Saturday, June 30, 2012

விதை காப்பாளர்கள் – (1)


திரு.நிகோலாய் இவானோவிச் வாவிலோவ்
 ரஷ்யாவில்  பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்திருந்த விதை சேமிப்பு நிலையம் பெரியதும் உலகப் புகழ் பெற்றதுமாகும். திரு.நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து விதைகளை சேகரித்தார். இரண்டாம் உலக போரில் ஜெர்மனியின் நாஜிபடைகள் பீட்டர்ஸ்பர்க் நகரை முற்றுகையிட்ட போது பல ஆயிரம் மக்கள் உணவின்றியும் நோயாலும் இறந்தனர்.
உயிரை விட்ட விஞ்ஞானிகளில் சிலர்
சேமிப்பு நிலையத்தில் வேலை செய்த விஞ்ஞானிகளுக்கும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவர்கள் நினைத்திருந்தால் அந்த விதை தானியங்களை சமைத்து உண்டு உயிர் வாழ்ந்திருக்கலாம். ஆனால் விதைகள் வருங்கால சந்ததியினர் பசியின்றி வாழ சாகாவரம் பெற்றவைகள் என்பதை உணர்ந்து பசிக்கு உண்ணாமல் பாதுகாத்து உயிர் துறந்த 12 ரஷ்ய விஞ்ஞானிகளின் தியாகம் விதைகளின் சேமிப்பு வரலாறில் ஒரு மைல் கல். நவீன விதை வங்கிகளின் தந்தை என்றழைக்கப்படுபவர் திரு.நிகோலாய் இவானோவிச் வாவிலோவ். வருங்கால மக்களுக்கு உணவிற்கான ஆதாரத்தை ஏற்படுத்தியவர் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உணவின்றி 1943 ஆண்டு உயிர் துறந்தார் என்பது  வரலாற்றில் ஒரு மிகப் பெரிய சோகம். இன்று பாரம்பரிய விதைகள் சுவடே இல்லாமல் மறைந்து வரும் வேளையில் சுமார் 2,50,000 விதை, கிழங்கு, பழங்கள் என அன்றே சேகரித்து வைத்திருந்தார்கள் என்றால் அவர்களின் தொலைநோக்கு பார்வையும், உழைப்பும், தியாகமும் போற்றுதற்குரியது.

Wednesday, June 20, 2012

ரியோ+20(Rio+20) நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு



20 ஆண்டுகளுக்கு முன்னர்   ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஐ.நா அனைத்துலக பூமி மாநாட்டின் தொடர்ச்சியாக, தற்போது ரியோ+20 என்ற நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா மாநாடு இன்று தொடங்கி 3 நாட்கள் அதே ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கின்றது. மாநாட்டின் இரு முக்கிய நோக்கங்களில் ஒன்று எவ்வாறு பசுமை பொருளாதாரத்தை உருவாக்கி நிலையான வளங்குன்றா வாழ்வாதாரத்தை தந்து மக்களை வறுமையிலிருந்து மீட்பது. மற்றொன்று எவ்வாறு உலக நாடுகளிடையே கட்டமைப்பை ஏற்படுத்தி வளங்குன்றா வளர்ச்சியை நிலைநிறுத்துவது.

பசுமை பொருளாதாரம் பற்றிக் காண : http://maravalam.blogspot.in/2012/06/2012.html

தற்போதைய உலக மக்களின் நிலைமை.

இன்று உலக ஜனதொகை 7 பில்லியன். 2050 இது 9 பில்லியன் ஆகும்

ஐந்தில் ஒருவர் அதாவது 1.4 பில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு $1.25 (சுமார்.ரூ.68/=) கீழே உள்ள தொகையில் வாழ்கிறார்கள்.

1.5 பில்லியன் மக்கள் மின்சார பெற வழியின்றி இருக்கிறார்கள்.

2.5 பில்லியன் மக்கள் கழிவறை வசதியின்றி வாழ்கிறார்கள்.

சுமார் 1 பில்லியன் மக்கள் பட்டினியாய் படுக்கைக்கு செல்கிறார்கள்.

