Friday, June 29, 2007

மழை நீர் சேமிப்பு

திட்டமிடத் தவறுகிற போது, தவறு செய்ய திட்டமிடுகிறோம்.



நீர் பற்றாக்குறை உண்மைதான். ஆனால் இயற்கை தரும் மழையை நாம் எந்த அளவிற்கு சேமிக்கிறோம். ஒரு கணக்கீட்டைப் பார்ப்போம்.



2400 ச.அ(1கிரவுண்டு)10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 2,230 லிட்டர்
1 ஏக்கரில் 10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 40,460 லிட்டர்
1 ச. கி.மீ 10mm மழை பெய்தால் கிடைக்கும் நீர் சுமார் 10,000,000 லிட்டர்



இதில் நாம் எவ்வளவு நீரை சேமிக்கிறோம் ? எவ்வளவு பேர் உண்மையில் வீட்டில் மழை நீர் சேமிப்பு செய்கிறோம் ? எவ்வளவு விவசாயநிலங்களில் பண்ணை குட்டைகள் உள்ளன? எவ்வளவு ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டது? இயற்கை நம் நாட்டிற்கு இரண்டு பருவ மழை பொழிவை தருகிறது, திட்டமிடாமை காரணமாக சேமிக்காமல் வெள்ளம் ஏற்பட்டு உயிர் இழப்புக்களையும் நஷ்டங்களையும் சந்திக்கிறோம். சில மாதங்களுக்கு முன் ''இந்து'' நாளிதழில் வந்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வளர்ந்த பணக்கார நாடான ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கழிவு நீரை சுத்தம் செய்து குடி நீராக அடுத்த வருடமே வினியோகம் செய்யப்போகிறார்கள் என்பது தான் அது. ஆனால் நம் நாட்டின் சராசரி மழை பொழிவு 1250mm. சுமார் 1 பில்லியனுக்கு மேல் மக்கள் தொகை, உலகில் அதிக கால்நடை உள்ள நாடு, சுமார் 70% மக்கள் விவசாயம், மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறை என வருங்காலத்தில் நம் நாட்டின் நீர் தேவை அதிகரிக்கப்போகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம் ??
திட்டமிட்டு இந்த பருவ மழை பொழிவை சேமிப்போம். இல்லையேல் தவறு செய்ய திட்டமிடுகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம்.
சில ஊர்களில் நமக்கு கிடைக்கும் மழை பொழிவைக் கணக்கிட CLICK HERE

Sunday, June 24, 2007

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்

1. தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.

2. குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை தவிர்ப்போம்.

3. ஒளிர் மின் விளக்கிற்கு (CFL) மாறுவோம்.

4. சூரிய சக்தியை பயன்படுத்தி சுடுநீர் பெறுவோம், விளக்கு எரிப்போம்.

5. புதுபிக்கும் வகை மின்கலங்களை (Rechargeable Battery) பயன்படுத்துவோம்.

6. நீண்ட தூர பயணத்திற்கு ரயில், பேருந்து போன்றவைகளை பயன்படுத்துவோம்.

7. குறைந்த தூர பயணத்திற்கு சைக்கிளை பயன்படுத்துவோம்.

8. கடித தொடர்பிற்கு மின்னஞ்சலை அதிகம் பயன்படுத்துவோம்.

9. பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகித பைகளை பயன்படுத்துவோம்.

10. கொசு வலையை பயன்படுத்தி கொசுவர்த்தி சுருள்,வில்லை போன்றவைகளை தவிர்ப்போம்.

11. வீடுகளில் காம்பவுண்ட் முழுவதும் தளம் அமைப்பதை தவிர்த்து சற்று மண் பகுதியை விடுவோம்.

12. இரு குப்பை தொட்டி முறையை சமையலறையிலிருந்து தொடங்குவோம்.

13. நாமே மண்புழு உரம் சமையலறை கழிவிலிருந்து தயாரிப்போம்.

14. இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு தந்து ஊக்கப்படுத்துவோம்.

15. மூலிகை தாவரங்கள் மற்றும் மரங்களை வீட்டருகில் வளர்ப்போம். (கவனம் தேவை)

16. விஷேச நாட்களில் மரம் நடுவதை கொள்கையாக பின்பற்றுவோம்.

