Friday, July 13, 2012

விதை காப்பாளர்கள் – (5)

குதிர் பெரியது.
 இந்திய விவசாயத்தின் மிக பெரிய பலமாக இருந்தது பாரம்பரிய விதை சேமிப்பு, பாதுகாத்தல் மற்றும் பகிர்தல். இந்த சேமிப்பு மற்றும் பாதுகாத்தல் முறைகள் பல அழிந்து விட்ட நிலையில் மண்ணால் செய்யப்பட்ட மிகப் பெரிய குதிர் என்ற பாதுகாப்பு பானையும் விடைப் பெற்றுவருகிறது. அதன் பிரமாண்டத்தை குறிக்க ‘எங்க அப்பா குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் விதை பாதுகாப்பு செய்த நம் மக்கள்  இன்று கவலையின்றி விதை உரிமையை விட்டுக் கொடுத்து “கம்பெனி” விதைகளால் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
ஸ்வால்பார்ட் விதை காப்பக முகப்புத் தோற்றம்
இராமநாதபுரம் மாவட்டதில் அளவான குதிர்
எளிமையாகவும் வீட்டிற்கு ஒரு குதிர் என்றிருந்த விதை சேமிப்பு மறைந்து  இன்று கூட்டு முயற்சியில் மிகமிக பிரமாண்டமான அளவில் நார்வேக்கும் வடதுருவத்திற்கும் இடையேயுள்ள  உறை பனிவெளியில் அமைந்துள்ள “ஸ்வால்பார்ட் (Svalbard)” என்ற இடத்தில் உலக விதைகள் காப்பகம் நிறுவியுள்ளனர். 94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே 6 லட்சம் விதைகளுக்கு மேல் சேகரித்து வைத்துள்ளனர். குளிர் சாதன வசதியின்றி சுமார் 25 வருடங்கள் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். இதன் மறுபெயர் கூட “உலகின் இறுதிநாள் விதை காப்பகம் (Doomsday seed Vault)”. பாரம்பரிய தானியங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன. நிறைய விதை காப்பகங்களை குறிவைத்து தாக்க ஆரம்பித்துள்ள மனிதன் விதை மூலம் அமைதியின்மையை ஏற்படுத்த முடியும் என நம்புகிறான். விளைவு இது போன்ற விதை காப்பகம் தேவையாகிறது. தற்போது வங்கி “லாக்கர்” போன்று வைத்து எடுத்துக் கொள்ளும் வசதி என்கிறார்கள். வேகமாக அழிந்து வரும் பாரம்பரிய விதைகளை காப்பாற்றி வருவது மனத்திற்கு மகழ்ச்சிதான் என்றாலும் போகப் போகத்தான் தெரியும் இவர்களின் நோக்கமும் செயலும். வீட்டிற்கு ஒரு குதிர் மறைந்து உலகத்திற்கே ஒரு “லாக்கர்” என்பது “புதிர்” தான்.

இன்றைய உலகம் புல்பூண்டு இன்றி அழிந்தாலும், அழிக்கப்பட்டாலும் இந்த காப்பகத்திலிருந்து விதைகளைப் பெற்று திரும்ப ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்று இதனை நிறுவியுள்ள அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. இனி மனிதனை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை நீரும் விதையும் போதும் ..அழிவை அவன் தேடிக் கொள்வான்.


புகைப்படம் உதவி : 'குதிர்' யெஸ்.பாலபாரதி

விதை காப்பாளர்கள் – (1) 
விதை காப்பாளர்கள் – (2) 
விதை காப்பாளர்கள் – (3)
விதை காப்பாளர்கள் – (4)  

Monday, July 9, 2012

விதை காப்பாளர்கள் – (4)


