
1973 ஆண்டு ஒபெக் நாடுகள் எண்ணெய் கட்டுப்பாட்டை கொண்டுவந்த போது 99% எண்ணெய்யை பல்வேறு பணிகளுக்கு ஏரிபொருளாக பயன்படுத்திய டென்மார்க் நாட்டின் பொருளாதாரம் ஆடித்தான் போனது. ஆனால் ஆட்சியாளர்கள் துவண்டுவிடாமல் சரியான திசையில் செயல்பட்டதால் இன்று தன்னிறைவு பெற்று இப்போதுள்ள எண்ணெய் நெருக்கடி காலத்தில் கூட அதிக பாதிப்பின்றி செயல்படுகிறார்கள். காரணம் இயற்கையை மாசுபடுத்தாத காற்றாலை(Windmill) மூலம் மின்சாரம், சூரிய ஒளி, மிருக கொழுப்பு, விவசாயகழிவுகளிலிருந்து உயிர்நிறை (Biomass) என எல்லா வகையிலும் எரிசக்தி எடுக்கிறார்கள். 35 வருட கால இடைவெளி இன்று அவர்களை மற்ற உலகநாடுகளுக்கு இயற்கையை மாசுபடுத்தாத எரிசக்திக்கான தொழில் நுட்பத்தை வழங்கும் நாடாக மாற்றியிருக்கிறது. சில வளர்ந்த நாடுகள் போல் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் இயற்கை ஆதாரங்களை மாசுபடுத்தி அந்த நாடுகளின் எண்ணெய் வளத்தை கொள்ளையிடுவதில்லை அல்லது அணுசக்தி தொழில் நுட்பம் என கூறி சுரண்டுவதுமில்லை.
டென்மார்க்கிலுள்ள காற்றாலைகள்.
அவர்களது நாட்டின் மின்சாரத் தேவையில் சுமார் 20% காற்றாலை(Windmill) மூலம் பெறுகிறார்கள். உலக காற்றாலை தொழில் நுட்பத்தில் 40% டென்மார்க் நாட்டை சார்ந்து என்பது குறிப்பிடதக்கது. மக்களை எரிசக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் கையாண்ட முறைகள் மோட்டார் வாகனங்களுக்கு 105% வரி விதிப்பு, அதிக எரிபொருள் வரி, ஞாயிற்று கிழமைகளில் வாகனங்களை ஒட்டத் தடை, தெருவிளக்குகள் அணைத்தல், அதிக எரிசக்தி உபயோக்கிக்கும் தொழில்களான இரும்பு. சிமென்ட் இவைகளுக்கு அதிக வரிவிதிப்பு, அல்லது தடை என அரசால் கொண்டுவரப்பட்டதால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களும் எரிசக்தியின் அருமையை புரிந்து கொண்டனர் எனவே நெருக்கடி இல்லை.
ஆனைக்கட்டிப் பகுதியிலுள்ள காற்றாலைகள்.
மாறாக நாம் அன்னிய கார் கம்பெனிகளை உற்பத்தி செய்ய அனுமதித்து, ஊக்கமளித்து மக்களிடமுள்ள வாங்கும் சக்தியை வீதிகளில் வித விதமான கார்களாக மாற்றி சுற்றுச்சுழலை மாசு படுத்துகிறோம். கவர்ச்சியான விளம்பரங்கள் வேறு இதற்கு துணை. அதே நேரத்தில் கோவையில் ஒரு நிறுவனம் வீட்டிற்கான காற்றாலையை (Windmill) விற்பனை செய்கிறது அதைப்பற்றி செய்தி வெளிட தயங்கும் ஊடகங்கள். பொருளாதார முன்னேற்றம் என்று அதிக எரிசக்தி உபயோக்கிக்கும் தொழில்களான இரும்பு, சிமென்ட் போன்றவற்றிற்கு ஊக்கம் தருகிறோம்..
சிந்தித்து செயல்படவேண்டிய நேரமிது. மக்களிடமுள்ள வாங்கும் சக்தியை காற்றாலை, சூரிய ஒளி, விவசாயகழிவுகளிலிருந்து உயிர்நிறை (Biomass) போன்ற
தூய எரிசக்திகளில் (clean energy) முதலீடு, மரம் நடுதல், மழைநீர் சேமிப்பு, போன்றவற்றில் ஈடு செய்தால் வளமான இந்தியாவை மிக விரைவில் காணலாம். காணவேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் ஆவல்.
படம் உதவி: வலைதளம்