Thursday, April 22, 2010
புவி தினம் ஏப்ரல் 22
மனித இனம் இவ்வளவு நாட்களாக பஞ்ச பூதங்களில் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கும்தான் அழிவைத் தந்து தங்கள் பொருளாதாரத்தை சிதைக்கும் என்று இருந்தனர். ஆகாயம் கூட பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் ஐஸ்லாந்து நாட்டில் ஏற்பட்ட எரிமலை புகை ஐரோப்பிய நாடுகளின் ஆகாய வெளியில் படர்ந்து விமான சேவையை கேள்வி குறியாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 17,000 விமான சேவைகள் ரத்து செய்யபட்டதாக பத்திரிக்கை செய்தி. பின் டெல்லி, மும்பையில் பயணிகள் 41,000 பேர் தவிப்பதாக செய்தி. சிலர் விமான நிலையங்களில் படுத்திருப்பதாக படங்கள்.
இந்த புவி தினத்தில் இயற்கை கண்சிமிட்டினால் மனிதன் மிகமிக சாதாரணமானவன் என்பதை புரிந்துகொண்டு கனவான்களும், தனவான்களும் தங்களின் பொருளாதாரத்தை மாத்திரம் பேணாமல் அடுத்த தலைமுறை சுகமாக வாழ இயற்கையையும் பேணிகாப்பதில் அக்கரை செலுத்தவேண்டும் என்று இவ்வலைப் பூ விரும்புகிறது.
Saturday, April 17, 2010
உலக ஹீமோபீலியா தினம் (World Hemophilia Day )17-04-2010
ஹீமோபீலியா என்பது இரத்தத்தின் உறையும் தன்மை குறைபாட்டினால் வரும் ஒரு பரம்பரை நோய். இக்குறை உள்ளவர்களுக்கு சிறு காயங்களினாலோ, அடிபடுவதாலோ அல்லது தானாகவோ தொடர்ந்து இரத்தகசிவு ஏற்படும்.
அறிகுறிகள்
தொப்புள் கொடி விழுந்த பின் நிற்காமல் தொடர்ந்து இரத்தம் கசிதல்
உடலில் ஆங்காங்கே நீலநிறத் தழும்புகள் தோன்றும்.
மூட்டுக்களில் குறிப்பாக கால் மூட்டுக்களில் திரும்பதிரும்ப வீங்கி வலித்தல்.
உடலில் காயம் ஏற்பட்டபின், பல் விழுந்தபின் அல்லது பல் எடுத்தபின் மற்றும் பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல்.
சிகிச்சை
இந்நோயை குணப்படுத்த முடியாது ஆனால் முறையான சிகிச்சையின் மூலம் கட்டுபடுத்த முடியும். இரத்தம், பிளாஸ்மா, கிரையோபிரிஸிடேட் மற்றும் உறைபொருளை செலுத்துவதன் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. சாராசரியாக ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு ரூ.40,000/= செலவளிக்கப்படுகிறது.
ஹீமோபீலியா சொஸைட்டி
இந்தியாவில் 1:10,000 என்ற கணக்கில் நோயாளிகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இக்குறைபாடு உள்ளவர்களை கண்டறிதல், நோய் மற்றும் சிகிச்சை பற்றி தகவல்களை அளிப்பது, குறைந்த செலவில் சிகிச்சை கிடைக்க செய்வது ஆகியவற்றை குறிகோள்களாக கொண்டு நம் நாடு முழுவதும் சுமார் 63 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களுக்கு உதவுவது எப்படி?
ஒரு நபரின் மருந்து மற்றும் மருத்துவ செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
அக்குழந்தைகளின் கல்விச் செலவினை ஏற்றுக்கொள்ளுதல்.
பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
எல்லா நன்கொடையாளர்களும் வருமானவரி சட்டம் பிரிவு 80-G இன் கீழ் வரிவிலக்கு பெறுவர்.
மேலும் விபரம் மற்றும் உதவு பெற:-
ஹீமோபீலியா சொஸைட்டி - கோயமுத்தூர் சேப்டர்
29/1 ஜே. பி. ஆர். காம்ப்ளக்ஸ் ( பார்க் மருத்துவமனை அருகில் )
காளப்பட்டி ரோடு,
கோவை - 641 014
தொலைபேசி : 0422 - 2627408
அலைபேசி : 98940 - 98897
மின்னஞ்சல் : hemop@md3.vsnl.net.in
இயற்கை முறை ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
Monday, April 12, 2010
ஒடியன் --- பழங்குடி மக்களின் வாழ்க்கை போராட்ட கவிதை தொகுப்பு.
அட்டைபடம் வேட்டுக்கல் விளைச்சலைக் காக்க கம்பிகளால் காட்டைச் சுற்றி ஆதிவாசிகள் ஏற்படுத்தும் பாதுகாப்புக் கருவி.
வரலாறுகள் எப்போதும் வெற்றி பெற்றவனால் மட்டுமே ஆவணப்படுத்தப்படுகிறது. தோல்வியுற்றவர்களின் வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்படும். ஆனால் “ஒடியன்” வித்தியாசமாய் தோல்வியுற்ற கோவமூப்பனின் வாரிசுகளின் நியாயமான வாழ்கை போராட்டத்தையும், ஏமாற்றபட்டதையும் தெள்ளத் தெளிவாக கீழ்நாடுக்காரனுக்கு அவன் முன்னோர்களின் செயலை புரியவைக்கிறது.
