Monday, November 28, 2022
Friday, April 24, 2020
தவசி கீரை
பொதுவாக வருடம் முழுவதும் பெண்களிடையே கீரைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகம் இருக்கும் ஆனால் அவை வீட்டுத் தோட்டதில் வளர்ப்பதில் சில சிக்கல்கள் உண்டு. காரணம் அவை மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றுவிடும். பின் திரும்பவும் விதைகள் வாங்கி வளர்க்க வேண்டும். ஆனால் குற்றுச் செடியாகவோ அல்லது சிறு மரங்களாகவோ இருந்தால் பராமரிப்பு குறைவு. குறைந்தது 3 அல்லது 4 எண்ணிக்கையில் இருந்தாலே போதுமானது. வருடம் முழுவதும் நமக்கு கீரை கிடைக்கும்.
தாவரவியல் பெயர் : Sauropus androgynus
தமிழ் பெயர் : தவசி கீரை
மற்ற பெயர்கள் : மல்டிவைட்டமின் கீரை, பிரஷ்ஷர் கீரை.
சுமார் 6 அடி வரை வளரும் இந்தக் கீரையைப் பச்சையாகவும் உண்ணலாம். அனைத்துச் சத்துக்களையும் நமக்கு தருவது தவசி கீரையாகும். அனைத்து வைட்டமின்களும் தவசி கீரையில் இருப்பதால் இதனை ‘மல்டி வைட்டமின் கீரை’ என்றும் அழைக்கின்றனர். இக்கீரையின் இலைகளைப் பொரியலாகவும், பயறு வகைகளுடன் சேர்த்து கூட்டும் செய்யலாம். தனியாகக் கடையவும் செய்யலாம். இதனை “பிரஷ்ஷர் கீரை” எனவும் அழைக்கின்றனர். விதை மூலமும் போத்து முறையிலும் நாற்றுக்களை உருவாக்கலாம். இரண்டு அல்லது மூன்று செடிகள் நமது வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும்.
Sunday, April 5, 2020
நுனி ஒட்டு மூலம் கத்திரிகாய்
அநேக பழமரங்கள் மற்றும் சிலவகை காய்கறிகளில் ஒட்டு முறையில் நாற்று உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகின்றன. குறுகிய காலத்தில் தரமான உற்பத்திக்கும், நல்ல சுவைக்கும், நோய்தாக்குதல் மற்றும் வறட்சியை தாங்கி வளர்க்கவும் இந்த முறை மிக பிரபலமாகவுள்ளது. 1920களில் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. மா, பலா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சப்போட்டா போன்ற பழ வகைகளில் ஒட்டு செடிகளே பெரிதும் விரும்பப்படுகிறது. ரோஜாவில் ஒட்டு செடிகளே பிரபலம்.
வீட்டுத்தோட்டத்தில் நுனித் தண்டு மூலம் ஒட்டு செய்வது எளிமையானது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இருவேறு செடிகளை உ.தா. சோலேனம் (Solanum) குடும்பத்தைச் சார்ந்த வறட்சி மற்றும் பூச்சி தொல்லை குறைவாயுள்ள, மருத்துவ குணமிக்க, நீண்ட காலம் காய்க்கும் சுண்டைக்காயை வேர் பகுதியாகவும் (Rootstock) தண்ணீர் சற்று அதிகம் தேவைப்படும் அதிக பூச்சி தாக்குதலுக்குள்ளாகும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளான கத்திரிக்காயின் நுனிபகுதியை (Scion) ஒட்டு இடுவதன் மூலம் அதிக நாட்கள் கொத்துக்கொத்தாய் காய்க்கும், குறைந்த பூச்சிதாக்குதல் கொண்ட கத்தரிக்காய் செடிகளை நாம் பெறமுடியும்.
ஒரே பருமனுள்ள சுண்டைக்காய் மற்றும் கத்திரிகாயின் செடிகளை எடுத்துக் கொண்டு வேர்பகுதியாக சுண்டைக்காயின் தண்டை தரையிலிருந்து 1” -2” விட்டு வெட்டவேண்டும் பின்பு அதனை இரண்டாக பிளந்து கொள்ளவேண்டும். கத்தரி செடியிலும் அதேபோன்று வெட்டி இலைப்பகுதியின் அடிபாகத்தில் V போன்று ( Wedge) வெட்டி சுண்டைக்காயின் பிளவில் வைத்து ஒட்டுத்தாள் கொண்டு சுற்றி விடலாம் அல்லது நூல் வைத்துக் கட்டலாம்.
