Monday, October 11, 2010

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களுக்கு மேலும் இரு விருதுகள்.


தமிழக அரசின் விருது பெறும் திரு. யோகநாதன்
   ஈகோ வாரியார் (Eco Warrior ) விருதினைத் தொடர்ந்து மேலும் இரு விருதுகள் திரு. யோகநாதன் அவர்களுக்கு சென்ற மாதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் “சுற்றுச்சுழல் செயல் வீரர் ” விருதும் டிம்பர்லேன்ட் ஷூ கம்பெனி இந்தியாவில் தங்களது கடையை ஆரம்பித்த போது சுற்றுச்சுழலுக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ஐவரை தெரிந்தெடுத்து UNSUNG HEROES என்ற விருதினை வழங்கி கௌரவப்படுத்தியது.
"Unsung Heros" விருது பெறும் திரு. யோகநாதன்

திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் விருந்தினர்களுடன் 

விருது பெற்றவர்களுடன் திரு. ஜான் ஆப்ரகாம் மற்றும் திரு. மைக் பாண்டே
அந்த ஐவரில் ஒருவர் திரு. M.Y. யோகநாதன் என்பது நமக்குப் பெருமை. கிடைக்கின்ற ஓய்வு நேரத்தைக் கூட சுற்றுச்சுழலுக்கு அர்ப்பணிக்கும் இவரை மேலும் பல உயர்ந்த விருதுகள் வந்தடையவும் விருதினைப் பெற்ற அனைவரையும் இவ்வலைப் பூ உங்கள் சார்பாக வாழ்த்துகிறது.

இவரைப் பற்றிய எனது  பழைய பதிவு

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்

திரு.M.Y.யோகநாதன் அலைபேசி எண்
94430 91398

Sunday, October 3, 2010

அக்ரி இன்டெக்ஸ் 2010

டால்பின் வடிவில் மலர் அலங்காரம்
இந்த வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அரங்குகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு அதிக தகவல்களோடு இருந்தது. கருத்தரங்கம் நடைபெற்ற இடமும் அரங்குகளுக்கு மத்தியில் இருந்தது சிறப்பு. இந்திய வேளாண்மை வேலையாட்கள் சார்ந்து இல்லாமல் இயந்திரம் சார்ந்து மாறிக் கொண்டிருப்பதை தனியார் அரங்குகளில் காண முடிந்தது. இது நாட்டின் வளர்ந்து வரும் விவசாய வேலையாட்கள் பற்றாக் குறைக்கு தீர்வா ? அல்லது பிரதமர் கருத்துப் போல    நாம் வறுமையிலிருந்து தலைநிமிர்ந்து இருக்க ஓரே வழி அதிக ஆட்களை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவதுதான் (The only way we can raise our heads above poverty is for more people to be taken out of Agriculture )  என்று எண்ணுமளவிற்கு இராட்சத வேளாண்மை இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இயந்திரம்
இவ்வியந்திரங்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் சிறு,குறு விவசாயிகளுக்கு நிச்சயம் பயனளிக்கப் போவதில்லை. பின் எதற்கு இந்த இயந்திரங்கள் நாட்டில் நடக்கும் நிலபேரங்களைப் பார்க்கும் இது மிகப் பெரிய நிலபிரபுக்களுக்கும், கம்பெனி விவசாயத்திற்கும் வித்திடுகிறது அதே சமயம் குறைந்து வரும் மழையளவு சிறு, குறு விவசாயிகளை வரும் ஆண்டுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்ற உதவும் என்று தோன்றுகிறது. ஆனால் சில நல்ல விஷயங்களும் இருந்தன.
ஹைட்ரோபோனிக்ஸ் - காய்கறி வளர்ப்பு
எளிய நகர விவசாயத்திற்கு உதவும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் மண்ணில்லா விவசாயத்திற்கு அதன் மாதிரி அமைப்புக்களை வைத்திருந்தனர்.
ஹைட்ரோபோனிக்ஸ் - தீவன வளர்ப்பு

