Sunday, November 4, 2007

பருவகால மாற்றம் உண்மைதானா? புகைப்படம்.

பொதுவாக பருவகால மாற்றத்தை நமக்கு எளிதில் உணர்த்துவதில் தாவரங்களின் பங்கு அதிகமானது. புவிவெப்பம் காரணமாக இந்த பருவகால மாற்றத்தில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வழக்கமாக பனிகாலத்தில் (நவம்பர், டிசம்பர்)இலைகளை உதிர்க்கும் நமது வேப்ப மரமும் புங்கன் மரமும் சென்ற ஆண்டு (2006) மிகத் தாமதமாக (மார்சு, ஏப்ரல் மாதம்) இலைகளை உதிர்த்து பின் விரைவாக தளிர்த்தது. மார்சு மாதம் ஒரு நாள் காலையில் எழுந்த எனக்கு சற்று வியப்பு காரணம் வெளியே பனிபொழிவு. எங்கள் வீட்டருகிலிருக்கும் வேப்ப மரம் தளிர்த்திருக்கவேண்டிய ஏப்ரல் மாதத்தில் கூட கருகிய இலையை உதிர்த்துக்கொண்டிருந்தது.
இந்த ஆண்டு தலைகீழ் குளிர்காலத்திற்கு முன்பே (அக்டோபர் மாதமே) இலைகள் கருகி உதிர ஆரம்பித்துள்ளது. குளிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. மரங்கள் எப்படி மாற்றத்தை வெளிப்படுத்தப்போகிறது தெரியாது.

மார்சு மாதத்தில் பனி பொழிவு புகைபட நாள் 22-03-06.

வேப்ப மரம் ஏப்ரல் மாதம் இலையுதிர்த்தல் 17-04-06

வேப்ப மரம் அக்டோபர் மாதம் இலையுதிர்த்தல் 17-10-07

வேப்ப மரம் முழுவதுமாக இலையுதிர்த்தல் 25-10-07


புங்க மரம் முழுவதுமாக இலையுதிர்த்து தளிர்த்துள்ளது26-10-07

விளைவுகளில் முக்கியமானது விவசாயம். ஓன்று விளைச்சல் குறைந்து பாதிப்பு ஏற்படும் அல்லது விளைச்சல் அதிகமாகி விலை வீழ்ச்சியடைந்து பாதிப்பு ஏற்படும். எப்படியாயினும் பருவகால மாற்றம் விவசாயத்தை அதிகம் பாதிக்கும் என்பதில் ஐயம்மில்லை.

"புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள் " என்ற எனது பதிவினைப் பார்க்கவும்.

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்க ஊரு பக்கத்துல ஒரு கோயில் இருக்கு வெள்ளை வேம்புமாரியம்மன் ன்னு அங்க வெள்ளை கலரில் இருக்கும் வேப்ப மர இலைகள்..இரண்டு வருடங்களாக நானும் அந்த கோயிலுக்கு போய் ட்ரை ப்ண்ணரேன் வரவே இல்லை வெள்ளை இலைகள்.. ஊரு பூராவும் இலைகள் கருகிய வேப்பமரத்தை போல அதுவும் கீழே இலை இல்லாமத்தான் நிக்குது... இரு வருடங்களுக்கு முன்னால போனவங்க எடுத்து வந்து காண்பிச்ச ஆர்வத்துல நான் ஆசையா போய் ஏமாந்துட்டேன்..

கபீரன்பன் said...

மிகவும் கூர்ந்து இயற்கையை கவனித்திருக்கிறீர்கள். நான் அறிய விழைவது இவை போலவே வேறு பல இடங்களில் இருந்த வேப்ப மரங்களும் புங்க மரங்களும் பருவத்திற்கு மாறுபட்ட மாற்றங்களை காட்டினவா ? அப்படியிருக்கும் பட்சத்தில் இது மிக கவலைக்குறிய விஷயம். இது பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையே நீங்கள் எழுதலாம்.

வின்சென்ட். said...

திருமதி.முத்துலெட்சுமி,திரு.கபீரன்பன்
தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி.
பொதுவாக ஒவ்வொரு கோயிலுக்கும்
"தல விருட்சம்" என்பது அக்கோயிலின்
சிறப்பு அம்சங்களில் ஒன்று.நீங்கள் கூறும் வெள்ளை கலரில் இருக்கும் வேப்ப மர இலைகள் அக்கோயிலின் சிறப்பு.புகைபடமாவது எடுத்து மக்களுக்கு அறிவிப்போம்.தெரிவியுங்கள்

என்னுடைய 23 நாட்களில்..பதிவை பாருங்கள் புங்கன் பிப்ரவரி மாதம் காய்ந்து மார்சு மாதம் தளிர்த்துள்ளது.
நிறைய இடங்களில் இப்போதே தளிர்த்துள்ளது.