Saturday, July 25, 2009

குட்டியை காப்பாற்ற தன்னை பலியாக்கிக் கொண்ட தாய் யானை.


இந்த வாரம் மேலும் ஒரு யானை இறந்தது. ஆனால் இறந்த விதம் மேலும் நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது. குன்னூர் டைகர் ஹில்ஸ் பகுதியில் ஆண் குட்டி யானை ஓன்று பாறையிடுக்கில் மாட்டிக் கொண்டது. அதனை காப்பாற்ற சென்ற தாய் யானை தவறி பள்ளத்தில் விழுந்து இறந்தது. தகவல் அறிந்த வனதுறையினர் 15 நாட்களே ஆன அந்த குட்டியை காப்பாற்றி முதுமலைக்கு அனுப்பிவைத்தனர். மொத்தத்தில் நன்கு வளர்ந்த யானைகளின் தொகையில் ஒன்று குறைந்தது.

Wednesday, July 22, 2009

வேம்( VAM )என்னும் வேர் பூஞ்சானம்.

இது Vesicular Arbuscular Mycorrhiza (VAM) என்பதன் சுருக்கம். இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரசை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற சத்துக்களையும் நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க உதவுகிறது.

வேர் பூஞ்சானத்தால் அடர்த்தியான வேர்கள் உருவாகின்றன.

இதனால் ஏற்படும் நன்மைகள்.

வேர் பகுதி அதிக அளவில் இருப்பதால் தாவரங்கள் ஸ்திரமாக நிலத்தில் இருக்கும்.

வேர்களுக்கு மண்ணிலுள்ள நீரையும் சத்துக்களையும் (குறிப்பாக பாஸ்பரஸ்) எளிதில் உறிஞ்ச உதவுகிறது.

மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சானம் தாக்காமல் தாவரங்களை பாதுகாக்கிறது.

நாற்றங்காலில் இருந்து மாற்றும் போது ஏற்படும் பயிர் எண்ணிக்கை இழப்பை குறைக்கும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.

வேர்களை தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து சத்துக்களையும் நீரையும் ஹைபே ( Hypae) உதவியால் தாவரங்களுக்கு அளிக்கிறது. எனவே தாவரங்கள் வறட்சியை சற்று தாங்கி வளரும்.

உர அளவை குறைப்பதுடன் விளைச்சலை அதிகப்படுத்த உதவுகிறது.

நாற்றுப் பண்ணைகளில் குறிப்பாக மரப்பயிர்களுக்கு அவசியம் தேவையானது இந்த வேர் பூஞ்சானம் வேர்கள் நன்கு உருவாகுவதால் மரங்கள் நல்ல வளர்ச்சி பெறும்.

ஹைபே ( Hypae) உதவியால் சத்துக்கள் உறிஞ்சப்படும் முறை.
மண்ணிற்கு ஊட்டம் கொடு தாவரத்திற்கு அல்ல (Feed the Soil Not the Plant) என்பாரகள். இந்த வேர் பூஞ்சானத்தை பொறுத்தவரை இது உண்மை
படங்கள் உதவி : திரு. இராமன்

Tuesday, July 21, 2009

கொல்லபடும் யானைகள்.

இயற்கையாக ஆசியா, ஆப்ரிக்க கண்டங்களில் மாத்திரமே காணப்படுபவை யானைகள். தெய்வமாக வழிபடும் நம் இந்தியப் பாரம்பரியத்தில் அண்மைக் காலங்களில் அவைகளுடன் உண்டான மனிதனின் உறவு சரியாக இல்லை என்பதை கோவை பகுதியிலிருந்து வரும் பத்திரிக்கைச் செய்திகள் நித்தம் தருகின்றன. தந்தத்திற்காக கொல்லப்பட்ட காலங்கள் போய் விபத்தில் இறப்பது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலக்காடு - கோவை இடையேயுள்ள சுமார் 25 கீ.மீ வனப்பகுதியிலுள்ள இரயில் பாதையில் நடப்பது. நவீன மின்சார இரயிலின் இரைச்சலில்லாத வேகம் ???? ஒரு வருட காலத்தில் 6 யானைகள் பலி என்பதே உண்மை. இது தவிர வால்பாறை அருகே பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த இரசாயன மருந்தை உண்டு 2 யானைகள் பலி. மின்சாரம் தாக்கி ஆண் யானை ஒன்று இருவாரங்களுக்கு முன் இறந்தது. பின்னால் தெரியும் பசுமை மாறாக் காடுகளை அழித்து வணிக பயிர்கள் (இங்கு தேயிலை) பயிரிடப்படுகிறது