இதே முறையில் தீவன வளர்ப்பும் உண்டு என்று கூறி விரைவில் நம் நாட்டிலும் கிடைக்கும் என்றார்கள்.
சோலார் விளக்குப் பொறி
சோலார் விளக்கின் மூலம் பூச்சிகளுக்கு பொறி அமைப்பு நேர்த்தியாக இருந்துது. விலையும் சுற்று அதிகம் தான். இதனால் அவற்றை ‘திருட்டு’ காரணமாக நடைமுறையில் உபயோகபடுத்த முடியும் என்று தோன்றவில்லை. கொட்டில் வளர்ப்பு முறையில் ஆடு, பன்றி, கோழிவளர்ப்பிற்கு தேவையான தரைஅமைப்பு (Floor) நடைமுறையில் சிறப்பாக உபயோகப்படுத்த முடியும் என்று தோன்றியது.
உயரமான தரைஅமைப்பு (Floor)
எளிதாக கழிவுகள் கீழே விழவும் கழுவி விடுவதற்கு எளிமையாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். அமைப்பதும் பராமரிப்பதும் சுலபம்.இயற்கையிடு பொருட்கள் நிறைய இருந்தது. வண்ணமலர், காய்கனி அலங்காரங்கள் நேர்த்தியாக இருந்துது.
காய்கறியில் அலங்காரம்
பெருகி வரும் மக்கள் தொகை, குறைந்து வரும் மழையளவு, நகரத்தை நோக்கிச் செல்லும் கிராம மக்கள், சுருங்கி வரும் விளைநிலங்கள், மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக பலன் தரும் புதிய யுக்திகள், இயந்திரமயம் என இந்திய விவசாயம் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

Friday, October 1, 2010

பொன் முட்டையிடும் வாத்து.

பொன் முட்டையிடும் வாத்தை பேராசையால் அறுத்து கொன்ற கதையை இளவயதில் படித்திருக்கிறோம். அதற்கும் “டோங்க்ரியா கோண்ட்” பழங்குடியினர் தெய்வமாய் வணங்கும் நியமகிரி மலையை விழுங்கத் துடிக்கும் வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.


ஒருபுறம் காடுகள் 33% இருக்கவேண்டும் என்று கூறிக் கொண்டே மறுபுறம் இன்றைய பொருளாதார கொள்கைகளின்படி நடக்கும் அரசு எந்திரங்கள். அடுத்த உலகப் போர் “தண்ணீருக்காக” இருக்கும் என்று கூறிக் கொண்டே காடுகளை அழித்து மழையின்றி போவதற்கும், மழைவந்தால் வெள்ளபெருக்கு ஏற்படவும் பன்னாட்டு நிறுவனங்கள், வல்லரசுகள், பெரிய நிதி நிறுவனங்கள் செயலாற்றுவதும் அதனை “பொருளாதார வளர்ச்சி ” என்று திரு.பொதுஜனத்தை நம்ப வைப்பதும், அவர்களும் நம்பி ஏமாற்றமடைந்ததும் எல்லா நாடுகளிலும் நிகழ்த்தியிருப்பதும் வரலாறு. இந்த நூலை படியுங்கள்.

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ்.

அரசு இந்த முறை வேதாந்தா பாக்ஸைட் சுரங்க நிறுவனத்திற்கு அனுமதி மறுத்ததை இன்னும் கூட நம்பமுடியவில்லை. அடர்த்தி நிறைந்து மழைப் பொழிவைத் தரும் அந்த மலைக்கும் அதன் பூர்வக்குடிகளுக்கும் தற்சமயம் பிரச்னை இல்லை என்பது மனநிறைவைத் தருகிறது. இந்த அனுமதி மறுப்பு நிரந்தரமாக இருக்க வேண்டுமானல் பள்ளிக் குழந்தைகளுக்கு காடுகளின் அவசியத்தையும் பூர்வக்குடிகளின் வாழ்கை முறையையும் புரிய வைப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

11 நிமிட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

I can’t be told by anyone how to live. If  I said to The Minister "Move from your Home" he would think I was mad. Bushman : Botswana