Sunday, March 30, 2014

குடும்ப மகிழ்ச்சி


சிறுகுடும்ப தபால் வில்லைகள்

குடும்ப மகிழ்ச்சியென்பது நாம் உண்ணும் உணவில்தான்  உள்ளது. குறிப்பாக இயற்கை இடுபொருட்கள் மூலம் உற்பத்தி செய்யும் உணவுக் பொருட்கள் சுவை தருவதோடு நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது என்றால் மிகையில்லை. அறுபது மற்றும் எழுபதுகளில் எல்லா ஊடகங்களிலும் சிறுகுடும்பம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள், சாதனங்கள் பற்றிய அறிமுகங்கள் இருந்தன. சிறு குடும்ப தபால் தலைகள் 70-90 களில் வெளிவந்தன. அப்போது இந்திய தம்பதிகளிடையே கருத்தரிக்கும் திறன் நன்கு இருந்ததுஆனால் 2000 ஆம் ஆண்டுகளில் நிலைமை மாறி கருத்தரிப்பு நிலையங்கள் சிறு நகரங்களில் கூட தோன்ற ஆரம்பித்தன.


 இன்று  குழந்தை தத்தெடுத்தல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பிறக்கின்ற குழந்தைகளில் குறிப்பிட்ட சதவீதம் ஆட்டிசம் (autism), கற்றல் குறைபாடு (Learning Disability), மனவளர்ச்சி குன்றுதல்  போன்றவை குடும்ப மகிழ்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது. 60  களில் அறிமுகப்படுத்தப்பட்ட இரசாயன விவசாயம், மாசடைந்த நிலத்தடி நீர்,  உணவு முறையில் மாற்றம் காரணமென்று பெரும்பான்மை மக்கள் கருதுகின்றனர். பாரம்பரிய தானியங்கள், உள்ளூர் இரக விதைகள், வீட்டுத் தோட்டம், விலை சற்று அதிகமிருந்தாலும் இயற்கை அங்காடிகளுக்கு ஆதரவு, யோகப் பயிற்சி போன்ற செயல்கள்  முக்கிய குடும்ப மகிழ்ச்சியை (குழந்தை பேறு) தரும்.

பெரியவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய நிலைமையைத் தரும். பெரியவர்கள் ஆரோக்கியமாக இருந்தாலே மருத்துவமனை செல்லுதல் குறைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.  இதனால் சில சமூக அவலங்கள் (மறுமணம், ஏச்சுப்பேச்சுக்கள், முதியோர் இல்லம், மனநல காப்பகங்கள் ) குறைய வாய்ப்புள்ளது.