Saturday, February 28, 2009

மக்கள் சேவையில் மீண்டும் “கீரீன் கோவை”

கோவை மாவட்டத்தை பசுமையாக மாற்ற மரங்களை உற்பத்தி செய்த “கீரீன் கோவை” அமைப்பு சிறு மற்றும் குறு விவசாய்களின் நலன் கருதி வாசனை செடிகளிலிருந்து எண்ணை எடுக்கும் கொதிகலனை (Oil extraction Unit) ஆனைக்கட்டி பகுதியில் நிறுவியுள்ளனர். ஆனைகட்டி அதன் சுற்றுபுறங்களில் வன மற்றும் வளர்ப்பு மிருகங்கள், பறவைகளால் விவசாயம் செய்வது சற்று கடினமே. சில பகுதிகள் மழை மறைவு பகுதியாக இருப்பது மேலும் விவசாயத்தை பாதிக்கின்றது.இதனை தவிர்க்க நாம் வாசனை தரும் பயிர்களை பயிர் செய்யலாம். மிருகங்கள் பறவைகள் தீண்டுவதில்லை, பச்சோலி பயிரிட்ட காட்டில் ஆடு மேய்கின்றது. ஆனால் அவைகள் பச்சோலி செடிகளை தீண்டுவதில்லை.
குறைந்த அளவு நீர் போதும். ஆனால் வெறும் இலைகளாகவோ அல்லது வேர்களாகவோ விற்றால் மதிப்பு மிகக்குறைவு. ஆனால் எண்ணையாக மாற்றினால் மதிப்பு அதிகம். அதனை எண்ணையாக மாற்றி மதிப்புக் கூட்ட கொதிகலன் (Oil extraction Unit) தேவை. இதனை சிறு மற்றும் குறு விவசாய்கள் நிறுவுவது கடினம். காரணம் நிறுவுவதற்கான செலவு மற்றும் வருடம் முழுவதும் நாம் அதனை இயக்க தேவையான கச்சாப் பொருள் (Raw material) வேண்டும். இல்லையேல் நஷ்டம் வரும்.

இதனை கருத்தில் கொண்டு கீரீன் கோவை சிறு மற்றும் குறு விவசாய்கள் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற இந்த கொதிகலன்( S.S என்னும் துருபிடிக்காத எஃகு கொண்டு )அமைப்பை நிறுவியுள்ளனர். கீரீன் கோவை அமைப்பின் திரு. இராமன்ஜீ அவர்கள் கொதிகலன் முன்.
இதனால் எண்ணையின் தரம் மிக நன்றாக இருக்கும். இதனால் கோவை மற்றும் ஆனைக்கட்டி பகுதி விவசாய்கள். கீழ் கண்ட பயிர்களை உற்பத்தி செய்து இந்த கொதிகலனை உபயோகித்து மதிப்புக்கூட்டி தங்களின் விவசாய வருமானத்தை மேம்படுத்தலாம்.

1. ரோஸ் மேரி Rosemary (Rosmarinus officinalis)
2. எலுமிச்சம் புல். Lemon Grass (Cymbopogon citratus)
3. பச்சோலி Patcholi (Pogostemon Cablin)
4. மருகு Dhavanam (Artemisia pallens)
5. திருநீற்றுப் பச்சிலை (Ocimum Basilicum)
6. துளசி Tulsi (Ocimum Sanctum)
7. சிட்ரோனல்லா Citronella (Cymbopogon winterianus)
8. பாமரோசா Pamarosa (Cymbopogon martini)

மேலும் விபரங்கள் பெற:
திரு. இராமன்ஜீ. புரோஜக்ட் அதிகாரி
“கீரீன் கோவை”
ஆனைக்கட்டி
தமிழ்நாடு

அலைபேசி : 94426-46713

Friday, February 27, 2009

வேதனையும், சாதனையும்.