பசுமை இல்ல வாயு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியே தொடர்ந்து உயர்ந்தால் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் நன்கு அறிந்த உயிரினங்கள் மறைந்துவிடும்.


 இந்த நிலைமாறி நமது குழந்தைகளுக்கும், பேரகுழந்தைகளுக்கும் வருங்காலங்களில் அமைதியான வாழவைத்தர வேண்டுமானால் இந்த ரியோ+20 மாநாடு வெற்றி பெற வேண்டும். ரியோ+20 மாநாடு வெற்றி பெற இவ்வலைப் பூ மனமார்ந்த வாழ்த்துகளை உலக தலைவர்களுக்கு சமர்பிக்கின்றது.

“Rio+20 will be one of the most important global meetings on sustainable development in our time.”
– UN Secretary-General Ban Ki-moon


Saturday, June 16, 2012

தேசீய நீர்கொள்கை - 2012


ஜீவராசிகளின் வாழ்வாதாரம் பஞ்ச பூதங்கள். ஜீவராசிகளில் ஆறாம் அறிவு பெற்ற மனிதன் தன் இனத்தை அழிப்பதோடு மற்ற ஜீவராசிகளையும் அழிப்பதில் தொழிற்புரட்சிக்குப் பின் மிகச் சிறப்பாக செயல்படுகிறான். திட்டங்களையும், சட்டங்களையும் இட்டு சுரண்டுவதில் அவனுக்கு நிகர் அவனே. நிலத்தில் ஆரம்பித்த ஆசை இறுதியாக கச்சா எண்ணையிலிருந்து மாறி மூன்றாம் உலகப் போர் நீருக்காக என்று கணிக்கும் அளவிற்கு மாறியுள்ளது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரை தங்களது கட்டுப்பாட்டில் தக்கவைக்க பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் நிதி நிறுவனங்களுடன் கை கோர்த்து ஆர்ப்பரிக்கின்றன. ஆனால் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம் என்பதை சென்ற வாரம் வெளியான மத்திய அரிசின்  தேசீய நீர்கொள்கை 2012 பற்றி பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதித்ததும் மக்களும் அதனைப் பற்றி கவலைப்படாததும்தான். ஒரு வாழ்வாதார உரிமையில்  ( நில உரிமையாளர்களின் நிலத்தடி நீரை அவர்களுக்கு உரியதாக்கும் Easement Acts 1882 இல்) மாற்றங்கள் கொண்டு வந்து தனியார்க்கு  தாரை வார்க்கும் முயற்சி சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இம்முறை தலை தப்பியது. ஆனால் நிச்சயம் எதிர்காலத்தில் பறிக்கப்படும் இது காலத்தின் கட்டாயம். பறிக்கப்பட்டால் தமிழகத்தின் விவசாயத்தை எண்ணிப் பாருங்கள்??? பருவ மழை ஆரம்பிக்கும் நிலையில்  மழைநீர் சேமிப்பை உங்கள் இல்லங்களிலும், பண்ணைக் குட்டைகளை உங்கள் விவசாய நிலங்களிலும் ஆரம்பியுங்கள். தண்ணீர் தட்டுப்பாடு வந்தால் சமுதாயத்தில் அமைதியின்மை தோன்றும்.

இன்றைய மழை நீர்
நாளைய குடி நீர் மற்றும் உயிர் நீர்.

Thursday, June 7, 2012

நேபாளத்தில் வெட்டிவேர் - ஒரு பார்வை


இமயமலைத் தொடரில் அமைந்த மலைகள் நிறைந்த நாடு நேபாளம். இயற்கை அன்னை தன் அழகை அள்ளி தெளித்த நாடு. பனிப்பாறைகள், மேடுபள்ளங்கள்,காடுகள் நிறைந்த நாடு. இதுபோன்ற நாடுகளின் சுற்றுச்சுழலில் மழை பெறுவதற்கும், மண் அரிப்பை கட்டுப்படுத்தி மண் வளத்தையும் நீர் வளத்தையும் காப்பாற்றி கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில்  காடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் தற்போதைய பொருளாதாரம்  இயற்கை வளங்களை அழித்துத்தான் மக்கள் மேம்பாடு என்று ஆன பின்பு காடுகள் அழிக்கப்படுகின்றன. விளைவு மழையளவு குறைந்து  மண் அரிப்பு ஏற்பட்டு உயிரின வளம் குறைந்து கிராம மக்களின் வாழ்வாதாரம்  கேள்விக் குறியாகிறது. அதனை மாற்றும் முயற்சியில் நேபாள வெட்டிவேர் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து நேபாள் வெட்டிவேர் நெட்ஒர்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்கள் "சிந்துபால்சௌக்" என்ற நீர்வழிப்பாதையை மண்சரிவிலிருந்து காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சியை புகைப் படமாய் உங்கள் பார்வைக்கு.

