Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ஒரு சிறு செய்தி.

திருமதி.வாஞ்சி பாட்டியின் கையிலிருப்பது நம் நாட்டின் எதிர்காலம் (நீர்) என்று சொல்லலாம். காரணம் பாரம்பரிய மானாவாரி நெல் ரகத்தை மற்றவர்கள் கைவிட்ட நிலையில் இன்னும் பாதுகாத்து ஒவ்வொரு வருடமும் தவறாமல் பயிர் செய்து இன்றளவும் காப்பாற்றி வருகிறார். இயற்கை தந்த இந்த ரகத்தை நமக்கு தருவதற்கு இவர் தயார் ஆனால் நாம் அதனை பெற்று நீர் நிர்வாகத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க போகிறோமா ?? அல்லது ‘உல்டா’ செய்து நெல் ரகத்தை உருவாக்கப் போகிறோமா ?? எதுவாயினும் இவரது புகைபடத்தை வாழ்த்து அட்டையாக மாற்றி அவரை கௌரவப்படுத்துவதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் இந்நெல் ரகம் பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்தவும்.

http://maravalam.blogspot.com/2009/02/blog-post.html
http://maravalam.blogspot.com/2009/09/blog-post_19.html

Monday, December 28, 2009

யோக முறையில் ஜல நேத்தி என்னும் மூக்கு கழுவும் கிரியை.

சில எளிய உபகரணங்களைக் கொண்டு சில கிரியைகளை செய்வதால் நேரம், மருத்துவ செலவு, போன்றவைகளை வெகுவாகக் குறைத்து உடல் உபாதையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம். நவம்பர் - ஜனவரி மாதங்கள் வரை பனிகாலமாக இருப்பதால் சளி, கபம், சைனஸ், ஆஸ்தமா போன்ற தொல்லைகளால் அநேகர் அவதிபடுவதை பார்த்திருக்கிறேன். இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமாய் தூக்கத்தை இழக்கும் நபர்களும் உண்டு. குறிப்பாக இந்த பருவத்திலும் குளிர்பதன அறையில் இருந்து வேலை செய்பவர்களுக்கு தொடர் ‘தும்மல்’ தவிர்க்க முடியாதது. வாழ்கை முறை, உணவு முறை மாறியதும் காரணம். நமது பாரம்பரிய முறையில் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு இந்த “ஜல நேத்தி” என்னும் மூக்கு கழுவும் கிரியைதான். சுமார் 1 அல்லது 2 மேசை கரண்டி உப்பை மிதமான வெப்பநிலையிலுள்ள சுத்தமான நீரில் நன்கு கலக்கி மேற்கண்ட குவளையில் ஊற்றி உடம்பை சற்று வளைத்து முன்நோக்கி வைத்து தலையை சற்று சாய்த்து மூக்கு துவாரத்தில் குவளையின் துவாரத்தை பொருத்திவிட்டால் நீர் அடைப்பில்லாமல் இருந்தால் எளிதாக அடுத்த துவாரத்தில் வந்துவிடும்.

சளி இருந்தால் அதனையும் சவ்வூடு பரவல் (Osmosis) முறையில் அடர்த்தியின் காரணமாய் இழுத்துகொண்டு வந்துவிடும். நீர் மூக்கினுள் செல்லும்போது வாய் வழியாக சுவாசிக்கவும்.

பிறகு மாற்றி அடுத்த துவாரத்தில் வைத்து செய்ய வேண்டும். உறிஞ்சக்கூடாது. குளிர்ந்த நீரை ஆரம்பத்தில் தவிர்க்கவும். சிலருக்கு உடனடியாக நீர் வெளிவராது பழக பழக சரியாகிவிடும். இல்லையெனில் அனுபவசாலிகளின் மேற்பார்வையில் செய்து பழகவும். இது பாரம்பரிய முறை இருப்பினும் கவனம் தேவை.ரூ.15/= விலையில் சர்வோதய சங்கக் கடைகளில் இக்குவளை கிடைக்கும்.

Sunday, December 20, 2009

முடிவிற்கு வந்த கோபன்ஹேகன் பருவநிலை மாநாடு.

தங்களின் வாழ்வாதாரம் அழிவதை எண்ணி அழுத தீவுநாடுகள், கியுட்டோ தீர்மானங்களை அழிக்க துணிந்த வளர்ந்த நாடுகள், இவற்றுக்கிடையே வளரும் நாடுகள் என திகில் படம் போன்று கடைசியில் ‘சுபம்’ என்று கோபன்ஹேகன் மாநாடு முடிந்தது. கிராம சந்தையின் கடைசி நேர வியாபாரம் போன்று திரு.ஒபாமாவின் கடைசி ‘நேர பேரம்’ பிரேசில், தென்ஆப்ரிக்கா, இந்தியா, சீன தலைவர்களுடன் அமர்ந்து 30 பில்லியன் டாலர்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வளரும் நாடுகளுக்கு தருவதாக கூறி மாநாட்டை முடிவிற்கு கொண்டு வந்தார். எளிதாக வளர்ந்த நாடுகள் தப்பிவிட்டன. தீவு நாடுகளின் கதி !!!! காலம் தான் பதில் சொல்லும்.


படங்கள் உதவி : வலைதளம்