பொறுப்பற்ற சில இளைஞர்களால் வேதனை:
பொதுவாக கோடைகாலம் ஆரம்பித்தாலே வனத்துறை மிக எச்சரிக்கையுடன் இருப்பார்கள் காரணம் நீர் பற்றாக்குறை காரணமாய் வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் வனத்தில் ஏற்படுகின்ற “தீ”. இந்த தீ இயற்கையாக ஏற்பட்டால் ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த தீ சில சமூக பொறுப்பற்ற அதிலும் படித்து வேலை செய்யும் இளைஞர்களால் பொழுதுபோக்கிற்காக ஏற்படுவதை ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. 24-02-09 அன்று செய்தியாக வந்தது இதுதான் ஊட்டி - கல்லட்டி சாலையில் 25 வது U வளைவில் அருகிலுள்ள பகுதிக்கு தீ வைத்து அந்த வழியே சென்ற நபரை அணுகி தீக்கு முன் தாங்கள் இருப்பது போன்று புகைப்படம் எடுக்க அணுகியுள்ளனர். ஆனால் பொறுப்புள்ள அந்த இளைஞர் இது தவறு என்று கூறி மறுத்துவிட்டு உடனடியாக செயல்பட்டதால் சேதத்தை சுமார் 2 ஹெக்டர் அளவிற்கு குறைக்க முடிந்தது.
ஒரு பொறுப்புள்ள முதியவரின் சாதனை:
76 வயதான திரு.ஐய்யசாமி கடந்த 25 ஆண்டுகளாக வேட்டுவன் புதூர் கிராமத்தில் சொற்ப வருமானத்தில் சுமார் 10,000 மரங்களுக்கு மேல் நட்டு பராமரித்துள்ளார். இப்போது அவைகள் விறகுக்காகவும், வீட்டு உபயோக பொருட்களுக்காகவும் வெட்டப்படுவதை பற்றி மிகவும் வருத்தமடைகிறார். இதனைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார்.

இன்றைய இளைஞர்களிடம் சுற்றுச் சுழல் பற்றி அதிகம் தெரிவிக்கபட வில்லையா? அல்லது செல்வச் செழிப்பால் பொறுப்பின்றி இருக்கின்றார்களா? இவர்களுக்கு சுற்றுச் சுழல் பற்றி அறிவுறுத்த வேண்டியது நமது கடமை. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளை பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள். வலைப் பூக்கள் மூலம் நம் கடமையை செய்வோம்.
Source: “The Hindu

Thursday, February 26, 2009

மர மேளா, கோவை. (Tree Mela, coimbtore).

தமிழ்நாடு வன வரிவாக்க மையமும், இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையமும் இணைந்து “மர மேளா” என்னும் மரம் பற்றிய விழாவை கொண்டாட உள்ளனர். மரவகைகள், சாகுபடி முறை, சந்தை படுத்துதல், வருமானம் என மரம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மூலம் நடைபெறும். இந்த நல்ல வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் வளமான எதிர்காலத்தை தமிழகம் பெற இந்த வலைப் பூ விரும்புகிறது.

இடம்: இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.

நாள்: மார்சு மாதம் 7 மற்றும் 8 தேதிகள் (இரு நாட்கள்)

அனுமதி : இலவசம்.

தொடர்புக்கு : திரு.ரவிச்சந்திரன் IFS
துணை வனப் பாதுகாவலர் (விரிவாக்கம்)
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையம்(IFGTB)
கௌலிபிரவுன் சாலை,
ஆர்.எஸ். புரம்,
கோவை.
தொலைபேசி : 0422-2431540
அலைபேசி : 94862-41158.

Friday, February 20, 2009

வளர்ந்த நாடுகளில் தண்ணீரின் நிலைமை.

