Monday, August 25, 2008

தங்கத்தை உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் வென்றுவிட்டார்.

"உசேன் போல்ட்” சென்ற வாரம் முழுவதும் உலகத்திலுள்ள எல்லா ஊடகங்களையும் ஆக்கிரமிப்பு செய்தவர், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர். 3 தங்க பதக்கங்களையும் உலக சாதனை நிகழ்த்தி பெற்றிருக்கிறார். இமாலய சாதனை. ஆனால் வெற்றி பெற்றபின் கூறியது “It might change my life, but I won’t change”. அவர் அடுத்து செய்தது மனதை நெகிழ வைத்தது. வெற்றியை மற்ற வீரர்கள் போல் கொண்டாடாமல் ஒலிம்பிக்ஸ் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் சீனாவின் சிஜூவான் மாகாணத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி சுமார் 50,000 டாலர்களை (சுமார் 22 லட்சம் ரூபாய்)வழங்கியுள்ளார். அந்த நல்ல உள்ளத்தை இவ்வலைப் பூ பாராட்டி மேலும் மேலும் சாதனைகளைச் செய்ய வாழ்த்துகிறது.

ஜமைக்கா மிக சிறிய நாடு. தங்கம் 6 வெள்ளி 3 வெங்கலம் 2 பெற்று 13 வது இடத்தைப் பிடித்துள்ளது. எவ்வளவோ சாதனைகளைச் செய்யும் நம்மால் முடியாததல்ல. மக்களின் இரசனையை கிரிக்கெட் மூலம் திசை திருப்பி நமக்கு தங்கம் வாங்கி தந்த நமது தேசிய விளையாட்டான ஹாக்கியை மறக்க வைத்து ஒலிம்பிக்ஸில் கூட விளையாடும் தகுதியை இழக்க வைத்த பெருமை பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளையே சாரும். அதிகநேரம் விளையாடப்படும் கிரிக்கெட் மூலம் நமது மக்களின் உழைக்கும் திறனையும், மின்சாரத்தையும் வீணாக்கி, நாட்டின் பொருளாதாரத்தையும் வீணாக்குகிறாம். ஏதோ சாதனைகள் செய்வதாக படிக்கிறோம், பார்க்கிறோம், விவாதிக்கிறோம். எவ்வளவோ தனிமனித சாதனைகள் செய்த டென்னிஸ் ரோஜர் பெடரர், வில்லியம்ஸ் சகோதரிகள் கால்பந்து வீரர் மெஸ்சி, போன்றவர்கள் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தையே பெரு மதிப்பாய் எண்ணுகிறார்கள்.

நம்மால் முடியும் என்று அதற்கான திசை திருப்பும் ஆரம்ப வேலையை தங்கப் பதக்கமாக பெற்றுத் தந்த திரு.அபினவ் பிந்ராவையும், வெங்கலப் பதக்கங்களை பெற்றுத் தந்த திரு.விஜேன்தர் குமார், திரு.சுசில்குமாரையும் சேரும். அவர்களுக்கு வாழ்த்துக்கள். திசைமாறுவோம் மேன்மை பெறுவோம்.

Friday, August 22, 2008

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்வோமா ?????

1973 ஆண்டு ஒபெக் நாடுகள் எண்ணெய் கட்டுப்பாட்டை கொண்டுவந்த போது 99% எண்ணெய்யை பல்வேறு பணிகளுக்கு ஏரிபொருளாக பயன்படுத்திய டென்மார்க் நாட்டின் பொருளாதாரம் ஆடித்தான் போனது. ஆனால் ஆட்சியாளர்கள் துவண்டுவிடாமல் சரியான திசையில் செயல்பட்டதால் இன்று தன்னிறைவு பெற்று இப்போதுள்ள எண்ணெய் நெருக்கடி காலத்தில் கூட அதிக பாதிப்பின்றி செயல்படுகிறார்கள். காரணம் இயற்கையை மாசுபடுத்தாத காற்றாலை(Windmill) மூலம் மின்சாரம், சூரிய ஒளி, மிருக கொழுப்பு, விவசாயகழிவுகளிலிருந்து உயிர்நிறை (Biomass) என எல்லா வகையிலும் எரிசக்தி எடுக்கிறார்கள். 35 வருட கால இடைவெளி இன்று அவர்களை மற்ற உலகநாடுகளுக்கு இயற்கையை மாசுபடுத்தாத எரிசக்திக்கான தொழில் நுட்பத்தை வழங்கும் நாடாக மாற்றியிருக்கிறது. சில வளர்ந்த நாடுகள் போல் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் இயற்கை ஆதாரங்களை மாசுபடுத்தி அந்த நாடுகளின் எண்ணெய் வளத்தை கொள்ளையிடுவதில்லை அல்லது அணுசக்தி தொழில் நுட்பம் என கூறி சுரண்டுவதுமில்லை.
டென்மார்க்கிலுள்ள காற்றாலைகள்.

