Tuesday, April 26, 2011

அச்சம் தரும் அணு உலைகள் -- (1)


நிலநடுக்கங்கள், சுனாமிகள், எரி மலைக் குழம்புகளின் சீற்றங்கள் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஜப்பானுக்குப் புதியவை அல்ல. சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானிய மொழிச் சொல்தான். ஜப்பானிய மக்கள் காலம் காலமாக பேரிடர்களுக்கிடையே வாழப் பழகிக் கொண்டவர்கள். விதியே என்று அவற்றை அமைதியாக ஏற்றுக் கொள்ளாமல், அவற்றிலிருந்து தப்பிக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டவர்கள். அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளானதால் மரம், பேப்பர் போன்ற எடை குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகளைக் கட்டி வாழ்பவர்கள். ஆனாலும் இவ்வருடம் மார்ச் 11 அன்று அந்நாட்டைத் தாக்கிய 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம், அதன் விளைவாக எழுந்த ஆழிப் பேரலைகள், இவை இரண்டின் காரணமாக புகுஷிமா அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானியர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. 


1979-ல் அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலண்ட், 1986-ல் ரஷ்யாவின் செர்னோ பில் ஆகிய இரு அணு உலை விபத்துக்களுக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய விபத்தாக ஃபுகுஷிமா விபத்து வரலாற்றில் குறிக்கப்படும். ஜப்பானைப் பொறுத்த அளவில் 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சுக்குப் பிறகு நடந்த கோர விபத்தாக இதை எடுத்துக் கொள்ளலாம். பல ஊர்கள் தரைமட்டமாகின. கட்டடங்களும் பாலங்களும் இடிந்து விழுந்தன. பல இடங்களில் தீப்பிடித்துப் பரவியது. இதுவரை சுமார் 16000 பேர் பலியாகியுள்ளனர். 7,00,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.


மின்உற்பத்திக்கு அணு ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பானில் மொத்தம் 55 அணு உலைகள் உள்ளன. தன்னுடைய மின்தேவையில் மூன்றில் ஒரு பகுதியை அணு ஆற்றல் மூலமே அந்நாடு நிறைவேற்றிக் கொள்கிறது. மார்ச் 11 அன்று சுனாமி தாக்கிய ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 14 அணு உலைகளும் (ஃபுகுஷிமாவில் உள்ள 6 உட்பட) கொதிநீர் அணு உலைகளே. இத்தகைய உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியம் ஆக்சைடிலிருந்து வெளிப்படும் வெப்பம் நீரைக் கொதிக்க வைத்து ஆவியாக்கி, அந்த நீராவியின் சக்தியைக் கொண்டு சக்கரங்களைச் சுழலவைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியவை. சிறு கம்புகள் வடிவத்தில் மாற்றப்பட்ட எரிபொருள், கட்டுகளாக ஆக்கப்பட்டு உலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். இந்த மையப் பகுதி உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடியது. ஆனால் அந்த வெப்பநிலையை 2200 டிகிரி சென்டிகிரேடுக்குள் இருக்குமாறு கட்டுப்படுத்தவில்லையெனில், எரிபொருள் உருகி அதன் காரணமாக கதிர்வீச்சு அபாயம் ஏற்படும். எனவே வெப்பநிலையைக் கட்டுக்குள் வைக்க  குளிர்விப்பானாக தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.


சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஃபுகுஷிமா அணுஉலை குளிர்விப்பான்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே இயங்கத் தொடங்கிய டீசல் ஜெனரேட்டர்கள் குளிர்விப்பான் இயந்திரங்களை செயல்பாட்டில் வைத்திருந்தன. ஆனால் சிறிது நேரத்திலேயே மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய 10 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஜெனரேட்டர்களைச் செயலிழக்க வைத்துவிட்டன. (ஃபுகுஷிமா ஜெனரேட்டர்கள் 6.5 மீட்டர் உயர அலைகளை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டவை). ஜெனரேட்டர்கள் செயலிழந்ததும் செயல்பாட்டுக்கு வந்த பாட்டரிகள் 8 மணி நேரம் தாக்குப் பிடித்தன. மொபைல் ஜெனரேட்டர்களைக் கொண்டு வந்து மின்விநியோகத்தைத் தொடரச் செய்யப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படி அடுக்கடுக்கான தோல்விகளின் காரணமாக அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சினைத் தடுக்க இயலாமல் போனது. அங்கிருந்து வெளிப்படும் கதிரியக்கம் ஜப்பான் நாட்டை மட்டுமல்லாது அருகில் உள்ள பல நாடுகளையும் பாதிக்கும். அங்கு விளையும் எல்லாப் பயிர்களும் விஷமாகிவிடும். ஆனாலும் ஜப்பானிய தொழில்நுட்ப வல்லுநர்களும் பிற நாடுகளிலிருந்து உதவிக்கு வந்திருக்கும் வல்லுநர்களும் சேர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொணர கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.


ஜப்பானில் நடந்த விபத்து உலகளாவிய அளவில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், அணு உலைகளுக்கு எதிரான எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜெர்மனியில் 1980-க்கு முன்னர் தொடங்கப்பட்ட 7 உலைகள் மூடப்பட்டு விட்டன. இந்தியாவில் ஏற்கனவே உள்ள அணு உலைகளோடு, இறக்குமதி செய்யப்படும் 36 அணு உலைகளைக் கொண்டு 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நமது அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் உலைகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி சுயேச்சையான, விரிவான, வெளிப் படையான ஆய்வுகள் இன்றி புதிய அணு உலைகள் பற்றி முடிவுகள் எடுக்க வேண்டாம் என நம் நாட்டு விஞ்ஞானிகள் எச் சரித்துள்ளனர். அரசு இந்த எச்சரிக்கையை உடனே கவனிக்க வேண்டும்.

-பேராசிரியர் கே. ராஜு  
Source : தீக்கதிர்


4 comments:

Anand said...

India will become colony of west in few years.

வின்சென்ட். said...

திரு.ஆனந்த்

நீங்கள் கூறுவது நடந்துவிடும் போல் உள்ளது. அணு உலைகள் பற்றி எல்லா நாடுகளும் மறுபரிசீலனை செய்ய, நாம் மாத்திரம் ஜைதாப்பூர் அணு உலைக்கு ஆரம்ப கட்டவேலைகளை செர்னபிள் விபத்து நாள் அன்று துவக்குகிறோம். நாட்டை கடவுள்தான் காப்பாற்ற இயலும்.

கூடல் பாலா said...

அணு உலைகளை மக்கள் மீது அரசாங்கம் திணிக்க பல்வேறு காரணங்கள் உள்ளன .அவற்றுள் ஒன்று அணு உலைகள் குறித்த போதுமான அறிவு மக்களிடம் இல்லாமைதான் .இதனால்தான் பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவரும் நிலையிலும் இந்திய அரசாங்கம் புதிய அணு உலை திட்டங்களை தீட்டி வருகிறது .அணு சக்தி குறித்த மக்களின் அறியாமையை போக்கவேண்டியது நமது கடமையாகும் .எனவே தொடர்ந்து இது போன்ற பதிவுகள் எழுதுங்கள் .வாழ்த்துக்களுடன் கூடல் பாலா ....

வின்சென்ட். said...

திரு. கூடல் பாலா

உங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது மிக சரியானது.அடிதட்டு மக்களுக்கு அறியாமை, நடுத்தர மக்களுக்கு சொகுசு வாழ்க்கை விட மனதில்லை, மேல் தர வர்க்கத்திற்கு பாதிப்பு இல்லை வழக்கம் போல் எளிதாக மற்றவர்களின் துன்பத்தில் அரசாங்க துணையுடன் பல தலைமுறைகளுக்கு சுரண்டலாம்.