17. மழை நீர் சேகரிப்பு முறையை எங்கிருந்தாலும் அமல் செய்வோம்.

18. நீரை குறைவாகவும், மறுஉபயோகமும், மறுசுழற்சியும் செய்வோம்.

19. திறன்நுண்ணுயிரை (Effective microorganisms(EM) அன்றாடவாழ்வில் பயன்படுத்துவோம். (விபரம் இங்கே)

20. இந்தச் செய்திளை நண்பர்களுக்கு தெரிவிப்போம்.

இயற்கையின் கணக்கு





மண் + மரம் = மழை , சோலைவனம் .
மண் - மரம் = - மழை , பாலைவனம்.
மழை - மரம் = வெள்ளம் , மண் அரிப்பு.



தேசீய வன கொள்கை 1988 படி நாம் 33% வனப்பரப்பளவு வைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தேசீய அளவில் சுமார் 22.6% வனப்பரப்பளவும், தமிழகத்தை பொறுத்த வரையில் சுமார் 17.6% வனப்பரப்பளவு மட்டுமே வைத்திருக்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரையில் மழை அளவு சுமார் 900mm. இது தேசீய மழை அளவை விட சுமார் 350mm குறைவு. அப்படி இருக்கும் போது நாம் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை பல காரணங்களுக்காக பயிர் செய்து பின் மழை அளவுகுறையும் போது கஷ்டப்படுகிறோம். மூன்று அண்டை மாநிலங்களுடனும் நீருக்காக போராடுகிறோம். மரமும் மழையும் ஒன்றுக்கொன்று தொடர்புடயது.


தமிழக வனத்துறை ஒரு சிறந்த திட்டத்தை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி வனங்களுக்கு வெளியே விவசாய்களின் நிலத்தில் லாபம் தரும் மரங்களை வளர்க்க உதவப்போகிறார்கள். விபரங்களை அறிய தமிழக வனத்துறையின் வலைதளம் http://www.forests.tn.nic.in/ அல்லது அருகிலுள்ள தமிழக வனத்துறை அலுவலங்களை அணுகி விபரங்களைப் பெற்று இலக்கான 33% வனப்பரப்பளவு விரைவில் அடைவோம்.

Sunday, June 17, 2007

மண் அரிப்பும் வெட்டி வேரும்




வெட்டிவேரின் பிரமாண்ட தோற்றம்

இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 5,000,000,000 டன் அளவிற்கு மண் அரிப்பு ஏற்படுவதாக ''வெட்டி வேர் இன்டர்நேஷ்னல் பிளாக்''கூறுகிறது. அதில் 30% கடலிலும்,10% அணைகளிலும் சேர்வதாகவும், 60% இடமாற்றம் அடைவதாகவும் கூறுகிறது. பொதுவாக நீரினால் தான் அதிகம் மண் அரிப்பு எற்படும்.இதில் கவனிக்கபடவேண்டியது, நீர் திரும்ப நீர் சூழற்சி முறையில் மேலே சென்றுவிடும். ஆனால் மண் ??? எனவே மண் அரிப்பை தடுப்பது நமது கடமைகளில் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று உலகம் முழுவதும் ஒரு புல்லையே நம்பியுள்ளது. அது நம் நாட்டின் ''வெட்டிவேர்''.என்றால் பலருக்கு வியப்பளிக்கலாம். ஆனால் உண்மை அதுதான். நம்மிடம் அறியப்பட்டு இன்று ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க
பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக மடகாஸ்கர் நாட்டில் 2000ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் காரணமாக அவர்களின் 1,00,000 பேர் பயன்படுத்தும் ரயில்பாதை சுமார் 280 மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டது. ஆனால் வெட்டிவேரின் உதவியால் அது சீராக்கப்பட்டு இன்று தடையின்றி ஓடுகிறது. விவசாயம் வளர்ந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளது. அதன் PDF காட்சியை இங்கே காணுங்கள்.
சுற்றுலாவிற்கு பெயர் போன நமது மலையரசி '' நீலகிரி '' ஒவ்வொரு மழையின் போதும் நிலசரிவுகளால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. நாமும் வெட்டிவேரின் உதவியால் தீர்வு காணலாமே.
இதை பார்த்துவிட்டு உங்கள் விவசாய நண்பர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.