அணைகட்டுதல், சுரங்கம் , சாலை அமைத்தல், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் வனங்களை அழித்து வணிகப்பயிர்கள் பயிரிடுவது போன்ற நம் தேவைக்காக அதன் வாழ்வாதாரமான காடுகளை சுருக்குவது, அதற்கு மேலும் மரங்களை வெட்டி அதன் உணவு மற்றும் நீராதாரத்தை குறைப்பது, அவைகளின் வழக்கமான ,பழக்கமான பாதையை (Elephant Corridor) மறித்து பெரிய கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் நீண்ட தூரத்திற்கு கட்டுவது, வனங்களுக்கு அருகிலேயே அதன் விருப்ப உணவுகளான தென்னை, வாழை, கரும்பு, பலா, மா, மூங்கில் என பயிரிட்டு உள்ளே வரக்கூடாது என மின்வேலி அமைத்து அதனை தடுப்பது, நம்மால் உண்டாக்கப்பட்ட தட்பவெப்ப மாற்றம் என்று அனைத்தையும் மனிதர்களாகிய நாம் செய்துவிட்டு யானைகள் அட்டகாசம், பயிர்களை நாசம் செய்தன என்று செய்திகளில் பழியை அதன் மேல் போடுவது சரி என்று மனதிற்கு படவில்லை ?? படிக்கும் குழந்தைகளிடம் தவறான ஒரு புரிதலை தருகிறோமா ? என்ற சந்தேகம் எனக்கு வரும். காரணம் வேலைகளுக்கு பழக்கி அதனிடம் நாம் வேலை வாங்குகிறோம். இன்றும் பழங்குடி மக்கள் அதனை அனுசரித்து வாழும் போது குறை யாரிடம் ????
பழங்குடி மக்கள் பெரிய மரங்களில் உயரமான இடத்தில் பரண் அமைத்து தங்களையும், ஓரளவிற்கு தங்கள் பயிர்களையும் பாதுகாக்கின்றனர்.
தீர்வு என்பது தெய்வ சிந்தையுடன் கூடிய அணுகமுறையும், அவைகளுக்கு உண்டான வாழ்வாதாரத்தை திரும்ப உண்டாக்குவதும், அதன் வழித்தடத்தை மறிக்காமலும், நமது அதிவேக வாழ்க்கையை குறைந்தபட்சம் அந்த குறிப்பிட்ட 25 கீமீ தூரமாவது குறைப்பதும், மலையோர பகுதிகளில் மாற்றுப் பயிர் செய்வதும், மிகத் தெளிவான புரிதலை குழந்தைகளுக்கு அளிப்பதும் தொடர்ந்தால் இந்த இனம் காப்பாற்றப்படும். இல்லையேல் குறிப்பாக நடுத்தர வயதுள்ள ஆண் யானைகள் இறப்பது தொடர்ந்தால் இனபெருக்கத்தில் பிரச்னையை நாம் எதிர் கொள்ள நேரிடும். சரியான துணையில்லா பெண் யானைகளின் போக்கிற்கு காலம் தான் பதில் கூறும்.
கோவையிலுள்ள “ஓசை” அமைப்பு செஞ்சிலுவை சங்கத்திற்கு முன் இது குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தை 18-07-09 அன்று மாலை நடத்தினர்.
இன்றைய தினசரிகளில்* இரயில்களின் வேகம் குறைக்கப்படும் என்றும் மின்வேலி அல்லது குழி ( trenches ) எடுக்கும் செலவில் பாதியை ஏற்றுக்கொள்வதாகவும் இரயில்வே நிர்வாக (பாலக்காடு) அதிகாரி திரு.Y.P. சிங் கூறியிருக்கிறார். நல்ல செயல்பாடுகளை வரவேற்போம்.

