Wednesday, May 26, 2010

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும்.

வெட்டப்படவிருந்த 55 வருட அரச மரம்.

கோவை அவினாசி பிரதான சாலையிலிருந்து 200 மீ தூரத்தில் மசாக்காளி பாளையம் செல்லும் சாலையில் 55 வருட பெரிய அரசமரம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட இருந்தது. இதனை கேள்விப்பட்ட மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் குறை தீர்க்கும் நாளன்று (29-03-2010 ) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அம்மரத்தை வெட்ட வேண்டாம் என விண்ணப்பம் செய்தனர். அவர்களின் வேண்டுகோள் ஏற்கபட்டு இன்று வரை மரம் வெட்டப்படவில்லை. “சலசல”வென்ற சத்ததுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
அரச இலைகள்.

விஞ்ஞானப் பெயர் : Ficus Religiosa
புனிதமான மரம்.
மரங்களின் அரசன்.
புத்தருக்கு ஞானம் கிடைத்தது இந்த மரத்தடியில்தான் என்பது வரலாறு.
கோவை மாநகரின் கற்பக விருட்சம்,

மாணவர் திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும்; குழந்தைகள் தானே என்று இல்லாமல் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவர்களது குறிகோளை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியரும் போற்றுதலுக்கு உரியவர்கள்.
தந்தை திரு. ப. தண்டபாணியுடன் மாணவர் திரு. த. அருண்குமார்

பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது.
மாணவர் திரு. அருண்குமாரின் கடித்ததின் நகலை இங்கே தருகிறேன்.

மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம் ஐயா, எங்கள் பகுதியில் உள்ள 55 ஆண்டுகளாக உள்ள அரசமரத்தை வெட்டக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

நான் உங்களுக்கு நிழல் தருகிறேன், சுவாசக் காற்று தருகிறேன் பிறகு ஏன் என்னை அழிக்க நினைக்கிறீர்கள். என்னை அழித்துவிட்டு வெயிலில் வாடி அழிந்துவிடாதீர்கள். என்னை அழித்து விட்டால் என் மேல் கூடுகட்டி வாழும் பறவைகளுக்கு என்ன பதில் சொல்வேன். நான் கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்து உங்களுக்கு நான் சுத்தமான காற்றை தருகிறேன். ஆகையால் என்னை அழிக்காமல் காத்திடவும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள குழந்தைகள்,
த. அருண்குமார்.

இடம்: பீளமேடு.
நாள் : 29-03-10

உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும்.

ப. தண்டபாணி : 94420-15060

Tuesday, May 18, 2010

குடிநீர் விலைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் ( கி.மு. ) காலகட்டத்தில் நம் அரசர்கள் மாதம் மும்மாரி பொழிந்ததா ?? என்று மந்திரிகளை கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் நம் கிராமங்கள் தன்னிறைவாய் ஆறு, குளம், கிணறு போன்றவைகளை குடிநீருக்காக உபயோகித்து நீர்வளம் மிக்கதாக இருந்தபோது உலகின் ஒரு பகுதியில் குடிநீர் விற்பனையில் இருந்துள்ளது.

இச்செய்தி கிறிஸ்துவ வேதாகமத்தில் (Bible) தெளிவாக எழுதப்பட்டுள்ளது. வேதாகமத்தை இரு பிரிவுகளாக கிறிஸ்து பிறப்பதிற்கு முன் ( கி.மு. ) எழுதப்பட்டவைகள் “பழைய ஏற்பாடு” என்றும் கிறிஸ்து பிறந்ததிற்கு (கி.பி.) பின் எழுதப்பட்டவைகள் “புதிய ஏற்பாடு” ஏற்படுத்தினர். இதில் பழைய ஏற்பாட்டில் உள்ள “புலம்பல் ” (The Book of Lamentations ) என்ற ஆகமத்தில் 5 வது அதிகாரத்தில் 4 வது வசனத்தில் “எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கி குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது”. என்று எழுதப்பட்டுள்ளது.

