“பூஜ்ய விவசாயம்” (Zero Farming)

எம். கே. கைலாஷ்மூர்த்தி வங்கித் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டவர். கர்நாடகா மாநில சாம ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள டோடின்டு வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது 6.5 ஏக்கர் பண்ணையில் பூஜ்ய விவசாய முறை’யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். அப்படியென்றால்...? இயற்கைக்குத் தன்னைப் பராமரிப்பது எப்படி என்று தெரியும்... அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது... நல்ல விளைச்சலைப் பெற நிலத்தை உழ வேண்டியதில்லை... உரம் போட வேண்டியதில்லை... களை எடுக்க வேண்டிய தில்லை என்பதுதான் பூஜ்ய விவசாயம். நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா? ஆனால் பூஜ்ய விவசாயம் குறித்து இவர் பரிசோதனை செய்து பார்த்து நமக்குச் சொல்லும் அனுபவங்கள் வித்தியாசமானவை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மாசனோபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகத்தைப் படித்தபிறகு பூஜ்ய விவசாய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் கைலாஷ் மூர்த்தி.
விதைகள் மட்டுமே இடுபொருட்கள்

மற்ற விவசாயிகளைப் போலவே இவரும் முன்னர் நல்ல விளைச்சலைப் பெறவேண்டும் என்பதற்காக உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி வந்தவர்தான். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் குறைந்து கொண்டே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சி செய்திருக்கிறார். “விதைகளைத் தவிர வேறு இடுபொருட்கள் எதையும் நான் பயன்படுத்தாதபோது பிரமிக்கத்தக்க மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவதைக் கண்டேன். மண்ணின் இயற்கைச் சமநிலை செயல்படத் தொடங்கி எனது பண்ணை சிறு காடாகவே மாறியது. மருத்துவப் பயன் உள்ள செடிகள் உட்பட ஆயிரக் கணக்கான தாவரவகைகள் வளரத் தொடங்கின... பற்பல பறவைகளும் ஊர்வன வகையினவும் பண்ணையைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ளத் தொடங்கின. ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ சிறிது காலம் பிடித்தது... ஒரு ஏக்கர் நிலத்தில் நான் ஏக்கருக்கு 3 டன் நெல் அறுவடை செய்தபோது உரங்களும் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்ட அண்டை நிலங்களில் ஏக்கருக்கு 1.18 டன் மட்டுமே கிடைத்தது... பூச்சி மருந்து தெளிப்பதால் பூச்சிகள் அழிக்கப் பட்டுவிட்டதாக முதலில் தோன்றினாலும் நாளாவட்டத்தில் மருந்தை மீறி உயிர் வாழும் கலையைப் பூச்சிகள் கற்றுக் கொள்கின்றன. பூச்சிகளை அப்படியே விட்டுவிட்டால் பயிர்கள் அவற்றைத் தாக்குப்பிடிக்கத் தொடங்கிவிடும்” என்று பல ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் கைலாஷ் மூர்த்தி.

மாயை தகர்ந்தது

கலப்பின விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சலைப் பெற முடியும் என்ற மாயையை இயற்கை விவசாயம் தகர்த்து விட்டது. அதே சமயம், இரசாயன விவசாயத்திலிருந்து பூஜ்ய விவசாயத்திற்கு மாறுமுன் மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை உரங்களைப் பயன் படுத்தும் முறையை (Organic Farming) கடைப்பிடித்தபிறகே மாறவேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது என்று இவர் எச்சரிக்கிறார். பூஜ்ய விவசாயம் பூமி சூடேறுவதைக் குறைக்கவும் உதவுவதால் எதிர் காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உயிரினப் பன்மையைப் பாதுகாக்க வும் பயன்படும் என்றும் இவர் கூறுகிறார்.அதெல்லாம் சரி... உலகின் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்குமா என்ற கேள்விக்கும் கைலாஷ் மூர்த்தி விடை வைத்திருக்கிறார். கடந்த 50, 60 ஆண்டுகளாக நிலத்தைப் பாழ்படுத்தி விட்டோம். அதன் பயனாக விளைச்சல் குறையத் தொடங்கி விட்டது. பூஜ்ய விவசாய முறை நிலத்திற்குப் புத்துயிரூட்டுகிறது. நிலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பது முக்கிய மானது என்று முடிக்கிறார் இவர்.பெங்களூர் தோட்டக்கலையியல் ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research) விஞ்ஞானிகள் இவரது பண்ணைக்கு வந்து பூஜ்ய விவசாய முறையைப் பரிசோதித்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கைலாஷ் மூர்த்தியுடன் தொடர்பு கொள்ள :
E-mail: kailashnatufarm@gmail.com


கைபேசி : 9880185757 / 9845125808

(தகவல்: தி இந்து). நன்றி :தீக்கதிர் 09-07-2009 கோவை.
படம் உதவி : the-anf.org

1 comment:

Anonymous said...

இயற்கையைப் பற்றியும் விவசாயத்தைப் பற்றியும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்.
ஜீரோ விவசாயத்தைப் பற்றியும் உங்களுடைய பதிவை படித்தேன் . மிக்க நன்றி ஆனால் இயற்கை விவசாயம் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்று என்னுடைய அனுபவம். உங்களுடைய பணி தொடரட்டும்.

உங்கள் பிளாக்கில் பின்னூட்டம் போட முடியவில்லை. ஆங்கிலத்தில் டைப் செய்ய முடிகிறது. ஆனால் தமிழில் அடிக்க முடியவில்லை. வேறு எங்காவது தமிழில் டைப் செய்து வெட்டி ஒட்டினால் ஒட்டவே மாடóடேங்குது... கமென்ட் செட்டிங் அதற்கேற்றவாறு மாற்றவும். அதனால்தான் மெயில் அனுப்புகிறேன்.

கோவை வெங்கட்.

http://aarveeyem.blogspot.com/