Tuesday, June 24, 2008

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்.

மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருது பெறும் திரு. M.Y. யோகநாதன்.

தனியார்மயம், உலகமயம் என இன்றைய பொருளாதாரம் மனிதனை இயற்கையை விட்டு விலக வைத்து எல்லாமே பணம் என்கின்ற அளவு கோலினால் அளக்கப்படும் இந்த கலியுகத்தில் " இப்படி ஒரு மனிதரா?" என்று நம்மை ஆச்சரியப்பட வைப்பவர் பசுமை போராளி திரு. M.Y. யோகநாதன். நடத்துனர் வேலை என்பதே கடினமான வேலை. இருப்பினும் அதையும் தாண்டி கிடைக்கின்ற ஒரு நாள் விடுமுறையக் கூட மரம் நடுதல், பாதுகாத்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையை போதித்தல்,சுற்றுலா என தன் சொந்த பொருளையும் செலவழித்து தமிழகமெங்கும் கடந்த 25 ஆண்டுகளாக வலம் வரும் தனிமனித சாதனையாளர் திரு. M.Y. யோகநாதன்.
குழந்தைகளுடன் இயற்கைச் சுற்றுலா

அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக கோவையில் மரங்களை அகற்றிய போது அவர் இயற்றிய கவிதைகள் இரண்டு என்னை வெகுவாக பாதித்தது என்னவோ உண்மை. (அதன் புகைப்பட காட்சி)
============================
மரம் அறத்து விழுந்த போது
இறந்து கிடந்த குருவியின்
வாயில் இருந்தது தன்
குஞ்சுக்கான ஆகாரம்.
============================
வேரோடு பிடுங்கிய மரத்தால்
வெறிச்சோடி கிடக்கிறது சாலை
சற்று நேரத்துக்கு முன்
நிமிர்ந்து நின்ற மரம்
கவிழ்ந்து கிடக்கிறது
மிக பகட்டாக போடப் போகும் சாலைகளுக்காக.
ஆக்சிஜன் குறைவால்
அவர்களை அள்ளிக்கொண்டு செல்கிறது
ஆம்புலன்ஸ் அலறலோடு
வெட்கிச் சிரிக்கிறது
வேரோடு உள்ள மரம்.
==========================
இந்த வருட Eco Warrior விருது பெற்ற 14 பேர்களில் விஞ்ஞானிகளும் வன அதிகாரிகளும் அடங்குவர். பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்கள் இருப்பது நமக்குப் பெருமை. இவர்களில் ஜான் ஆப்ரகாம் என்ற பிரபல இந்தி நடிகரும் உண்டு.

இறுதியாக தொழிற்சங்க தலைவர்களுக்கு அலுவலகம் வந்து கண்டிப்பாக வேலை செய்ய வேண்டியது இல்லை அது போன்று இயற்கைக்கு சேவை செய்யும் இவருக்கும் சில விடுப்புக்கள் அளித்தால் மேலும் நிறைய மரங்களும், இயற்கையை புரிந்து கொண்ட வருங்கால மன்னர்களும் தமிழகத்திற்கு கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எல்லா வளமும் பெற்று வாழ இவ்வலைப் பூ பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களை வாழ்த்துகிறது.

6 comments:

வனம் said...

வணக்கம்

அறியத்தந்தமைக்கு நன்றி உங்கள் வலைப்பூ மூலமே திரு. M.Y. யோகநாதன். பற்றி அறிந்தேன்

அவரின் தொடர்பு முகவரியோ, தொடர்பெண்ணோ கிடைத்தால் நன்றாக இருக்கும் இப்போதைக்கு இங்கு அவருக்கு என் வாழ்த்துக்கள்

நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போன வாரம் தான் விஜய் என்கிற பதிவர் இவரைப்பற்றி எழுதினார்.. எங்க நம்ம மரவளம் வின்செண்ட் போடக்காணுமேன்னு பார்த்தேன்..
கவிதை நல்ல கவிதை..

தசாவதாரத்துல ஒரு விண்செண்ட் வராரு பார்த்தீங்களா.. உடனே நினைவுகு வந்தது மண் மரம் மழை மனிதன் தான்..

ராஜ நடராஜன் said...

அவினாசி சாலை அகலாமாகத்தானே இருந்தது?இன்னும் அகலப்படுத்தி விட்டார்களா?

பசுமையை நேசிக்கும் யோகநாதனுக்கு வாழ்த்துக்கள்.

கபீரன்பன் said...

நண்பர் யோகநாதனின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள். நாடு இத்தகையவர்களின் பணியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இச்செய்தியை பிரசுரித்ததற்கு நன்றி

வின்சென்ட். said...

திரு.இராஜராஜன்
திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
திரு.ராஜ நடராஜன்
திரு.கபீரன்பன்

உங்கள் வருகைக்கு நன்றி. வேலை பழுவினால் கடந்த 1 மாத காலமாக சரியாக பதிவிடவில்லை. இருப்பினும் நண்பருக்கு விருது என்றவுடன் பதிவிடாமல் இருக்கமுடியவில்லை. இருக்கவும் கூடாது.அவரது தன்னலமற்ற செயல் உலகிற்கு தேவை எனவே அறிவிக்கப்பட வேண்டும்.

திரு.இராஜராஜன்
திரு. M.Y. யோகநாதன் 94430-91398

திருமதி.கயல்விழி முத்துலெட்சுமி
தசாவதாரம் பார்க்கவில்லை.நான் திரைபடம் பார்ப்பது மிகக் குறைவு.

திரு.ராஜ நடராஜன்
இன்னும் அகலப்படுத்தியுள்ளார்கள்.

திரு.கபீரன்பன்
தொடர்பு எண் தந்திருக்கிறேன். தொடர்பு கொள்ளுங்கள்.

வனம் said...

வணக்கம்

தொடர்பெண் கொடுத்ததற்கு நன்றி

அவருடன் தொலைபேசினேன்

நன்றி