Friday, June 26, 2009

மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன்


11 வது வயதில் தனது இசை பயணத்தை துவக்கிய மக்கள் கலைஞன் மைக்கேல் ஜாக்சன் தனது நடன அசைவுகளாலும், இனிய குரலாலும், அதிரவைக்கும் இசையாலும் பின்னாட்களில் பாப் இசை பாடல்களின் அரசன் என்று உலக மக்களால் போற்றப்பட்டார். சமுதாய சிந்தனையுடன் கூடிய அவரின் நல்ல பாடல்கள் பல இருப்பினும் “Earth Song” என்ற இவரின் பாடல் நாம் அனைவரும் பார்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு பாடல். இன்று காலமான அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பாடலை பதிவிடுகிறேன்.



பார்த்துவிட்டு நம்மால் இயன்றதை இப்புவிக்காக செய்வோம். இதுதான் நாம் அவருக்கு செய்யும் மிக சரியான அஞ்சலி என்பதில் ஐயமில்லை

Thursday, June 11, 2009

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில் வீடு கட்டியபோது அவர் எஞ்சிய மின்சார கம்பிகளை நுழைக்க பயன்பட்ட குழாய்களை (PVC) மேற்கண்ட முறையில் உபயோகித்து அருகிலிருந்த சாலை மரங்களுக்கும், வீட்டிலுள்ள தென்னைமரங்களுக்கும் மிக சிக்கனமாக நீரைபயன்படுத்தி வளர்த்தார். இன்று அவைகள் ஓங்கி வளர்ந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

இந்த முறையுடன் மேலும் சில உத்திகளைப் பயன்படுத்தி எளிதாக மரம் வளர்க்கலாம். அதனை புகைபடங்களாக பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

குழியெடுத்து அதனுள் மக்கிய இலைதழைகளை கொஞ்சம் போடவேண்டும் இவை நீரை எளிதில் தக்கவைக்கவும், உரமாகவும் பயன்படும் அல்லது Ec அளவு ஒன்றுக்கும் குறைவான அளவிலுள்ள தென்னைநார் கழிவுகளையும் உபயோகிக்கலாம். பழைய அல்லது உபயோகமில்லாத 1 அல்லது 2 அங்குல விட்டமுள்ள குழாய்களை எடுத்து தேவையான நீளத்திற்கு வெட்டி அதனை குழியினுள் வைத்து பின் செடிகளை நடவேண்டும். கோடை காலத்தில் இந்த குழாய் வழியாக மிக குறைந்த அளவு நீர் ஊற்றினால் கூட போதும் நீர் வேர்பகுதிக்கு நேராக செல்வதால் களைகள் தோன்றுவது குறைந்து நாற்றுக்கள் நன்கு வளரும். திரவ உரங்களையும் தரலாம். சொட்டு நீர் பாசன வசதியிருந்தால் அதனை குழாயினுள் வைத்தால் போதும். நீர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு மிகவும் ஏற்றது. நடும் போது கண்டிப்பாக வேர் பூஞ்சானம் (வேம் )(Vasicular arbuscular mycorrhizas [VAM] ) உபயோகியுங்கள். அது நல்ல வேர் அமைப்பையும், சத்துக்களை கரைத்து வேர்கள் எளிதில் எடுக்கும் வண்ணம் மாற்றியும் தரும். மண்ணிலுள்ள நோய் உண்டாக்கக் கூடிய பாக்டீரியா மற்றும் புஞ்சானங்களிலிருந்து பாதுகாப்பைத் தரும்.

சரிவுப்பகுதிகளில் பிறை வடிவில் குழியெடுத்து வெட்டிவேர் நாற்றுக்களை நட்டு வையுங்கள். அவை மழைகாலங்களில் மண் அரிப்பை தடுத்து நீரை தக்க வைத்துக்கொள்ளும். வெட்டிவேரின் உதவியால் நீர் எளிதில் பூமியினுள் செல்லும். நன்கு வளர்ந்தால் மிக சிறிய தடுப்பணை போன்று நீரின் வேகத்தை தடுத்து நிறுத்தும். நாற்றுக்களை சுற்றி காய்ந்த இலைதழைகளைக் கொண்டு மூடாக்கு இடுங்கள். அவை களைகளை குறைப்பதுடன் மண் ஈரத்தை காக்கும். நிறைய மரங்களை நட்டு சுற்றுச் சுழலைக் காப்போம்.

