Sunday, January 13, 2013

மனதை நெகிழ வைத்த "பசுமை விகடன்" வாசகர்.வாசகர்களின் மனதில் ஏற்படுத்தும் மனமாற்றத்தையும், நம்பிக்கையையும்  பொறுத்தது ஒரு கட்டுரையின் வெற்றியும் தோல்வியும். சில தினங்களுக்கு முன் அலைபேசி மூலம் பசுமை விகடன் (10-01-13) இதழில் வந்த  எனது மாடித் தோட்டம் பற்றிய கட்டுரையை படித்து விட்டு, வாசகர் ஒருவர்  கட்டுரை நம்பிக்கை அளிப்பதால் பார்க்க வருவதாக கூறினார். நானும் அலுவல் காரணமாய் வெளியூரில் இருந்ததால் எனது இயலாமையை தெரிவித்தேன். திரும்பவும் இரு தினங்கள் கழித்து  தொடர்பு கொண்டு வருவதாக விருப்பம் தெரிவித்தார். எனக்கோ அவர் எதிர்பார்த்து வரும் அம்சம் நம்மிடம் இருக்குமா? என்ற ஐயம், அவரும் விடுவதாக இல்லை இரவு முழுவதும் பயணித்து 13-01-2013 காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். விசாரித்ததில் 11 மணிநேரப் பயணம், பயணச் செலவு (வருவதற்கு மாத்திரம்) ரூ.135/=   என்றார்.
பசுமை விகடன் கட்டுரைப் பக்கத்துடன் திரு.ஐயாசாமி.


அவரைப் பற்றி.......திரு.P. ஐயாசாமி, வரகுபாடி கிராமம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  10வது படித்திருக்கிறார். வேறு உபதொழிலில் பணத்தை இழந்ததால் இதனை உபதொழிலாக செய்ய விருப்பதாகக் கூறினார். கட்டுரை அளித்த நம்பிக்கை, பயண நேரம், செலவு இவைகளை கணக்கிட்டு மன நெகிழ்ச்சியடைந்தேன். எல்லாவற்றையும் பரிசோதித்து விடை பெறுமுன் தான் தேடி வந்த அம்சங்கள் இருப்பதாகவும், நிறைய தெரிந்து கொண்டதாகவும் கூறியவுடன் எனது மனம் திருப்தி அடைந்தது. கட்டுரையின் வெற்றி நிறைய அன்பர்கள் அலைபேசியில் அழைத்தது மற்றும்  திரு.P. ஐயாசாமி அவர்களின் தேடுதல் பயணமும் தான் என்பதில் சந்தேகமில்லை.

சிக்கனமாய் தொங்கும்  தொட்டிகளுக்கு நீர் ஊற்றுகிறார்
கை பம்பை இயக்கிப் பார்க்கும்  திரு.ஐயாசாமி.
சுற்றுச்சுவர் பையுடன்
அகத்தி, முருங்கையை பைகளில்  வளர்ப்பதை பரிசோதித்தார்

நேர்காணல் கண்ட திரு. ஜி.பழனிச்சாமி அவர்களுக்கும், நேர்த்தியான புகைபடங்களை எடுத்த திரு.தி. விஜய் அவர்களுக்கும், பிரசுரம் செய்த பசுமை விகடன் ஆசிரியர் குழுவினருக்கும் பொங்கல் வாழ்த்துகளுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

 

10 comments:

kuppusamy said...

பசுமைவிகடன் இவரைக் கோவைக்கு இழுத்தமைக்குப் பாராட்டுக்கள். மக்கள் மாடித் தோட்டம் எந்தெந்த முறையில் செயல் படுத்தலாம் என்று அறிந்திருப்பார்கள். உங்கள் முயற்சி மேலும் வளர வாழ்த்துக்கள்.

வின்சென்ட். said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/

அன்புடன்
மனோ சாமிநாதன்

sakthi said...

ஒருவரது வாழ்க்கையை திருப்பு முனையாக மாற்றும் உங்கள் தோட்டம் மற்றும் உங்கள் உழைப்புக்கு நன்றிகள் ஐயா , திரு .அய்யாசாமி இந்த தோட்ட கலை மூலம் மென் மேலும் பெருகி வளர வாழ்த்துக்கள் .

வின்சென்ட். said...

திருமதி.மனோ சாமிநாதன்

என்னை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருப்பதற்கு மிக்க நன்றி. சில எளிய வைத்தியங்கள் அழிந்து வரும் நிலையில் உங்களைப் போன்றவர்கள் அதனை பிரபலப்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

வின்சென்ட். said...

திரு.சக்தி

உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

Pattu Raj said...

பாராட்டுக்கள். இந்த செய்தியை என் பதிவுலக, பேஸ் புக் , தோட்டம் பற்றி அவா உள்ள நண்பர் வட்டத்துடன் பகிர ஆவல்.

வின்சென்ட். said...

மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி.பகிர்ந்து கொள்ளுங்கள், சில எளிய முறைகள் மக்களை சென்றடைய வேண்டிய காலம் இது.

அக்‌ஷயா said...

இக்கட்டுரை பார்த்த பின்பு எனக்கும் மாடியில் தோட்டம் போடும் ஆசை வந்துவிட்டது.....

வின்சென்ட். said...

மிக்க மகிழ்ச்சி. முயற்சி செய்யுங்கள்.