Wednesday, December 15, 2010

அமேசான் காடுகளின் “காந்தி” திரு.சிகோ மென்டிஸின் பிறந்த நாள் (15-12-1944)..


முதன் முதலில் நான் இரப்பர் மரங்களை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், பின்பு அமேசானின் மழை காடுகளை காப்பாற்ற போராடுகிறேன் என்று நினைத்தேன், இப்போது நான் மனிதாபிமானத்திற்காக போராடுகிறேன் என்று உணர்கிறேன்.
-சிகோ மென்டிஸ்

அமேசான் காடுகளின் “காந்தி” என்று அறியப்படும் சிகோ மென்டிஸ், பிரேசில் நாட்டில் 1944 ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி ரப்பர் பால் எடுக்கும் குடும்பத்தில் பிறந்து அதேயே தொழிலாக மேற்கொண்டார். 150 வருட பாரம்பரிய மிக்க தொழிலாக அப்போது அது இருந்தது. ஏகாதிபத்தியம், சர்வாதிகாரம், முதலாளித்துவம் இருந்தாலே இயற்கையை அழித்தல், சுரண்டல், ஏமாற்றுதல், வஞ்சகம் போன்றவை இருக்கும். இருப்பினும் தொழில் புரட்சி, வாகன உற்பத்தி, உலக போர்கள் காரணமாக இரப்பர் தொழில் இயற்கையை அழிக்காமல் அமேசான் காடுகளில் மிகச் சிறப்பாக இருந்தது. உரிமையாளர்கள் சொகுசு வாழ்கையில் இருந்தார்கள். செயற்கை இரப்பர் கண்டுபிடிப்பு, கீழைநாடுகளில் இரப்பர் வளர்ப்பு இவற்றால் அமேசான் காடுகளில் இரப்பர் தொழில் நலிவடைந்தது. வழக்கம் போல் உரிமையாளர்கள் அதனை விட்டு வேறு தொழில்களுக்கு மாறினர். தொழிலாளர்கள் கதி ??? இதற்கிடையை இயற்கை காடுகளை அழித்து கால்நடை வளர்ப்பை சிலர் மேற்கொண்டனர். விளைவு இரப்பர் பால் எடுப்பவர்களுக்கும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. சிகோ மென்டிஸ் இரப்பர் பால் எடுப்பவர்களுக்கு தொழில் சங்கம் அமைத்து போராடினார். விளைவை 1988 ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி எதிர்கொண்டார் அன்று மாலை வீட்டின் பின்புறம் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்புதான் காடுகள் பற்றிய விழிப்புணர்வு வெகு வேகமாக பரவியது. இன்றும் ஓரளவிற்கு அமேசான் காடுகள் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

அவரைப் பற்றி வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமாநிறுவனம் படம் எடுப்பதாக பல மில்லியன் டாலர்களை செலவழித்தது. ஆனால் என்ன காரணத்தாலோ செலவழித்தும் படம் எடுக்காமலேயே கைவிட்டது. இதனை ஆவணப்படுத்தி இருவர் இதைபற்றி படம் எடுத்தனர். Youtube இல் இப்படம் 10 பகுதிகளாக உள்ளது. பல அரிய புகைபடங்களும், அந்த கால இரப்பர் தொழில் பற்றிய ஆவணப் படங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கண்டிப்பாக இயற்கை ஆர்வலர்கள் பார்க்கவேண்டிய படத்கொகுப்பு.  இணைப்பிற்கு கீழ்கண்ட தொடர்பை உபயோகியுங்கள்.

Rubber Jungles

திரு. சிகோ மென்டிஸ் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பதிவிடுவதில் இவ்வலைப் பூ பெருமிதம் கொள்கிறது.

Tuesday, December 14, 2010

பதிவர்களுக்கு ஒரு அன்பான முக்கிய வேண்டுகோள்.