படங்கள் 1 & 3உதவி : வலைதளம் 1 B Ramakrishnan/Wildlife Trust of India. 2 & 5 "Osai " Cbe * The Hindu /cbe dt 21-07-09 page No 7

Thursday, July 16, 2009

பூவுலகு சுற்றுச்சுழல் இதழ் அறிமுக விழா - கோவை


நாள் :
18 - 07 - 2009 சனிக்கிழமை.
நேரம் :
மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை.
இடம் :
அண்ணாமலை ஓட்டல்,
ஸ்டேட் பாங்க் ரோடு, (கோவை ரயில் நிலையம் அருகில் )
கோயமுத்தூர் - 641 018.

பூவுலகு சுற்றுச்சுழல் இதழை வெளியிடுபவர்.

நீரியல் அறிஞர் முனைவர் இரா.க. சிவனப்பன்

பெற்றுக் கொள்பவர்.

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்

சுற்றுச்சுழல் பற்றி நிறைய அறிஞர்கள் விளக்கம் தரவுள்ளனர்.

அனைவரும் இதனை அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு இவ்வலைப்பூ விரும்புகிறது

சந்தா விபரங்கள் அறிய


Wednesday, July 15, 2009

விவசாய கழிவுகளிலிருந்து எரிபொருள்.


விவசாய கழிவுகளிலிருந்து எரிபொருள் (Briquetts) தயாரிக்கும் எண்ணம் பரவலாக உயிர் பெற்று வருகிறது. விவசாய கழிவுகளை உயர்அழுத்ததில் எளிதில் உபயோகிக்க பயன்படும் கட்டிகளாக மாற்றி பயனாளிகளுக்கு அளிக்கும் இந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு , கழிவுகள் மறு உபயோகம், குறைவாக மரம் வெட்டுதல், போன்ற நல்ல காரியங்கள் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இன்மை, இயந்திரங்களின் விலை ஆகியவை இதற்கு தற்சமயம் தடையாக உள்ளது. கிராம சுய உதவிக் குழுக்கள் ஒன்று சேர்ந்து, தமிழ்நாடு வனகல்லூரியின் வழிகாட்டுதலின் பேரில் இதனை நிவர்த்தி செய்து சாதிக்க இயலும்.


மேலும் தகவல்கள் பெற:

முதல்வர்
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்.
கோத்தகிரி சாலை,
மேட்டுப்பாளயம்- 641 301.

Tuesday, July 14, 2009

தென்மேற்கு பருவமழையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில்.....

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக தென்மேற்கு பருவ மழையின் போது செல்வது. சென்ற வாரம் நல்ல மழை பெய்ததால் காட்டாறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் மழை பெய்யாத போது அந்தப் பகுதிகளை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு சிலமணி நேரம் கிடைத்தது.


கரையருகே சிறுவர் சிறுமிகள் உற்சாகமாய் விளையாடினர். குறிப்பாக ஒரு சிறுவன் மாத்திரம் ஒரு மரக்கன்றை மையபடுத்தி தன் கோட்டையை கட்டிக்கொண்டிருந்தான். நான் ரசித்த அந்த காட்சிகளை புகைபடங்களாக உங்கள் பார்வைக்கு.

இறைவா !! இந்த சிறுவனின் மனநிலையையும், பெருக்கெடுத்து ஓடும் நீரையும் எங்கள் அனைவருக்கும் எப்பொழுதும் தா.

Friday, July 10, 2009

“பூஜ்ய விவசாயம்” (Zero Farming)

எம். கே. கைலாஷ்மூர்த்தி வங்கித் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டவர். கர்நாடகா மாநில சாம ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள டோடின்டு வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது 6.5 ஏக்கர் பண்ணையில் பூஜ்ய விவசாய முறை’யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். அப்படியென்றால்...? இயற்கைக்குத் தன்னைப் பராமரிப்பது எப்படி என்று தெரியும்... அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது... நல்ல விளைச்சலைப் பெற நிலத்தை உழ வேண்டியதில்லை... உரம் போட வேண்டியதில்லை... களை எடுக்க வேண்டிய தில்லை என்பதுதான் பூஜ்ய விவசாயம். நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது இல்லையா? ஆனால் பூஜ்ய விவசாயம் குறித்து இவர் பரிசோதனை செய்து பார்த்து நமக்குச் சொல்லும் அனுபவங்கள் வித்தியாசமானவை. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி மாசனோபு ஃபுகோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகத்தைப் படித்தபிறகு பூஜ்ய விவசாய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் தனக்குக் கிடைத்ததாகக் கூறுகிறார் கைலாஷ் மூர்த்தி.
விதைகள் மட்டுமே இடுபொருட்கள்

