Sunday, June 29, 2008

கோவை மக்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்???????

கோவை மாநகராட்சியின் முயற்சியை தொடர்ந்து RAAC (Residents Awareness Association of Coimbatore) அமைப்பு தன் பங்கிற்கு சிறந்ததொரு விழிப்புணர்வு செயலை நகரின் நான்கு முக்கிய இடங்களில் சினிமா புகழ் "டெர்மினேட்டர்" போன்று இந்த "பிளாஸ்டினேட்டர்" பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்த இந்த பிளாஸ்டினேடர்" சுமார் 30 அடி உயரம். மிக பிரமாண்டமாக இருந்தது.. மேலும் பிளாஸ்டிக் பற்றிய சிக்கல்கள் பற்றி விளக்கமும் வைத்திருந்தாரகள். 10 பிளாஸ்டிக் பைகளுக்கு 1 துணிப்பை என மாற்று பொருளையும் வழங்கியது விழிப்புணர்வு செயலின சிறப்பம்சம். நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்????????

Friday, June 27, 2008

மரம் வளர்க்க பாரத ஸ்டேட் வங்கி கடனுதவி.

பெருமரம்/பீநாரி/பீ மட்டி மரம் வளர்க்க சந்தை வாய்ப்புடன் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கியும், வளர்ந்த மரத்தை வாங்க குடியாத்தம் வாசன் மேக்வின் நிறுவனமும் முன் வந்துள்ளது. விவசாய கடன் வழங்குவதில் நல்ல மாற்றம் என்று கூறலாம். காரணம் அறுவடை நாளில் ரூ.2200/- அல்லது மார்கெட் விலை எது அதிகமோ அதன்படி விலை தர ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

மரத்தின் பெயர்...........: பெருமரம்/பீநாரி/பீ மட்டி
தாவரவியல் பெயர்....: AILANTHUS EXCELSA
காலம்........................: 7 ஆண்டுகள்
பயன்படும் தொழில்....: தீக்குச்சி தாயாரிப்பு

கடன் விபரம், அளவு:-
பங்கு தொகை தவிர்த்து தவணைக் கடனாக ஏக்கருக்கு இறவையில் ரூ.31,000/- மானாவாரியல் ரூ.22,500 வழங்கப்படும். கடன் தொகை ரூ.50,000/- வரை பிணையம் (நில அடமானம்) இல்லை. செலவினங்களுக்கேற்ப கடன் தொகை வருடா வருடம் வழங்கப்படும். கடனை ஒரே தவணையாக 7 ஆம் ஆண்டு இறுதியில் செலுத்தவேண்டும்.

உற்பத்தியும் தேவையும் (தமிழ் நாடு):-
இந்தியாவின் தீப்பெட்டித் தேவையில் 95% மரக்குச்சியும், 5% மெழுகு குச்சியாகவும் உள்ளது. இந்த 95% மரக்குச்சி உற்பத்தியில் 80% தமிழ் நாட்டில் நடைபெறுகிறது. ஒரு மாத உற்பத்திக்கு சுமார் 10,000 டன் மரம் தேவை. இத்தேவையைப் பூர்த்தி செய்ய நம்மை விட பரப்பளவில குறைந்த கேரளாவிலிருந்து 80%, கர்நாடகாவிலிருந்து 3%, மீதமுள்ள 17% மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி வருங்காலங்களில் சற்று கடினமே. மேலும் உற்பத்தி செலவு கூடுகிறது. தீப்பெட்டி தவிர பேக்கிங் செய்ய பெட்டியாகவும் பயன்படுகிறது. எனவே இதன் தேவை என்பது முக்கியமானது.
வளரியல்பு:-
குறைந்த நீர் போதுமானது.
குறைந்த வெப்பம் 8°c-12.5°c
அதிக வெப்பம் 45°c-47.5°c
வறட்சியிலும் நன்கு வளரும்
அதிக பராமரிப்பு தேவையில்லை.
இதன் இலைகளை ஆடு,மாடுகள் தீண்டாது.
முதல் 4-5 ஆண்டுகள் ஊடுபயிர் செய்யலாம்.
ஒரு முறை பயிரிட்டால் திரும்ப வெட்டலாம்
வணிக நோக்கில் வளர்க்கும் போது கவனிக்கவேண்டியது.
பக்ககிளைகள் தவிர்த்து நேராக வளர்க்க வேண்டும்.
வெட்டியவுடன் 3 நாட்களுக்குள் தொழிற்சாலைக்கு
அனுப்பினால் எடைக் குறைவு நஷ்டம் வராது.
சுற்றழவு குறைந்தது 18" (அங்) இருக்க வேண்டும்.
15 நாட்களுக்குள் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும்
இல்லயேல் தீக்குச்சி செய்யப் பயன்படாது.
நன்மைகள்.
தரிசு நிலமும் பயன்பாட்டிற்கு வருகிறது.
தமிழகத்தின் 17% வனப்பரப்பை மேலும் கூட்டலாம்.
கிராமப் புற வேலை வாய்ப்பு கூடுகிறது.
முக்கிய தொழிலுக்கு கச்சாப் பொருள்.
சுற்றுச் சுழல் மேம்படுகிறது.
விவசாய வரவு கூடுகிறது.