மனித இனத்தின் பேராசையால் ஒவ்வொரு நாளும் பல உயிரினங்கள் இந்த பூவுலகைவிட்டு மறைய ஆரம்பித்துள்ளன. நாமும் அதனைப் பற்றி எந்தவொரு உணர்வும் இல்லாமல் பொன்னும் பொருளும் மாத்திரமே வாழ்கை என்று வாழ்ந்து வருகிறாம். அடுத்த தலைமுறையிடம் பொன்னும் பொருளும் இருக்கும், குடிப்பதற்கு நீரும் ஆரோக்கியமான காற்றும் இருக்குமா? என்றால் கேள்விக் குறிதான்.

இதனை கருத்தில் கொண்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கான பன்னாட்டு ஒன்றியம் ( International Union for Conservation of Nature and Natural Resources - IUCN) சிறப்பான முறையில் அழிந்து வரும் உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். 1948 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் தற்போது சுவிட்ஜர்லாந்து நாட்டிலுள்ள கிளாண்ட் (Gland) என்ற நகரை தலைமை செயலாகமாக கொண்டு இயங்கி வருகிறது. சுமார் 140 நாடுகளிலிருந்து 1000+ அரசு, அரசு சாரா நிறுவனங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் ஒரு மிகமுக்கிய செயல்பாடு நீங்கள் மேலே பார்க்கும் படம்தான். ஒவ்வொரு நாளும் ஒரு உயிரினம் அல்லது தாவரத்தின் புகைப்படத்துடன் அவை எங்கு உள்ளன? அதன் தற்போதய நிலைமை (Status ) குறித்து வெளியிடுகிறார்கள். படத்தை “கிளிக்” செய்து விபரம் பெற்றுக் கொள்ளலாம். பதிவர்களுக்கு எனது அன்பான முக்கிய வேண்டுகோள். நாம் ஒவ்வொருவரும் இப்படத்தை நமது வலைப் பூக்களில் இட்டால் இந்த அழிந்து வரும் இனங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை எளிதில் நம் மக்களிடம் கொண்டு செல்ல இயலும் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்

கீழேயுள்ள Html Code ஐ காப்பி செய்து Add and Arrange Page Elements சென்று HTML/JavaScript ஐ தெரிவு செய்து அதில் பேஸ்ட் செய்தால் போதும் அந்த படம் வந்துவிடும்.


<iframe src="http://feeds.iucnredlist.org/species-of-the-day" frameborder="0" width="180" height="200" scrolling="no"></iframe>
 இந்த தொடர்பை எனக்கு அறிமுகப்படுத்திய திரு. இரத்தினசபாபதி அவர்களுக்கு எனது நன்றிகள்

Saturday, December 11, 2010

காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

காளான் வளர்ப்பு வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

Friday, December 3, 2010

இன்று ( டிசம்ர் 3 ) உலக மாற்றுத் திறனாளிகள் தினம்

"ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் மாணவர்கள்
 சென்ற அக்டோபர் மாதம் 30 தேதி கோவையை அடுத்த மாங்கரையில் அமைந்துள்ள "ஆரோக்கிய குடும்பம்" வளாகத்தில் நடந்த மாணவ மாற்றுத் திறனாளிகள் கூட்டதில் எனக்கு பேசும் வாய்ப்பை கொடுத்திருந்தார்கள். நானும் கேரளாவில் நடந்த என்டோசல்பான் ( பார்க்க : The Slow poison of India ) உபயோகத்தில் குழந்தைகள் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளாக ஆகிறார்கள் என்று கூறி “இயற்கை முறையில் வீட்டுத் தோட்டம்” பற்றி கூறிவிட்டு அமர்ந்தேன். ஒருவர் அறிமுக அட்டையை தந்து அழைத்தார் சென்றால் ஏற்கனவே அறிமுகமான நண்பர் திரு. சூரியா நாகப்பன் அமர்ந்திருந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்பவர். தொலைபேசி மூலம் ( Help line ) மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகமான தகவல்களை UDIS அமைப்பின் மூலம் தந்து உதவி வருகிறார்.
திரு. சூரியா நாகப்பன்
பேச்சு வீட்டுத் தோட்டம் பற்றியிருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு நல்ல சுயவேலை வாய்ப்பு என கூறினார். உடனே அவர்களது அமைப்பிலும் இதுபற்றி பேச வாய்ப்பளித்தார். வீட்டுத் தோட்டதிற்கு இப்படியொரு வாய்ப்பும் உண்டு என்று அவர்களுடன் பேசும் போது அறிந்துகொண்டேன். உண்மையில் குறைந்த கல்வி தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு. எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். ஆரோக்கியமான மனநிறைவைத் தரும்..