“புலம்பல் ” பழைய ஏற்பாட்டில் இருப்பதால் குடிநீர் விற்பனைக்கு வந்து 2000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

இன்று நமது நிலைமை என்ன ??? ஆறு, குளம், கிணறு போன்ற நீராதாரங்கள் சீர்கெட்டு அருந்த தகுதியற்றதாய் மாறிக்கொண்டிருந்த காலக்கட்டதில் வந்த குடிநீர் விற்பனை இன்று அமோகமாக நடைபெறுகிறது. இரு பருவமழை, இடையே கோடைமழை என இருந்ததை மரங்களை அழித்து மழையை கேள்விக் குறியாக்கியது நாமல்லவா ? பொருளாதார வேகத்தில் மரங்களை அழித்தும், கழிவுகளால் நீராதாரங்களை பாழ்படுத்தியதும் நாமல்லவா ?

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே காவிரியின் குறுக்கே கரிகால சோழன் கல்லணை கட்டி பெரிய நீராதாரத்தை நமக்கு தந்தான். இன்று சுகமாக இருக்கிறோம். நம் வருங்கால சந்ததிகளுக்கு என்ன செய்யபோகிறோம் ?????

நீராதாரமா ??? பொருளாதாரமா ??? சிந்திப்போம்.

Monday, May 3, 2010

மாடியில் கீரை வளர்ப்பு.

கீரைகள் வளர்ப்பதற்கு மிக எளிதாக இருப்பதும், மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்தவுடன் விற்பனையும் என்பதால் புறநகர் பகுதிகளில் கிடைக்கும் நகர கழிவு நீரைக் கொண்டு மிகவும் எளிதாக வளர்த்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் மிக பயனுள்ள கீரையை வாங்க தயக்கமாக உள்ளது. காரணம் வளர்க்கப்படும் இடத்தின் நம்பக தன்மை. நன்மை தருவதற்கு பதிலாக சமயங்களில் வயிற்றுபோக்கு, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. இதனை நாமே கிடைக்கின்ற பொருட்களை கொண்டு நகரங்களில் எளிதாக நம்பகத் தன்மையுடன் வளர்க்க முடியும் என்பது எனது அனுபவம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். 10 அடி நீள பையில் காய்ந்த இலைகள் தென்னை நார் கழிவு + மண்புழு உரம் + வேம் ஆகியவற்றை நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.மெதுவாக முளைக்க ஆரம்பிக்கும் கீரை விதைகள்நன்கு வளர்ந்த கீரை. சமையலுக்கு தயார்

மேலும் காண:
http://maravalam.blogspot.com/2010/08/blog-post_23.html

Sunday, May 2, 2010

கீரையே நம் இரை (உணவு) --- (2)

பிரபல ஆங்கில கார்டூன் தொடரான Popeye the Sailor இல் அந்த மாலுமிக்கு “மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி” இந்த “ஸ்பினாச்” கீரையிலிருந்து கிடைப்பதாக காண்பிப்பார்கள்.

சில குறிப்பிட்ட கீரை வகைகளின் பொதுவான பயன்பாட்டுக் குறிப்புகள்:-

அரைக்கீரை:-

தாதுவை விருத்தி செய்யும். இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது.

அகத்திக்கீரை:-

பித்தம் குணமாகும், ஜீரணசக்தி உண்டு பண்ணும். இழந்த பலத்தை மீட்டுத்தரும். இது மலத்தை இளக்கி வெளியேற்றும். சிறிதளவு வாயுவை உண்டு பண்ணும். உயிர்ச்சத்து ‘ஏ’ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிக அளவில் இருப்பதால் உடல் வளர்ச்சியையும், கண்பார்வை தெளிவையும் எலும்புகளுக்கும் பலம் கொடுக்கும்.

ஆரைக்கீரை:-

அளவு மீறிப் போகும் சிறுநீரை கட்டுப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வரும். பித்தம் சம்பந்தமான கோளாறுகளை போக்கும்.

