Friday, September 24, 2010

பிறர் நலம் நோக்கும் திரு. வெ. தலைமலை நாடார்.

திரு. வெ. தலைமலை நாடார்.
வயதானவர்கள் கிராமபுறங்களில் பேருந்துக்காக காத்திருக்கையில் நிழல் பகுதி சாலையின் எதிர்புறம் இருந்தால் அங்கு அமர்ந்து பேருந்து வரும்போது அவசர அவசரமாக திரும்பும் போது கால் இடறி சாலையில் விழுவது பொதுவாக நடக்கும் ஒரு செயல். இதே நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் “தேவிபட்டினம் விளக்கு” பகுதியில் ஒரு வயதான பாட்டிக்கு நிகழ்ந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த சைக்கிளில் சென்று பேப்பர் வியாபாரம் செய்யும் அந்த மனிதரின் எண்ணத்தில் சாலையின் இந்த புறத்திலும் மரம் இருந்திருந்தால் பாட்டி விழுந்திருக்கமாட்டார்கள் என்ற சிறு விதை விழுந்தது.
தேவிபட்டினம் விளக்கு பகுதி மரம் வளர்ந்த பின்பு.
உடனே செயல்பட ஆரம்பித்தார். அந்த இடத்தில் மரங்களை நட்டு வளர்க்க ஆரம்பித்தார். பின்னாட்களில் வியாபாரத்தை வெற்றிலைக்கு மாற்றினார். ஆனால் மரம் நடும் பணியை மாத்திரம் மாற்றாமல் தொடர்ந்து எல்லா இடங்களிலும் செய்து வருகிறார். மனைவியும் ஆதரவு தர சொந்த செலவில் தண்ணீர் ஊற்றுவதற்கு கூலியாள் வைத்து தண்ணீரை எடுத்துச் செல்ல ஒரு வண்டியையும் ஏற்பாடு செய்தார். இன்று அந்த தம்பதியினருக்கு 10,000க்கும் அதிகமான குழந்தைகள் அவர் தெற்கு தேவதானம் ஊரை சேர்ந்த திரு.வெ. தலைமலை நாடார் அவர்கள். உழைப்பால் உயர்ந்தவர் சமூக பணியில் தோய்வேயில்லை. சென்ற மாதம் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சுற்றுச்சுழல் பற்றிய அவரது ஆழ்ந்த ஞானம் மகிழ்ச்சியை தந்தது. பரபரப்பு நிறைந்த இன்றைய உலகில் பணத்தை பற்றி மாத்திரமே பேசும் பல்வேறு மனிதர்களை விட்டு இவர்களைப் போன்று தன் நலம் பார்க்காமல் பிறர் நலம் நோக்கும் மனம் படைத்த நல்ல மனிதர்களை சந்திக்கும் போது வாழ்கையின் அர்த்தம் புரிகிறது. பல்வேறு விருதுகள் பெற்றிருக்கும் இவர் மேலும் அரிய பெரிய விருதுகள் பெற்று மர வளர்ப்பில் மேலும் சாதனை செய்ய இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.


தொடர்பிற்கு:
திரு. வெ. தலைமலை நாடார் (வெற்றிலை வியாபாரம்)
தெற்கு தேவதானம்
இராஜபாளையம் தாலூக்கா
விருது நகர் மாவட்டம்

அலைபேசி : 93632 62808


Tuesday, September 14, 2010

தமிழகத்தை பசுமைப்படுத்தும் முயற்சியில் திரு. மரம் K. கருணாநிதி

நாற்றுக்களை வினியோகிற்க தயாராகும் திரு. கருணாநிதி.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் சிலர் எல்லோரும் நலமுடன் வாழ தங்கள் சக்தியையும் தாண்டி சிறப்பாக பொது சேவையில் நம்மை வியக்க வைக்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இவர்கள் செய்யும் சேவை மகத்தானது. அந்த சிலரில் ஒருவர் திரு.மரம் K. கருணாநிதி.. மிகவும் பொறுப்புடன் அதிக கவனமாக செய்யவேண்டிய பேருந்து ஓட்டுனர் பணியை செய்கிறார். கிடைக்கின்ற ஒரு நாள் ஓய்வையும், விடுமுறை நாட்களையும் மரம் நடுவதில் செலவிடுகிறார். கூடவே சொந்த செலவில் (மாதம் 4 இலக்க அளவில்) மரக் கன்றுகளையும் வாங்கி இலவசமாக வினியோகித்து தமிழகத்தில் ஒருபுரட்சியை உருவாக்கி வருகிறார். மூச்சு, பேச்சு என்று எல்லாமே மரத்தைப் பற்றி மாத்திரமே. ‘விதை சேகரிப்பு’ செய்து பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்து ஆர்வத்தை குழந்தைகளிடம் வளர்க்கிறார். கோடி மரங்கள் நடுவதை லட்சியமாகவும், திருமதி. வாங்கரி மத்தாய் அவர்களை சந்திப்பதை ஆசையாகவும் வைத்திருகிறார்.
குடும்பத்தினருடன் திரு. கருணாநிதி.

