
மரவிழா - 2010 வரவேற்பு, வாழ்த்துரைகளுக்குப் பின் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மைய விஞ்ஞானிகள் தமிழகத்தில் நன்கு வளரும் சுமார் பத்து மரங்களின் ஆராய்ச்சி முடிவுகளை விளக்கமாகவும் படங்களின் மூலம் மிக தெளிவாகவும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக வருங்காலத்தில் மரங்களின் உற்பத்தி மற்றும் தேவை அடிப்படையில் தமிழகத்தில் சாதகமான சூழ்நிலைகள் வருங்காலத்தில் மரம் சார்ந்த மின்உற்பத்தி போன்ற மிக முக்கியமான தகவல்களை திட்டகுழு உறுப்பினர் மதிப்பிற்குரிய முனைவர். குமாரவேல் அவர்கள் தமது நீண்டகால ஆராய்ச்சியின் அனுபவங்களையும், நடைமுறைபடுத்தக் கூடிய திட்டங்களையும் எடுத்துக்கூறியது விழாவின் சிறப்பு.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் முதல் முறையாக இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மைய விஞ்ஞானிகள் உருவாக்கிய தென்னகத்தில் நன்கு வளரக்கூடிய 4 சவுக்கு மரவகைகளையும் 4 தைல மரவகைகளையும் வெளியிட்டார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் உரை.
சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளை மேடையில் கௌரவபடுத்தினார்கள். வரும் ஆண்டுகளில் ஆராய்ச்சிக்காக ரூ.25 கோடி அளிப்பதாக அமைச்சர் கூறினார்.
இரண்டாம் நாள் அதிகமாக விவசாயிகளின் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பல விவசாயிகளின் அனுபவங்கள் ஏற்புடையதாகவும் எளிமையாகவும் இருந்தது. குறிப்பாக நாகை மாவட்டம் வேட்டைக்காரன் இருப்பு கிராமம் திரு. சி. இராஜசேகரன் B.A. அவர்கள் புன்னை மரத்திலிருந்து எண்ணை எடுத்து தனது ஆயில் எஞ்சினுக்கு எரிபொருளாக உபயோகிப்பதாக கூறி புன்னை மரத்தின் சிறப்பு பற்றி கூறினார். பின்பற்றப்பட வேண்டிய கருத்து.

எல்லோரும் எப்படி மரத்தின் மூலம் பணம் உண்டாக்கலாம் என்று சிந்திக்க , தங்களின் பணத்தையும், நேரத்தையும் மரம் வளர்ப்பதில் செலவிட்டு சுற்றுச் சுழலை காப்பாற்றும் நண்பர்கள் திரு. யோகநாதன், திரு. கருணாநிதி இருவரையும் மேடையேற்றி கௌரவப்படுத்தியது மனத்திற்கு மகிழ்ச்சியை தந்தது. இருவரையும் கவனத்தில் கொண்டு கௌரவப்படுத்திய அதிகாரிகள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.
இந்திய வன ஆராய்ச்சி மற்றும் மர பெருக்க மையத்துடன் தொடர்பை உண்டாக்கும் பாலமாக அமைந்த இந்த மரவிழா விவசாயிகளுக்கு மரவளர்ப்பைப் பற்றிய நல்ல தகவல்களை தந்து உற்சாகப்படுத்தியது. விழாவினை தொய்வின்றி நடத்திய அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த விவசாயிகளுக்கும் இந்த வலைப்பூ நன்றி தெரிவிப்பதுடன் மேலும் இத்துடன் விட்டுவிடாமல் முழுமூச்சில் மரவளர்ப்பில் ஈடுபட்டு சுற்றுச் சுழலை காப்பாற்ற வாழ்த்துகிறது.
திரு. யோகநாதன் பற்றிய எனது பழைய பதிவைக் காண:-
http://maravalam.blogspot.com/2008/06/my.html
***கணனி செயலிழந்ததால் காலம் தாழ்த்தி பதிவிடுவதற்கு வருந்துகிறேன்.
2 comments:
மரங்களை நட்டு சுற்று சூழலை பாதுகாக்கவிழைபவர்களை கௌரவித்தது நல்ல விசயம்.. வாழ்த்துக்கள்.
திருமதி. முத்துலெட்சுமி
உங்கள் வருகைக்கு நன்றி. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இருவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் திரு. யோகநாதன் நடத்துனராகவும். திரு. கருணாநிதி ஓட்டுனராகவும் பணி புரிந்து கொண்டு எஞ்சிய நேரங்களில் இப்பணியை செய்கிறார்கள் என்பதுதான் இவர்களின் சிறப்பு.
Post a Comment