பொன்னாங்கண்ணி கீரை (பச்சை):-

மேனி தங்கத்தகடு போல் பிரகாசிக்க தினசரி இக்கீரையை சூப் வைத்து நெய் சேர்த்து அருந்த உடலும் வலுப்பெறும்.

மிளகு தக்காளி கீரை:-

வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி உள்ளது. பருப்பும், தேங்காயும் போட்டு காரம் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் குடல்புண், வாய்ப்புண் ஆறும்.

முளைக்கீரை:-

அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இளமையில் தலைமுறை நரைக்காமல் இருக்கும்.

கறிவேப்பிலை:-

நாள்தோறும் உணவில் ஏதாவது ஒரு வடிவில் சேர்த்துக் கொண்டால் உடலின் இளமைத்தோற்றம் நிலைத்துநிற்கும்.

பொன்னாங்கண்ணி கீரை(சிவப்பு):-

இக்கீரையை பூண்டு சேர்த்து வதக்கி சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால் மூலநோய் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணமாகும். வாய்ப்புண், தொண்டைப்புண் நீங்கும்.

புதினா கீரை:-

இரும்புச்சத்து இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து புதிய இரத்தத்தை உண்டு பண்ணும். பற்களை கெட்டிப்படுத்தும், எலும்புகளை வளரச் செய்யும். புதினாவை நசுக்கி போட்டு கஷாயம் வைத்து சாப்பிட்டால் இளமையுடன் வாழலாம். 1/2 சங்கு புதினாக் கீரையை குழந்தைகளுக்கு கொடுக்க கபம் நீங்கும்.

பசலைக்கீரை:-

நீர் கடுப்பு, வெள்ளை வெட்டை நீங்கும்.கொத்தமல்லிக்கீரை:- வறுத்த கொத்தமல்லியை நாலுமணி நேரம் ஊறவைத்து அந்நீரை குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்து வந்தால் வயிற்று வலி, தாகம், உள்சூடு எல்லாம் சரியாகும்.

-இரா.ஜென்னி இராஜசேகர் Source : தீக்கதீர்/கோவை/17-03-2010

Saturday, May 1, 2010

கீரையே நம் இரை (உணவு) --- (1)

உயிர்ச்சத்தும் (வைட்டமின்), தாது உப்புக்களும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், பல தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. எனவே கீரையை நாம் “பாதுகாக்கும் உணவு” (Protective Food ) என்கிறோம். மேலும் இரும்புச்சத்து, கால்சியம், உயிர்ச்சத்து ‘ஏ’ (கரோட்டின்), உயிர்ச்சத்து ‘சி’ மற்றும் உயிர்ச்சத்து ‘பி’ காம்ப்ளக்ஸ் அதிலும் குறிப்பாக ஃபோலிக் ஆசிட், ரைபோஃப்ளேவின் நிறைந்து காணப்படுகிறது. புரதச்சத்து மிகக்குறைந்த அளவே கீரை வகைகளில் காணப்படுகிறது. பச்சைக்கீரையை பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் சேர்த்து உண்ணும்போது தரமான புரதச்சத்து கிடைக்கிறது. எலும்பு, பல் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு பலம் அளிக்கிறது.