Friday, June 5, 2009

புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்!

இரயுமன்துறை - தமிழகத்தின் வரைபடத்தில் பூத கண்ணாடியால் பார்த்தால் கூட ஒரு நுண்ணிய புள்ளியாக தோன்றும் இந்த மீன்பிடி மக்கள் வாழும் கிராமம் இன்னும் சில வருடங்களில் அழிந்துவிடும் அபாயம் பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்? கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடலுக்கும் வற்றாத தாமிரபரணி நதிக்கும் ஏவிஎம் கால்வாய் ஆகிய மூன்றுக்கும் நடுவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் இது. இதற்கு 700 மீட்டர் தொலைவில் கடலும் ஆறும் இருந்தன. இன்று இந்த இடைவெளி 50 மீட்டராக குறைந்துவிட்டது. தொடர்ந்த கடல் அரிப்பின் விளைவாக 650 மீட்டர் நீள முள்ள மண் பகுதியை கடல் விழுங்கிக் கொண்டது. 1982ம் ஆண்டில் இக்கிராமத்தில் 8 தெருக்களும் 7000 மக்களும் குடியிருந் தனர். கடல் அரிப்பின் விளைவாக 5 தெருக்களில் இருந்த வீடுகள் சிதைந்து விட்டன. மக்களின் எண்ணிக்கை 2500 ஆக ஆகிவிட்டது. வீடுகளை, தொழிலை இழந்த வசதி படைத்த மக்கள் சமத்துவ புரத்திற்கும் நாகர்கோவிலுக்கும் புலம் பெயர்ந்துவிட்டார்கள். வேறு யார் எஞ்சி யிருக்க முடியும். மீன்பிடித்தலைக்கூட கூலிக்கு செய்து பிழைக்கும் ஏழை மக்கள்தான் அங்கு மிஞ்சியுள்ளார்கள். கிராமத்தின் மேற்குபுறத்தில் தடுப்புச் சுவர் கட்டினால்தான் மண்அரிப்பை தடுக்க முடியும். அப்படி கட்டப்படும் சுவரால் தங்கள் கிராமம் பாதிக்கப்படும் என்று அண்டையில் உள்ள கிராமத்தார் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை எதிர்க் கிறார்கள். இதுபோன்ற அழிவை இப் பகுதியில் வேறு எந்த கிராமமும் சந்திக்கவில்லை. அரசின் கவனத் தையும் அதிகாரிகளின் இரக்கத்தையும் ஈர்க்க மக்கள் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.இது ஒன்றும் ஓர் தனிப்பட்ட நிகழ் வல்ல. தரங்கம்பாடியில் மாசிலாமணி நாதர் ஆலயமும், சுந்தரவனச் சதுப்பு நிலத்தீவுகளும் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தன்னை அழிக்கும் மனிதர்களை எச்சரிக்கும் இயற்கையின் சீண்டல்கள் இவை.

மேல் அதிகம் பற்றி அறிந்து கொள்ள கீழ் கண்ட தொடர்பை காணுங்கள்.
http://erayumanthurai.blogspot.com/

Source :தீக்கதிர்/கோவை 05-06-09 புவிப் பந்தைக் காப்போம்; மனிதனைக் காப்போம்! கட்டுரையிலிருந்து.
படம் உதவி : http://erayumanthurai.blogspot.com/