முக்கியமாக தொலைபேசி உதவியை ( Help line    Click) தமிழகத்தின் எந்த பகுதியிலிருந்தும் அழைத்து கல்வி, உதவிகள்,  வாய்ப்புக்கள், பயிற்சிகள் பற்றி அறிந்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு துணை நிற்கும் அவரையும் ,தொலைபேசி உதவி பற்றியும் பதிவிடுதில் இவ்வலைப் பூ மகிழ்ச்சியடைகிறது. இதைபடிக்கும் அன்பர்கள் உங்கள் மாற்றுத் திறனாளி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

அவரது விலாசம்

திரு. சூரியா நாகப்பன்
13.திருவள்ளுவர் தெரு
ஜி.என். மில்ஸ் அஞ்சல்
கோவை 641 029

அலைபேசி : 99445 56168
தொலைபேசி: 0422-2644603
மின்னஞ்சல் : caliber.coimbatore@gmail.com
வலைப் பூ : http://www.calibertrust.blogspot.com/

Helpline Numbers:
+ 91- 422 - 2405551
+ 91- 422 - 2648006
+ 91- 99 44 55 61 68
Emails.
rights4pwd@gmail.com
udis@vsnl.net
Website
http://www.davo.in/

Thursday, December 2, 2010

*சில்வர் புல்லட்( அ ) மைல் எ மினிட் MIKANIA MICRANTHA

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மரத்தில் முழுவதும் படர்ந்துள்ள ஒரு காட்சி
பெயருக்கு ஏற்ப இதன் வளர்ச்சி அபரிமிதமானது. நல்ல சூழ்நிலை இருந்தால் ஒரு நாளைக்கு 8 செ.மீ வரை வளரக்கூடியது. உலகப் போரின் போது வீரர்கள் மற்றும் தளவாடங்களை எதிரிகளிடமிருந்து மறைக்க (camouflage) இங்கு கொண்டு வரப்பட்ட தாவரம். உலகின் மிக முக்கிய உயிரினவள செழுமையிடம் (BIODIVERSITY HOTSPOT) இந்தியாவில் இரண்டு, அவை மேற்கு தொடர்ச்சி மலையும், வடகிழக்கு  பகுதிகளாகும். இந்த இரண்டு பகுதிகளிலும் இதன் தாக்கம் உள்ளது. உயிரினவளம் அதிகம் நிறைந்த இப்பகுதிகளில் இத்தாவரம் வேகமாக பரவுவதால் நீண்ட கால அடிப்படியில் இந்த பகுதிகளுக்கான பல்லுயிர் பெருக்கம் பெருமளவில் பாதிக்கப்படும்.
 நீயா? நானா? போட்டியில் சீமைக் கருவேலும் மைல் எ மினிட் கொடியும்

95% மூழ்கிவிட்ட வேப்பமரம்
மரங்களின் மேல் படர்ந்து அவை ஓளிசேர்க்கை செய்வதை தடுத்து அதன் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது. உயிரற்ற தொலைபேசி கம்பங்கள் முதல் வாழை,பனை என இது படராத இடமே இல்லை என்னுமளவிற்கு பரவியுள்ளது. மரவளர்ப்பிற்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் தற்போதைய எதிரி.