அவர்களது நாட்டின் மின்சாரத் தேவையில் சுமார் 20% காற்றாலை(Windmill) மூலம் பெறுகிறார்கள். உலக காற்றாலை தொழில் நுட்பத்தில் 40% டென்மார்க் நாட்டை சார்ந்து என்பது குறிப்பிடதக்கது. மக்களை எரிசக்தி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் கையாண்ட முறைகள் மோட்டார் வாகனங்களுக்கு 105% வரி விதிப்பு, அதிக எரிபொருள் வரி, ஞாயிற்று கிழமைகளில் வாகனங்களை ஒட்டத் தடை, தெருவிளக்குகள் அணைத்தல், அதிக எரிசக்தி உபயோக்கிக்கும் தொழில்களான இரும்பு. சிமென்ட் இவைகளுக்கு அதிக வரிவிதிப்பு, அல்லது தடை என அரசால் கொண்டுவரப்பட்டதால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலதிபர்களும் எரிசக்தியின் அருமையை புரிந்து கொண்டனர் எனவே நெருக்கடி இல்லை. ஆனைக்கட்டிப் பகுதியிலுள்ள காற்றாலைகள்.

மாறாக நாம் அன்னிய கார் கம்பெனிகளை உற்பத்தி செய்ய அனுமதித்து, ஊக்கமளித்து மக்களிடமுள்ள வாங்கும் சக்தியை வீதிகளில் வித விதமான கார்களாக மாற்றி சுற்றுச்சுழலை மாசு படுத்துகிறோம். கவர்ச்சியான விளம்பரங்கள் வேறு இதற்கு துணை. அதே நேரத்தில் கோவையில் ஒரு நிறுவனம் வீட்டிற்கான காற்றாலையை (Windmill) விற்பனை செய்கிறது அதைப்பற்றி செய்தி வெளிட தயங்கும் ஊடகங்கள். பொருளாதார முன்னேற்றம் என்று அதிக எரிசக்தி உபயோக்கிக்கும் தொழில்களான இரும்பு, சிமென்ட் போன்றவற்றிற்கு ஊக்கம் தருகிறோம்..

சிந்தித்து செயல்படவேண்டிய நேரமிது. மக்களிடமுள்ள வாங்கும் சக்தியை காற்றாலை, சூரிய ஒளி, விவசாயகழிவுகளிலிருந்து உயிர்நிறை (Biomass) போன்ற தூய எரிசக்திகளில் (clean energy) முதலீடு, மரம் நடுதல், மழைநீர் சேமிப்பு, போன்றவற்றில் ஈடு செய்தால் வளமான இந்தியாவை மிக விரைவில் காணலாம். காணவேண்டும் என்பதே இவ்வலைப் பூவின் ஆவல்.

படம் உதவி: வலைதளம்

Wednesday, August 20, 2008

மருத்துவத் தாவர கருத்தாய்வுக் கூட்டம், கோவை.


மாநில மருத்துவத் தாவரங்கள் வாரியம், தமிழ் நாடு
STATE MEDICINAL PLANTS BOARD TAMILNADU

மற்றும்

தேசிய மருத்துவத் தாவரங்கள் இயக்கம்
NATIONAL MISSION ON MEDICINAL PLANTS

இணைந்து மருத்துவத் தாவரங்களை வளர்ப்போர், சேகரிப்போர், வணிகப்படுத்துவோர் ஆகியோரைக் கொண்டு ஒரு கருத்தாய்வுக் கூட்டத்தை கோயமுத்தூரில் நடத்தவுள்ளனர். மேற்கண்ட கருத்தாய்வுக் கூட்டத்தில் வலையுலக நண்பர்களை கலந்துகொண்டு பயன்பெறுமாறு இவ்வலைப்பூ அன்புடன் அழைக்கிறது.

இடம் : கொடிசியா வணிக வளாகம், அவினாசி சாலை, பீளமேடு, கோவை.
நாள் : 24-08-2008. ஞாயிற்றுக் கிழமை.
நேரம்: காலை 9.30 மணி முதல் 2.00 மணி வரை.
தொடர்புக்கு : Dr. ஐயப்பன்---98942-46446.

Tuesday, August 19, 2008

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா காலமானார்.

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இயற்கைவேளாண்மை வல்லுனர் திரு.மாசானபு புகோகா தனது 95 வது வயதில் 16-08-2008 அன்று காலமானார். ஆரம்பத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து பின்பு விலகி திரும்ப தனது குடும்பப் பண்ணையில் சுமார் 30 ஆண்டு காலம் மிக குறைந்த வெளியுலக தொடர்பு வைத்து மிக சிறந்த முறையில் நிலத்தை உழவு செய்யாமல், குறைந்த நீரில், இரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து, களை மருந்து என இன்றைய பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்யும் எதையும் செய்யாமல், பல்கலைக்கழகங்கள் பரிந்துரை செய்யும் அளவிற்கு மகசூல் எடுத்து இயற்கை வேளாண்மை சிறந்தது என நிருபித்துள்ளார்.