நீர் ஆவியாகுதலைத் தவிர்க்க பெரிய இலைகளை அகற்றி ”பெட்” பாட்டில் கொண்டு மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும். சிறிது நாட்களில் சுண்டைக்காயின் குருத்துகள் தோன்றும் அவற்றை அகற்றிவிடவேண்டும். 15 அல்லது 20 நாட்களில் கத்தரி செடி நன்கு வளர்ந்திருக்கும்.
அவ்வாறு நன்கு வளர்ந்தபின் பாட்டிலை அகற்றி சற்று வெய்யிலில் வைத்து நன்கு வளர்ந்த பின் பெரிய பை/தொட்டிகளில் வைத்து சாதாரணமாக வளர்ப்பதைப் போன்று வளர்க்கலாம். இரண்டு மூன்று மாதங்களில் தரமான அறுவடைக்குத் தயாராகலாம்.
அவ்வாறு நன்கு வளர்ந்தபின் பாட்டிலை அகற்றி சற்று வெய்யிலில் வைத்து நன்கு வளர்ந்த பின் பெரிய பை/தொட்டிகளில் வைத்து சாதாரணமாக வளர்ப்பதைப் போன்று வளர்க்கலாம். இரண்டு மூன்று மாதங்களில் தரமான அறுவடைக்குத் தயாராகலாம்.
கவனத்தில் கொள்ளவேண்டியது
வேர் பகுதியாக (Root stock) உபயோக்கிக்கும் செடியிலிருந்து வரும் குருத்துக்களை வளரவிடக்கூடாது.
Friday, April 3, 2020
மேற்கு வங்கத்தில் புத்துயிர் பெற்ற "வெட்டிவேர்".
5 வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் எழுத இருக்கிறேன். தொடர்ச்சியாக வெளி மாநிலங்களில் மண்அரிப்பு மற்றும் வெட்டிவேருக்கான பயணங்கள், குறுங்காடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் மற்றும் அதன் தொடர்பான கண்காணிப்பு என இருந்ததில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். தொடர்பில் இருப்பவர்களின் விருப்பம், உபயோகமான சில அனுபவங்கள், விவசாயத்திற்கு உதவும் சில யுக்திகள், கட்டாய வீட்டு இருப்பு மீண்டும் என்னை எழுதத் தூண்டியுது.
நதியா மாவட்டநிர்வாகத்தின் காணொளி
2015 ஆண்டு துவக்கத்தில் மேற்கு வங்க மாநில தொண்டு நிறுவனம் ஒன்றிலிருந்து ஓர் அழைப்பு. ஆற்றோரங்களில் மண்அரிப்பை தடுக்க வெட்டிவேர் பயன்பாடு குறித்து ஆலோசனைக்கு அழைத்திருந்தார்கள். 2011 ஆண்டே அவர்கள் வெட்டிவேர் மூலம் மண்அரிப்பை தடுக்க ஆரம்பித்திருந்தார்கள். இருப்பினும் என்னை ஏன் அழைக்க வேண்டும் ? கேள்விகளுடன் சென்ற எனக்கு பிரமிப்பு காத்திருந்தது. இந்த எளிய புல்லை வைத்து 100 நாட்கள் வேலைவாய்ப்பு MGRNREA - "Mahatma Gandhi National Rural Employment Guarantee Act")மூலம் அவர்கள் செய்யவிருக்கும் இந்த சமுதாய முதலீடு (Social investment) அம்மாநிலத்தை வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றி விவசாயத்தை மேம்படுத்தும் என மனக்கண் முன் நிறுத்திய போது பிரமிப்பு ஏற்பட்டது. 5 வருடங்கள் கடந்து இன்று அந்த சமுதாய முதலீடு பலனை தருவது மகிழ்ச்சியை தருகிறது. இதனை சிறப்பாக வடிவமைத்து செயலாற்றிய அனைத்து அரசாங்க அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் போற்றுதலுக்கு உரியவர்கள் என்றால் அது மிகையில்லை.
Wednesday, December 10, 2014
பாசுமதி இலை
தாவரவியல் பெயர் :
Pandanus
amaryllifolius
‘பாசுமதி
அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால் சாதம் போன்ற உணவு வகைகளை சமைக்கும் போது உபயோகிப்போம். ஆனால் கிழக்காசிய
நாடுகளில் பிரபலமாகவுள்ள ஒரு தாவரத்தின் இலை
பாசுமதி அரிசியின் மணத்தை சாதாரண அரிசிக்கு தரும் என்றால் வியப்பளிக்கலாம்.