மற்ற விவசாயிகளைப் போலவே இவரும் முன்னர் நல்ல விளைச்சலைப் பெறவேண்டும் என்பதற்காக உரங்களையும் பூச்சி மருந்துகளையும் பயன்படுத்தி வந்தவர்தான். ஆனால் ஒவ்வோர் ஆண்டும் விளைச்சல் குறைந்து கொண்டே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவர் இயற்கை விவசாயத்திற்கு மாற முயற்சி செய்திருக்கிறார். “விதைகளைத் தவிர வேறு இடுபொருட்கள் எதையும் நான் பயன்படுத்தாதபோது பிரமிக்கத்தக்க மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவதைக் கண்டேன். மண்ணின் இயற்கைச் சமநிலை செயல்படத் தொடங்கி எனது பண்ணை சிறு காடாகவே மாறியது. மருத்துவப் பயன் உள்ள செடிகள் உட்பட ஆயிரக் கணக்கான தாவரவகைகள் வளரத் தொடங்கின... பற்பல பறவைகளும் ஊர்வன வகையினவும் பண்ணையைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ளத் தொடங்கின. ஆனால் இந்த மாற்றங்கள் நிகழ சிறிது காலம் பிடித்தது... ஒரு ஏக்கர் நிலத்தில் நான் ஏக்கருக்கு 3 டன் நெல் அறுவடை செய்தபோது உரங்களும் நவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப் பட்ட அண்டை நிலங்களில் ஏக்கருக்கு 1.18 டன் மட்டுமே கிடைத்தது... பூச்சி மருந்து தெளிப்பதால் பூச்சிகள் அழிக்கப் பட்டுவிட்டதாக முதலில் தோன்றினாலும் நாளாவட்டத்தில் மருந்தை மீறி உயிர் வாழும் கலையைப் பூச்சிகள் கற்றுக் கொள்கின்றன. பூச்சிகளை அப்படியே விட்டுவிட்டால் பயிர்கள் அவற்றைத் தாக்குப்பிடிக்கத் தொடங்கிவிடும்” என்று பல ஆச்சரியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் கைலாஷ் மூர்த்தி.

மாயை தகர்ந்தது

கலப்பின விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல விளைச்சலைப் பெற முடியும் என்ற மாயையை இயற்கை விவசாயம் தகர்த்து விட்டது. அதே சமயம், இரசாயன விவசாயத்திலிருந்து பூஜ்ய விவசாயத்திற்கு மாறுமுன் மூன்று ஆண்டுகளுக்கு இயற்கை உரங்களைப் பயன் படுத்தும் முறையை (Organic Farming) கடைப்பிடித்தபிறகே மாறவேண்டும். மண்ணின் வளத்தைப் பாதுகாக்க இது மிகவும் முக்கியமானது என்று இவர் எச்சரிக்கிறார். பூஜ்ய விவசாயம் பூமி சூடேறுவதைக் குறைக்கவும் உதவுவதால் எதிர் காலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் உயிரினப் பன்மையைப் பாதுகாக்க வும் பயன்படும் என்றும் இவர் கூறுகிறார்.அதெல்லாம் சரி... உலகின் மக்கள் தொகைக்கு உணவளிப்பதற்கு இயற்கை விவசாயம் கைகொடுக்குமா என்ற கேள்விக்கும் கைலாஷ் மூர்த்தி விடை வைத்திருக்கிறார். கடந்த 50, 60 ஆண்டுகளாக நிலத்தைப் பாழ்படுத்தி விட்டோம். அதன் பயனாக விளைச்சல் குறையத் தொடங்கி விட்டது. பூஜ்ய விவசாய முறை நிலத்திற்குப் புத்துயிரூட்டுகிறது. நிலத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பதைவிட என்ன செய்யக்கூடாது என்பது முக்கிய மானது என்று முடிக்கிறார் இவர்.பெங்களூர் தோட்டக்கலையியல் ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Horticultural Research) விஞ்ஞானிகள் இவரது பண்ணைக்கு வந்து பூஜ்ய விவசாய முறையைப் பரிசோதித்து ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கைலாஷ் மூர்த்தியுடன் தொடர்பு கொள்ள :
E-mail: kailashnatufarm@gmail.com