வளர்ந்த நாடான ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக எவ்வாறு சிக்கன முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதை படிக்கும் போது மலைப்பாகவும், திகைப்பாகவும் உள்ளது. நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. நிறைய சட்டதிட்டங்களை நாம் இயற்றி நீரை சேமிக்க வேண்டியுள்ளது இல்லையேல் இன்னும் 10 -15 ஆண்டுகளில் நாம் மிகவும் கஷ்டப்படவேண்டிவரும்.

பழைய செய்தி
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வறட்சிப் பகுதியான தென்கிழக்கு பகுதியிலுள்ள மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை குடிப்பதற்கு தருவதை அந்நாட்டின் பிரதம மந்திரி திரு.ஜான் ஹவார்டு பாராட்டியுள்ளார். இந்த வருடச் செய்தி
*வறட்சியை சமாளிப்பதற்காக வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு மட்டுமல்லாமல் வெளியேற்றப்படும் கழிவு நீருக்கும் வரி விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. கழிவு நீருக்கான வரி ஏற்கெனவே ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இருந்தாலும், அது வீட்டின் மதிப்பைப் பொறுத்தே இருந்தது. தற்போது நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் கழிவு நீருக்கான வரியை விரிவாக்கியுள்ள ஆஸ்திரேலிய அரசு, எவ்வளவு கழிவு நீர் வெளியேற்றப்படுகிறதோ அதைப்பொறுத்து வரி வசூலிக்கப்படும் என்று திட்டமிட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்த அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் பேராசியர் மைக் யங், இதன் மூலம் குளியல் நேரத்தைக் குறைப்பது, துணிகள் துவைப்பதைக் குறைத்துக் கொள்வது, மழை நீர் சேகரிப்பை குளியல் அறையுடன் இணைப்பது என்று பல நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள். தங்கள் கழிப்பறைகளைக் கழுவாமலே சென்று விடும் அளவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கிறார். இத்தகைய மக்கள் விரோதக் கொள்கை அமெரிக்காவிலும் உள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
*நன்றி : தீக்கதிர்/கோவை 19-02-2009

Thursday, February 19, 2009

மழைநீர் சேகரிப்புத் திட்டம் - பண்ணை குட்டைகள்.