Source :Sri.Ramjee shrestha Secretary
Nepal Vetiver Network (NPVN)

Tuesday, June 5, 2012

2012 சுற்றுச்சுழல் தினமும் 'பசுமை பொருளாதாரமும்’


சுற்றுச்சுழல் தினக் கொண்டாட்டம் 40 ஆண்டுகளான நிலையில் பின்னோக்கிப் பார்த்தால் முதல் 25 ஆண்டுகள் இயற்கை வளங்களை சுரண்டியும், இரசாயன மருந்து மற்றும் உரங்கள் கொண்டு மாசுபடுத்தியும், நாடுகளுக்கும் இனங்களுக்கும் சண்டை ஏற்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை வளர்த்த கதைதான் அதிகம். இயற்கை நிலை வேறாக இருக்க மற்ற நாடுகள் உண்மைகள் அறிந்தவுடன் நிலைமை மாறுகிறது. மாற்றத்தின் விளைவு  இந்த ஆண்டு 2012 சுற்றுச்சுழல் தினம் 'பசுமை பொருளாதாரம்' என்னும் தலைப்பில் கொண்டாடவிருக்கிறோம். பசுமை பொருளாதாரம் (green economy) வரும் ஆண்டுகளில்   மிக அதிகமாக உபயோகிக்கப்படும் சொல்லாக இருக்கப் போகிறது. இது வெறும் சொல்லாக இல்லாமல் ஆக்கப் பூர்வமாக செயல்படுத்தப்பட்டால் நிச்சயம்  அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான பூவுலகையும் அமைதியான வாழ்க்கையையும் தர முடியும்.

பசுமை பொருளாதாரம் (green economy) என்றால் ?? UNEP (United Nations Development Programme ) defines a green economy as one that results in “improved human well-being and social equity, while significantly reducing environmental risks and ecological scarcities” (UNEP 2010). மனித நலவாழ்வு மற்றும் சமூக சமத்துவத்தில் முன்னேற்றத்தைக் கொண்டு வரக்கூடியதாகவும் சுற்றுச்சுழல் பாதிப்பு மற்றும் பற்றாக்குறையை தவிர்ப்பதாகவும் அமையக் கூடிய பொருளாதாரமே பசுமை பொருளாதாரம்கீழ்கண்ட  துறைகளைத் தேர்வு செய்து  ரியோ + 20 மாநாட்டில் கருத்துப் பரிமாற்றம் செய்யவுள்ளனர்.

இயற்கை வளங்களில் முதலீடு
1. வேளாண்மை
2. மீன் வளம்
3. தண்ணீர்
4. காடுகள்

சக்தி, மற்ற வளங்களின் திறனில் முதலீடு
5. எரிசக்தி
6. தொழில் துறை
7. குப்பை
8. கட்டிடங்கள்
9. போக்குவரத்து
10.சுற்றுலா
11. நகரங்கள்

பசுமை பொருளாதாரத்திற்கு மாற உதவுதல்
12. பசுமை மாதிரி திட்டங்கள் உருவாக்குதல்
13. சூழ்நிலைகளை உண்டாக்குவது.
14. பொருளுதவி

பொன்னும் பொருளும் விலையுயர்ந்த காரும், வீடும் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு உதவாது. சுத்தமான காற்றும் நீரும், வளமான மண்ணும் தான் தேவை. அதனை பாதுகாத்துத் தருவது நம் தலைமுறையின் கடமை.

மேல் அதிக தகவல்களுக்கு : http://www.unep.org/greeneconomy/GreenEconomyReport/tabid/29846/Default.aspx