கைபேசி : 9880185757 / 9845125808

(தகவல்: தி இந்து). நன்றி :தீக்கதிர் 09-07-2009 கோவை.
படம் உதவி : the-anf.org

உணவுப் பாதுகாப்பை பாதிக்கும் பருவமழை

மேற்குத் தொடர்ச்சி மலைபகுதியில் 17-06-09 அன்று எடுக்கப்பட்ட படம். பொதுவாக தென்மேற்கு பருவ மழை தொடங்கி நன்கு அடைமழை பெய்ய வேண்டிய காலம். ஆனால் கறுத்த மேகங்கள் கூட இல்லாமல் மெலிதான வெண்மேகங்கள் மட்டுமே காணப்பட்டது.

பருவமழை தாமதமாக வருவதால் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசே வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பருவமழை தாமதமாகிறது என்றவுடன் போதிய அளவு நெல், கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் இருப்பு கைவசம் உள்ளது என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கூறியிருந்தார். ஆனால் பயிரிடுவதில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் அடுத்த ஆண்டு இத்தகைய கையிருப்பை வைத்துக் கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அரசே வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி, 38.14 லட்சம் ஹெக்டேர் நிலத்தில்தான் நெல் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 13.66 லட்சம் ஹெக்டேர் நிலம் குறைவாகவே பயிரிடப்பட்டுள்ளது. எண்ணெய் விதைகளின் விதைப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த ஆண்டு விதைத்ததில் 50 சதவீதம்தான் தற்போது செய்யப்பட்டுள்ளது. ஜூன் 10 ஆம் தேதி வரவேண்டிய பருவமழை, 25 ஆம் தேதிக்குப் பிறகே வந்ததால் விதைப்பது இனிமேல்தான் அதிகரிக்கும் என்று மத்திய அரசு விவசாயத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் பயிரிடுவதன் அளவு குறைந்தால் சுமார் 20 லட்சம் டன் நெல் விளைச்சல் குறையும். இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக இரண்டு டன்கள் நெல் உற்பத்தியாகிறது. பிரச்சனை நெல்லோடு நின்றுவிடவில்லை. பருப்பு வகைகள், பருத்தி ஆகியவற்றைப் பயிரிடுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. கடந்த ஆண்டு பயிரிடப்பட்டதைவிட 30 சதவீதம் குறைவான நிலத்திலேயே பருப்பு வகைகள் இதுவரை பயிரிடப்பட்டுள்ளன. பருத்தி விதைத்தல் திருப்தியை அளித்தாலும் போதிய மழை பெய்யாவிட்டால் விளைச்சலைப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.விவசாய ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சிலின் விஞ்ஞானிகள் கூறுகையில், ஒரிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தரம் மேம்படுத்தப்பட்ட உரங்களைக் கொண்டு நிலைமையை சமாளித்திருக்கலாம். ஆனால் அத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்கிறார்கள்.
நன்றி :தீக்கதிர் 10-07-2009 கோவை.

Wednesday, July 8, 2009

அரிதாக கிடைக்கும் சில தருணங்கள்.

இன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது ஒற்றை காட்டு ஆண் யானை சாலையின் மிக அருகே. நிறுத்தி புகைபடம் எடுக்குமளவிற்கு மனதில் தைரியம் !!. எப்படி வந்தது? இடையில் இருக்கும் அந்த கம்பிக்குத்தான் எத்தனை சக்தி.!!!!!!

அமைதியான பார்வை
போதுமான உணவு மற்றும் நீர் இல்லாமையால் வன விலங்குகள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. காரணம் பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாதது. வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வளமான நாட்டிற்கு அறிகுறி அந்நாட்டின் வன பரப்புத்தான். எனவே வன பரப்பை அதிகமாக்குவோம்.