இந்த நவீன “எல்லாமே பணம்தான்” பொருளாதாரத்தில் ஓய்விற்கு வெளிநாட்டுச் சுற்றுலா அல்லது ‘குளு குளு ஊர்கள்’ என்று மெத்தப் படித்தவர்களும் பணம் படைத்தவர்களும் சமூக பொறுப்புக்களை தவிர்த்து வாழ்கையை அனுபவிக்க, இவர்கள் தங்கள் வாழ்நாள் இலட்சியமாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தில் பெரிய மாறுதலுக்கு வித்திடுகின்றனர். விருதுகளுக்காக அலையும் கூட்டத்தில் இவர்களைத் தேடி விருதுகள் (தேசிய, மாநில விருதுகள்) வருவதில் ஆச்சரியம் இல்லை. லட்சக் கணக்கான மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தும், வினியோகம் செய்தும் சாதனை செய்யும் இவரை மேலும் விருதுகள் வந்தடையவும் இவரைப் போன்று மேலும் பலர் உருவாகவும் இந்த வலைப்பூ வாழ்த்துகிறது.

திரு. மரம் K. கருணாநிதி
எண் : 4  கடைவீதி
சங்கீதமங்கலம்  ( அஞ்சல் )
விழுப்புரம் மாவட்டம்

அலைபேசி : 93661 09510,  97878 76598


 
மேலும் இவர்களைப் பற்றியும் படியுங்கள்.




Wednesday, September 8, 2010

உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பின்( International Rainwater Harvesting Alliance ) பரிசு பெற்ற குறும்படம்.

உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பு ( International Rainwater Harvesting Alliance )ஜெனிவா நகரில் 2002 ஆண்டு நவம்பர் மாதம் முதல்  செயல்பட்டு வருகிறது. மழைநீர் சேமிப்பின் அவசியம் கருதி உலகின் பிரபல நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களுடன் சேர்ந்து பிரச்சாரம், ஆலோசனை, அனுபவம், தாங்குதல் மற்றும் பகிர்தல் போன்ற பல காரியங்களை வறட்சி மிகுந்த பகுதிகளில் செய்து வளமான வாழ்விற்கு உதவி வருகிறன்றனர். 2009 ஆண்டு குறும்பட போட்டியில் பிரேசில் நாட்டின் திரு. ரோஜர் எல் சாண்டோஸ் அவர்களின் குறும்படம் ‘Right Under Our Nose’ முதல் பரிசை (Raindrop Award Geneva 2009 ) தட்டிச்சென்றது. இன்றைய மனிதன் செய்யும் தவறான வாழ்கை முறையை சுட்டிக் காட்டி மழைநீரை எப்படி சேமித்து அழிவிலிருந்து தப்பி மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை 90 வினாடிகளில் படத்தில் காட்டுகிறார். அதனை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.




உலக மழைநீர் சேமிப்பு கூட்டமைப்பின் வலைதள முகவரி :
http://www.irha-h2o.org/

Thursday, September 2, 2010

மூலநோய்க்கு (Haemorrhoids ) பச்சிலை வைத்தியம்.

தவறான உணவுப் பழக்கம், இரவுப்பணி, ஓரே இடத்தில் அமர்ந்து பணி செய்தல், தினமும் நீண்டதூரப் பயணம், உடற் பயிற்சியின்மை, சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது என்று பல காரணங்கள் இந்நோய் வருவதற்கு கூறலாம். இந்த நோய் உள்ளவர்கள் ஆரம்ப நிலையில் இதனைப் பற்றி பேச தயக்கப்பட்டு பின் நோய் முற்றியபின் அவர்களது நடையில் மாற்றம் ஏற்படும் போது பிறரின் கேலிக்கு உள்ளாவதை பார்க்கிறோம். அறுவை சிகிச்சை என்று வரும்போது நேரம் மற்றும் பணம் விரையமாவதை தவிர்க்க முடிவதில்லை. ஆரம்பநிலையில் இருப்பவர்கள் அதிக நார்சத்துள்ள காய்கறி மற்றும் பழவகைகளை உண்ண நோய்யை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
எனது வீட்டிலிருக்கும் செடி
ஆனால் ஒரு மெக்சிகோ நாட்டுத் தாவரம் ஐயப்பனா (EUPATORIUM TRIPLINERVE Vahl - AYAPANA) அறுவை சிகிச்சை நிலையில் இருப்பவரைக் கூட மிக எளிதாக குணப்படுத்துகிறது. சுமார் 5 இலைகளை காலையில் பல்சுத்தம் செய்து வெறும் வயிற்றில் இதனை உட்கொண்டு சிறிது சுடுநீர் அருந்தவேண்டும். பின் 30 நிமிடங்கள் கழித்து உணவருந்தலாம். நோயின் தன்மையை பொறுத்து 5 முதல் 10 நாட்களில் குணமாகிவிடுகிறது. இதனை நிறைய நண்பர்களுக்கு அளித்து அவர்கள் நலமுடன் இருப்பதை நான் காணுகிறேன். இதனை வளர்ப்பது மிக எளிமையானது. மொரிஷியஸ் நாட்டில் முதன்மை தாவரமாக உள்ள "ஐயப்பனா" தமிழகத்தில் இன்னும் இது பிரபலமாகவில்லை.