மேலும் விபரங்கள் பெற
வாசன் மேக்வின்
நெ. 21,புது தெரு, போஸ்பேட்டை
குடியாத்தம்
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி. 04171-320416,222251,320560
அல்லது
அருகிலுள்ள பாரத ஸடேட் வங்கிக் கிளைகள்.
வனம் அழிந்தால் அது வறட்சியின் துவக்கம்.
வனம் வளர்ந்தால் அது வளமையின் துவக்கம்.
Source : பாரத ஸடேட் வங்கிக் கையேடு மற்றும் வாசன் தீக்குச்சி தொழிற்சாலை+ வனக்கல்லூரி Mtp வழங்கிய நூல்.
படம் உதவி :திரு. ராஜன்.

Tuesday, June 24, 2008

பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன்.

மதிப்பிற்குரிய துணை ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருது பெறும் திரு. M.Y. யோகநாதன்.

தனியார்மயம், உலகமயம் என இன்றைய பொருளாதாரம் மனிதனை இயற்கையை விட்டு விலக வைத்து எல்லாமே பணம் என்கின்ற அளவு கோலினால் அளக்கப்படும் இந்த கலியுகத்தில் " இப்படி ஒரு மனிதரா?" என்று நம்மை ஆச்சரியப்பட வைப்பவர் பசுமை போராளி திரு. M.Y. யோகநாதன். நடத்துனர் வேலை என்பதே கடினமான வேலை. இருப்பினும் அதையும் தாண்டி கிடைக்கின்ற ஒரு நாள் விடுமுறையக் கூட மரம் நடுதல், பாதுகாத்தல், பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையை போதித்தல்,சுற்றுலா என தன் சொந்த பொருளையும் செலவழித்து தமிழகமெங்கும் கடந்த 25 ஆண்டுகளாக வலம் வரும் தனிமனித சாதனையாளர் திரு. M.Y. யோகநாதன்.
குழந்தைகளுடன் இயற்கைச் சுற்றுலா

அவினாசி சாலை விரிவாக்கத்திற்காக கோவையில் மரங்களை அகற்றிய போது அவர் இயற்றிய கவிதைகள் இரண்டு என்னை வெகுவாக பாதித்தது என்னவோ உண்மை. (அதன் புகைப்பட காட்சி)
============================
மரம் அறத்து விழுந்த போது
இறந்து கிடந்த குருவியின்
வாயில் இருந்தது தன்
குஞ்சுக்கான ஆகாரம்.
============================
வேரோடு பிடுங்கிய மரத்தால்
வெறிச்சோடி கிடக்கிறது சாலை
சற்று நேரத்துக்கு முன்
நிமிர்ந்து நின்ற மரம்
கவிழ்ந்து கிடக்கிறது
மிக பகட்டாக போடப் போகும் சாலைகளுக்காக.
ஆக்சிஜன் குறைவால்
அவர்களை அள்ளிக்கொண்டு செல்கிறது
ஆம்புலன்ஸ் அலறலோடு
வெட்கிச் சிரிக்கிறது
வேரோடு உள்ள மரம்.
==========================
இந்த வருட Eco Warrior விருது பெற்ற 14 பேர்களில் விஞ்ஞானிகளும் வன அதிகாரிகளும் அடங்குவர். பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்கள் இருப்பது நமக்குப் பெருமை. இவர்களில் ஜான் ஆப்ரகாம் என்ற பிரபல இந்தி நடிகரும் உண்டு.