மழைநீர் சேமிப்பு குளங்களை விவசாய நிலங்களில் வெட்டுவதற்கு அரசு உதவி செய்கிறது. இத்திட்டங்கள் பற்றி விவசாய அன்பர்கள் அறிந்து பயன்படுத்தினால் நீர் நிர்வாகத்தில் கணிசமான அளவு தமிழகம் முன்னேற்றம் பெறும். அந்தந்த பகுதி விவசாய அலுவலகத்தில் இதன் விபரங்கள் கிடைக்கும்.
மழையளவு குறைந்த பல்லடம் தாலூக்காவில் அமைந்த இந்த குளத்தில் கிடைக்கின்ற மழைநீர் கீழே சென்றுவிடாமலிருக்க பாலித்தீன் கொண்டு லைனிங் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.
இந்த குளம் மழையளவு அதிகம் பெறும் பொள்ளாச்சி தாலூக்காவில் அமைந்துள்ளது.
இது போன்று பண்ணைகளில் மழைநீர் சேகரித்து விவசாயம் செய்யும் போது நாம் நீரின் கார அமில (pH) அளவைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. மேலும் நிலத்தடிநீரும் உயர்வதால் நாம் கவலையன்றி விவசாயம் செய்யலாம். மழை நீர் சேமிப்பின் பயன்கள் பற்றிய எனது பழைய பதிவினைப் படிக்க
http://maravalam.blogspot.com/2007/07/blog-post_16.html
மழைநீர் சேமிப்பு சென்னையில் ஏற்படுத்தியுள்ள ஆய்வைப் பற்றிப் படித்தேன் அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
*தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் மழைநீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. சென்னையில் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட ஐந்து லட்சம் வீடுகளில் நீர்மட்டம் 50 சதம் வரை உயர்ந்திருக்கிறது என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் ஜமுனா ராமன் என்பவர் இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தான் கண்கூடாகக் கண்ட பலனைப் பற்றி விரிவாகக் கூறுகிறார்.“வில்லிவாக்கத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நான் வீடு வாங்கிய போது 150 அடி குழாய்க்கிணறு தோண்டுவதற்கு கணிசமாகச் செலவிட வேண்டியிருந்தது. அப்படியும் உப்புத் தண்ணீர்தான் கிடைத்தது. முன்னர் எங்களது நீர்த்தேவைகளுக்கு குழாய்த் தண்ணீரையும் தனியார் லாரிகள் விநியோகிக்கும் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது நான் மட்டுமல்ல, எங்கள் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறியுள்ளது. அந்த நீரைக் குடிப்பதற்குத் தவிர மற்ற தேவைகளுக்கும் உபயோகித்துக் கொள்ள முடிகிறது. இதற்குக் காரணம் மழைநீர் சேகரிப்புத் திட்டம்தான்” என்கிறார் அவர்.சென்னை மாநகரத்தில் நீர்மட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றிலிருந்து ஆறு மீட்டர் வரை உயர்ந்திருப்பதாக மெட்ரோவாட்டர் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவர்களது ஆய்வில் தண்ணீரின் அளவு மட்டுமல்ல, தரமும் கூடியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. நீரில் கரைந்துள்ள மொத்த உப்பின் அளவைத் தெரிந்து கொள்ள பி.பி.எம். (Parts per million) என்ற அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட உப்பின் அளவு 500 பி.பி.எம். தான். அதிக பட்சமாக 2000 பி.பி.எம். வரை இருக்க லாம். கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகளில் உள்ள நீரில் உப்பின் அளவு கணிசமாகக் குறைந்திருக்கிறது. உதாரணமாக, சிந்தாதிரிப் பேட்டையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 4900 பி.பி.எம். ஆக இருந்தது. தற்போது அது 500 பி.பி.எம். ஆகக் குறைந்திருக்கிறது. ஒவ்வொரு பருவமழை தொடங்கு முன் மெட்ரோ அதிகாரிகள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஆங்காங்கு சில இடங்களில் பரிசோதித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்தது நல்ல பலனை அளித்துள்ளது. ஆனால் போதுமான அளவு குடிநீர் கிடைக்கும் காலங்களில் இந்த அமைப்புகளைப் பராமரிப்பதில் மக்கள் அவ்வளவாக அக்கறை செலுத்துவதில்லை என்கின்றனர் அதிகாரிகள்.*
- பேராசிரியர் கே.ராஜு -
* நன்றி : தீக்கதிர்/கோவை 19-02-2009

Monday, February 16, 2009

தமிழ்நாட்டுப் பாம்புகள்

பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து இன்று பூங்காக்களில் காட்சி உயிராக இருக்கும் அளவிற்கு மோசமான நிலைக்கு வந்து விட்டது. “பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி.. ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் எலிகளின் எண்ணிக்கையும் தொல்லையும் அதிகரித்துவிட்டது(வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பூக்கிறதென்றால் அம்மாநில அரசுகள் இந்த எலிகளைக் கண்டு பயப்படுகின்றனர் காரணம் அது செய்யும் உணவு நாசம்.) அது மாத்திரமன்று கொடிய தொற்று நோய்களை பரப்புவதும் இந்த எலிகளே. எலிகளின் இயற்கை எதிரி பாம்புதான். ஆனால் நாம் பாம்பை கொல்வதிலேயே கவனம் செலுத்துகிறோம். ஆனால் பிச்சாண்டிகுளம் பையோரிசோர்ஸ் சென்டர் “தமிழ்நாட்டுப் பாம்புகள்” என்னும் ஒரு ஆவணத்தை படங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். அதன் வகைகள், உடலமைப்பு, உணவு, வாழ்விடம், இனப்பெருக்க முறை,ஒவ்வொன்றின் விஷத்தன்மை என்று மிக சுருக்கமாக ஆனால் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கை சங்கிலியில் பாம்பும் ஒரு அம்சமே.