உலக சுற்றுச்சுழல் தினம் 5 ஜுன் 2009


பஞ்ச பூதங்களை நாம் விஞ்ஞானம் என்ற பெயரில் மாசுபட வைப்பது அல்லது இயற்கை செல்வங்களை தேவைக்கு அதிகமாக சுரண்டுவது, இவைதான் தட்பவெப்ப மாறுபாடிற்கு அடிப்படை காரணங்கள். இயற்கையின் மிக சிறிய மாறுதல்களைக் கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை என்பதே காலம் நமக்கு சொல்லித் தந்த பாடம். தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை எழுப்பி இயற்கை தந்த பாடங்களை நமக்கு அறிவித்து இயற்கையை ஆராதிக்க ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) ஜுன் 5 நாளை “உலக சுற்றுச்சுழல் தினம்” என்று அறிவித்து நம்மை ஈடுபட வைத்து கொண்டாடிவருகின்றனர்.

உங்கள் கிரகத்திற்கு நீங்கள் தேவை.
ஒன்றுபட்டு தட்பவெப்ப மாறுபாட்டை எதிர்த்து போராடுவோம்.

Your Planet Needs You.
UNite to Combat Climate Change.

மேற்கண்ட வாசகம் இந்த வருட உலக சுற்றுச்சுழல் தினத்திற்கான மையப்பொருள்.


மெக்சிகோ நாட்டில் இன்று ( 5 ஜுன் 2009 ) உலக சுற்றுச்சுழல் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சுழல் அமைப்பு (UNEP) மெக்சிகோ நாட்டுடன் இணைந்து இந்த வருட செயல்பாட்டில் ஈடுபடுகிறது. மெக்சிகோ நாடு UNEP யின் பில்லியன் மரங்கள் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் சுமார் 700 கோடி மரங்கள் நடுவது என்று UNEP தீர்மானித்துள்ளனர். பில்லியன் மரங்கள் செயல்பாட்டில் சுமார் 25% மரங்களை மெக்சிகோ நாட்டு மக்கள் நடவுள்ளனர். நாம் என்ன செய்யப் போகிறாம்??? குறைந்த பட்சம் ஒரு மரமாவது இந்த வார இறுதிக்குள் நடுவோம்.

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள். காண.

http://maravalam.blogspot.com/2007/06/20_24.html

Wednesday, June 3, 2009

வெப்பமயமாதலுக்கு 3 லட்சம் பேர் பலி

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது:-

உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்துவிட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடிப்பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில்தான் அதிக பாதிப்பு.இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்கநேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடிப்பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையால் பாதிக்கப்படுவர்; எட்டு கோடிப்பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர். ஆப்பிரிக்க, வங்கதேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில்தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள்தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சில ஆப்பிரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால்தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : தீக்கதிர்/கோவை 03-06-09

Tuesday, June 2, 2009

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் “ஹோம்” (Home)

பிரபல பிரான்சு நாட்டு புகைபட நிபுணர் யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் அவர்களின் Home என்ற வானிலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் நிகழ்வுகள் பற்றிய படம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் என்று எண்ணுகிறேன். பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட இந்த படம் உலக சுற்றுச்சுழல் தினத்தன்று ( 5 ஜுன் 2009 ) முறையாக வெளியிடப்படுகிறது. திரு.அல் கோர் அவர்களின் An Inconvenient Truth படத்திற்கு பின் உலகமெங்கும் மக்களின் மனதில் சுற்றுச்சுழல் பற்றிய விழிப்புணர்வை இப்படம் ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை இப்பூவுலகிற்கு தரும் என்று நம்புகிறேன்.

திரு.யாண் ஆர்தஸ் பெர்ட்ராண்ட் (United Nations Environment Program(UNEP) Goodwill Ambassador ) தனது சுற்றுச்சுழல் பற்றிய முனைப்பிற்காகவும், பணிக்காகவும் “எர்த் சாம்பியன் ” ( Earth Champion ) என்ற பட்டத்தை பெற்றவர்.

இப்படம் உலகின் எல்லா பகுதிகளிலும் திரையிடப்பட்டு சுற்றுச்சுழல் பற்றிய திருப்புமுனை படமாக வரலாற்றில் இடம் பெற இவ்வலைப் பூ வாழ்த்துகிறது.