EarthE Award அங்கீகாரம்
Dr.வந்தனா சிவா சூழலியல், நிலம், நீர், காடுகள், இயற்கை விவசாயம், விதைஉரிமை போன்றவைகளில் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், பாதுகாக்கவும் போராடி வருகிறார். இதுபோன்ற விஷயங்களில் உலகத்திற்கு இந்தியாவின் முகம் Dr.வந்தனா சிவா அவர்கள் தான் என்றால் மிகையில்லை. 1982ஆம் ஆண்டு தனது முனைவர் பட்டம் பெற்ற இயற்பியல் துறையை விட்டு அறிவியல், தொழில்நுட்ப, சூழலியல் ஆராய்ச்சி அறக்கட்டளையை (RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) தொடங்கினார். பின்பு  நவதான்யா என்ற அமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய விதைகளை பாதுகாத்து 5,00,000 விவசாயிகளிடம் அதனை ஒரு விழாவாக நடத்தி பாரம்பரிய விதைகளின் மகத்துவத்தை பரப்பி வருகிறார். விதை சேமிப்பை பெண்களிடம் மிக சிறப்பாக கொண்டு சென்றுள்ளார். விதைகளுக்கான பள்ளியை (Bija Vidyapeeth) உத்தரகாந் மாநிலத்தில் நிறுவியுள்ளார். மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் "வாழ்வாதார உரிமை விருது" 1993ஆம் ஆண்டு பெற்றவர். 2010 இல் சிட்னி அமைதி பரிசு என்று நிறைய உலக அளவிலான பரிசுகள் பெற்றவர். இந்த ஆண்டு 2012 எர்த்இ (EarthE Award) பரிசுப் பத்திரம் இவருது உருவப் படத்துடன் அளிக்கப்படவுள்ளது இவரது உழைப்பிற்கும், சேவைக்கும் கிடைத்த உலக அங்கீகாரம்.  20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். “உயிரோடு உலாவ”,   “பசுமைப் புரட்சியின் வன்முறை” ஆகிய நூல்கள் ஏற்கெனவே தமிழில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து பாதுகாத்து மக்களிடம் பிரபலமாக்க இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் வாழ்த்தி வரவேற்பதோடு நில்லாமல் இவரது செயல்பாடுகளை நம் விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாலே இவரது பணிக்கு நாம் செய்யும் பேருதவியாகும். மேலும் நவதானியவைப் பற்றி அறிந்து கொள்ள http://www.navdanya.org


ஒரு சிறிய வீடியோ.




விதை காப்பாளர்கள் – (1) 
விதை காப்பாளர்கள் – (2) 
விதை காப்பாளர்கள் – (3)

Thursday, July 5, 2012

விதை காப்பாளர்கள் – (3)

Dr. Debal Deb

வேத காலத்தில் லட்சங்களிலிருந்தாகக் கூறப்படும் நெல் வகைகள் திரு.R.H.ரிச்சாயா (1960களில் ) காலத்தில் 20,000 குறைந்தது. இன்று (2012இல்) 700  பாரம்பரிய அரிசி வகைகளை வைத்திருக்கும் Dr.திபால் திப் 1997 ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அவைகளை விதைத்து பாதுகாத்து வருகிறார். இவை ஒவ்வொன்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் வசிக்கும் ஏழை விவசாயிகளிடம் சேகரிக்கப்பட்டவை, சிறப்பான குணங்களை உடையவைகள். வெள்ள சமயங்களில் நீர் தேங்குதல், மற்ற நேரங்களில் நீர் பற்றாக்குறை, உப்பு தன்மையை தாங்கி வளர்பவையாக, நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவையாக, சில வகை மணம் நிறைந்ததாக இருக்கின்றன. ஒரு தனி மனித சாதனை என்று கூறலாம். கம்பெனிகளுக்கு பணிவிடை செய்யாமல் விவசாயிகள் பயன் பெறும் வகையில் அவ்வளவு விதைகளையும் சிறிய இடத்தில் விதைத்து அறுவடை செய்து காப்பாற்றி வருவதோடு அவற்றை விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி அவர்களை பயிர் செய்ய வைத்து வாழ்கையில் ஒளியேற்றி வருகிறார். இந்திய விவசாய தற்கொலைகள் (2011 - 14,027) அதிகமாக ஒருகாரணம் விவசாயிகளிடம் விதை தற்சார்பு இல்லாமையாகும். இந்த விதை தற்சார்பு பரவாலக்கப்பட்டால் இந்திய விவசாயம் பிழைக்கும். இதனை படிக்கும் அன்பர்கள் விதை தற்சார்பு பற்றி உங்களுக்கு தெரிந்ததை பதிவேற்றினால் மற்றவர்களும் பயன் பெறுவார்கள். Dr.திபால் திப் தலைவராக உள்ள அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள :  http://www.cintdis.org/

ஒரு சிறு வீடீயோ காட்சி



விதை காப்பாளர்கள் – (1) 
விதை காப்பாளர்கள் – (2)  
விதை காப்பாளர்கள் – (4)