Saturday, May 1, 2010

கீரையே நம் இரை (உணவு) --- (1)

உயிர்ச்சத்தும் (வைட்டமின்), தாது உப்புக்களும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், பல தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. எனவே கீரையை நாம் “பாதுகாக்கும் உணவு” (Protective Food ) என்கிறோம். மேலும் இரும்புச்சத்து, கால்சியம், உயிர்ச்சத்து ‘ஏ’ (கரோட்டின்), உயிர்ச்சத்து ‘சி’ மற்றும் உயிர்ச்சத்து ‘பி’ காம்ப்ளக்ஸ் அதிலும் குறிப்பாக ஃபோலிக் ஆசிட், ரைபோஃப்ளேவின் நிறைந்து காணப்படுகிறது. புரதச்சத்து மிகக்குறைந்த அளவே கீரை வகைகளில் காணப்படுகிறது. பச்சைக்கீரையை பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் சேர்த்து உண்ணும்போது தரமான புரதச்சத்து கிடைக்கிறது. எலும்பு, பல் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு பலம் அளிக்கிறது.

கண்ணுக்கு உணவு கீரை
குழந்தையிலிருந்து கண்களை குறை பாடின்றி பாதுகாக்க மிக இன்றியமையாதது உயிர்ச்சத்து ‘ஏ’. நம் உடலில் உயிர்ச் சத்து ‘ஏ’ குறையும்போது கண்ணில் ஈரத் தன்மை குறைந்து, சுருக்கம் ஏற்பட்டு வற்றிவிடுகிறது. இதனால் மங்கலான வெளிச்சத்தில் காண்பது கடினம் (மாலைக் கண் நோய்). உயிர்ச்சத்து ‘ஏ’ குறைபாட் டின் தொடக்க கால அறிகுறியான மாலைக் கண் நோயை குறித்த நேரத்தில் குணப்படுத்த வேண்டும். இல்லையேல் கண்கள் சிவப்புநிறமாக மாறி கார்னியா (கண்ணின் கருமையான பகுதி/கண்மணி) வெடித்து நிரந்தரமாக பார்வை இழக்க நேரிடும்.உயிர்ச்சத்து ‘ஏ’ அதிகளவில் நிறைந் துள்ள உணவுகள் பின்வருமாறு: பால், தயிர், மோர், நெய், கீரை, வெண்ணெய், முட்டைக்கரு, மஞ்சள் மற்றும் சிவப்புநிற காய்கறிகள் (பூசணி, காரட், பீட்ரூட்) மற்றும் ஈரல். உயிர்ச்சத்து ‘ஏ’ என்பது உடலில் கரோட்டினாக உட்கொள்ளப்பட்டு பின்னரே உயிர்ச்சத்து ‘ஏ’ வாக மாற்றப்பட்டு உட்கிரகிக்கப்படுகிறது.பச்சைக்கீரைகளிலிருந்து கிடைக்கும் தரமான உயிர்ச்சத்து ‘ஏ’ ஆனது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சீரான இரத்தத்திற்கு உணவு கீரை
நம் உடலில் சீரான இரத்த ஓட்டத் திற்கு இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், உயிர்ச்சத்து பி-12, புரதச்சத்து மற்றும் உயிர்ச்சத்து ‘சி’ தேவைப்படுகிறது. மேற் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் நம் உடலுக்கு கிடைக்கப்பெறாவிட்டால் இரத்த நிறமி ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ( Anaemia ) ஏற்படுகிறது. இரத்தசோகை என்பது எந்த வயதினரையும் யாரையும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பிரசவ கால பெண்களை அதிகம் பாதிக்கிறது. இதனால் தனி நபரின் வேலை செய்யும் திறன் குறைந்து உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வை ஏற் படுத்தும். பிரசவகால பெண்களுக்கு குறைமாத பிரசவம், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் சில: அதிகாலையில் உடற்சோர்வு, பசியின்மை, தூக்கமின்மை, சுவாசப்பிரச்சனைகள், மயக்கம், தோல் வறட்சி, கண்ணில் கீழ் இமை, உதடு மற்றும் நாக்கு வெளிரித் தோற்றம் அளித்தல்.பச்சைக்கீரை வகைகளே முதல் தரமான இரும்புச்சத்து அதிக அளவில் மலிவான விலையில், எங்கும் எளிதில் கிடைக்கும். சாதாரணமாக 50 கி. கீரையை மட்டும் தினசரி ஒருநபர் எடுத்துக் கொண்டாலே போதுமானது. அந்த 50 கி. பச்சைக்கீரையிலிருந்து வரும் இரும்புச் சத்து ஒரு நாள் உடலின் தேவையை பூர்த்தி செய்து விடுகிறது.இரும்புச்சத்து, உடலில் எளிதில் உட்கிரகிக்க உயிர்ச்சத்து ‘சி’ மிக மிக அவசியம். பச்சைக்கீரைகளில் இயற்கையாகவே உயிர்ச்சத்து ‘சி’யும் இரும்புச்சத்தும் உள்ளதால், நம் உடலில் எளிதில் இரும்புச் சத்து உட்கிரகித்துக் கொள்ளப்படும். அதே சமயம் அசைவ உணவான கல்லீரல், மண்ணீரலில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் முழுவதுமாக உட்கிரகிக்க உயிர்ச் சத்து ‘சி’ நிறைந்த நெல்லிச்சாறு, ஆரஞ்சுப்பழச்சாறு அல்லது எலுமிச்சைச் சாற்றினை அருந்தினால் போதும்.

-இரா.ஜென்னி இராஜசேகர் Source : தீக்கதீர்/கோவை/17-03-2010

4 comments:

settaikkaran said...

மீண்டும் ஒரு அற்புதமான பதிவு. அருமையான தகவல்கள். உங்களது உறுதியையும், விடாமுயற்சியையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. விரைவில் உங்களது வலைப்பதிவின் மீதும் வண்ணவிளக்குகளில் ஒளி விழுவது நிச்சயம்!

வின்சென்ட். said...

திரு.சேட்டைக்காரன்

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி. எனக்கு கிடைக்கின்ற நல்ல விஷயங்கள் பதிவுலகை சென்றடைய வேண்டும் என்பது எனது ஆவல். அதில் சிலர் பயனை பெற்றார்கள் என்றால் கூட எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

ஈரோடு கதிர் said...

பயனுள்ள மிக முக்கியமான தகவல்..

நன்றி

வின்சென்ட். said...

திரு.கதிர்

உங்கள் வருகைக்கு நன்றி.