சுரண்டுவதில் மேற்கத்திய நாட்டவர்களுக்கு எந்தவித்திலும் கீழ்நாடுக்காரன் சளைத்தவன் இல்லை என்பதை இக்கவிதை நெற்றியிலடித்தாற் போல் கூறுகிறது.
அஞ்சு இட்டிலிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா
மண்ணுபாசோ விடுகாதில்லே
ம்க்கூம்
எல்லா சூளேயும்
இச்சாதாஞ் செவக்கு
ஐந்து இட்டிலிக்கு விலை ஆறுஏக்கர். இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கீழ்நாடுக்காரர்கள். மண்ணை பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான். பக்கம்: 19 ========================================
நமது கல்வி முறையை கிண்டலாடிக்கும் இந்த கவிதை அவர்கள் படிக்கவேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிபடுத்துகிறது.
பத்தாவது வருகாக்குள்ளயே
செத்து செத்து பொழைக்கோ
‘ரிசல்டு கொறஞ்சா
ரிவிட்டே அடிப்பாங்க’ ன்னு
பாதியிலே தொரத்துகா
பாஸோ பெயிலோ
படிக்கோனு நாங்க
தொடகே
ஊர் கூட்டுகயிலே
எட்மாஸ்டரையும் போட்டுக்கோ.
தொடகே = பெரியம்மா
ஊர் கூட்டுகயிலே = ஊருக்குள் நோய் அதிகரித்தாலோ மழை பொய்த்தாலோ ஆகாத பொருட்களையெல்லாம் சேகரித்து ஊரின் எல்லையில் போட்டுவிடுவார்கள். (அப்படி எட்மாஸ்டரையும் போடவண்டும்)
பக்கம் : 49
====================================
கவிஞரின் சாடல்
ஒடியன்- தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.
இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள். பக்கம் : 60
கிடைக்குமிடம்
மணிமொழி பதிப்பகம்,
220 - A முல்லை வீதி,
தந்தை பெரியார் நகர்,
போளூர் சாலை
திருவண்ணாமலை - 606 601
தொலைபேசி: 04175 – 251980
மின்னஞ்சல் : kurinji_flower@yahoo.co.in
விலை. ரூ.50/=
Saturday, April 10, 2010
நீர்இன்று அமையாது ............
பசுமை சுற்றுலா ( Eco Tourism ) என்ற பெயரில் இளம் தலைமுறை கண்டிப்பாக இயற்கை பகுதிகளை பார்க்கவேண்டும், இயற்கையை புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் மிக சொற்ப அளவில் சிலர் வனபகுதியில் புகைபிடிப்பது, நெருப்பிட்டு சமைத்துவிட்டு அணைத்து மண் இட்டு மூடாமல் சென்றுவிடுவது, சிலர் “த்ரில்” வேண்டும் என்பதற்காக நெருப்பு வைப்பதும் (எனது பழைய பதிவை காணவும்) எந்த வகையில் நியாயம். ஒரு சிலர் செய்யும் தவறுகள் எவ்வளவு அழிவை தருகிறது. கடந்த சில வருடங்களாக ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் மனித உயிர் சேதங்களும் காட்டுத் தீயால் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
கடந்த ஆறு வருடங்களாக நான் ரசிக்கும் இந்த மலைபகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு நிறைய மரங்கள் கருகிபோய்விட்டன. சில இளைஞர்களால் ஏற்படுத்தப்பட்டதாக சிலரை கைது செய்ததாக கூறினார்கள்.
2010 ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட படம் தீ விபத்திற்கு பின்
ஆனால் எவ்வளவு பரப்பளவு எரிந்துவிட்டது பாருங்கள் அம்புகுறிகள் இட்ட பகுதி. நான் கவனித்த வரையில் இந்த பகுதி வரை மழைபெய்யும் இதற்குமேல் மரங்கள் இல்லாமையால் மழையளவு குறையும். அரசாங்கமும் பல்வேறு திட்டங்களை தீட்டி மரவளர்ப்பில் ஈடுபட்டாலும் இதுபோன்ற நிகழ்வுகள் அவற்றை அர்த்தமற்ற தாக்கிவிடுகிறது. முடிவில் நாம்தான் கஷ்டப்படுகிறோம்.
ஆடம்பரமற்ற தொலைநோக்கு பார்வையில் காடுகள் உருவாக்கினால் மாத்திரமே மழை கிடைக்கும். கிடைக்கின்ற நீரையும் சேமித்தும், சிக்கனமாகவும் பயன்படுத்தினால் மாத்திரமே அமைதியான வாழ்கை. இல்லையேல் போராட்ட வாழ்கைதான் வாழவேண்டும். நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்லபோகிறோம் ?? பொன்னையும் பொருளையும், வங்கி இருப்பையும் விட்டு போராட்ட வாழ்கையை தரபோகிறோமா ?? அல்லது நிறைந்த வனசெல்வத்தை விட்டு அமைதியான ஒழுக்கம் நிறைந்த வாழ்கையை தரபோகிறோமா ??
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்