இன்று இவரது விவசாய முறை நிறைய வளர்ந்த நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் நாம் ? மிகப் பெரிய கேள்விக் குறிதான். காரணம் வெகுஜன ஊடகங்களும், பன்னாட்டு கம்பெனிகளும், நிதி நிறுவனங்களும், பல்கலைகழகங்களும் உணவுப் பற்றாக்குறை வரும் என பயமுறுத்தி மக்கள் மனதில் “இது முடியாது” என பதிய வைப்பதும் இதில் ஒன்று.

இவரது விதை மண் உருண்டை (Seed ball ) முறையை பெங்களுரு நகரில் பயன்படுத்தி மிக பெரிய அளவில் நிறைய நிறுவனங்களும், பள்ளி குழந்தைகளும்,பொதுமக்களும் பொது இடங்களில் மரம் வளர்க்கவுள்ளனர். மேலும் விபரம் அறிய http://www.millionseedballs.org/ பார்க்கவும்.

அண்மை காலத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்ததும், என்னுள் ஒரு விழிப்புணர்வைத் தந்ததும் இவர் எழுதிய “ THE ONE-STRAW REVOLUTION” தான். 10 முறைக்கு மேல் இந்தியாவில் மறுபதிப்பு வந்துள்ளது. தமிழில் இது “ ஒற்றை வைக்கோல் புரட்சி ” என வெளிவந்துள்ளது. உலக விவசாயத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நூல்.
இன்றைய இளைய தலைமுறை அவசியம் பொறுமையுடன் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்.

கிடைக்குமிடம்
Other India Bookstore,
Above Mapusa Clinic,
Mapusa -403 507
Goa
India.
Tel :91- 832 - 2262206
e-mail: oib@sancharnet.in

இவரது இதர நூல்கள்.

The Road Back to Nature மற்றும்
The Natural Way Of Farming.

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.
திரு.மாசானபு புகோகா.

Tuesday, August 5, 2008

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள்.


ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள் (இன்று ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள்). லட்ச கணக்கான மக்களை தீப்பிழம்புகளால் அழித்த நாள். போர் வெறியின் உச்சம் என்றால் மிகையில்லை. கதிர்வீச்சால் சுற்றுச்சுழல் மாசுபாடு ,மற்றும் நோய்களுக்கும் குறைவில்லை. இவ்வளவையும் கடந்து ஜப்பான் முக்கிய நாடாகிருப்பதும் அந்நாட்டின் நிறுவனங்கள் சுற்றுச்சுழல் பற்றிய அக்கரையுடன் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்வதும் மகிழ்ச்சிதரும் காரியமாகும்.

சடகோ சசாகி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசிப்பட்ட போது 2 வயது குழந்தை. ஒருநாள் ஓடிக்கொண்டிருக்கும் போது விழுந்த குழந்தையை மருவத்துவரிடம் அழைத்து சென்ற பெற்றொர் குழந்தை கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிந்தனர். சடகோ சசாகியின் நண்பி 1000 காகித கொக்குகள் செய்தால் கடவுள் நாம் விரும்பியதை தருவார் என கூற சசாகி 664 காகித கொக்குகள் வரை செய்ததாகவும் பின் இயலாமல் இறந்துவிட்டதாகவும் மீதமுள்ளவற்றை நண்பர்கள் செய்து அவரது சவபெட்டியில் வைத்ததாகவும் ஒரு செய்தியும், 1000 காகித கொக்குகளையும் சசாகியே செய்ததாகவும் ஒரு செய்தியும் நிலவுகிறது. எது எப்படியோ குழந்தை தனது 12 வயதில் இறந்துவிட்டது. 1958 ஆண்டு அவருக்கும், அணுகுண்டு வீச்சால் இறந்த மற்ற குழந்தைகளின் நினைவாகவும் தங்க கொக்கு ஒன்றை சடகோ சசாகி தலைக்கு மேல் ஏந்தி நிற்பதை போன்ற ஒரு சிலையை உருவாக்கி அமைதிப்பணியை செய்துவருகின்றனர். சிலையின் கீழுள்ள வாசகம்.
அமெரிக்காவிலுள்ள சிலை.

இன்றும் உலகின் பல பாகங்களிலிருந்து காகித கொக்குகளைச் செய்து ஹிரோஷிமாவிற்கு அனுப்புகின்றனர். இவருக்காக அமெரிக்காவின் சிட்டேல் நகரத்திலும் சிலைவைத்துள்ளனர். அக்குழந்தையின் நினைவாக இப்பதிவை இடுகிறேன்


காகித கொக்கு செய்யும் முறை.

படம் உதவி: பல்வேறு வலைதளங்கள்