இதன் விற்பனை தொகை இயற்கை கல்விக்கும், தென்இந்தியாவில் வெப்பமண்டல காடுகளின் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறது. எனவே இந்த ஆவணத்தை வாங்குவதன் மூலம் நாம் இயற்கையின் ஒரு படைப்பை அறிந்து கொள்ளுகிறோம் கூடவே கல்வி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம். பள்ளி, கல்லூரி, விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடம் அவசியம் இருக்கவேண்டிய ஒரு பயனுள்ள தொகுப்பு.

மேலும் தகவல் மற்றும் ஆவணத்தைப் பெற:

PITCHANDIKULAM BIORESOURCE CENTRE,
AUROVILLE - 605 101.
Email : tdef@auroville.org.in

மற்றும்

ECO GREEN UNIT
No 44, DIVINE,
Lakshmi Nagar,
Ganapathi (po),
Coimbatore. 641 006
9442416767, 9443582598

Tuesday, February 10, 2009

மானாவாரியில் நெல் சாகுபடி ??????

படிப்பதற்கு ஏதோ கற்பனை போன்று தோன்றும். ஆனால் கோவையின் அருகிலுள்ள “அட்டப்பாடி” மலைப் பகுதிகளில் “புழுதி நெல்” சாகுபடி என்று இதனை அழைக்கின்றனர். காலம் காலமாக அங்கு வசிக்கும் மக்கள் பாரம்பரியமாக இதனை ஏப்ரல் மாதம் இங்கு பெய்யும் கோடை மழையிலோ அல்லது ஜுன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையிலோ விதைகளை தூவி பின் உழுகின்றனர். மழை ஈரத்திலே அவை முளைத்துவிடுகின்றன. பின் 3 அல்லது 4 முறை களை எடுகின்றனர் அவ்வளவே. நெல்மணிகள் 6 மாதங்களில் அறுவடைக்குத் தயார். வழக்கமாக நாம் காணும் வரப்பு, நாற்றங்கால், சேற்று உழவு, நாற்று நடுதல், அதிகம் நீர் பாய்ச்சி நிறுத்துதல், நோய், மருந்தடித்தல் போன்றவைகள் இல்லை. இந்த புது அரிசியில் தான் பொங்கலிடுவது வழக்கம்.
2009 ஜனவரி மாதம் நெல் அறுவடை செய்த தனது நிலத்தில் நிற்கும் விவசாயி திரு.வெள்ளிக்குட்டி பாத்திகள் அல்லது வரப்பு போன்ற அமைப்புகள், நீர் வாய்கால்கள் இல்லை என்பதை கவனிக்கவும். நெற்கட்டைகள் இருப்பதையும் காணலாம்.திரு.வெள்ளிக்குட்டி தனது குழந்தையுடன் வைகோல் போருக்கு முன்.இதில் வருத்தப்பட வேண்டிய விஷயமும் உண்டு. இந்த புழுதி நெல் சாகுபடி நாளுக்கு நாள் மிக மிக குறைந்து வருகின்றது. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வருடதிற்கு வருடம் குறைந்து வரும் மழையளவு, நிறைய நிலங்கள் தரிசாக இருப்பதால் பயிர் செய்யப்படும் இடத்தில் நிறைய மிருகங்கள், பறவைகளின் தொல்லை, மக்களின் மனோபாவம், இன்றைய பொதுவான விவசாய பிரச்சனைகள் என கூறிக்கொண்டே இருக்கலாம்.
நெல்மணிகள்
ஆனால் மிக எளிய பாரம்பரியம் மிக்க ஒரு விவசாய முறையும், நீர் தேவை குறைந்த ஓரு நெல் இரகமும் அழிந்து கொண்டுவருகிறது என்பதே உண்மை.