கண்ணுக்கு உணவு கீரை
குழந்தையிலிருந்து கண்களை குறை பாடின்றி பாதுகாக்க மிக இன்றியமையாதது உயிர்ச்சத்து ‘ஏ’. நம் உடலில் உயிர்ச் சத்து ‘ஏ’ குறையும்போது கண்ணில் ஈரத் தன்மை குறைந்து, சுருக்கம் ஏற்பட்டு வற்றிவிடுகிறது. இதனால் மங்கலான வெளிச்சத்தில் காண்பது கடினம் (மாலைக் கண் நோய்). உயிர்ச்சத்து ‘ஏ’ குறைபாட் டின் தொடக்க கால அறிகுறியான மாலைக் கண் நோயை குறித்த நேரத்தில் குணப்படுத்த வேண்டும். இல்லையேல் கண்கள் சிவப்புநிறமாக மாறி கார்னியா (கண்ணின் கருமையான பகுதி/கண்மணி) வெடித்து நிரந்தரமாக பார்வை இழக்க நேரிடும்.உயிர்ச்சத்து ‘ஏ’ அதிகளவில் நிறைந் துள்ள உணவுகள் பின்வருமாறு: பால், தயிர், மோர், நெய், கீரை, வெண்ணெய், முட்டைக்கரு, மஞ்சள் மற்றும் சிவப்புநிற காய்கறிகள் (பூசணி, காரட், பீட்ரூட்) மற்றும் ஈரல். உயிர்ச்சத்து ‘ஏ’ என்பது உடலில் கரோட்டினாக உட்கொள்ளப்பட்டு பின்னரே உயிர்ச்சத்து ‘ஏ’ வாக மாற்றப்பட்டு உட்கிரகிக்கப்படுகிறது.பச்சைக்கீரைகளிலிருந்து கிடைக்கும் தரமான உயிர்ச்சத்து ‘ஏ’ ஆனது குழந்தைகளின் வளர்ச்சிக்கும் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கவும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
சீரான இரத்தத்திற்கு உணவு கீரை
நம் உடலில் சீரான இரத்த ஓட்டத் திற்கு இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், உயிர்ச்சத்து பி-12, புரதச்சத்து மற்றும் உயிர்ச்சத்து ‘சி’ தேவைப்படுகிறது. மேற் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் சரியான விகிதத்தில் நம் உடலுக்கு கிடைக்கப்பெறாவிட்டால் இரத்த நிறமி ஹீமோகுளோபின் அளவு குறைந்து இரத்த சோகை ( Anaemia ) ஏற்படுகிறது. இரத்தசோகை என்பது எந்த வயதினரையும் யாரையும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பிரசவ கால பெண்களை அதிகம் பாதிக்கிறது. இதனால் தனி நபரின் வேலை செய்யும் திறன் குறைந்து உடற்சோர்வு மற்றும் மனச்சோர்வை ஏற் படுத்தும். பிரசவகால பெண்களுக்கு குறைமாத பிரசவம், குழந்தை இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் சில: அதிகாலையில் உடற்சோர்வு, பசியின்மை, தூக்கமின்மை, சுவாசப்பிரச்சனைகள், மயக்கம், தோல் வறட்சி, கண்ணில் கீழ் இமை, உதடு மற்றும் நாக்கு வெளிரித் தோற்றம் அளித்தல்.பச்சைக்கீரை வகைகளே முதல் தரமான இரும்புச்சத்து அதிக அளவில் மலிவான விலையில், எங்கும் எளிதில் கிடைக்கும். சாதாரணமாக 50 கி. கீரையை மட்டும் தினசரி ஒருநபர் எடுத்துக் கொண்டாலே போதுமானது. அந்த 50 கி. பச்சைக்கீரையிலிருந்து வரும் இரும்புச் சத்து ஒரு நாள் உடலின் தேவையை பூர்த்தி செய்து விடுகிறது.இரும்புச்சத்து, உடலில் எளிதில் உட்கிரகிக்க உயிர்ச்சத்து ‘சி’ மிக மிக அவசியம். பச்சைக்கீரைகளில் இயற்கையாகவே உயிர்ச்சத்து ‘சி’யும் இரும்புச்சத்தும் உள்ளதால், நம் உடலில் எளிதில் இரும்புச் சத்து உட்கிரகித்துக் கொள்ளப்படும். அதே சமயம் அசைவ உணவான கல்லீரல், மண்ணீரலில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் முழுவதுமாக உட்கிரகிக்க உயிர்ச் சத்து ‘சி’ நிறைந்த நெல்லிச்சாறு, ஆரஞ்சுப்பழச்சாறு அல்லது எலுமிச்சைச் சாற்றினை அருந்தினால் போதும்.

-இரா.ஜென்னி இராஜசேகர் Source : தீக்கதீர்/கோவை/17-03-2010