தமிழில் "பாசுமதி இலை" என்றழைக்கப்படுறது, ஆனால் இன்னும் பிரபலமாகவில்லை. “பேன்டன்”
(Pandan)என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தாவரத்தின் குடும்பம் மிகப்
பெரியது எனவே Pandanus amaryllifolius என்ற தாவரவியல்
பெயர் கொண்ட தாவரம் தான் இந்த பாசுமதி இலை. வெப்பமண்டல
தாவரம், நிழல் பகுதியில் சிறப்பாக
வளர்கிறது. எளிதாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.
Monday, December 1, 2014
மணத்தக்காளி அல்லது சுக்குட்டிக் கீரை
சில வகை கீரைகள் நல்ல வேர்
அமைப்பும் சற்று உறுதியான தண்டையும், விரைவாக வளரும் தன்மையை பெற்றிருப்பதால் மறுதாம்பு
பயிர்களாக விரைவில் திரும்ப திரும்ப அறுவடைக்கு வருகின்றன. பராமரிப்பு குறைவதுடன் வளர்ப்பதும்
எளிது.
சற்று கசப்புச் சுவையுடன்
கூடிய மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி உணவுபாதையை சீராக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறது.
தண்டு, இலை, காய், பழம் என அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம். வாய் புண்ணிற்கும்,
அல்சர் என்னும் குடல் புண்ணிற்கும் அருமருந்து இந்த மணத்தக்காளி. மலச்சிக்கலை தவிர்க்க
தண்டு மற்றும் இலையை பொறியல் செய்து உண்ண வேண்டும்...
வாய்நாற்றம் உள்ளவர்கள் தினமும் இலையை மென்று
வர வாய்நாற்றம் குறையும். குறிப்பாக பாட்டி வைத்தியத்தில் அல்சருக்கு தினமும் காலை
உணவாக சிறிய வெங்காயம், பசுவெண்ணையுடன் மணத்தக்காளிக்
கீரையை நன்கு வதக்கி குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவு பொறியலை தொடர்ந்து உண்டு வர
விரைவில் குணம் பெறலாம். சில தோல் நோய்களுக்கு தொடர்ந்து இலைசாற்றை தடவி வர அவைகள்
மறையும். மறுதாம்புப் பயிர் என்பதால் வீட்டுத்
தோட்டத்தில் கண்டிப்பாக வளர்க்க வேண்டிய கீரை,
வணிக ரீதியாகவும் இதனை பயிர் செய்யலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யலாம்.
Tuesday, August 5, 2014
சுவர் தோட்டம் ( Wall Gardening )
![]() |
| பெங்களூரு நகரில் அமைக்கப்பட்டிருந்த செங்குத்துத் தோட்டம் |
சுவர் தோட்டம்,
பசுமை சுவர், செங்குத்துத் தோட்டம் என பல்வேறு
பெயர்களில் இன்றைய “கான்கீரிட் காடு”களிடையே பசுமையை உண்டாக்க வந்துள்ளது இந்த வகை
தோட்டக்கலை. இன்றைய காலகட்டதில் நகரங்களில் இடத்தின் மதிப்பு அதிகமாக அதிகமாக வீட்டுத்
தோட்டத்தின் பரப்பு குறைந்து, தாவரங்கள் அழிக்கப்பட்டு, தேவையின் காரணமாக அடுக்குமாடி
குடியிருப்புகள் அதிகமாக கட்டப்பட்டு வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம்
அதிகரித்து வெப்ப அளவு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாவரங்களால்
மட்டுமே மிக குறைந்த செலவில் வெயிலின் தாக்கத்தைக் குறைத்து காற்றை சுத்தம் செய்ய இயலும்.
எனவே இந்த வகை தோட்டம் பிரபலமடைந்து வருகிறது.
![]() |
| பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான தாங்கி. |
![]() |
| தொட்டிகள் பொருத்தப்பட்ட நிலையில் |
இந்த செங்குத்துத்
தோட்டம் ஏற்கனவே உள்ள சுவர்களிலோ அல்லது அதற்கென
தனியாக சட்டங்கள் அமைத்தோ உருவாக்கலாம். உள்புறமோ அல்லது வெளிபகுதியிலோ அமைக்கலாம்.
பொதுவாக கண்ணாடி அமைப்புகள் கொண்ட அலுவலக, நட்சத்திர ஓட்டல்களின் முகப்பு அறைகளில் உள்புறமாக பசுமை சுவர்களை உருவாக்குகின்றனர்.
பகல் நேரங்களில் சூரிய வெப்பத்தை கட்டிடங்கள்
கிரகித்து சூரிய கதிர் வீச்சை ஏற்படுத்தும். இதனால் அந்தப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கும்
இது போன்ற சுவர் தோட்டம் அமைக்கும் போது சூரிய வெப்பத்தை தாவரங்கள் தடுத்துவிடுவதால்.
