குமரி அல்லது சோற்றுக் கற்றாழை |
கண் திருஷ்டி , தீய சக்திகள் இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக நகர்புறங்களில் கூட சில கடைகள், வீடுகளுக்கு முன் கட்டித் தொங்க விடப்படுகிறதை இன்றும் நாம் பார்க்கமுடியும். கிராமப்புறங்களில் மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிகள் பற்றாமலிருப்பதற்காகவும், சிறிய கொசுக்களை ஈர்த்து வைத்துக்கொள்ளவும் தொங்க விடப்படுவது உண்டு. கற்றாழையை மருந்துப் பொருளாகவும் , அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். இன்று எல்லா கடைகளிலும் ‘அலோவேரா’ ஷாம்பு, சோப்புக்கள், க்ரீம்கள் நவீன பெண்களிடையே மிக பிரபலம். இயற்கை சார்ந்த பொருளிலிருந்து பெற படுவதால் வளர்ந்த நாடுகளிலும் அலோவேரா சார்ந்த பொருட்கள் சிறந்த சந்தை வாய்பை பெற்றுள்ளது.
ஜெல் |
வீட்டில் வளர்ப்பதால் சிறு காயங்கள் ஏற்படும் போது இதனை காயங்கள் மேல் தடவ விரைவில் குணம் காணலாம். சிறிய சிறிய சரும நோய்களுக்கு இதனை வெட்டி பூச நிவாரணம் உண்டு. கோடைகாலங்களில் சூரியவெம்மையை (Sunburn) குறைக்க இதன் மடலை வெட்டி முகம், கைகளில் பூசனால் சருமத்தை காத்துக் கொள்ளமுடியும். தலையில் ஏற்படும் பொடுகு போன்ற பிரச்னைகளுக்கு கற்றாழையின் கூழை தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பலன் கிடைக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண தேக பொலிவு உண்டு. நிதம் சாப்பிடக்கூடாது. வியர்வையில் கற்றாழை வாசம் இருக்கும். மலசிக்கல், குடல் புண்களுக்கு பாரம்பரிய வைத்தியர்கள் இதனை பரிந்துரைப்பர்.
கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகை |
நிறைய வகைகள் இதில் உண்டு. கசப்பு தன்மை அதிகமுள்ளது, பொதுவாக லேசான மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் அதன் சாறு இருக்கும். கற்றாழையின் மணம் அதிகமிருக்கும். இதன் ஜெல்லை நன்கு கழுவி உண்ண வேண்டும். கசப்புத்தன்மை மிக்க குறைவாயுள்ள ஒரு வகையின் சாறு ஒடித்த சிறிது நேரத்தில் சிவப்பு நிறமாக மாறிவிடும். மணமற்றதாக இருக்கும். அதிக மருத்துவ குணமுள்ளது என்கின்றனர்.
ஊடுபயிராக இதனை வளர்க்கலாம் |
பக்க கன்றுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். திசு வளர்ப்பு மூலமாகவும் இனபெருக்கம் பெரிய அளவில் செய்கின்றனர். நீர் தேவை குறைவு என்பதாலும் வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ளதால் வீட்டில் வளர்ப்பதோடு வசதியுள்ளவர்கள் விவசாய நிலங்களிலும் வணிக நோக்கில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம். வணிக முறையில் அழகு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் பயிர் செய்வது நன்மை தரும்.