நமது வாழ்வாதாரத்தை அழிக்க எதிரி மனித, ஆயுத, வர்த்தக ரூபத்தில் வர வேண்டிய அவசியமில்லை தாவர ரூபத்திலும் வரலாம். பார்த்து பழகிவிட்டதால் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுகிறோம். ஓட்டைப் பாத்திரத்தில் நீர் பிடிப்பதை போன்றதுதான் நாம் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளாமல் இருப்பது. காகிதத்தில் கணக்கிட்டு வளர்ந்த நாடு எனவும், உலகின் 100 கோடீஸ்வர்களில் நிறையபேர் இந்தியர்கள் எனவும் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் நாட்டின் 8 மாநிலங்கள், 26 ஏழை ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமாக உள்ளது என்ற செய்தியை நாம் மனதில் கொண்டு இந்த தாவரங்களை அழித்து நாட்டின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த முயல்வோம்.

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான் PROSOPIS JULIFLORA

சீமைக் கருவேல் (அ) வேலிக்காத்தான்
வறண்ட பகுதிகளை பசுமைப்படுத்தவும் அப்பகுதி மக்களின் விறகு தேவையை பூர்த்தி செய்யவும் நம் நாட்டிற்கு மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தபட்ட தாவரம். சீமையிலிருந்து வந்ததால் “சீமைக்கருவேல்” எனவும், வேலிக்குப்பயன்பட்டதால் “வேலிக்காத்தான்” எனவும், கரிஉற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பட்டதால் “டெல்லி முள்” எனவும், முள் குத்தினால் எளிதில் குணமாகாமல் போனதால் “விஷமுள் செடி” என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலைகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளாவிட்டாலும் மஞ்சள் நிற அதன் காய்களை உணவாக உட்கொண்டன. விளைவு அதன் கழிவுகள் மூலம் விளை நிலங்களிலும் நீர்பகுதிகளிலும் பரவியது. மழைகாலங்களில் இதன் விதைகள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடும் பள்ளங்களிலும், கண்மாய்களிலும் செழித்து வளர்கின்றது. ஒரு காலத்தில் இராமநாதபுரம், சிவகங்கை போன்ற பகுதிகளில் கண்மாய்களிலுள்ள மீன்களுக்காக ஏலம் விட்டாரகள். நிலைமை மாறி, சீமைக் கருவேல் ஏலம் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் அளவிற்கு வாழ்வியலை மாற்றியுள்ளது. மறுதாம்பும் சிறப்பாக வருவதால் மக்கள் இதனை அழிக்க விரும்புவது இல்லை. நீர்த் தேவைக்காக 30 அடிக்கு மேல் வேர்கள் சென்று நீரை பெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு நீண்ட வேர்களற்ற அரிய வகை மூலிகைகள் அழிந்து வருகின்றன. பறவைகளுக்கான உணவும் நல்ல நிழலும் இல்லாமையால் இப்பகுதிகளில் அவை விரும்பி வசிப்பதில்லை.
 "கரிமூட்டம் " வேலை வாய்ப்பை தருகிறது.
இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் கரிமூட்டம் செய்து தரமான கரியை வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். இது ஒரு வாழ்வாதாரமாக இருந்தாலும் இது எடுத்துக் கொள்ளக்கூடிய நீரைக் கொண்டு விவசாயம் நன்கு செய்ய இயலும். இதன் எரியும் சக்தி சிறப்பாக இருப்பதால் மரத்துண்டுகள் மூலம் மின்உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதனை விரும்பி அடியோடு பிடுங்கி எடுத்துக் கொள்ளுகின்றனர். சுற்றுச்சுழலையும், நீராதாரத்தையும் வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகம் என்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.