சூரிய கதிர் வீச்சு குறையும். எனவே கட்டிடங்களின் அருகில் வெப்ப அளவு குறைய வாய்ப்பு
ஏற்படுகிறது. உயரமான பகுதிகளில் தண்ணீர் ஊற்றுவது
சற்று கடினம் எனவே சொட்டுநீர் பாசனம் செய்தால் எளிமையாக பராமரிக்கலாம். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்களில் இதனை அமைக்கும்
போது மேல் தளங்களில் குடியிருப்போரின் சமையலறை கழிவு நீரை சுத்திகரித்து எளிமையாக மறு
உபயோகம் செய்ய ஒரு வாய்ப்பு. மேலை நாடுகளில் கட்டிடம் கட்டும் போதே சுவர் தோட்டத்திற்கான
அமைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றனர்
நல்ல வெளிச்சமுள்ள
அல்லது சற்று நிழலான சுவர் பகுதி போதுமானது. புற ஊதா கதிர்களை தாங்கி நீண்ட நாட்கள் வரும் பாலிபுரோப்பிலீன் பிளாஸ்டிக்கிலான
சுவற்றில் பொருத்தப்படும் பகுதி, தொட்டிகள், பைகள் கடைகளில் நிறைய வந்துள்ளன. அவைகளை
வாங்கி நமது தேவைகேற்ப வடிவமைத்து அலங்கார செடிகள், அல்லது சமையலுக்கு தேவையான செடி
வகைகளை வளர்க்கலாம். பொதுவாக அடுக்குமாடி அல்லது வணிக வளாகங்களின் முகப்பு பகுதிகளில்
அலங்காரச் செடிகளையும், குடியிருப்பு பகுதிகளின் அருகில் சமையலுக்கு தேவையான செடி வகைகளையும்
வளர்க்கலாம். காம்பௌன்ட் சுவற்றையும் இதற்கு பயன்படுத்தலாம். இவைகள் இன்றி பாட்டில்கள்,
பழைய டயர்கள் போன்றவற்றையும் நமது பொருளாதாரத்திற்கேற்ப பயன்படுத்தலாம்.
![]() |
| எளிமையாக சொட்டு நீர் அமைப்பு |
![]() |
| வண்ணமிக்க அழகு தாவரங்கள் |
எடை குறைந்த, நீரை
அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ளும் தென்னைநார் கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை வளர்ப்பதற்கு
உபயோகிக்கும் போது சிறப்பாக செடிகள் வளரும். ஆஸ்பரகஸ், பெரணி வகைகள், வண்ணமிகு கெலேடியம்
வகை தாவரங்கள், சில வண்ண புற்கள், தொங்கு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்து மலர்
செடிகளையும், புதினா, கொத்தமல்லி, ஓரிகான போன்ற நறுமண தாவரங்களையும் சுவர் தோட்டத்தில்
வளர்க்கலாம். இன்றைய நகரங்களின் தேவை இந்த “சுவர் தோட்டம்”
Friday, July 25, 2014
கோவையில் வீட்டுத் தோட்டப் பயிற்சி
ஆரோக்கியமான இயற்கை
உணவின் மேலுள்ள நம்பிக்கை, காய்கறிகளின் விலை கடுமையான உயர்வுக்குப் பின் மக்களின்
கவனம் மெதுவாக வீட்டுத் தோட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கோவையில் நடைபெற்ற “அக்ரி
இன்டெக்ஸ்” வந்த திரளான மக்கள் வீட்டுத் தோட்ட
அரங்குகளை வெகுவாக இரசித்துப் பார்வையிட்டது சான்றாகும்.
தமிழக அரசு கோவைக்கும்,
சென்னைக்கும் சலுகை விலையில் வீட்டுத் தோட்ட உபகரணங்களை கொடுத்துள்ளது. இது மற்ற நகரங்களுக்கும்
நிச்சயம் விரிவாக்கப்படும் என எண்ணுகிறேன்.
வாங்கியவர்களுக்கும் / வாங்கப் போகிறவர்களுக்கும்
இந்த ஒரு நாள் பயிற்சி உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
1. வீட்டுத் தோட்டம்
2. நீர் மேலாண்மை
3. உர மேலாண்மை
4. பூச்சி / நோய்
மேலாண்மை
இவற்றோடு மூலிகைகள்
மற்றும் சிறுதானியங்கள் பற்றிய தகவல் தொகுப்பு.
தொடர்புக்கு :-
அலைபேசி 75985 16303
94420 19007
Subscribe to:
Posts (Atom)