இறுதியாக தொழிற்சங்க தலைவர்களுக்கு அலுவலகம் வந்து கண்டிப்பாக வேலை செய்ய வேண்டியது இல்லை அது போன்று இயற்கைக்கு சேவை செய்யும் இவருக்கும் சில விடுப்புக்கள் அளித்தால் மேலும் நிறைய மரங்களும், இயற்கையை புரிந்து கொண்ட வருங்கால மன்னர்களும் தமிழகத்திற்கு கிடைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
எல்லா வளமும் பெற்று வாழ இவ்வலைப் பூ பசுமைப் போராளி திரு. M.Y. யோகநாதன் அவர்களை வாழ்த்துகிறது.

Wednesday, June 4, 2008

உலக சுற்றுசூழல் தினம்

சுற்றுசூழல் தினம் இன்று (ஜூன் 5 தேதி) உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. மனிதனின் ஆசையினாலும், அறிவினாலும் இயற்கையை அளவிற்கதிகமாக சுரண்டியதன் விளைவுகளை நாம் புயலாகவும், பூகம்பமாகவும், சுனாமியாகவும், வறட்சியாகவும், வெள்ளமாகவும் பார்க்கிறோம். லட்சக்கணக்கில் உயிர்களை இழக்கிறோம். சுற்றுசூழலை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கவேண்டும். குறிப்பாக அரிதாகி வரும் உயிரினங்களை காப்பாற்றி அவைகளை பாதுகாப்பதில் நாம் அதிக கவனம் கொள்ளவேண்டும்
சென்ற வாரம் இந்தோனேஷியாவின் மழைகாடுகளில் மிக அரிதாகக் காணப்படும் ஜாவா காண்டா மிருகத்தின் வீடியோ படத்தை WWF -இந்தோனேஷியா வெளியிட்டனர். சுமார் 1 மாத காலம் பிரத்யேக காமிரா கொண்டு எடுக்கப்பட்டது அந்த காட்சியை (Embedding வசதி இன்மையால் தொடர்பு தர இயலவில்லை) கீழ்கண்ட தொடர்பின் மூலம் கண்டுகளியுங்கள்.

http://www.youtube.com/watch?v=-cVe5U25xFI

Monday, June 2, 2008

கோவையில் வெட்டிவேர் பயிலரங்கம்


பாரதியார் பல்கலை கழகத்தின் சுற்றுசூழல் துறை, கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம், இணைந்து வெட்டிவேர் சாகுபடி மற்றும் சந்தைபடுத்துதல் குறித்து ஒருநாள் பயிலரங்கத்தை வருகின்ற 19-06-2008 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நடத்தவுள்ளனர்

இடம் :பாரதியார் பல்கலை கழக வளாகம், கோயமுத்தூர்
பதிவு கட்டணம் : ரூ.200.00 (உணவு,பயிற்சி மற்றும் கையேடு செலவு உட்பட )

பங்கு பெற விரும்புவோர் பதிவு கட்டணத்தை "THE DIRECTOR, SCHOOL OF LIFE SCIENCE , BHARATHIYAR UNIVERSITY, COIMBATORE" என்ற பெயருக்கு கோயமுத்தூரில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையுடன் (Demand Draft) பெயர், முகவரி, பின்கோடு மற்றும் தொலைபேசி எண் ஆகிய விபரங்களுடன்

தலைவர்,
சுற்றுசூழல் துறை
பாரதியார் பல்கலை கழகம்
கோயமுத்தூர் -641 046.

என்கின்ற முகவரிக்கு வருகின்ற 14-06-2008 சனிக்கிழமைக்குள்ளாக அனுப்பி பதிவு செய்யது கொள்ளலாம். முதலில் வரும் 300 நபர்களுக்கு மட்டுமே பதிவு செய்யப்படும்.