Wednesday, December 1, 2010

உண்ணிச் செடி (LANTANA CAMARA )

எங்கள் குடியிருப்பிற்கு அருகில் மண்டியிருக்கும் செடி
உண்ணிச் செடியும் அழகிற்காக கொண்டுவரபட்ட தாவரமாகும். உலகின் முக்கிய உயிரினவள செழுமையிடமான (BIODIVERSITY HOTSPOT) மேற்கு தொடர்ச்சி மலையின் மழை குறைவான பகுதிகளில் இன்று புதர் போல் மண்டி இயற்கை வாழ்வாதாரத்தை கெடுத்து வருகிறது.
நகரங்களில் அழகிற்காக வளர்ப்பு
ஆனால் நகர்புறங்களில் பராமரிப்பு செலவு, பூச்சி தாக்குதல் குறைவு என்பதாலும், பல வண்ணங்களில் அழகிற்காக இதனை வளர்க்கிறார்கள். நேர்த்தியான கைவினை பொருட்களும் தயாரிக்க முடியும்.  இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க இதன் இலைகளை பயன்படுத்தலாம்.
கைவினைப் பொருட்கள்
எனது பழைய பதிவு

உபயோகமற்ற உண்ணிச்செடியிலிருந்து உபயோகமுள்ள கைவினைப் பொருட்கள்.
2nd Photo from Internet

ஆகாயத் தாமரை( EICCHORNIA CRASSIPES)

ஆகாயத் தாமரை
பிரேசில் நாட்டைத் தாயகமாகக் கொண்ட ஆகாயத் தாமரை இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அழகிற்காக மேற்கு வங்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாடெங்கிலும் குளம், குட்டைகளில் பரவி அழிக்கமுடியாத தாவரமாக மாறி விட்டது. கோடைகாலங்களில் நீர் நிலைகளில் இலைவழியாக ஆவியாதலை அதிகப்படுத்துகிறது. விவசாயதிற்கான நீரை அசுத்தமாக்குவதோடு நீர் செல்லும் வழிகளில் பரவி தடை ஏற்படுத்துகிறது. இதனால் உள்நாட்டு மீன் உற்பத்தி குறைந்து போனதாலும் குறைந்த நீரின் அளவாலும் காய்கறிகளின் உற்பத்தி மற்றும் விலையை பாதிக்கிறது. நீர் வழி போக்குவரத்தை பாதிப்பதோடு சுற்றுலாத் தலங்களின் அழகையும் படகு சவாரி போன்ற நல்ல பொழுதுபோக்கையும் கேள்வி குறியாக்கிவிட்டது(உ .தா. ஊட்டி, படகு சவாரி ). நகரப்புறங்களில் கொசுத் தொல்லையையும் உண்டாக்குகிறது.
ஒரு செடி சுமார் 5000 விதைகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முளைப்புத் திறன் 20 ஆண்டுகள். இதனை உயிரியல் முறையில் கட்டுபட்டுப்படுத்த வெளி நாட்டிலிருந்து ஒரு வண்டினத்தை ( Neochetina spp.) நம் நாட்டில் வெற்றிகராமாக உபயோகித்து அழிக்க ஆரம்பித்துள்ளனர் அதுபற்றிய செய்தியைக் காண கீழ்கண்ட தொடர்பை பயன்படுத்துங்கள். உங்கள் பகுதியிலும் இதனை உபயோகிக்க முயலுங்கள்.

http://www.nrcws.org/Story6.pdf


ஆகாயத் தாமரை கொண்டு செய்த சோபாசெட்டுக்கள்
 இதனால் நன்மை என்று பார்த்தால் மண்புழு உரம் தயாரிக்கலாம். அழகிய அமரும் சோபாசெட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் கீழைநாடுகளில் செய்கிறார்கள். அவைகள் நம் நாட்டிலும் கிடைக்கின்றது.

முக்கியமாக நமது தேசீய மலரான தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் வெகுவாக பாதித்து நிறைய இடங்களில் இல்லாமலும் செய்துவிட்டது. வரும் சந்ததியினர் தாமரை மலரையும், தாமரைகுளங்களையும் புகைபடங்களில் பார்க்குமளவிற்கு இது பரவி விட்டது. ஜீவராசிகளின் அடிப்படை ஆதாரமான நீராதாரத்தை இது வெகுவாக பாதிப்பதாலும் பயன்களைவிட பாதிப்புகள் அதிகமிருப்பதால் அழிக்கப்பட வேண்டிய தாவரம்.