Monday, October 15, 2007

இயற்கையும் செல்வந்தனும்

செல்வந்தனே நீ ஆயிரம் பேருக்கு எஜமானாய் இருக்கலாம்
ஈ, எறும்பு ஒன்றுக்காவது நீ எஜமான் ஆகமுடியுமா?

தெருவென்ன ஊரே உன்னை சீமான் என்று சொல்லாம்
சிட்டுக் குருவியொன்று உனக்கு ஆமாம் போடுமா?

உன் பத்து ரூபாய் தாளுக்கு பத்துப் பேர் வரலாம்
நீ பத்தாயிரம் நீட்டு ஒரு பட்டாம் பூச்சி வருமா ?

உட்கார்ந்து இருப்பது உன் தோட்டத்துப் பூவில் என்றாலும்
உன் வருகையைக் கண்டு வண்டுதான் எழுந்திருக்குமா?

தேன் கூட்டைத் தொடு..செல்வந்தனாயிற்றே என்று
கொடுக்கால் அது உன்னை கும்பிட்டு நகருமா?

இத்தனையும் நடந்தால் பணக்காரனே!உன் பணம் பத்தென்ன?
பதினொன்றும் செய்யுமென்று சத்தியம் செய்யலாம்.

ஆனால் இயற்கை முன் அனைவரும் சமமென்று
உணர்வது நீ எப்போது ?அதனை காப்பது எப்போது?

ஒரு கம்பெனி மாத இதழிலிருந்து
(கடைசி இரு வரிகள்தவிர)எடுக்கப்பட்டது.

Monday, October 1, 2007

மரங்களுக்காக உயிரையும் கொடுத்தவர்கள்


சுற்றுச்சுழல் அதிகம் மாசுபடாமல் இருந்த 1730 ஆம் ஆண்டுகளிலேயே மரங்களுக்காக 363 பேர் ஒரே நாளில் உயிரையும் தியாகம் செய்கிறார்கள் என்றால் அந்த மக்கள் இயற்கையை போற்றி பாதுகாத்த முறையினை நாம் கண்டிப்பாக ஆராதிக்கவேண்டும். இந்த உண்மை சம்பவம் நடந்த இடம் நம் இந்தியாவில் ஆனால் நிறைய மக்களுக்கு இந்த தியாகத்தின் ஆழம் புரியவில்லை. இதனை நம் குழந்தைகளுக்கு கூறி தியாக தினமாக நினைவு கூர்தல் வேண்டும்.

ஜோத்பூர் மன்னர் 1730 ஆம் ஆண்டு புது அரண்மணை கட்டுவதற்காக பிஷ்னாயி இனமக்கள் வாழுகின்ற பகுதிக்கு தனது ஆட்களை அனுப்பி மரங்களை வெட்டி வரும்படி கூறினார். ஆட்களும் காடுகளில் மரம் வெட்ட வந்தனர். ஆனால் மரங்களின் முக்கியத்துவத்தை புரிந்த பிஷ்னாயி இனமக்கள் வெட்டவேண்டாம் என கேட்டுக் கொண்டனர் அரண்மணை ஆட்கள் விடுவதாய் இல்லை. 3 பெண் குழந்தைகளுக்கு தாயான அம்ரிதா தேவி தன் 3 பெண் குழந்தைகளுடன் மரங்களை காக்க முதலில் உயிர் துறந்தார். அன்று மாலைக்குள் இவர்களையும் சேர்த்து 363 பேர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதனை அறிந்த மன்னர் பிஷ்னாயி இனமக்கள் வாழுகின்ற பகுதிகளில் மரம் வெட்ட கூடாது என ஆணை பிறப்பித்தார்.

படித்து பட்டங்கள் பல பெற்ற இக்கால மன்னர்களும் இதே தவறினைத் தான் திரும்ப திரும்ப செய்கின்றனர். 1974 ஆண்டு ரேணி காட்டை குறி வைத்த கூட்டம் கௌரா தேவி என்ற பெண்மணி தனது உயிரையும் தியாகம் செய்ய தயாரானதால் வேறு வழியின்றி திரும்பி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் சிப்கோ இயக்கம் வலுப்பெற்றது. இன்று நாம் சற்று நிம்மதியுடன் இருப்பதற்கு சிப்கோ இயக்கம் காரணம் என்றால் அது மிகையில்லை.

இக்கால மன்னர்களுக்கும், வருங்கால மன்னர்களுக்கும் ஒரு வேண்டுகோள்;

"மரங்கள் இல்லாமல் மனிதன் வாழமுடியாது ஆனால்
மனிதன் இல்லாமல் மரங்கள் வாழமுடியும்".

இந்த உண்மையை புரிந்து வாழ்கை முறையை செம்மைபடுத்துவோம்.