Tuesday, July 7, 2009

அன்றும் இன்றும் அவினாசி சாலை, கோவை


கோவை அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக 2007 ஆண்டு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் வைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். கூறியது போலவே நாற்றுக்கள் இந்த மழைகாலத்தில் வைக்கப்பட்டு பாதுகாப்பிற்காக மூங்கில் கூடுகளும் வைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது. வாழ்க அந்த அதிகாரிகள். வளர்க அவர்களது சுற்றுச்சுழல் பணி. மேலும் அவர்கள் பணி சிறப்பாக இருக்க இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.

மரங்கள் வெட்டப்பட்ட அன்றைய காட்சிகளைக் காண
http://maravalam.blogspot.com/2007/08/blog-post_10.html

Thursday, July 2, 2009

திரு.சிக்கையா, திருமதி.திம்மக்கா இவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய வாழ்கைக் கல்வி.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும்.
வாழ்வதிலும் பொருள் வேண்டும்
.

நண்பரின் விசிடிங் கார்டில் பார்த்த வாசகம். “வாழ்வதிலும் பொருள் வேண்டும்” என்ற வாசகத்திற்கு ஏற்ப வாழ்ந்து கொண்டிருப்பவர் திருமதி.திம்மக்கா. சாலையின் இருபுறமும் வரிசையாக நட்ட மரங்களுக்காக கிடைத்த பெயர் சாலுமரதா திம்மக்கா. கர்நாடக மாநிலத்தில் ஃகுப்பீ கிராமத்தில் பிறந்த திம்மக்கா கல்வி பயிலாதவர், விவசாயக்கூலி. உடல் குறையுள்ள திரு.சிக்கய்யாவை மணம் முடித்தாலும் குழந்தை பாக்கியம் இன்மையால் ஊராரின் பேச்சுக்கு ஆளாக நேர்ந்தது. பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்ய மறுத்த கணவருடன் வாழ்வதற்கு பொருளுக்காக கல் குவாரியில் கல் உடைத்தும், வாழ்வதிலும் பொருள் இருக்கவேண்டும் என்பதற்காக ஹுலிக்கல் மற்றும் கடூருக்கு இடையே இருக்கும் நான்கு கி.மீ நீளமுள்ள அப்போதைய மண் சாலையில் அவர்கள் வளர்த்த 294 மரங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் அவைகளை காப்பாற்ற குடம் குடமாக இருவரும் நீரை சுமந்து ஊற்றி வளர்த்தார்கள். வேலியிட்டு காப்பாற்றினார்கள். இன்று அந்த மரங்கள் ஆயிரக்கணக்கான பறவைகள் தங்குவதுவதற்கு இடமும் உணவும் கொடுப்பது மட்டுமன்றி ஆடுமாடுகளுக்கும் வழிப் போக்கர்களுக்கும் நிழலும், மண்அரிப்பைத் தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி அந்த பகுதி மக்களுக்கு நல்ல வாழ்வாதாரம் தந்து வாழ்ந்த வாழ்கைக்கு பொருள் தேடியுள்ளனர். இன்று அம்மரங்களின் மதிப்பு பல லட்ச ரூபாய்கள்.அதனால் கிடைத்த பலன்கள் பல கோடி ரூபாய்கள் என்று கூறுவது சர்வதேச நிறுவனமான Food Agriculture Organisation. (FAO).

1991 ஆண்டு கணவர் திரு சிக்கையாவை இழந்த திம்மக்காவின் வாழ்க்கை 1995 ஆண்டு முதல் மாற துவங்கியது. அவர்கள் செய்த தன்னலமற்ற உழைப்பிற்கு மாநில,தேசீய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரங்களும், பரிசுகளும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள கணவர் சிக்கையா உயிருடன் இல்லை என்பதுதான் குறை. இன்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இவரது பெயரில் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் இவரது விருப்பம் தனது கிராமத்தில் ஒரு மருத்துவ மனை வேண்டுமென்பதே.

இன்று நாம் காணும் படித்த மக்கள் தங்கள் வீட்டிற்கருகில் கூட மரங்கள் இருக்க விரும்புவது இல்லை என்பதே உண்மை. நமது நாட்டை வளமான நாடாக மாற்ற தேவை கிராமத்திற்கு ஒரு சாலுமரதா திம்மக்கா.

Salumaradha Thimmakka
Kudur
Hulikal Post - 561101
Magadi Taluka,
Karnataka

Source: goodnewsindia.com